உவகை பொங்கும்போது கடமையைப் புறக்கணிக்கும் உளப்பாங்கு மேலோங்குகிறது. அவ்வாறான எண்ணம் தோன்றாவண்ணம் காத்துக்கொள்ள வேண்டும். இதுவே பொச்சாவாமை. வள்ளுவர் இதைச் சோர்வின்மை, இகழாமை, வழுக்காமை என்ற மூன்று சொற்களால் இவ்வதிகாரத்துப் பாடல்களில் குறிக்கிறார். தொல்காப்பிய உரையாசிரியரான பேராசிரியர் பொச்சாப்பு என்பதற்கு 'கடைப்பிடியின்றி நெகிழ்ந்திருத்தல்' என வரையறை கூறி 'அதாவது பாதுகாத்துச் செல்கின்ற பொருட்கண் யாதானும், ஓர் இகழ்ச்சியான் இடையுறவு படுதல்' என்றும் விளக்கம் செய்தார். இங்கு சொல்லப்படும் இகழ்ச்சி என்பது புகழ்ச்சிக்கு மறுதலையாகிய இகழ்ச்சியன்று; இது புறக்கணித்தலாகிய அலட்சிய மனப்பான்மை ஆகும்.
தொல்லாசிரியர்களில் மணக்குடவர்/பரிப்பெருமாள், பரிமேலழகர் ஆகியோரும் இன்றைய ஆசிரியர்களில் பெரும்பான்மையினரும் பொச்சாப்பு என்பதை மறதி என்ற பொருளிலே ஆள்கின்றனர். இது அவ்வளவு பொருத்தமன்று. தண்டபாணி தேசிகர் சொல்வதுபோல் மறதி என்பது நினைப்பிற்கெதிரான உள்ளப்பண்பு. மறதி அறிவு தேவையான நேரத்தில் வெளிப்படாமையைக் குறிப்பது. பொச்சாவாமை கடமையில் எப்பொழுதும் விழிப்புடன் இருக்கவேண்டும் என்பதை வலியுத்துவது. மேலே பேராசிரியர் கூறியதுபோல் நெகிழ்ச்சியின்றி செயலைக் கடைப்பிடிக்கவேண்டும் அதாவது அலட்சியத்தைத் தவிர்க்கவேண்டும் என்பதே பொச்சாவாமை.
காலிங்கர் இவ்வதிகாரம் முழுவதும் பொச்சாப்பு என்பதற்கு இகழ்ச்சி என்ற பொருளே கொள்கிறார்.
ஆங்கிலத்தில் Complacent attitude (அலட்சிய/தன்னிறைவான மனோபாவம்) என்ற சொல்லின் பொருளும் பொச்சாப்புக்குப் பொருந்திவரும்.
பொச்சாப்பு என்ற சொல் இகழ்ச்சி என்ற பொருளில் இன்றும் பேச்சு வழக்கில் உள்ளது.
கடமைகளை ஊக்கத்துடன் தளர்வின்றி செய்யவேண்டும்.
எந்தச் சூழ்நிலையிலும் தம் கடமை/பணி மீது ஒரு கண் இருந்து கொண்டே இருக்கவேண்டும். செய்யவேண்டிய செயல்கள் அந்தந்த நேரத்தில் நடக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும். விழிப்புடன் கடமையாற்றவேண்டும். செயல்படவேண்டியவர்கள் தவிர்க்கக்கூடாத ஒன்று, சோர்வில்லாமை. சிறு சிறு செயற்கூறுகளையும் நினைவுடன் செய்தால்தான் முயற்சிகள் கைகூடும். தன்உருவம், கல்வி, அழகு, அதிகாரம், பதவிச் செருக்கு முதலிய காரணங்களால் ஒவ்வொரு மனிதனுக்கும் இறுமாப்பு வந்து விடுகிறது.
துன்பத்திலே மனிதன் தன் நிலை இழப்பது போலவே மிகையான இன்பத்திலும் தன்நிலை மறந்து போகிறான். வெற்றி, தோல்வி, இரண்டிலும் மனத்தில் சம நிலையோடு இருப்பவர்களே எதிலும் கவனமாக இருக்க முடியும். எக்காரணங்களாலும் கடமைமறதி உண்டாகாமல் காத்துக்கொள்ள வேண்டும். கவனிக்க வேண்டியவற்றைப் புறக்கணிப்பதால், தம் ஆட்சியையே இழந்த அரசுகள் வரலாற்றில் நிறைய உள. அலட்சிய மனப்பான்மை இல்லாமல் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதே இந்த அதிகாரம்.
நீடித்த புறக்கணிப்பு புகழை அழிக்கும்; மகிழ்ச்சிச் சோர்வின்றி செயல் புரிந்தால் எந்தச் செயலையும் நிறைவேற்றமுடியும்; முன்னாளில் கடமையைத் தவறவிட்டுக் கெட்டவர்களை நினைத்துக்கொண்டு பொச்சாப்பைக் கைவிடுக. எந்தச் செயலிலும் தொடர்ந்து சிந்தனை செலுத்தி நினைவுடன் செயல்பட்டால் தாம் அடையநினைத்ததை எளிதில் பெறலாம் என்பன இவ்வதிகாரம் தரும் செய்திகள்.