இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக:
பதவுரை: இகழ்ச்சியின்-சோர்வால்; கெட்டாரை-அழிந்தவரை; உள்ளுக-நினைக்க.
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அரசர் குறித்துணரும் உணர்ச்சியின்மையாலே முன்பு கெட்ட அரசரை நினைக்க;
பரிப்பெருமாள்: குறித்துணரும் உணர்ச்சியின்மையாலே முன்பு கெட்ட அரசரை நினைக்க;
பரிதி: கர்வத்தின் மிகுதியினாலே முன்னாளில் கெட்டாரை எண்ணுக;
காலிங்கர்: இகழ்ந்து கெட்டாரை எண்ணிக் கொள்க என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: இதற்குப் பாரதத்தில் நூற்றுவரையும், இராமாயணத்து இராவணனையும், பிறரையும் எண்ணிக் கொள்க.
பரிமேலழகர்: முற்காலத்து அதனினாய சோர்வால் கெட்டவர்களை நினைக்க.
'சோர்வால் கெட்டவர்களை நினைக்க' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அங்ஙனம் இருந்து கெட்டாரை எண்ணிப்பார்', '(அப்படிப்பட்ட மகிழ்ச்சியினால் தம்முடைய கடமைகளை) மறந்து கெட்டுப் போனவர்களுடைய சரித்திரங்களை எண்ணிப் பார்க்க வேண்டும்', 'சோர்வினால் கெட்டுப் போனவர்களை நினைக்க வேண்டும்', 'இதற்கு முன்பு மகிழ்ச்சி மிகுதியால் கடமைகளை மறந்து கெட்டுப் போனவர்களை நினைத்தல் வேண்டும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
சோர்வினால் கெட்டுப் போனவர்களை நினைக்க என்பது இப்பகுதியின் பொருள்.
தாம்தம் மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து:
பதவுரை: தாம்தம்-தாங்கள் தமது; மகிழ்ச்சியின்-களிப்பால்; மைந்து-வலிமை; உறும்-எய்தும்; போழ்து-நேரம்.
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தாமும் தம்முடைய மகிழ்ச்சியாலே வலியராயிருக்கும் பொழுது.
மணக்குடவர் குறிப்புரை: இஃது உண்பவை, உடுப்பவை, பூசுபவை சோதித்துக் கொள்க என்றது.
பரிப்பெருமாள்: தாமும் தம்முடைய மகிழ்ச்சியாலே வலிதாயிருக்கும் பொழுது.
பரிப்பெருமாள் குறிப்புரை: இதனால் சொல்லியது வலியாரைப் பகைவரை வெல்லுங்கால் அவரைச் சோர்வு பார்த்துக் களவினால கொல்வார்; ஆதலால் தன் வலியை நினையாது பகை உண்டாகும் என்று நினைத்துக் கோயிலும், அந்தப்புரமும், நீர் விளையாட்டு ஆடும் இடமும், இளமரக்காவும், வேட்டையாடும் காடும், உண்பனவும், பூசுபவையும் இகழாது சோதித்துக் கொள்க.
பரிதி: தாமும் செல்வம் பெற்றோம் என்னும் கர்வத்தினால் ஏதம் பெறும்போழ்து என்றவாறு.[ஏதம் - துன்பம்]
காலிங்கர்: இவ்வுலகத்து வேந்தருள் முற்காலத்துத் தாம் பிறரை இகழ்ந்து வலி செய்யும்பொழுது என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: மைந்துறூஉம் போழ்து என்பது வலியினைச் செய்யும் பொழுது என்றது.
பரிமேலழகர்: அரசர் தம் மகிழ்ச்சிக்கண் தாம் வலியுறும் பொழுது.
பரிமேலழகர் குறிப்புரை: காரணங்களோடு அவர்க்கு உளதாய உரிமையை மகிழ்ச்சிமேல் ஏற்றித் தம் மகிழ்ச்சியின் என்றும், இகழ்ச்சியும் கேடும் உடன் தோன்றும் ஆகலின், 'மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து' என்றும் கூறினார். கெட்டாரை உளவே, 'நாமும் அவ்வாறே கெடுதும்' என்று அதன்கண் மைந்துறார் என்பது கருத்து. எண்ணுக என்று பாடம் ஓதுவாரும் உளர்.
'தம்முடைய மகிழ்ச்சியாலே வலியராயிருக்கும் பொழுது' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி தாமும் செல்வம் பெற்றோம் என்னும் கர்வத்தினால் துன்பம் உற்றபோது எனப் பொருள் கூறினார். 'தாம் பிறரை இகழ்ந்து வலி செய்யும்பொழுது' என்றார் காலிங்கர். 'அரசர் தம் மகிழ்ச்சிக்கண் தாம் வலியுறும் பொழுது' என்பது பரிமேலழகர் உரை.
இன்றைய ஆசிரியர்கள் 'நீ மகிழ்ச்சியிலே திளைத்திருக்கும் போது', 'ஒருவன் தான் தன்னுடைய சந்தோஷத்தில் பெருமைப்பட்டுக்கொண்டிருக்கிற சமயத்தில்', 'தம்முடைய மகிழ்ச்சி மிகுதியினாலே இறுமாப்புக் கொள்ளும் பொழுது', 'தாம் தமக்குள்ள மகிழ்ச்சியில் மிகுந்திருக்கும்போது' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.
தம்முடைய மகிழ்ச்சி மிகுதியினாலே செருக்குக் கொள்ளும் பொழுது என்பது இப்பகுதியின் பொருள்.
|