அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
கருவியால் போற்றிச் செயின்
(அதிகாரம்:பொச்சாவாமை
குறள் எண்:537)
பொழிப்பு: மறவாமை என்னும் கருவிகொண்டு (கடமைகளைப்) போற்றிச் செய்தால், செய்வதற்கு அரியவை என்று ஒருவனால் முடியாத செயல்கள் இல்லை.
|
மணக்குடவர் உரை:
செயற்கு அரியனவென்று செய்யலாகாதன வில்லை; மறவாமையாகிய கருவியாலே பாதுகாத்துச் செய்வானாயின்.
இது வினை செய்யுங்கால் மறவாமை வேண்டுமென்றது.
பரிமேலழகர் உரை:
அரிய என்று ஆகாத இல்லை - இவை செய்தற்கரியன என்று சொல்லப்பட்டு ஒருவற்கு முடியாத காரியங்கள் இல்லை, பொச்சாவாக் கருவியான் போற்றிச் செயின் - மறவாத மனத்தானே எண்ணிச் செய்யப் பெறின்.
(பொச்சாவாத என்பதன் இறுதிநிலை விகாரத்தால் தொக்கது. அந்தக்கரணமாகலின் 'கருவி' என்றார். இடைவிடாத நினைவும் தப்பாத சூழ்ச்சியும் உடையார்க்கு எல்லாம் எளிதில் முடியும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் பொச்சாவாமையது சிறப்புக் கூறப்பட்டது.)
கா சுப்பிரமணியம் பிள்ளை உரை:
சோர்வில்லாமையாகிய கருவிகொண்டு எதனையும் எண்ணி முயன்றால் செய்தற்கரியன வென்னப்பட்டு முடியாத காரியங்களில்லை.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
பொச்சாவாக்கருவியால் போற்றிச் செயின் அரிய என்று ஆகாத இல்லை.
|
அரியஎன்று ஆகாத இல்லை:
பதவுரை: அரிய-அருமையானவை; என்று-என்பதாக; ஆகாத-நேரக்கூடாதவை; இல்லை-இல்லை.
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: செயற்கு அரியனவென்று செய்யலாகாதன வில்லை;
பரிப்பெருமாள்: செயற்கு அரியவென்று செய்தல் ஆகாதன இல்லை;
பரிதி: தான் நினைத்த காரியம் முடிகிறது அருமையில்லை;
காலிங்கர்: இவை இவை செய்தற்கு அரியன என்று தம்மால் செயற்படாது இருப்பன யாவும் இல்லை;
பரிமேலழகர்: இவை செய்தற்கரியன என்று சொல்லப்பட்டு ஒருவற்கு முடியாத காரியங்கள் இல்லை;
'செய்தற்கரியன என்று சொல்லப்பட்டு ஒருவற்கு முடியாத காரியங்கள் இல்லை' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'முடியாத காரியம் என்பது யாதும் இல்லை', 'செயற்கரிய செயல் என்று முடிக்க முடியாதது ஒன்றில்லை', 'முடியாத காரியம் ஒன்றுமில்லை', ''இவை அரியன' என்று செய்யமுடியாத செயல்கள் இல்லை', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
செய்துமுடித்தல் கடினமானவை என்பதாக எதுவும் இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.
பொச்சாவாக் கருவியால் போற்றிச் செயின்:
பதவுரை: பொச்சாவா-கடமைமறவாத; கருவியால்-மனத்தால்; போற்றி-எண்ணி; செயின்-செய்தால்.
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மறவாமையாகிய கருவியாலே பாதுகாத்துச் செய்வானாயின்.
மணக்குடவர் குறிப்புரை: இது வினை செய்யுங்கால் மறவாமை வேண்டுமென்றது.
பரிப்பெருமாள்: மறவாமையாகிய கருவியாலே பாதுகாத்துச் செய்வானாயின்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது வினை செய்யுங்கால் மறவாமை வேண்டுமென்றது.
பரிதி: தன் மனத்தில் மதப்பாடாகிய அறிவின்மை யில்லையாகில் என்றவாறு.[மதப்பாடு - மதத்தான் விளைவதாகிய செருக்கு]
காலிங்கர்: எப்போது எனின் உலகத்து நல்லோரையும் நல்லனவற்றையும் இகழ்ந்து அவமதி பண்ணாமையாகின்ற இந்தச் சாதனமாகிய உபாயத்தினைக் குறிக்கொண்டு செய்யுங்காலத்து என்றவாறு.
பரிமேலழகர்: மறவாத மனத்தானே எண்ணிச் செய்யப் பெறின்.
பரிமேலழகர் குறிப்புரை: பொச்சாவாத என்பதன் இறுதிநிலை விகாரத்தால் தொக்கது. அந்தக்கரணமாகலின் 'கருவி' என்றார். இடைவிடாத நினைவும் தப்பாத சூழ்ச்சியும் உடையார்க்கு எல்லாம் எளிதில் முடியும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் பொச்சாவாமையது சிறப்புக் கூறப்பட்டது.
'மறவாமையாகிய கருவியாலே பாதுகாத்துச் செய்வானாயின்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிமேலழகர் 'மறவாத மனத்தானே எண்ணிச் செயின்' என்றும் பரிதி 'மனதில் மதப்பாடாகிய அறிவின்மையாகில்' என்றும் காலிங்கர் 'நல்லோரையும் நல்லனவற்றையும் இகழாமையைக் குறிக்கொண்டு செய்யுங்காலத்து' எனவும் உரை பகன்றனர்.
இன்றைய ஆசிரியர்கள் 'மறவாத கருவி கொண்டு விழிப்போடு செய்தால்', 'மறவாமை என்னும் கருவியால் கடமைகளைத் தொடர்ந்து போற்றிச் செய்தால்', 'கடமைகளை மறந்து விடாமை என்ற கருவியைக் கொண்டு கவனத்துடன் காரியம் செய்பவனுக்கு', ''மறவாமை' என்ற கருவியின் துணைகொண்டு எதனையும் எண்ணிச் செய்தால்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.
சோர்வில்லாமை என்னும் கருவியின் துணையுடன் குறிக்கொண்டு செய்தால் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
சோர்வு இல்லாமை என்னும் கருவியைக் கொண்டு கருத்துடன் செயலாற்றினால், 'இது செய்தற்கு அரிய செயல்' என்று முடிக்க முடியாத செயல் எதுவும் இல்லை.
பொச்சாவாக் கருவியின் துணையுடன் குறிக்கொண்டு செய்தால் செய்துமுடித்தல் கடினமானவை என்பதாக எதுவும் இல்லை என்பது பாடலின் பொருள்.
'பொச்சாவாக்கருவி' என்பது என்ன?
|
அரியஎன்று என்ற தொடர்க்கு கடினம் என்று என்பது பொருள்.
ஆகாத இல்லை என்ற தொடர் முடியாததாக இல்லை என்ற பொருள் தரும்.
போற்றிச் செயின் என்றது கருத்தாகச் செய்தால் என்ற பொருளது.
|
சோர்வடையாது விழித்திருத்தல் என்னும் கருவியைக் கொண்டு கவனத்துடன் செய்தால் முடியாதது என்று எதையும் கூறமுடியாது.
'இப்படிச் செய்தால் இந்தபயன் பெறலாம்' என்று கூறாமல் 'இப்பயனெல்லாம் பெறலாம் இந்தவகையில் செய்தால்' என்று பயனிலையை முன்வைத்து யாக்கப்பட்ட பாடல். இது கேட்கும்போதே தன்னம்பிக்கையை ஊட்டக்கூடிய நடையாகும். 'செய்வதற்கு அரிது என்று எதுவுமே இல்லை' என முதலில் ஊக்குவிக்கும்படி சொல்லி 'எதையும் இடைவிடாத நினைவுடன் -இகழாமல்- செய்யப்பழகுக என அறிவுறுத்துகிறார் வள்ளுவர்.
காலிங்கரின் 'உலகத்து நல்லோரையும் நல்லனவற்றையும் இகழ்ந்து அவமதி பண்ணாமையாகின்ற இந்தச் சாதனமாகிய உபாயம்' என்று பொச்சாப்புக்கருவி என்பதற்கு மிகப் பொருத்தமான பொருள் கூறினார். இவ்வதிகாரத்துப் பாடல்களில் அலட்சியம் செய்யாமல் என்ற பொருளில் இகழ்ந்து என்ற சொல்லை இவர் ஆளுவார்.
செயலில் நினைப்பை இழக்காமல் விழிப்புடன் செய்தலையே ஒரு கருவியாகப் பயன்படுத்தவேண்டும்; அலட்சிய மனப்பான்மை இல்லாமல் உளஒருமைப்பாடு என்ற கருவியுடன் செய்தால் எந்தச் செயலையும் எளிதில் நிறைவேற்றிவிடலாம் என்கிறார் வள்ளுவர்.
|
'பொச்சாவாக்கருவி' என்பது என்ன?
'பொச்சாவாக்கருவி' என்றதற்கு மறவாமையாகிய கருவி, மனத்தில் மதப்பாடாகிய அறிவின்மை யில்லையாகில், உலகத்து நல்லோரையும் நல்லனவற்றையும் இகழ்ந்து அவமதி பண்ணாமையாகின்ற இந்தச் சாதனமாகிய உபாயத்தினை, மறவாத மனத்தானே, மறவாது சிந்திக்கும் தப்பாத சிந்தனை என்ற கருவியால், மனத்தில் மறவாது, மறவாத கருவி, மறவாமை என்னும் கருவியால், கடமைகளை மறந்துவிடாமல் இருப்பது என்ற ஆயுதத்தைக் கொண்டு, மறதி இல்லாமை என்னும் அரிய கருவியைக் கொண்டு, சோர்வில்லாமையாகிய கருவிகொண்டு, 'மறவாமை' என்ற கருவியின் துணைகொண்டு, மறவாமையாகிய கருவியால, மறவாத மனமென்ற கருவியால் என்று உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
பொச்சாவாக் கருவி என்பதை பொச்சாவாத கருவி என்னும் குணப்பண்பாகக் கொள்ளாமல் பொச்சாமையாகிய கருவி எனத் தொழிற்பெயராகக் கொள்ளவேண்டும் என்பர்.
'பொச்சாவாக்கருவி' என்பதற்கு அலட்சியம் காட்டாத மனப்பான்மை என்னும் கருவி என்பது பொருள்.
|
சோர்வில்லாமை என்னும் கருவியின் துணையுடன் குறிக்கொண்டு செய்தால் செய்துமுடித்தல் கடினமானவை என்பதாக எதுவும் இல்லை என்பது இக்குறட்கருத்து.
செயற்கரிய செய்வார்க்கு பொச்சாவாமைக் கருவி வேண்டும்.
மறவாமை என்னும் கருவியால் கடமைகளைக் குறிக்கொண்டு செய்தால் முடியாத செயல் என்பதாக ஒன்றில்லை.
|