இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0532பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு

(அதிகாரம்:பொச்சாவாமை குறள் எண்:532)

பொழிப்பு (மு வரதராசன்): நாள்தோறும் விடாமல் வரும் வறுமை அறிவைக் கொல்வதுபோல, ஒருவனுடைய புகழை அவனுடைய மறதி கொன்றுவிடும்.

மணக்குடவர் உரை: மறவியாகின்றது புகழைக்கொல்லும்: நாடோறும் இரவால் வருந்தி வயிற்றை நிறைக்கும் ஊண் அறிவைக் கொல்லுமாறு போல.
இவை மூன்றினாலும் பொருளின்கண் கடைப்பிடித்தல் கூறினார்.

பரிமேலழகர் உரை: புகழைப் பொச்சாப்புக் கொல்லும் - ஒருவன் புகழினை அவன் மறவி கெடுக்கும், அறிவினை நிச்சநிரப்புக் கொன்றாங்கு - அறிவினை நிச்சம் நிரப்புக் கெடுக்குமாறு போல.
(நிச்ச நிரப்பு: நாள்தோறும் இரவான் வருந்தித் தன் வயிறு நிறைத்தல். அஃது அறிவு உடையான் கண் உண்டாயின் அவற்கு இளிவரவானும் பாவத்தானும் எள்ளற்பாட்டினை விளைத்து. அவன் நன்கு மதிப்பினை அழிக்கும்: அது போல மறவியும் புகழ் உடையான் கண் உண்டாயின், அவற்குத் தற்காவாமையானும், காரியக் கேட்டானும் எள்ளற்பாட்டினை விளைத்து அவன் நன்கு மதிப்பினை அழிக்கும் என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் பொச்சாப்பினது குற்றம் கூறப்பட்டது.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: நிலைத்த வறுமையானது அறிவினைக் கெடுப்பது போல, சோர்வானது புகழினைக் கெடுக்கும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நிச்ச நிரப்பு அறிவினைக் கொன்றாங்கு பொச்சாப்பு புகழைக் கொல்லும்.

பதவுரை: பொச்சாப்பு-சோர்வு, மறதி, புறக்கணித்தல்; கொல்லும்-அழிக்கும்; கெடுக்கும்; புகழை-புகழை, நற்பெயரை; அறிவினை-அறிவை; நிச்ச-நாடோறும், எப்பொழுதும் எல்லா நாளும், என்றும்; நிரப்பு-ஏழ்மை; கொன்ற-கெடுப்பது; ஆங்கு-போல.


பொச்சாப்புக் கொல்லும் புகழை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மறவியாகின்றது புகழைக்கொல்லும்;
பரிப்பெருமாள்: மறவியாகின்றது புகழைக்கொல்லும்; அற்றைத் தேட்டூண் அறிவைக் கொல்லுமாறு போல.
பரிதி: பொச்சாப்பாகிய மதம் தன் புகழைக் கொல்லும்.
காலிங்கர்: உலகத்துத் தாம் பிறரை இகழும் இகழ்ச்சியாவது, மற்று அது புகழினைத் தலையழிக்கும்;
காலிங்கர் குறிப்புரை: பொச்சாப்பு என்பதன் இகழ்ச்சி.
பரிமேலழகர்: ஒருவன் புகழினை அவன் மறவி கெடுக்கும்;

மறவியாகின்றது புகழைக்கொல்லும் என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பொச்சாப்பு என்பதற்குக் காலிங்கர் இகழ்ச்சி என்று பொருள் கூறியுள்ளார்.

இன்றைய ஆசிரியர்கள் 'நாளும் மறதி புகழை அழிக்கும்', 'ஒருவன் புகழை அவனது மறதி அழிக்கும்', 'தொடர்ச்சியான இன்பத்தில் கடமைகளை மறந்து விடுவது ஒருவனுடைய புகழைச் சிறுகச் சிறுக அழித்துவிடும்', 'ஒருவர்க்கு உண்டாகும் புகழை அவர் மறதி கெடுக்கும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

கடமைகளில் கவனம் செலுத்தாது ஒதுக்கி விடுவது ஒருவரது நற்பெயரைக் கெடுக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

அறிவினை நிச்ச நிரப்புக்கொன் றாங்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நாடோறும் இரவால் வருந்தி வயிற்றை நிறைக்கும் ஊண் அறிவைக் கொல்லுமாறு போல.
மணக்குடவர் குறிப்புரை: இவை மூன்றினாலும் பொருளின்கண் கடைப்பிடித்தல் கூறினார்.
பரிப்பெருமாள்: அற்றைத் தேட்டூண் அறிவைக் கொல்லுமாறு போல.
பரிப்பெருமாள் குறிப்புரை: புகழ்பட வாழுங்கால் தன் அளவை மறந்து கொடுப்பன் ஆயின் தான் கருதின புகழும் முடியச் செல்லாது அளவிலே நின்றுசாம். இயற்கையாகிய அறிவு நல்குரவினால் சாமாறு போல என்றவாயிற்று. இது கொடையில் கடைப்பிடித்தல் வேண்டும் என்றது. இவை மூன்றினானும் பொருளில் கடைப்பிடித்தல் கூறிற்று.
பரிதி: அறிவினை மிடி கொன்றது போல என்றவாறு. [மிடி-வறுமை]
காலிங்கர்: என்போல எனின், ஒருவரது அறிவுடைமையைச் சிலர் மாட்டு நாள்தோறும் சென்று இரக்கும் இரப்பானது தலையழித்தாற்போல என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: நிரப்பு என்பது இரப்பு.
பரிமேலழகர்: அறிவினை நிச்சம் நிரப்புக் கெடுக்குமாறு போல.
பரிமேலழகர் குறிப்புரை: நிச்ச நிரப்பு: நாள்தோறும் இரவான் வருந்தித் தன் வயிறு நிறைத்தல். அஃது அறிவு உடையான் கண் உண்டாயின் அவற்கு இளிவரவானும் பாவத்தானும் எள்ளற்பாட்டினை விளைத்து. அவன் நன்கு மதிப்பினை அழிக்கும்: அது போல மறவியும் புகழ் உடையான் கண் உண்டாயின், அவற்குத் தற்காவாமையானும், காரியக் கேட்டானும் எள்ளற்பாட்டினை விளைத்து அவன் நன்கு மதிப்பினை அழிக்கும் என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் பொச்சாப்பினது குற்றம் கூறப்பட்டது.[இரவான் - பிச்சை எடுத்தலால்; இளிவரவு-இழிவு (அவமானம்)]: எள்ளற்பாடு-இகழ்ச்சி]

'வறுமை அறிவினைக் கொல்லுமாறு போல' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நாளும் வறுமை அறிவை அழிக்கும்', 'அறிவினை வறுமை அழித்தல் போல', 'தொடர்ச்சியான தரித்திரம் ஒருவனுடைய அறிவைச் சிறுகச் சிறுக அழித்துவிடுவதைப் போல', 'அறிவினை நாள்தோறும் வறுமை அழிப்பது போன்று' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

தொடர்ச்சியான வறுமை அறிவினை அழிப்பது போன்று என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தொடர்ச்சியான வறுமை அறிவினை அழிப்பது போன்று கடமைகளில் கவனம் செலுத்தாது புறக்கணித்தல் ஒருவரது நற்பெயரைக் கெடுக்கும் என்பது பாடலின் பொருள்.
வறுமை அறிவை அழிக்குமா?

மெத்தனம் நற்பெயரை அழிக்கும்.

அன்றைக்கன்று தேடிஉண்ணக்கூடிய வறுமைநிலை அறிவைச் சிதைக்கும்; கடமையைப் புறக்கணித்தல் நற்பெயருக்குக் கேடு விளைவிக்கும்.
நிச்சம் என்ற சொல் எல்லா நாளும் என்ற பொருளது. நிரப்பு என்ற சொல் வறுமையைக் குறிக்கும். குறையாய் நிரப்பிக்கொண்டேயிருக்க வேண்டுதலின் மங்கல வழக்கான எதிர்மறைக் குறிப்புடன் நிரப்பு எனப்பட்டது. இச்சொல் .......நெருநலும் கொன்றது போலும் நிரப்பு (நல்குரவு 1048), ......நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடரிது (நல்குரவு 1049) என்னும் குறள்களிலும் வறுமை என்ற பொருளிலேயே ஆளப்பட்டுள்ளது. நிச்சநிரப்பாவது நாள்தோறும் வருந்தி இரந்துண்ணும் நிலைமை அதாவது நாளும் பாடுபட்டு குறைவாய வயிறு நிரப்புவது. அது நாளும் தொடர்ந்தால் அவனது அறிவு கெட்டுப்போகும் அதாவது அறிவு மழுங்க அடிக்கப்பட்டுச் செயலற்றுவிடும். நீங்காத வறுமை அறிவை அழிப்பதுபோல் பொச்சாப்பினால் ஒருவனது புகழ் பொன்றும் என்கிறது பாடல்.
கொடிய வறுமை மனிதனை உணவுக்காக போராட வைக்கிறது. நிலையான வறுமை ஒருவனது அறிவைக் கெடுக்கச் செய்யும். அதுபோல் சோர்ந்திருத்தலும் ஒருவன் சேர்த்த புகழை அழிக்கும்.

கடமையில் ஈடுபாடு இன்றி இருப்பது ஒருவன் ஈட்டிய நற்பெயரை அழித்து விடும் என்று இக்குறள் கூறுகிறது. தொடர்ந்து பெறும் வெற்றியால் சிலர் மிகுதியான மனமகிழ்ச்சியால் இறுமாப்பு அடைந்து கள்ளுண்டவன்போல் மயக்கநிலையில் இருப்பர். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதில் அக்கறை காட்டமாட்டார்கள். அவர்கள் பெற்ற வெற்றியே தோல்விக்கும் வழிவகுத்து விடுகிறது. தன்னைக் காத்துக் கொள்ள வேண்டிய வழிகளில் தவறிவிடுவர். பொருட்படுத்தாமை காரணமாக, செய்ய வேண்டிய செயல்களை அவர்கள் முறையாகச் செய்வதில்லை. மறதி என்பது தேவையான நேரத்தில் அறிவு வெளிப்படாமையைக் குறிப்பது. மறதியால் செயல்கள் கெடும். இவ்வாறு சோர்வினால் நற்பெயர் சிறுகச் சிறுகக் கெடுகிறது. இவை அவனது புகழ் குறைவதற்குக் காரணங்கள் ஆகின்றன. பொச்சாப்பு புகழைக் கொல்லும் என்று சொல்லப்பட்டதால், அது புகழை விளைக்காதது மட்டுமன்றி ஏற்கனவே தேடிவைத்துள்ள புகழையும் அழிக்கும் என்பதாம். மகிழ்ச்சியிலும் சோர்வு கூடாது என்பதும் அறிவுறுத்தப்பட்டது.
அழிக்கமுடியாத அறிவையும் ஒருவனது நிலையான வறுமை கெடுக்கும் என்ற நீதியை உவமமாகக் காட்டி நல்ல புகழுடையானும் தொடர்ந்த சோர்வினால் தன் நற்பெயரை இழப்பான் என்ற நீதி விளக்கப்பட்டது.

பொச்சாப்பு என்பதற்கு மற்றவர்கள் மறதி என்று பொருள் உரைக்கக் காலிங்கர் இகழ்ச்சியெனப் பொருள் கொண்டு 'உலகத்துத் தாம் பிறரை இகழும் இகழ்ச்சியாவது, மற்று அது புகழினைத் தலையழிக்கும்' என்பார். இவர் சொல்லும் இகழ்ச்சி என்பது புறக்கணித்தலாகிய பொருட்படுத்தாமை என்ற அதிகார இயைபுடைய பொருளில் ஆளப்பட்டது.

வறுமை அறிவை அழிக்குமா?

பொச்சாப்பினால் புகழ் குன்றும் என்று சொல்லவந்த வள்ளுவர், வறுமையால் துன்புறும் அறிவுடையார் சிந்திக்கும் திறனை இழப்பது போல என்ற உவமையைப் பயன்படுத்துகிறார். வறுமை அறிவை அழிக்குமா? அறிவு என்பது அழிவிலிருந்து காப்பது; எந்தவொரு பகையும் அதை அழிக்கமுடியாது என அறிவு அற்றம் காக்கும் கருவி; செறுவார்க்கும் உள்ளழிக்கல் ஆகா அரண் (அறிவுடைமை 421) என்ற குறள் கூறுகிறதே, பின் ஏன் இங்கு இப்படிச் சொல்லப்படுகிறது? அறிவிற்கு அழிவு நேர்வதில்லை. உயிர்வாழ்த் தேவையான உணவுக்காக நாளும் போரடுபவனுக்கு அறிவு விளக்கங்காண நேரம் வாய்ப்பதில்லை. அதனால் அவனது அறிவு கெட்டுப்போகும். 'பசிவந்திடப் பத்தும் பறந்து போகும் என்ற பழமொழியில் சொல்லப்பட்ட அந்தப் பத்தனுள் அறிவுடைமையும் அடங்கும்.

பரிமேலழகர் இக்குறளுக்கான சிறப்புரையில் 'அஃது (தொடர்ச்சியான வறுமை) அறிவு உடையான் கண் உண்டாயின் அவற்கு இளிவரவானும் பாவத்தானும் எள்ளற்பாட்டினை விளைத்து அவன் நன்கு மதிப்பினை அழிக்கும்' என உரை கூறினார். இவ்வுரையை விளக்கும் தண்டபாணி தேசிகர் ''நிரப்பு அறிவினைக் கொல்லுமாறு போல்' என்பதை மாற்றிப் பரிமேலழகர் 'அவன் நன்கு மதிப்பினையழிக்கும்' என்றார். வயிரம் முதலியன மதிப்பார்கண்ணதாக அவற்றின் பெருமையறிப்படுதல் போல ஒருவன் அறிவு நினைப்பும் மறைவுமாய் என்றும் உயிரினை ஒட்டி நிற்கும் பண்பாதலின் அதனை அவ்வப்போது தோன்றி மறையும் நிரப்பு கொல்ல இயலாது. அறிவும் அழியாது என்பதனை எண்ணிப்பார்த்த பரிமேலழகர் அறிவின் பயனாகிய நன்கு மதிப்பினையிழக்கும் என்றது மிக நயமானபகுதி' எனப் பரிமேலழகர் உரைப்பகுதியைப் பாராட்டுவார்.
வறுமை அறிவை அழிப்பதில்லை; அறிவின் பயனாகிய நன்மதிப்பை அழிக்கும் என்பது பரிமேலழகர் உரைக்கருத்து.

தொடர்ச்சியான வறுமை அறிவினை அழிப்பது போன்று கடமைகளில் கவனம் செலுத்தாது புறக்கணித்தல் ஒருவரது நற்பெயரைக் கெடுக்கும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

நிலைத்த பொச்சாவாமை நற்பெயரைத் தக்க வைக்கும்.

பொழிப்பு

நாளும் வறுமை அறிவினை அழித்தல் போல, ஒருவனது நற்பெயருக்கு சோர்வு கேடு உண்டாக்கும்.