இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0536



இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுஒப்பது இல்

(அதிகாரம்:பொச்சாவாமை குறள் எண்:0536)

பொழிப்பு: யாரிடத்திலும் எக்காலத்திலும் மறந்தும் சோர்ந்திருக்காத தன்மை தவறாமல் பொருந்தியிருக்குமானால், அதற்கு ஒப்பான நன்மை வேறொன்றும் இல்லை.

மணக்குடவர் உரை: யாவர்மாட்டும் எல்லாநாளும் தப்புச்செய்யாமை தப்பாமல் வாய்க்குமாயின் அதனையொக்க நன்மை பயப்பது பிறிதொன்று இல்லை.
இது முறைமை செய்யுங்கால் கடைப்பிடித்துச் செய்யவேண்டு மென்றது.

பரிமேலழகர் உரை: இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை வாயின் - அரசர்க்கு மறவாமைக் குணம் யாவர்மாட்டும் எக்காலத்தும் ஒழிவின்றி வாய்க்குமாயின், அஃது ஒப்பது இல் - அதனை ஒக்கும் நன்மை பிறிது இல்லை.
(வினை செய்வார் சுற்றத்தார் என்னும் தம்பாலார் கண்ணும் ஒப்ப வேண்டுதலின், 'யார் மாட்டும்' என்றும் , தாம் பெருகியஞான்றும் சுருங்கிய ஞான்றும் ஒப்ப வேண்டுதலின் வழுக்காமை 'என்றும்' கூறினார். வாயின் என்பது முதனிலைத் தொழிற் பெயராக வந்த வினை எச்சம். வாய்த்தல்: நேர்படுதல்.)

இரா சாரங்கபாணி உரை: மறவாமைப் பண்பு எவரிடத்தும் எக்காலத்தும் நீங்காமல் வாய்த்தால் அதனைப்போல் நன்மை தருவது வேறில்லை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை வாயின் அதுஒப்பது இல்.


இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை வாயின்:
பதவுரை: இழுக்காமை-தவறாமை, (மறவாத குணம்); யார்மாட்டும்-எல்லாரிடத்தும்; என்றும்-எப்போதும்; வழுக்காமை-ஒழிவின்றி; வாயின்-கிடைக்குமானால்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: யாவர்மாட்டும் எல்லாநாளும் தப்புச்செய்யாமை தப்பாமல் வாய்க்குமாயின்;
பரிப்பெருமாள்: யாவர்மாட்டும் எல்லாநாளும் தப்புச்செய்யாமை தப்பாமல் வாய்க்குமாயின்;
பரிதி: தான் பிடித்த நெறி குலையாமல் யார்க்கும் ஒரு தன்மையான குணம் பெற்றால்;
காலிங்கர்: உலகத்து மன்னரானவர் ஒருவர்மாட்டு ஒருவரை இகழாமையாகிய குணம் உளதாயினும் ஒருபடிப்பட நிற்றல் யாவர்க்கும் அரிது; மற்று இங்ஙனம் வழுவாமை வாய்ப்பின்;
காலிங்கர் குறிப்புரை: இழுக்காமை என்பது வழுக்காமை; இகழாமை என்றுமாம்.
பரிமேலழகர்: அரசர்க்கு மறவாமைக் குணம் யாவர்மாட்டும் எக்காலத்தும் ஒழிவின்றி வாய்க்குமாயின்;
பரிமேலழகர் குறிப்புரை: வினை செய்வார் சுற்றத்தார் என்னும் தம்பாலார் கண்ணும் ஒப்ப வேண்டுதலின், 'யார் மாட்டும்' என்றும் , தாம் பெருகியஞான்றும் சுருங்கிய ஞான்றும் ஒப்ப வேண்டுதலின் வழுக்காமை 'என்றும்' கூறினார். வாயின் என்பது முதனிலைத் தொழிற் பெயராக வந்த வினை எச்சம். வாய்த்தல்: நேர்படுதல்.

'யாவர்மாட்டும் எல்லாநாளும் தப்புச்செய்யாமை தப்பாமல் வாய்க்குமாயின்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். இழுக்காமைக்கு வழுக்காமை/இகழாமை எனப் பொருள் கொண்டார் காலிங்கர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மறவாத தன்மையைத் தவறாது பெற்றால்', 'எப்போதும் யாரிடத்திலும் அவரவர்க்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்வதை மறந்துவிடாமல் இருக்கும் குணம் ஒருவனுக்கு இருக்குமானால்', 'யாரிடத்திலும் எக்காலத்திலும் தன் கடமை மறவாமை ஒருவனுக்குத் தவறாது வாய்க்கும் ஆயின்', 'மறந்தும் கடமையில் தவறாமல் இருக்கும் நிலை யாவர் மாட்டும் எப்பொழுதும் ஒழிவின்றி வாய்க்குமாயின்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

யாவர் மாட்டும் எப்பொழுதும் அலட்சியம் காட்டாமல் இருக்கும் நிலை ஒழிவின்றி வாய்க்குமாயின் என்பது இப்பகுதியின் பொருள்.

அதுஒப்பது இல்:
பதவுரை: அது-அஃது; ஒப்பது-போல்வது; இல்-இல்லை.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதனையொக்க நன்மை பயப்பது பிறிதொன்று இல்லை.
மணக்குடவர் குறிப்புரை: இது முறைமை செய்யுங்கால் கடைப்பிடித்துச் செய்யவேண்டு மென்றது.
பரிப்பெருமாள்: அதனையொக்க நன்மை பயப்பது பிறிது இல்லை.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது முறை செய்யுங்கால் கடைப்பிடித்துச் செய்யவேண்டு மென்றது.
பரிதி: அதுபோல ஒரு குணமும் இல்லை என்றவாறு.
காலிங்கர்: அதனை ஒப்பதோர் நன்மை உலகத்து யாதும் இல்லை என்றவாறு.
பரிமேலழகர்: அதனை ஒக்கும் நன்மை பிறிது இல்லை.

'அதனை ஒக்கும் நன்மை பிறிது இல்லை' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அதுபோன்ற ஆற்றல் வேறில்லை', 'அதற்கு இணையான சிறப்பு வேறில்லை', 'அதனை ஒக்கும் நன்மை வேறு இல்லை', 'அதனை ஒக்கும் நன்மை வேறொன்றும் இல்லை' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

அதனை ஒக்கும் நன்மை தருவது வேறு இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பொச்சாவாமை எவரிடத்தும் எக்காலத்தும் தவறாமல் வாய்க்குமானால், அதனை ஒத்த நன்மை தரவல்லது வேறு ஒன்றும் இல்லை.

யாவர் மாட்டும் எப்பொழுதும் அலட்சியம் காட்டாமல் இருக்கும் நிலை ஒழிவின்றி வாயின், அதனை ஒக்கும் நன்மை தருவது வேறு இல்லை என்பது பாடலின் பொருள்.
'வாயின்' என்ற சொல்லின் பொருள் என்ன?

இழுக்காமை என்ற சொல்லுக்கு மறவாமை என்று பொருள் கொள்வர்.
யார்மாட்டும் என்றும் என்ற தொடர் யாரிடத்தும் எப்போதும் என்ற பொருள் தரும்.
வழுக்காமை என்ற சொல்லுக்கு தவறாமை என்று பொருள்.
அதுஒப்பது இல் என்ற தொடர் அதற்கு ஒப்பானது வேறொன்றுமில்லை என்ற பொருளது.

என்றும் எவரிடத்தும் சோர்வு என்னும் பிழை ஏற்படாமல் காத்துக்கொண்டால் அதனினும் நன்மையானது எதுவும் இல்லை.

ஆள் பார்த்து அலட்சியம் காட்டவேண்டாம். இவன் எளியன், இவன் வேண்டப்படாதவன், இவன் செல்வன் எனப் பிரித்துப் பார்க்காமல் எல்லோரிடமும் இகழ்ச்சி இல்லாமல் கலந்துகொள்ளவேண்டும். மேலும் இந்நெறி தப்பாமல் எக்காலத்திலும் இது காக்கப்படவேண்டும். இவ்விதம் எல்லோரிடமும் எப்போதும் அலட்சியப் போக்கு காட்டாமல் நடந்துகொண்டால் அதுபோன்றதொரு நெறி வேறொன்றும் இல்லை. 'வாயின்' என்னும் சொல் அவ்வாறு யாவரிடத்தும் இகழாது நடந்துகொள்ள் முடிந்தால் என்றதால் அது அரிது எனப் பெறப்படும். அவ்வாறு செய்வோர் சிலரே என்பதையும் உணர்த்தி நின்றது.
பகைவர்கள், உறவுகள், பணியாளர்கள், ஆகியவர்களிடம் சமநோக்கில், கூர்ந்த கவனிப்புடன் இருக்க வேண்டும் அதாவது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனச் சிலர் உரைகள் அமைந்தன. எவரையும் அலட்சியம் செய்யாமல் ஒழுகவேண்டும் என்பது கருத்து.

'வாயின்' என்ற சொல்லின் பொருள் என்ன?

'வாயின்' என்ற சொல்லுக்கு வாய்க்குமாயின், குணம் பெற்றால், வாய்ப்பின், வாய்க்குமானால், குணம் ஒருவனுக்கு இருக்குமானால், வாய்க்கும் ஆயின், நேர்படுதல் (பொருந்துதல்) என உரையாளர்கள் பொருள் கூறினர்.

வாயின் என்றது வாய்க்குமாயின் என்ற பொருள் தரும்.

யாவர் மாட்டும் எப்பொழுதும் அலட்சியம் காட்டாமல் இருக்கும் நிலை ஒழிவின்றி வாய்க்குமாயின், அதனை ஒக்கும் நன்மை தரக்கூடியது வேறு இல்லை என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பொச்சாவாமை எப்பொழுதும் எல்லோரிடமும் நீங்காதிருந்தால் பெருநன்மை உண்டாகும்.

பொழிப்பு

எவரிடத்தும் இகழாமை எக்காலத்தும் நீங்காமல் வாய்த்தால் அதனைப்போல் நன்மை பயப்பது வேறில்லை.