புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும்:
பதவுரை: புகழ்ந்தவை-உயர்த்திக்கூறப்பட்ட செயல்கள்; போற்றி-எண்ணி; செயல்-செய்தல்; வேண்டும்-தகும்.
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உயர்ந்தாரால் புகழப்பட்டவையிற்றைக் கடைப்பிடித்துச் செய்தல்வேண்டும்;
பரிப்பெருமாள்: உயர்ந்தாரால் புகழப்பட்டவையிற்றைக் கடைப்பிடித்துச் செய்தல்வேண்டும்;
பரிதி: உலகம் புகழ்ந்த காரியம் தனக்கு வந்தால் அந்தக் காரியத்தைப் போற்றிச் செய்வான்;
காலிங்கர்: தொல்கலையும் தொல் சான்றோரும் இவை இவை நல்ல என்று புகழ்ந்தவற்றை நீரும் குறிக்கொண்டு செய்தலை விரும்புமின்; [தொல்கலை - பழமையான நூல்கள். தொல்சான்றோர் - பழங்காலச் சான்றோர்கள்]
பரிமேலழகர்: நீதி நூலுடையார் இவை அரசர்க்கு உரியன என்று உயர்த்துக் கூறிய செயல்களைக் கடைப்பிடித்துச் செய்க;
பரிமேலழகர் குறிப்புரை: அச்செயல்களாவன: மூவகை ஆற்றலும், நால்வகை உபாயமும், ஐவகைத் தொழிலும், அறுவகைக் குணமும் முதலாய செயல்கள்.
'உயர்ந்தாரால் புகழப்பட்டவையிற்றைக் கடைப்பிடித்துச் செய்தல்வேண்டும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'புகழ்தரும் வினைகளை மதித்துச் செய்க', 'புகழ் தரக்கூடிய நல்ல காரியங்களையும் மறந்து விடாமல் செய்து கொண்டிருக்க வேண்டும்', 'அறிஞர் சிறந்த கடமைகளென்று புகழ்ந்து கூறியவற்றைக் கடைப்பிடித்துச் செய்யவேண்டும்', 'பெரியோர் புகழ்ந்துள்ள நற்செயல்களைக் கடைப்பிடித்துச் செய்க', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
புகழப்பட்ட நற்செயல்களைக் கடைப்பிடித்துச் செய்க என்பது இப்பகுதியின் பொருள்.
செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்:
பதவுரை: செய்யாது-செய்யாமல்; இகழ்ந்தார்க்கு-மறந்தவர்க்கு; எழுமையும்-எழுபிறப்பும்; இல்-இல்லை.
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இவையிற்றைச் செய்யாது இகழ்ந்தவர்க்கு எழுபிறப்பிலும் நன்மையில்லையாமாதலான்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது அறத்தின்கண் இகழாமற் செய்வது கூறிற்று.
பரிப்பெருமாள்: அவற்றைச் செய்யாது இகழ்ந்தவர்க்கு எழுபிறப்பிலும் நன்மையில்லையாமாதலான்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது அறத்தின்கண் இகழாமை கூறிற்று.
பரிதி: செய்யானாகில் ஏழு செனனத்தாலும் கீர்த்தி இல்லை என்றவாறு.
காலிங்கர்: என்னை எனின் இங்ஙனம் செய்யாது அவற்றை இகழ்ந்தவர்க்கு இம்மை ஆக்கமும் அன்றி மறுமை ஆக்கமும் இல்லை என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: எழுமை என்பது மறுமை.
பரிமேலழகர்: அங்ஙனம் செய்யாது மறந்தவர்க்கு எழுமையினும் நன்மை இல்லை ஆகலான்.
பரிமேலழகர் குறிப்புரை: சாதி தருமமாகிய இவற்றின் வழீஇயோர்க்கும் உள்ளது நிரயத் துன்பமே ஆகலின், 'எழுமையும் இல்' என்றார். 'எழுமை' ஆகு பெயர், இதனான் பொச்சாவாது செய்ய வேண்டுவன கூறப்பட்டன.
'அங்ஙனம் செய்யாது மறந்தவர்க்கு எழுமையினும் நன்மை இல்லை' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'செய்யாது விட்டவர்க்கு என்றும் வாழ்வில்லை', 'அப்படிச் செய்யாது இகழ்ந்தவர்களுக்குப் (புண்ணியம் இல்லாததால்) பின்வரும் பிறவிகளுக்கு நன்மையில்லை', 'அங்ஙனஞ் செய்யாது அவற்றை மறந்தவர்க்கு எழுபிறப்பிலும் நன்மையில்லை', 'அங்ஙனம் செய்யாது இகழ்ந்தார்க்கு (மறந்தார்க்கு) எழு பிறப்பிலும் நன்மையில்லை. (எழுமையும் இல- 'மிகுதியும் உயர்ச்சியும் இல்லை' என்றும் கூறலாம்.)' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.
செய்யாது அவற்றை மறந்தவர்க்கு எப்போதும் நன்மையில்லை என்பது இப்பகுதியின் பொருள்.
|
'புகழ்ந்தவை' யாவை?
'புகழ்ந்தவை' என்றதற்கு உயர்ந்தாரால் புகழப்பட்டவை, உலகம் புகழ்ந்த காரியம், தொல்கலையும் தொல் சான்றோரும் இவை இவை நல்ல என்று புகழ்ந்தவை, நீதி நூலுடையார் இவை அரசர்க்கு உரியன என்று உயர்த்துக் கூறிய செயல்கள், தான் மிகவும் உயர்த்திப் புகழ்ந்து பேசியவை, அறநூலோரும் சான்றோரும் உயர்த்திக் கூறிய செயல்கள், புகழ்தரும் வினைகள், சான்றோர் புகழ்ந்து கூறும் செயல்கள், புகழ் தரக்கூடிய நல்ல காரியங்கள், சான்றோர்களால் புகழப்பட்ட நற்செயல்கள், அறிஞர் சிறந்த கடமைகளென்று புகழ்ந்து கூறியவை, பெரியோர் புகழ்ந்துள்ள நற்செயல்கள், பெரியோரால் புகழ்ந்து கூறப்பட்டவை என்றவாறு உரை ஆசிரியர்கள் பொருள் கூறினர்.
புகழ்ந்தவை என்பதற்குக் காலிங்கர் 'தொல்கலையும் தொல் சான்றோரும் இவை இவை நல்ல என்று புகழ்ந்தவற்றை' என உரைத்தார். இது நூல்களேயன்றித் தொல்லோர்வாயுரைகளும் உள்ளடக்கியது எனப்பொருள்படும். இவ்வுரை சிறப்பாகக் காணப்படுகிறது.
புகழ்ந்தவை என்பதற்குப் பரிமேலழகர் 'நீதி நூலுடையார் இவை அரசர்க்கு உரியன என்று உயர்த்துக் கூறிய செயல்கள்' எனக்கூறி 'அச்செயல்களாவன: மூவகை ஆற்றலும், நால்வகை உபாயமும், ஐவகைத் தொழிலும், அறுவகைக் குணமும் முதலாய செயல்கள்' என விளக்கமும் தந்தார். இவர் கூறும் மூவகையாற்றல் என்பது அறிவும் ஆண்மையும், பொருள் படை என இருவகைத்தாய பெருமையும் என்றும் நால்வகை உபாயம் என்பது கொடுத்தல், இன்சொற் சொல்லல், வேறுபடுத்தல், ஒறுத்தலாம் என்றும் ஐவகைத் தொழில் என்பது எளிய முயற்சியுடையது, செய்தாற் பயனுள்ளது, பெரும்பயன் தருவது, ஐயம் இல்லாதது, பின் இன்பம் தருவதாகிய தொழில்களாம் என்றும் அறுவகைக் குணம் என்றது நட்பாக்கல், பகையாக்கல், பகைமேற் சேறல், இருத்தல், பிரித்தல், கூட்டலாம் என்றும் முதலாய என்றதனால் அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம் முதலியவும் கொள்க என்றும் ஆய்வாளர்கள் விளக்கினர்.
தேவநேயப்பாவாணர் அரசர்க்குரிய சிறந்த செயல்கள் என்பதற்கு வரலாற்றிற் கெட்டாத பண்டைக்காலத்திற் பெருங்கடலில் நாவாய்ப் படை செலுத்திச் சாலித்தீவைக் கைப்பற்றியமை, தூங்கெயிலெறிந்தமை, முக்கழகம் நிறுவியமை, மகனை முறை செய்தமை, சீன நாட்டினின்று கரும்பைக் கொணர்ந்து பயிரிட்டமை, பாரதப்போர்ப்படை யிரண்டிற்கும் பதினெண்ணாளும் பெருஞ்சோறு வழங்கியமை, ஓரிளைஞன் இருபெருவேந்தரையும் ஐம்பெரு வேளிரையும் வென்றமை, முரசு கட்டிலில் துயின்ற புலவனுக்குக் கவரி வீசியமை, பரிசிலனுக்குத் தலையீந்தமை, காவிரியணைகட்டியமை, பேரேரியுங் கிளையாறும் வெட்டியமை, தமிழ்வேந்தரை யிகழ்ந்த வடநாட்டரசரை வென்று பத்தினிக்குப் படிமை நிறுவியமை, வானளாவுங் கோபுரம் எடுத்தமை, துறைநகரமைத்துக் கடல் வாணிகம் பெருக்கியமை போன்றனவும் பிறவுமாம் என தமிழ் அரசர்களது புகழ்பெற்ற செயல்கள் சிலவற்றைக் கூறினார்.
பரிமேலழகரும் தேவநேயப்பாவாணரும் அரசர்க்கு உரிய செயல்கள் எனக்கொண்டு உரை வரைந்திருந்தாலும் இவற்றைப் பொதுமையிற் கொள்ளவும் முடியும்.
'புகழ்ந்தவை' என்பதற்கு முன்னோர் புகழ்ந்துள்ள நற்செயல்கள் என்பது பொருள்.
|