இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0533பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அதுஉலகத்து
எப்பால்நூ லோர்க்கும் துணிவு

(அதிகாரம்:பொச்சாவாமை குறள் எண்:533)

பொழிப்பு (மு வரதராசன்): மறதியால் சோர்ந்து நடப்பவர்க்குப் புகழுடன் வாழும் தன்மையில்லை; அஃது உலகத்தில் எப்படிப்பட்ட நூலோர்க்கும் ஒப்பமுடிந்த முடிபாகும்.

மணக்குடவர் உரை: பொச்சாப்பு உடையார்க்குப் புகழுடைமையில்லையாம்; அஃது உலகத்து வழங்குகின்ற எவ்வகைப்பட்ட நூலோர்க்குந் துணிவு.
இது பொச்சாப்பார்க்குப் புகழாகாதென்றது.

பரிமேலழகர் உரை: பொச்சாப்பார்க்குப் புகழ்மை இல்லை - பொச்சாந்து ஒழுகுவார்க்குப் புகழுடைமை இல்லை, அது உலகத்து எப்பால் நூலோர்க்கும் துணிவு - அவ்வின்மை இந்நீதி நூலுடையார்க்கேயன்றி உலகத்து எவ்வகைப்பட்ட நூல் உடையார்க்கும் ஒப்ப முடிந்தது.
(அரசர்க்கேயன்றி அறம் முதலியன நான்கினும் முயல்வார் யாவர்க்கும் அவை கைகூடாமையின் புகழில்லை என்பது தோன்ற, 'எப்பால் நூலோர்க்கும் துணிவு' என்றார்.)

தமிழண்ணல் உரை: செய்யவேண்டியவற்றை அலட்சியப்படுத்தும் கடமை மறதியுடையார்க்குப் புகழுக்குரிய தன்மைகள் எவையும் அமையா. இது உலகத்தில் அனைத்துத் துறைசார்ந்த, எல்லாவகைப்பட்ட நூலுடையார்க்கும் ஒப்ப முடிந்த முடிபாகும்.
எல்லாத்துறைகளிலுமே பொச்சாப்பு என்னும் கடமை மறதி உளதாதலின் இங்ஙனம் கூறுகிறார்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அது உலகத்து எப்பால் நூலோர்க்கும் துணிவு.

பதவுரை: பொச்சாப்பார்க்கு-மகிழ்ச்சிச் சோர்வுடையார்க்கு, கடமை மறந்தொழுகுவார்க்கு; இல்லை-இல்லை; புகழ்மை-புகழுடைமை, புகழ்வாழ்வு, புகழுடன் வாழும் தன்மை, இசையுடைமை; அது-அஃது; உலகத்து-உலகத்தில்; எப்பால்-எவ்வகை; நூலோர்க்கும்-நூல் உடையவர்க்கும்; துணிவு-முடிந்த முடிவு.


பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொச்சாப்பு உடையார்க்குப் புகழுடைமையில்லையாம்;
பரிப்பெருமாள்: பொச்சாப்பு உடையார்க்குப் புகழுடைமையில்லையாம்;
பரிதி: மதப்பட்டால் அறிவில்லாதாற்குப் புகழில்லை;
காலிங்கர்: தத்தம் கோட்பாட்டால் பெறும் பயன் வேறுபடுத்து அமைக்கும் அறுவகைச் சமயத்தோர்க்கும் அவை கடந்த அப்பாலோர்க்கும் பிறரை அவமதிபண்ணி இகழாது ஆற்றல் உடையாராதலே தத்தம் பெறுபயனுக்கு உறுதி நெறியென்பது தாம் கற்ற நூல்களில் பெறுபயன்; [அறுவகைச் சமயத்தோர்-சைவமுதலாகக் கௌமாரம் ஈறாகவுள்ள வைதிக மதம் ஆறினும். காபில முதலாக-சைமினியம் ஈறான வேதாந்த மதம் ஆறினும், பௌத்த முதலாக சூனியவாதம் ஈறான புறச்சமயம் ஆறினும், வைணவம் முதலாகச் சைவம் ஈறான அகப் புறச்சமயம் ஆறினும் உள்ளோர்]
பரிமேலழகர்: பொச்சாந்து ஒழுகுவார்க்குப் புகழுடைமை இல்லை;

'பொச்சாப்பு உடையார்க்குப் புகழுடைமையில்லையாம்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மறதி உடையார்க்குப் புகழ்வாழ்வு இல்லை', 'மறந்தொழுகுவார்க்குப் புகழுடைமை இல்லை', 'சோர்வுடையவர்களுக்குப் புகழுடைமை இல்லை', ''மறதியுடையார்க்குப் புகழுடைமை இல்லை' என்பது', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

மகிழ்ச்சிச் சோர்வுடையவர்களுக்கு நற்பெயர்பொருந்திய வாழ்வு இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.

அதுஉலகத்து எப்பால்நூ லோர்க்கும் துணிவு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அஃது உலகத்து வழங்குகின்ற எவ்வகைப்பட்ட நூலோர்க்குந் துணிவு.
மணக்குடவர் குறிப்புரை: இது பொச்சாப்பார்க்குப் புகழாகாதென்றது. [ஆகாது-உண்டாகாது]
பரிப்பெருமாள்: அஃது உலகத்து வழங்குகின்ற அறுவகைப்பட்ட நூலோர்க்குந் துணிவு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பொச்சாப்பு ஆகாது என்றது.
பரிதி: அது எல்லாச் சமயத்தார் சொல்லுஞ் சாத்திரத்தினுங் கேட்க என்றவாறு.
காலிங்கர்: அன்றியும் பிற நூல்களினும் இக்குற்றம் நன்று என்பார் யாரும் இல்லை என்றவாறு.
பரிமேலழகர்: அவ்வின்மை இந்நீதி நூலுடையார்க்கேயன்றி உலகத்து எவ்வகைப்பட்ட நூல் உடையார்க்கும் ஒப்ப முடிந்தது.
பரிமேலழகர் குறிப்புரை: அரசர்க்கேயன்றி அறம் முதலியன நான்கினும் முயல்வார் யாவர்க்கும் அவை கைகூடாமையின் புகழில்லை என்பது தோன்ற, 'எப்பால் நூலோர்க்கும் துணிவு' என்றார்.

'அஃது உலகத்து வழங்குகின்ற எவ்வகைப்பட்ட நூலோர்க்குந் துணிவு' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இது எல்லா ஆசிரியர்க்கும் முடிந்த முடிவு', 'அக் கருத்து எவ்வகைப்பட்ட நூலாசிரியர்கட்கும் தெளிந்த முடிபாகும்', 'அஃது உலகத்தில் எவ்வகைப்பட்ட நூற்கொள்கை உடையார்க்கும் ஒப்ப முடிந்த துணிபாம்', 'உலகத்தில் உள்ள எல்லாப் பெரியோர்க்கும் ஒப்ப முடிந்த துணிபாகும்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

இது உலகத்திலுள்ள எத்துறை சார்ந்த அறிஞர்க்கும் தெளிந்த முடிபாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
மகிழ்ச்சிச் சோர்வுடையவர்களுக்குப் நற்பெயர்பொருந்திய வாழ்வு இல்லை; இது உலகத்திலுள்ள எப்பால் நூலோர்க்கும் தெளிந்த முடிபாகும் என்பது பாடலின் பொருள்.
'எப்பால் நூலோர்' யாவர்?

களிப்பில் அயர்ந்துபோகிறவர்கள் பெரிதாக எதையும் செய்யமாட்டாதவர்கள்.

மகிழ்ச்சிச் சோர்வுடையார்க்குப் புகழ்ப்பேறு இல்லை என்பது உலகத்தின் எவ்வகைக் கொள்கையுடையார்க்கும் ஒப்ப முடிந்ததாகும்.
பொச்சாப்பார் என்ற சொல் கடமையை இகழ்பவர்கள் அதாவது செய்யவேண்டியதைப் புறக்கணிக்கும் அலட்சிய மனப்பான்மை கொண்டவர்களைக் குறிப்பது. மாந்தர்களில் சிலர் மகிழ்ச்சியாக இருந்து எந்தநேரமும் சுறுசுறுப்புடன் கடமையாற்றுவர். வேறு சிலர் அலட்சிய மனப்பான்மையுடன் வேலை செய்வர். பின்னவர் பொச்சாப்பு உடையார் ஆவர். அவ்விதம் இகழ்ச்சியுடையவர்கள் புகழடைய முடியாது அதாவது அருஞ்செயல் ஆற்றமுடியாது என்பதை எந்தத் கோட்பாட்டைச் சார்ந்தவர்களும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாகும் என்கிறது பாடல்.
கடமையில் சோர்வுறுகின்றவர்கள் புகழ்பெற முடியாது என்கிறது இக்குறள். எந்த துறையில் இருந்தாலும் ஒருவர் வெற்றி பொருந்திய வாழ்வு நடத்தத் தேவை தம் கடமையில் வழுவாது இருத்தல். மகிழ்ச்சியாலோ அல்லது வேறு எந்தக் காரணத்தினாலோ கடமை கடைப்பிடித்தலில் நெகிழ்ச்சியில்லாமல் காத்துக்கொள்ளவேண்டும் எனச் சொல்லப்படுகிறது.
இது யாருக்காகச் சொல்லப்பட்டது? ஆட்சியாளர்க்கா? அறிவியலார்க்கா? அருள்நெறியாளர்க்கா? இலக்கிய நூலார்க்கா? உழவர்க்கா? வணிகர்க்கா? மருத்துவர்க்கா? அல்லது வேறு எந்தத் துறையினருக்கு இக்கூற்று ஏற்றது? அனைத்துத் துறை சார்ந்தவர்க்கும் இது பொருந்தும் எனச் சொல்கிறார் வள்ளுவர். அனைத்துத் துறையினரும் இதை ஒப்புவர் எனவும் கூறுகிறார் அவர். 'உலகத்து எப்பால் நூலோர்க்கும் துணிபு' என அறுதியிட்டு உரைக்கப்பட்டதால், பல துறைநூல்களின் தெளிவினைத்தான் இவ்வாறு வழங்குகிறார் என்று அறிய முடிகிறது. எத்துறையில் இருந்தாலும் புகழை விரும்புவர்கள் எப்பணி புரிபவர்களாயிருந்தாலும் சோர்வுறமாட்டார்கள் என்பது கருத்து.
இவ்வதிகாரத்துப் பிரிதோரிடத்தில் (குறள் 532) 'பொச்சாப்புக் கொல்லும் புகழை' என்று கூறப்பட்டது. அது எல்லாத் துறையினருக்கும் பொருந்துவது என இங்கு வலியுறுத்தப்பெறுகிறது.

'எப்பால் நூலோர்' யாவர்?

'எப்பால் நூலோர்' என்றதற்கு உரையாளர்கள், எவ்வகைப்பட்ட நூலோர், அறுவகைப்பட்ட நூலோர், சமயத்தார் சொல்லுஞ் சாத்திரத்திம், கற்ற நூல்களில் பெறுபயன் அன்றியும் பிற நூல்களினும், எவ்வகைப்பட்ட நூல் உடையார், அனைத்துத் துறைசார்ந்தவர், எல்லாவகைப்பட்ட நூலுடையார், எல்லா நூலோர், எல்லா ஆசிரியர், எவ்வகைப்பட்ட நூலாசிரியர், எந்த நாட்டிலுமுள்ள அறிவாளிகள், எவ்வெவ்விடத்து நூல் வல்லார், எவ்வகைப்பட்ட நூற்கொள்கை உடையார், பெரியோர், அறிவு நூலுடையார், எத்தகைய நூலுடையார், எந்தத் துறை நுகர்வோர், எல்லா நூல் வல்லார், எந்த அறிவாளி என்றவாறு பொருளுரைத்தனர்.

நூலோர் என்ற சொல் நூல் இயற்றியவர்கள் எனப் பொருள்படும். இவர்கள் மதிநுட்பம் நூலோடு உடையார் ஆதலால் மிகுந்த நுண்ணறிவு கொண்டவர்கள். அதாவது அவரவர் துறையில் நூலறிவு பெற்றதோடு பட்டறிவு கொண்டு இடைவிடாது அத்துறையில் பயிற்சி கொள்பவராகவும் இருப்பர். உலகில் பலதுறைகள் உண்டு. பலவேறுபட்ட கருத்தாக்கங்கள் உண்டு. ஆனால் சில பரப்பில் மட்டுமே எல்லாத்துறையினர்க்கும் ஒருமித்த கருத்துக்கள் உருவாகும். 'கடமையில் சோர்வடைவோர் சிறப்பாகச் செயல் ஆற்ற இயலாதவர்களாக இருப்பார்கள்' என்பதில் அனைத்துத் துறை நூலோரும் ஒன்றுபடுகின்றனர் என்கிறார் வள்ளுவர் இங்கு.

இக்குறளுக்கான காலிங்கரது உரை தெளிவாக இல்லையென்றாலும் அவர் 'பிறரை இகழாத ஆற்றலே உறுதி நெறி என்றும் பிற நூலாரும் இவ்விகழ்ச்சியைக் குற்றமென்றே கூறுவர்' எனவும் சொல்லவருகிறார் எனத் தெரிகிறது. இவர் இகழ்ச்சி என்பதற்கு 'பொருட்படுத்தாமல் அலட்சியம் பண்ணுதல்' என்று பொருள் கொள்பவர். பரிமேலழகர் 'அரசர்க்கேயன்றி அறமுதலிய நான்கினும் முயல்வார் யாவர்க்கும்' என்று விளக்கம் எழுதுவார். நாமக்கல் இராமலிங்கம் 'பால்' என்பது 'பகுதி' உலகத்து எப்பால் நூலோர்க்கும் என்பது உலகத்தின் எந்தப் பகுதியிலும் உள்ள நூலோர்க்கும்' என்பதாகிறது. அதனால் எல்லா நாடுகளிலும் எல்லா மொழிகளிலும் எந்தக் கொள்கைக்காகவும் நூல்களை எழுதினவர்கள் எல்லாருக்கும் என்று பொருள் தர நிற்பது' என்று எப்பால் என்பதற்கு விளக்கம் தந்தார்.
இவை அனைத்தையும் கலந்து நோக்கும்போது ‘எப்பால் நூலோர்க்கும்’ என்பது எல்லாத் துறைகளையும் அடக்கிச் சொல்லியது எனத் தெளியலாம். உலகத்திலுள்ள பலவகைப்பட்ட கொள்கையுடையார் குறித்து இச்சொற்றொடர் ஆளப்பட்டது. உலகத்தில் எத்துறையில் உள்ள அறிஞர்களும் 'கடமையை இகழ்பவர்களுக்கு புகழ் கிடையாது' என்பதில் தெளிவாக உள்ளனர் எனக் கூறப்பட்டது.

எப்பால் நூலோர் என்பது எல்லாத் துறையிலும் உள்ள அறிஞர்கள் குறித்தது.

சோர்வுடையவர்களுக்கு நற்பெயர்பொருந்தியவாழ்வு இல்லை; இது உலகத்திலுள்ள எத்துறை சார்ந்த அறிஞர்க்கும் தெளிந்த முடிபாகும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

பொச்சாவாமை புகழ்வாழ்வு தரும் என்பதை எத்துறை அறிஞரும் ஒப்புக்கொள்வர்.

பொழிப்பு

கடமைமறதி உடையார்க்குப் புகழ்வாழ்வு இல்லை; இது உலகத்திலுள்ள எத்துறை சார்ந்த அறிஞர்க்கும் தெளிந்த முடிபாகும்.