இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0540உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின்

(அதிகாரம்:பொச்சாவாமை குறள் எண்:540)

பொழிப்பு (மு வரதராசன்): ஒருவன் எண்ணியதை விடாமல் எண்ணி, (சோர்வில்லாமல்) இருக்கப் பெற்றால், அவன் கருதியதை அடைதல் எளிதாகும்.

மணக்குடவர் உரை: தான் நினைந்த பொருளைப் பெறுதல் எளிது; பின்பும் அதனை மறவாதே நினைக்கக் கூடுமாயின்.
இனிப் பொருளின்கண் மறவாமை கூறுவார் முற்பட நினைத்ததனை மறவாமை வேண்டுமென்றார்.

பரிமேலழகர் உரை: தான் உள்ளியது எய்தல் எளிது மன் - அரசனுக்குத் தான் எய்த நினைத்த பொருளை அந்நினைத்த பெற்றியே எய்துதல் எளிதாம், மற்றும் உள்ளியது உள்ளப் பெறின் - பின்னும் அதனையே நினைக்கக் கூடுமாயின்.
(அது கூடாதென்பது ஒழிந்து நின்றமையின், 'மன்' ஒழி இசைக்கண் வந்தது. அதனையே நினைத்தலாவது: மறவி இன்றி அதன்கண்ணே முயறல். இவை இரண்டு பாட்டானும் பொச்சாவாமைக்கு உபாயம் கூறப்பட்டது.)

இரா சாரங்கபாணி உரை: தான் அடைய நினைத்த பொருளை நினைத்தபடியே அடைதல் எளிதாகும். பின்னரும் மறவாது நினைத்ததையே தொடர்ந்து நினைக்க முடியுமானால்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான் உள்ளியது உள்ளப் பெறின்.

பதவுரை: உள்ளியது-கருதியது; எய்தல்-அடைதல்; எளிது-வருந்தாமல் கிட்டக்கூடியது; மன்-(ஒழியிசை); மற்றும்-பின்னும்; தான்-தான்; உள்ளியது-எண்ணியது; உள்ளப்பெறின்--மறவாமல் இடைவிடாது நினைக்கக் கூடுமானால்.


உள்ளியது எய்தல் எளிதுமன்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தான் நினைந்த பொருளைப் பெறுதல் எளிது;
பரிப்பெருமாள்: தான் நினைந்த பொருளைப் பெறுதல் எளிது;
பரிதி: தான் நினைத்த காரியங் கூடல் எளிது;
காலிங்கர்: அரசன் தான் கருதிய நன்மையைக் கருதியாங்குப் பெறுதல் மிகவும் எளிது;
பரிமேலழகர்: அரசனுக்குத் தான் எய்த நினைத்த பொருளை அந்நினைத்த பெற்றியே எய்துதல் எளிதாம்; [நினைத்த பெற்றியே-நினைத்தவாறே]
பரிமேலழகர் குறிப்புரை: அது கூடாதென்பது ஒழிந்து நின்றமையின், 'மன்' ஒழி இசைக்கண் வந்தது.

'நினைத்த பொருளை/நினைத்த காரியத்தை/கருதிய நன்மையைப் பெறுதல் எளிது' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'எண்ணியதை எளிதில் எய்திவிடலாம்', 'நினைத்த காரியத்தை நினைத்தபடி முடிப்பது சுலபம்', 'அதனை அடைதல் எளியதாகும்', 'நினைத்தவை நினைத்தபடியே அடைதல் எளிது', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

எண்ணியதை எளிதாகவே எய்திவிடலாமே என்பது இப்பகுதியின் பொருள்.

மற்றுந்தான் உள்ளியது உள்ளப் பெறின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பின்பும் அதனை மறவாதே நினைக்கக் கூடுமாயின்.
மணக்குடவர் குறிப்புரை: இனிப் பொருளின்கண் மறவாமை கூறுவார் முற்பட நினைத்ததனை மறவாமை வேண்டுமென்றார்.
பரிப்பெருமாள்: பின்பும் அதனை மறவாதே நினைக்கக் கூடுமாயின்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இனிப் பொருளின்கண் மறவாமை கூறுவார் முற்பட நினைத்ததனை மறவாமை வேண்டுமென்றார்.
பரிதி: தான் நினைத்த காரியத்தைப் பலகாலும் நினைத்துச் செய்வானாயின் என்றவாறு.
காலிங்கர்: எப்பொழுது எனின், இவ்வுலகத்து ஒருவரும் தன்னை அவமதி பண்ணாது மதித்தல் வேண்டித்தான் கருதியிருப்பது பிறர்க்கும் இவ்வாறே கருதப்பெறின் என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: உலகத்தார் செய்யும் வினையின் விளைவு வித்தியது விளைதலோடு ஒக்கும் ஆதலால் பிறர்மாட்டு இகழ்ச்சியின்றி நன்மை கருதுவார்க்கும் வந்து விளைவது நன்மை.
பரிமேலழகர்: பின்னும் அதனையே நினைக்கக் கூடுமாயின்.
பரிமேலழகர் குறிப்புரை: அதனையே நினைத்தலாவது: மறவி இன்றி அதன்கண்ணே முயறல். இவை இரண்டு பாட்டானும் பொச்சாவாமைக்கு உபாயம் கூறப்பட்டது.

'பின்பும் அதனை மறவாதே நினைக்கக் கூடுமாயின்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'எண்ணியதை மறவாதே எண்ண முடிந்தால்', 'ஆனால் (நினைத்தது மறந்துவிடாமல்) நினைத்ததை நினைத்துக் கொண்டே இருக்க முடியுமானால்தான்', 'ஒருவன் தான் அடைய எண்ணியதைச் சோர்வில்லாமல் நினைத்து முயலக் கூடுமாயின்', 'தாம் முடிக்க நினைத்த செயல்களை மறவாது மீண்டும் நினைக்கக்கூடுமானால்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

எய்த நினைத்ததை மறவாது எண்ணிக்கொண்டே இருக்கக் கூடுமாயின் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
எண்ணியதை எளிதாகவே எய்திவிடலாமே, அடைய நினைத்ததை மறவாது எண்ணிக்கொண்டே இருக்கக் கூடுமாயின் என்பது பாடலின் பொருள்.
எண்ணிக்கொண்டே இருந்தால் ஒருபொருளை எப்படி அடையமுடியும்?

நினைத்ததை நினைத்தல் சோர்வு நீக்கும் மருந்தாம்.

தான் அடைய நினைத்ததை ஒருவன் இடைவிடாமல் மறதியின்றி நினைக்கக் கூடுமானால், அதனை எய்துதல் எளிதுதான்.
எதை அடைய எண்ணினானோ, அதையே குறிக்கொண்டு இடையறாது எண்ணிச் செயலாற்றினால் அப்பொருள் கிட்டுவது எளிதேயாம். இப்பாடலில் முதலிலுள்ள உள்ளியது என்றதற்கு கருதியது எனவும் இரண்டாவது வரியிலுள்ள உள்ளியது என்பதற்கு நினைத்தது எனவும் பொருள் கொள்வர். சோர்வடையாமல் தொடர்ந்து எண்ணிகொண்டே இருந்து செயலையோ செயலில் தொடர்புடையோரையோ இகழாமல் செயல்பட்டால் உறுதியாகக் கருதியதை முடிக்கமுடியும் என்கிறது இக்குறள். ஒருவன் அலட்சியம் காட்டாமல் பல காலம் ஒரு பொருளை அடைய வேண்டும் என்ற எண்ணம் நிலைத்து இருக்குமானால் அதனை அடைந்தே தீருவான். மனத்தை ஒருமுகப்படுத்தி வைத்து விரும்பியவற்றை மறவாமல் முயற்சித்துக்கொண்டிருந்தால், அடைய நினத்தவற்றைப் பெறுதல் எல்லோருக்கும் எளிதாம்.

காலிங்கர் 'வினைவிதைத்தவன் வினையறுப்பான் தினை விதைத்தவன் தினையறுப்பான்' என்ற பழமொழியின் கருத்து போன்று 'நினைத்த நன்மையை நினைத்தவண்ணம் எய்தலாம்; தனக்கு நன்மையை நினைப்பது போலவே பிறர்க்கும் விளையவேண்டும் என்று கருதுவானாயின்' என்ற பொருளில் உரைக்கிறார்.
களிப்பால் செருக்குற்று, நல்லோரை மதியாது, கடமையிற் சோர்ந்து, கடனுற்றுக் கெட்டவர் பலர்; நல்லதை எப்போதும் மறவாது உள்ளத்தில் வைத்து நினைத்துக் கொண்டேயிருந்தால் நினைத்தகாரியம் கைகூடுவது எளிதாகும் எனவும் இக்குறளுக்குப் பொருள் கூறுவர்.
ஒருவரால் எதையும் சாதிக்க முடியும் என்று கூறும் தன்னம்பிக்கை முழக்கத்தையும் இது வெளிப்படுத்தியது எனவும் உரை வரைந்தனர்.
எதற்கும் பயனை எதிர்பார்ப்பது மனித இயல்பாகும். பல குறள்களில் பயனை முன்னதாகவும் பணியை அதற்கடுத்தும் வள்ளுவர் கூறியுள்ளார். தொடக்கத்திலேயே பயனை உணர்த்திவிடும் இக்குறள்கள் மனித மனத்தின் போக்கினை யொட்டி ஆக்கப்பட்டிருத்தலைப் புலப்படுத்தும். அப்படிப்பட்ட பாடல்களில் இதுவும் ஒன்று.
இக்குறளில் மற்றும் என்ற சொல் மேலும் என்ற பொருளில் ஆளப்பட்டது.

வினைத்திட்பம் எனும் அதிகாரத்தில் எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின் (666 பொருள்: எண்ணியவர், எண்ணியபடியே செயல் ஆற்றுவதில், உறுதியுடையவராக இருக்கப் பெற்றால், அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர்) என்ற குறள் இப்பாடலின் (540) கருத்தை ஒத்துள்ளது என்பர். இவற்றினிடையே வேறுபாடு இல்லை என்பது போன்று தோன்றினாலும் வினைத்திட்பப் பாடல் வினைமுதல் மேல் வைத்துப் பயன் கூறியது அதாவது மேற்கொள்ளப்போகும் செயலின்கண் திட்பம் வேண்டும் என்பதை வலியுறுத்துவது. இப்பாடல் மேற்கொண்ட செயல் முடிகிற வரையில் நினைத்ததை மறவாமல் எண்ணிக்கொண்டேயிருந்தால் நினைத்ததை அடைதல் எளிது என்பதைச் சொல்வது; செயலில் இறங்கியபின் எண்ணியதை அலட்சியத்தால் மறத்தல் கூடாது; நினைத்ததை மீண்டும் மீண்டும் நினைவிற் கொண்டுவந்து செயலாற்ற வேண்டும் என வினைமுடிக்க ஒரு உத்தி கூறுவது.

எண்ணிக்கொண்டே இருந்தால் ஒருபொருளை எப்படி அடையமுடியும்?

நினைத்ததை மறவாமல் நினைக்கப் பெற்றால் நினைத்ததை நினைத்தபடி எய்தலாம்; எதையும் எவரையும் அலட்சியப்படுத்தாமல் செயலே கண்ணாக முயன்றால் எண்ணியதை எளிதில் எய்திவிடலாம் என்பது இக்குறள் கூறும் செய்தி. ஒரு செயல் தொடங்கப்பட்டவுடன் அதே நினைவாய் இருக்க வேண்டும். அதுதான் இங்கு திருவள்ளுவர் சொல்ல வந்தது. உள்ளுதல் என்பது உள்ளுள் நினைத்துக்கொண்டே இருத்தலைக் குறிப்பது. அந்த நினவு இல்லாவிட்டால் செயல் நிறைவு பெறாது. திரும்பத் திரும்ப ஒரு செயலை எண்ண எண்ண அதற்கான கருவிகள், வழிகள், திறன்கள் எல்லாம் வந்தமைந்து ஒருவர் அதன் வயமாய்விடுவர். தான் அடையக் கருதியதைப் பெறும் வரை அதை இகழாது செயலைக் கொண்டு செல்ல வேண்டும். செயல் தொடங்கியபின் பலர் இடையிடையே செய்யவேண்டிய மற்ற கிளைச் செயல்களை மறந்துவிடுவர். அல்லது கொஞ்சம் இலக்குக் கண்ணில்பட்டால் மகிழ்ச்சியில் தொடர்ந்து செய்யவேண்டியவற்றைப் புறக்கணித்து விடுவர். அலட்சியப்போக்கினால், செயல்மறதி ஏற்படும். நினைவிலிருக்க வேண்டிய செயல்முறைகளை மறந்துவிடாமல் சிந்தனை செய்துகொண்டேயிருந்தால் நினைத்ததை நினைத்தபடி முடிக்கலாம். திரும்பத் திரும்ப மனம் அச்செயலில் சுழல வேண்டும். இது செயல் நிறைவேற வழிசெய்யும். மறவாது அது பற்றி முயற்சி செய்தலைத்தான் உள்ளியதை உள்ளுதல் எனக் குறிக்கின்றார் வள்ளுவர். அடைய எண்ணிய ஒன்றை அடைகிற வரையில் மறவாது தொடர்ந்து வினைச் சோர்வு படாது உழைத்தால் எளிதில் அடைய முடியும் என்று உணர்த்தினார்.
காட்டாக, உலக அரங்கில் சாதனை புரிந்த விளையாட்டு வீரர்கள் வேறு நினைவே தம்மைப் பாதிக்காதவாறு விளையாட்டே அவர்களை முழுவதுமாக ஆட்கொள்ளுமாறு செய்துகொள்வதாலேயே வென்றிருக்கின்றனர்.
நினைத்ததை நினைத்தபடி முடிக்கலாம் என்று நற்செயல்கள் நிறைவேற்றுவது பற்றித்தான் சொல்லப்பட்டது. ஆனால் தீய ஆசைகளையும் தீய வழிகளில் மறவாது முடித்துக் கொள்ளமுடியும் என்பதும் உண்மையே. எனவே தீயசெயல்களுக்கு இப்பாடலின் வழிமுறையைப் பயன்படுத்தாதவாறு காத்துக்கொள்ள வேண்டும்.

எண்ணியதை எளிதாகவே எய்திவிடலாமே, அடைய நினைத்ததை மறவாது எண்ணிக்கொண்டே இருக்கக் கூடுமாயின் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

கருதியது எளிதில் கைகூட பொச்சாவாமை உதவும்.

பொழிப்பு

அடைய நினைத்ததை எய்துதல் எளிதாகும். பின்னரும் அதை மறவாது எண்ணிக் கொண்டிருக்க முடியுமானால்.