இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் திறன்-0331 குறள் திறன்-0332 குறள் திறன்-0333 குறள் திறன்-0334 குறள் திறன்-0335
குறள் திறன்-0336 குறள் திறன்-0337 குறள் திறன்-0338 குறள் திறன்-0339 குறள் திறன்-340

வாழும் உலகம் இத்தன்மையானது, உடல் இத்தன்மையானது, உயிர் இத்தன்மையானது, செல்வம் இத்தன்மையானது என்று முன்னமே அவற்றின் நிலையாமை அறிந்துகொண்டால், பிரிவோ மாறுதலோ நேர்ந்தபோது மனம் கலங்கி வருந்திச் சோர்வடைய நேராது. ஆகையால், நிலையாமை உணர்தல் வாழ்க்கையைக் கண்டு அஞ்சி ஓடுவதற்காக அன்று; வாழ்க்கையின் தன்மையை உள்ளவாறு அறிந்து அஞ்சாமல் நின்று சோர்வற்று வாழ்க்கையை நடத்திச் செல்வதற்கே ஆகும்.
- மு வரதராசன்

வாழும் போது மாந்தர் தாம் எப்பொழுதும் நிலைநின்றிருப்பவர்கள் போன்று நடந்து கொள்கின்றனர். நிலையாமை பற்றிய அறிவு இவர்கள் உள்ளத்தில் இல்லாவிடில் அவர்கள் வாழ்வு மேன்மையுறாது. இவ்வதிகாரம் செல்வநிலையாமை, யாக்கை அல்லது வாழ்வு நிலையாமையை உணர்தல் பற்றியது. இது துறவறவியலில் பகுக்கப்பட்டிருந்தாலும் மற்ற துறவறவியல் அதிகாரப்பாடல்கள் போன்று இருவறத்தார்க்கும் நன்கு பொருந்துவனவாகவே இருக்கின்றன.

நிலையாமை

நிலையாமையாவது தான் என்று நினைத்திருக்கின்ற உடம்பும் தனது என்று நினைத்திருக்கின்ற செல்வமும் நிலை நில்லாமையைக் கூறுவது. ஒருவனது வாழ்நாள், அவ்வாழ்நாளில் அவனது இளமை, செல்வம், யாக்கை எல்லாம் நிலையற்றவை என்பது அறியப்படவேண்டும். செல்வம், யாக்கை, இளமை முதலானவற்றின் நிலையாமை பற்றிய உணர்வு ஒருவரது வாழ்வைப் பயனுடையதாக்கும்
சிந்தித்துப் பார்த்தால், உலக வாழ்வே நாடகம் போல் தோன்றுகின்றது. நாடகக்காட்சி போன்று நிகழ்ச்சிகள் சுழன்று சுழன்று செல்கின்றன. உடைமைகள், பதவிகள், அரசு, எல்லாம் உலகமேடையில் மாறுதல்களை தோற்றுவிக்கின்றன. இரவும் பகலும்போல இன்ப துன்பங்கள் வந்து போகின்றன. தோன்றுவனவெல்லாம் மாறிக்கொண்டேயிருக்கின்றன. காலஓட்டத்தில் குழந்தை, இளைஞன், காதலன், தந்தை, தாத்தா ஆகி கடைசியாக நாச்செத்து, விக்கல் எழ, உடலைப் போட்டுவிட்டு, உயிர் சொல்லாமல் பறந்து எங்கோ மறைந்துவிடுகிறது.
உயிர்கள் ஏன் பிறப்பெடுக்கின்றன, சாவு உண்டானபின் உயிர்க்கு என்ன ஆகிறது என்பனபற்றி மனிதன் காலம் காலமாக ஆய்ந்து வருகிறான். ஆனால் விடை இன்னும் காணமுடியவில்லை. இனிமேலும் காணமுடியாது. அது இறைவனுக்கு மட்டுமே தெரிந்த மறையாகவே எக்காலத்தும் இருக்கும். உயிர்கள் பிறப்பிறப்பு உண்டானாலும் உயிரினத் தொடர்ச்சி இருந்துகொண்டே இருக்கும். பொருள்கள் தோன்றி மறையும் தன்மையுடையதெனினும் இயற்கை எனும் ஒன்று நிலையாகவுளது. ஞாயிறு, திங்கள், விண்மீன்கள் தோன்றுவதும் காற்று வீசுவது மழை பொழிதலும் மாறாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கடவுள் படைக்கும் உயிர்களும் மாந்தர் உண்டாக்கும் உடைமைகளும் நிலையற்றன என இவ்வதிகாரப்பாடல்கள் சொல்கின்றன. அவை நிலையற்றவை என்பதால் உயிர்கள் இயங்காமலும் இருக்க முடியாது பொருள்களைச் செய்யாமலும் இருக்கமுடியாது. நிலையாமை உணர்வை மனத்தில் வைத்துக்கொண்டு செயல்படுவது நன்மை பயக்கும் என்பதை வலியுறுத்துவதே இவ்வதிகாரத்தின் நோக்கம்.
அன்றறிவாம் என்னாது அறம் செய்க...... (குறள் 36: பொருள்: பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கருதாது அறத்தினை இப்பொழுதே செய்க) என முன்பு சொல்லப்பட்டது. நிலையாமை அதிகாரத்தின் அடிக்கருத்தாக அறம் விரைந்து இயற்றப்படவேண்டும் என்பதும் அமையும். நிலையாமையைப் பற்றிய அறிவு ஒருவனுக்கு இருந்தால் அவனை ஈகைக்குணம் கொண்டவனாக மாற்றுதலும் அறவழிப் படுத்துதலும் எளிதாகும், இன்பம் மட்டுமே விழையும் மாந்தர் இருந்தான், இறந்தான் என்ற நிலையிலேயே இயங்குவர்.

நிலையாமையைப் பற்றித் தெரிந்திருந்தவனுக்கு சாவு பயம் இருக்காது. பிறந்தது இறக்கும், சாவு இயல்பானது; எளிதானது; அஞ்சத்தக்கதன்று என்று அதிகாரப்பாடல்கள் வழி எடுத்துரைத்து சாவு பயத்தை நீக்குகிறார் வள்ளுவர்.
நிலையாமையை நிலைபேறாக உடையது இவ்வுலகம். ஆனால் தம் உயிர், உடம்பு, இடம், பொருள் ஏவல் எல்லாம் நிலைத்தவை என்ற அறியாமையினாலே தீச்செயல் இயற்றுகிறார்கள். ஒவ்வொரு நாளும் நம்முடைய வாழ்நாளை அறுத்து விழ்த்தும் வாள் ஆகும் என்பதும் செல்வம், கூத்து மேடைக் கூட்டம் போலக் கூடிவந்தாலும், ஒன்று சேர கலைந்துவிடும் என்பதும் உணரப்பட வேண்டும் என்பதைச் சிறந்த உவமையணிகளால் விளக்கப்படுகின்றன.

'ஓர் ஊருக்கு நடந்து செல்கின்றவன் செல்ல வேண்டிய வழியின் தன்மையை உள்ளவாறு அறிந்துகொண்டு பிறகு நடந்து செல்வானானால் கலக்கமும் தயக்கமும் கொள்ளாமல் அஞ்சாமல் நடப்பான்; வழியில் உள்ள இடர்களை முன்னே அறிந்திருப்பதால் இடர்வந்தபோது வருந்தவும் மாட்டான். நல்ல வழி என்று நம்பி நடந்தால் முள்ளும் கல்லும் கண்டபோது வருந்துவான்; முன்னமே கல்வழி என்றும் முள்வழி என்றும் அறிந்திருந்தால் அவற்றைக் கண்டபோது கவலைப்பட மாட்டான். வாழ்க்கையும் அப்படிப்பட்டதே' என்று நிலையாமை அறிவின் தேவையை விளக்குவார் மு வரதராசன்.

நிலையாமை அதிகாரப் பாடல்களின் சாரம்

  • 331 ஆம்குறள் நிலைத்திருக்கும் தன்மையில்லாதனவற்றை நிலைக்கும் என்று கருதும் சிற்றறிவு கீழானது என்கிறது.
  • 332 ஆம்குறள் பெருஞ்செல்வம் வருவது கூத்தாடும் அரங்கத்தில் சேருகின்ற கூட்டத்தைப் போன்றது; அச்செல்வம் போவதும் கூத்து முடிந்ததும் அக்கூட்டம் கலைந்து செல்வதைப் போலும் எனச் சொல்கிறது.
  • 333 ஆம்குறள் செல்வம் நிலை நிற்காத இயல்பினை யுடையது; அதனைப் பெற்றால், நிலையானவற்றை உடன் செய்ய வேண்டும் என்கிறது.
  • 334 ஆம்குறள் நாள் என ஒன்றுபோலத் (ஒரே மாதிரி மாறாது இருப்பதுபோல) தோன்றி, உயிர்தங்கும் வாழ்நாளை அறுத்துக் குறைவுபடுத்துகின்ற வாள்ஆகும் அதனை அறியக் கூடியவர்களுக்கு எனக் கூறுகிறது.
  • 335 ஆம்குறள் நாக்குக் குழறி விக்கல் எழுவதற்கு முன்பே, அறச் செயல்களைத் தானே முற்பட்டுச் செய்ய வேண்டும் எனக் கூறுகிறது.
  • 336 ஆம்குறள் 'நேற்று உளனாயினான் ஒருவன் இன்று இல்லை' என்று சொல்லப்படும் பெருமையை உடையது இவ்வுலகு எனச் சொல்கிறது.
  • 337 ஆம்குறள் ஒரு கணப்பொழுதுகூட உயிர் நிலை நிற்குமா என்பதனை அறியமாட்டாதவர்கள், கோடி அல்ல, அதற்கு மேலும் பலகோடி எண்ணங்களை நினைப்பர் என்கிறது.
  • 338 ஆம்குறள் உடம்பிற்கும் உயிர்க்கும் உளதாகிய உறவு கூடு தனியே கிடக்கப் பறவை பறந்து சென்றாற் போலும் எனச் சொல்கிறது.
  • 339 ஆம்குறள் தூங்குவது போன்றது இறப்பு; பிறத்தல் தூங்கி விழிப்பது போன்றது எனக் கூறுகிறது.
  • 340 ஆவதுகுறள் உடம்பில் ஒதுக்குக் குடியாயிருந்த உயிர்க்கு புகுந்து தங்குதற்கு நிலையான ஒரு இல்லம் அமைந்திடவில்லையே. ஐயோ! என்கிறது.

நிலையாமை அதிகாரச் சிறப்பியல்புகள்

நிலையாமையைக் கூறும் பிற நூல்கள் பல செல்வத்தை, மானுடவாழ்வை, உலகை வெறுக்கத் தூண்டின. உலகைத் துறந்து ஓட வழிகாட்டின. ஆனால் வள்ளுவர் உலக வாழ்வில் அழுத்தம் வைப்பதைக் கூறுபவர். நிலையாமை அதிகாரத்தில் வாழ்வை வெறுப்பதற்கானதான, உலகைவிட்டு விலகிச் செல்வதற்கானதான எந்தச் செய்தியும் இல்லை. அவர் சொல்வது எல்லாம் நிலையாமையை உணர்ந்து, உலகம் பயன்பட நிலைத்த அறப்பணி செய்து வாழவேண்டும் என்பதற்கான அறிவுரையே. உயர்ந்த வாழ்வுக்கு நெறியாக வழிகாட்டியாக நிலையாமைக் கருத்துகள் அமைகின்றன.
துறவுக்கான ஒரு காரணமாக நிலையாமைக் கருத்துகள் அமையும் என்றோ நிலையாமை உணர்வு வந்தால்தான் துறவு மேற்கொள்ள இயலும் என்றோ இவ்வதிகாரப் பாடல்களில் எங்கும் சொல்லப்படவில்லை.

பெருஞ்செல்வம் சேர்ந்துவிட்டது என்று கூத்தாட வேண்டாம். அது நிலையானதல்ல; வந்த விரைவிலேயே மறைந்து விடும் என்று கூத்தாட்டு அவைக்குழாத்து அற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் தற்று (332) என்ற பாடல் சொல்கிறது. செல்வம் கழியுமுன் அறச் செயல்களை உடனே செய்துவிடுக என்பது குறிப்பால் உணர்த்தப்பெறுகிறது

இயற்கை நிலையானது; மாறாதது. ஞாயிறும் திங்களும் என்றும்போல் மாறாமல் வந்து போய்க்கொண்டிருக்கின்றன. ஆனால் உயிர்களின் இளமை அப்படியல்ல. ஒரு நாள் சென்றால் வாழ்நாளில் ஒன்று குறைந்துவிட்டது என்று பொருள். இளமை மாறிவிடும். இக்கருத்தைச் சொல்வது நாள்என ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும் வாளது உணர்வார்ப் பெறின் (334) என்ற பாடல்.

நேற்று நன்றாகத்தான் இருந்தான்; இன்று அவன் இல்லை. இது பெருமைக்குரியது எனச் சொல்கிறார் வள்ளுவர். இறப்பே இல்லாவிடில் உலகம் என்னாகும் என்பதை எண்ணிப்பார்த்தால் இக்குறள் ஏன் சாவைப் பேரியல்பு எனச் சொல்கிறது என்பது விளங்கும். அப்பாடல்: நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு (336)

தனது கூட்டைவிட்டுத் திடுமென பறவை பறந்துபோய் எத்திக்கிலோ மறைந்துவிடுகிறது. அது போன்றே சாவு எதிர்பாராத நேரத்தில் நடந்துவிடுகிறது என்பதைச் சொல்வது குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே உடம்போடு உயிரிடை நட்பு (338) என்ற கவிதை.

சாவு வரப்போகிறதே என்று ஏன் அஞ்சவேண்டும்? தூக்கம் வருகிறதே என்று யார் பயப்படுவார்? சாவு அச்சம் கொள்ளவேண்டாம் என்பதை உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு (339) என்ற குறள் சொல்கிறது.




குறள் திறன்-0331 குறள் திறன்-0332 குறள் திறன்-0333 குறள் திறன்-0334 குறள் திறன்-0335
குறள் திறன்-0336 குறள் திறன்-0337 குறள் திறன்-0338 குறள் திறன்-0339 குறள் திறன்-340