இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0336



நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு

(அதிகாரம்:நிலையாமை குறள் எண்:336)

பொழிப்பு (மு வரதராசன்): நேற்று இருந்தவன் ஒருவன், இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமை ஆகிய பெருமை உடையது இவ்வுலகம்.

மணக்குடவர் உரை: ஒருவன் நேற்றுளனாயிருந்தான், இன்றில்லையாயினா னென்று சொல்லும் பெருமையை இவ்வுலகம் உடைத்து.
இது யாக்கை நிலையாமை கூறிற்று.

பரிமேலழகர் உரை: ஒருவன் நெருநல் உளன் இன்று இல்லை என்னும் பெருமை உடைத்து; - ஒருவன் நெருநல் உளனாயினான் , அவனே இன்று இல்லையாயினான் என்று சொல்லும் நிலையாமை மிகுதி உடைத்து, இவ்வுலகு - இவ்வுலகம்.
(ஈண்டு உண்மை பிறத்தலையும், இன்மை இறத்தலையும் உணர்த்தி நின்றன. அவை பெண்பாற்கும் உளவாயினும், சிறப்புப்பற்றி ஆண்பாற்கே கூறினார். இந் நிலையாமையே உலகின் மிக்கது என்பதாம்.)

வ சுப மாணிக்கம் உரை: நேற்று இருந்தான் இன்று இறந்தான் என்பதே இவ்வுலகத்தின் பேரியல்பு.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு.

பதவுரை: நெருநல்-நேற்று; உளன்-உளனாயிருந்தான்; ஒருவன்-ஒருவன்; இன்று-இன்றைக்கு; இல்லை-இல்லை; என்னும்-என்கின்ற; பெருமை-பெருமை, நிலையாமை மிகுதி; உடைத்து-உடையது; இவ்வுலகு-இந்த உலகம்.


நெருநல் உளனொருவன்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவன் நேற்றுளனாயிருந்தான்;
பரிப்பெருமாள்: ஒருவன் நேற்றுளனாயிருந்தான்;
பரிதி: நேற்றிருந்தான்'
காலிங்கர்: ஒருவன் நேற்று இருந்தவன் நேற்று இல்லை என்றும்;
பரிமேலழகர்: ஒருவன் நெருநல் உளனாயினான்;

'நேற்றுளனாயிருந்தான்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நேற்றிருந்தான் ஒருவன்', 'நேற்று இருந்த ஒருவன்', 'நேற்று வாழ்ந்தவன் ஒருவன்', ''நேற்றிருந்தான்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

'நேற்று உளனாயினான் ஒருவன் என்பது இப்பகுதியின் பொருள்.

இன்றில்லை என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இன்றில்லையாயினா னென்று சொல்லும் பெருமையை இவ்வுலகம் உடைத்து.
மணக்குடவர் குறிப்புரை: இது யாக்கை நிலையாமை கூறிற்று.
பரிப்பெருமாள்: இன்றில்லையாயினா னென்று சொல்லும் பெருமையை இவ்வுலகம் உடைத்து.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது யாக்கை நிலையாமை கூறிற்று.
பரிதி: இன்று செத்தான்' என்னும் பெருமை உண்டு உலகுக்கு என்றவாறு.
காலிங்கர்: இன்று இருந்தவன் இன்று இல்லை என்றும் உரைக்கப்பட்ட நிலையாமையின் பெருமை உடைத்து இவ்வுலகம்;
காலிங்கர் குறிப்புரை: ஆதலால் மற்று இக்காயம் இறப்பதன் முன்னர்ப் பிறப்பதற்கு எய்துவதாகிய துறவறம் இயற்றுக என்பது கருத்தாயிற்று என்றவாறு.
பரிமேலழகர்: அவனே இன்று இல்லையாயினான் என்று சொல்லும் நிலையாமை மிகுதி உடைத்து இவ்வுலகம்.
பரிமேலழகர் குறிப்புரை: ஈண்டு உண்மை பிறத்தலையும், இன்மை இறத்தலையும் உணர்த்தி நின்றன. அவை பெண்பாற்கும் உளவாயினும், சிறப்புப்பற்றி ஆண்பாற்கே கூறினார். இந் நிலையாமையே உலகின் மிக்கது என்பதாம்.

'இன்றில்லையாயினா னென்று சொல்லும் பெருமையை இவ்வுலகம் உடைத்து' என்ற பொருளில் பழைய ஆசிரியர்களான மணக்குடவர், பரிப்பெருமாள், பரிதி, காலிங்கர் ஆகியோர் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிமேலழகர் 'இன்று இல்லையாயினான் என்று சொல்லும் நிலையாமை மிகுதி உடைத்து இவ்வுலகம்' என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'இன்று இல்லை என்று கூறப்படும் நிலையாமையின் பெருமையை உடையது இவ்வுலகம்', 'இன்றைக்கு இல்லாமற் போனான் என்னும் பெரிய இயல்புடையது இவ்வுலக வாழ்வு', 'இன்றைக்கு இல்லை யென்று சொல்லும் நிலையாமையாகிய இழிவையுடையது இவ்வுலகம்', 'இன்று இல்லை' என்று சொல்லும் பெருமையினை உடையது இவ்வுலகு' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

இன்று இல்லை' என்று சொல்லப்படும் பெருமையை உடையது இவ்வுலகு என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
'நேற்று உளனாயினான் ஒருவன் இன்று இல்லை' என்று சொல்லப்படும் பெருமையை உடையது இவ்வுலகு என்பது பாடலின் பொருள்.
நேற்றிருந்தான் இன்றில்லை என்பதில் என்ன பெருமை உளது?

வாழ்க்கை நிலையானது அல்ல; நேற்று வாழ்ந்தவன் இன்று இல்லை. அவன் வாழ்வு எங்கு போயிற்று?

நேற்று இருந்தவன் இன்று இல்லாமல் போனான் என்று சொல்லப்படும் பெருமையை இந்த உலகம் உடையதாக இருக்கிறது.
உலகில் பிறந்த எவர்க்கும் என்றாவது ஒரு நாள் சாவு உண்டு. எப்போது யாருக்கு சாவு வரும் என்று எவருக்கும் தெரியாது. நேற்றிருந்தாரை இன்றைக்குக் காணோம். இறப்பு எந்த நேரத்திலும் வரலாம். ஆறிலும் சாவு வரும். நூறிலும் சாவு வரும். அதாவது ஆறு வயதில் செத்தவர்களும் இருக்கிறார்கள். நூறு வயதில் செத்தவர்களும் இருக்கிறார்கள். நாளை என்னாகும் என்று யார்க்கும் தெரியாது. இந்த நிலையாமை உணர்ச்சியை எண்ணி பெருமைப்பட்டுக் கொள்ளலாம் என்கிறார் வள்ளுவர்.

வாழ்க்கை இன்பம் நிறைந்ததும் ஆகும், இன்பம் உயிரைத் தளிர்க்கச் செய்கிறது. உடம்பை வலுவாய் நிற்கச் செய்கிறது. எனினும் இது என்றும் நிலையாய் அமைவது எனக் கொள்ளல் வேண்டா என்பதை வலியுறுத்த உடம்பு நிலையற்றது எனச் சொல்லப்படுகிறது. நேற்றுச் செத்தால் இன்றைக்கு இரண்டாம் நாள் என்பது வழக்கியல். நேற்று இருந்தவர் இன்று இல்லை. இன்றிருப்பவர் நாளை இருக்கமாட்டார். இது மாறா உண்மை. நேற்று இருந்தவன் அதற்கும் முன்பு இருந்தவன் இல்லை. பின்னாளில் தோன்றியவன் இன்றில்லை. இன்று இருப்பவன் நாளை இருக்கமாட்டான். நாளை தோன்றுகிறவன் பலநாட்கள் கழிந்து மறைந்து போவான். ஒவ்வொரு நாளும் உலகம் இவ்விதம் மாறிக்கொண்டே யிருக்கிறதென உணர்வதே பெருமையாம்.

நேற்றிருந்தான் இன்றில்லை என்பதில் என்ன பெருமை உளது?

'பெருமை' என்ற சொல்லுக்கு நிலையாமையின் பெருமை, நிலையாமை மிகுதி, நிலையாமை ஆகிய பெருமை, பெரிய நிலையாமை, பேரியல்பு, நிலையாமையின் பெருமை, பெரிய இயல்பு, நிலையாமையாகிய இழிவு, பெரிய எண்ணிக்கை(இறந்தோர் கணக்கு) என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

நேற்று இருந்தவர் இன்று இல்லை என்னும்படி மாற்றங்களை நிகழ்த்தும் பெருமை பெற்றது இந்த உலகம். இதிலென்ன பெருமை வந்தது?
குழந்தைப் பருவத்தில் பால்நிலவு ஈர்த்தது. பதின்ம வயது வண்ணங்கள் நிறைந்த கற்பனை யாயிற்று. இளவயது ஓட்டம் எடுத்து இலக்குகள் தேடின. நடுவயது கனவுகளை நிறைவேற்றும் காலம். முதுமை எல்லாவற்றையும் மூடிவிட்டு நிலைத்த ஓய்வு எடுக்க நினைக்கும் நேரம். இச்சுழற்சியை முழுமையாக முடிக்காமல் பாதியிலேயே பயணம் முடிவதுமுண்டு. இந்த நிலையாமையில் பெருமை காண்கிறார் வள்ளுவர். இறப்பே இல்லாவிட்டால் என்ன நடக்கும் என எண்ணிப் பார்க்கலாம். வந்தவர் எல்லாம் தங்கிவிட்டால் உலகம் என்ன ஆகும்? யாருக்கும் எதுவுமே கிடைக்காது. முதுமைக்குமேல் முதுமை தோன்றி உலகம் அருவருப்பாகத் தோற்றம் தரும். உடம்பு நிலையாமை பெருமை தருவதுதான்.

சாவு பற்றிய அச்சத்தைப் பொருளற்றது என்று எடுத்துச் சொல்கிறார்; சாவு பெருமைக்குரியது என்னும்போது அது அச்சம் தருவதில்லை; சாவு பயம் இல்லாதவர்க்கு இவ்வுலகம் எப்போதும் இன்பம்தான். சாவு அச்சத்தைப் போக்கவே அதை பெருமை எனச் சொல்கிறார் எனச் சிலர் விளக்கினர்,
'நச்சுப் பாம்பை நல்ல பாம்பு' என்றும் சொல்லும் வழக்கை மங்கலவழக்கு என்பது போல், இதுவும் மங்கல வழக்கு எனக் கூறினர். அதாவது பெருமை என்ற சொல் இங்கே இழிவைக் குறிக்கிறது; நேற்றிருந்தவன் இன்றில்லை என்பது குறிப்பினாற் கொண்ட இழிவு என்றனர். ‘பெருமை’ என்பது எதிர்ப்பொருளணி (Irony) என்றார் தேவநேயப்பாவாணர்.
மனிதனின் மரணம் உலகிற்கு நிச்சயம் பெருமையல்ல. வள்ளுவர் மரணம் பற்றிப் பேசவில்லை. 'நேற்று இருந்தவன் வேறு; இன்று இருப்பவன் வேறு' -பரிணாம வளர்ச்சி பற்றிப் பேசுகிறார். நேற்று அவன் கல்லாக இருந்திருக்கலாம்; இன்று சிற்பமாக மாறியிருக்கலாம். நேற்று அவன் முள்ளாக இருந்திருக்கலாம்; இன்று மலராக ஆகியிருக்கலாம்....ஆயிரம் சாத்தியக் கூறுகளை உள்ளடக்கியது வாழ்க்கை என்றும் 'இன்று புதிதாய்ப் பிறத்தல்' என்பதையும் குறிப்பாக உணர்த்தலாம்; பிறப்பும் இறப்பும் மனிதனுக்கு வாழ்வில் ஒருமுறை மட்டுமே நிகழ்வன அல்ல. ஒரே பிறவியில் மனிதன் பலமுறை பிறக்கிறான்; பலமுறை இறக்கிறான். புதிது புதிதாய்ப் பிறப்பெடுக்கிறான் என்றும் பொருள் கூறினர்.
பரிமேலழகர் பெருமை என்பதற்கு 'நிலையாமை மிகுதி' எனப் பொருள் கண்டார்; தொல்காப்பியம் பொருளதிகாரம் புறத்திணையியல் சூத்திரம் மாற்றரும் கூற்றம் சாற்றிய பெருமையும் என்பது சான்று என்பர்.

'பெருமை' என்ற சொல்லுக்குப் பேரியல்பு என்பது பொருத்தமான பொருள்.

'நேற்று உளனாயினான் ஒருவன் இன்று இல்லை' என்று சொல்லப்படும் பெருமையை உடையது இவ்வுலகு என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

நேற்றிருந்தான் இன்று செத்தான் என்னும் நிலையாமைப் பெருமை கொண்டது உலகு.

பொழிப்பு

நேற்றிருந்தான் ஒருவன் இன்று இல்லை என்பது இவ்வுலகத்தின் பெருமை.