இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0338



குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்போடு உயிரிடை நட்பு

(அதிகாரம்:நிலையாமை குறள் எண்:338)

பொழிப்பு (மு வரதராசன்): உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதைவிட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது.

மணக்குடவர் உரை: கூடு தனியேகிடக்கப் புள்ளுப் பறந்து போனாற்போலும்,உடம்போடு உயிர்க்கு உள்ள நட்பு.
மேல் ஒருபொழுதென்று காலங்கூறினார் ஈண்டு உயிர் நினைக்காத பொழுது போமென்றார்.

பரிமேலழகர் உரை: குடம்பை தனித்து ஒழியப் புள்பறந்தற்று - முன் தனியாத முட்டை தனித்துக் கிடப்ப அதனுள் இருந்த புள்ளுப் பருவம் வந்துழிப் பறந்து போன தன்மைத்து; உடம்பொடு உயிரிடை நட்பு - உடம்பிற்கும் உயிர்க்கும் உளதாய நட்பு.
('தனித்துஒழிய' என்றதனான் முன் தனியாமை பெற்றாம். அஃதாவது, கருவும் தானும்ஒன்றாய்ப் பிறந்து வேறாம் துணையும் அதற்கு ஆதாரமாய்நிற்றல் அதனால் அஃது உடம்பிற்கு உவமையாயிற்று; அதனுள் வேற்றுமையின்றி நின்றே பின் புகாமல் போகலின், புள்உயிர்க்கு உவமையாயிற்று. முட்டையுள் பிறப்பன பிறவும்உளவேனும், புள்ளையே கூறினார், பறந்து போதல் தொழிலான் உயிரோடு ஒப்புமை எய்துவது அதுவே யாகலின். 'நட்பு'என்பது ஈண்டுக் குறிப்பு மொழியாய் நட்பின்றிப்போதல் உணர்த்தி நின்றது. சேதனமாய் அருவாய்நித்தமாய உடம்பும் தம்முள் மாறாகலின் , வினைவயத்தால்கூடியதல்லது நட்பில என்பது அறிக. இனி, 'குடம்பை' என்பதற்குக்கூடு என்று உரைப்பாரும் உளர்; அது புள்ளுடன்தோன்றாமையானும், அதன் கண் அது மீண்டு புகுதல்உடைமையானும், உடம்பிற்கு உவமையாகாமை அறிக.)

இரா இளங்குமரனார் உரை: உடலுக்கும் உயிருக்கும் இடையேயுள்ள உறவு, தன் உறைவிடமாக இருந்த கூடு தனித்துக் கிடக்கப் பறவை சென்றது போன்ற நிலையாத் தன்மைத்தே.


பொருள்கோள் வரிஅமைப்பு:
உடம்போடு உயிரிடை நட்பு குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே.

பதவுரை: குடம்பை-கூடு; தனித்து-தனியாகி; ஒழிய-நீங்க; புள்-பறவை; பறந்தற்றே-பறந்துபோனது போலும்; உடம்போடு-உடம்புடன்; உயிரிடை-உயிரினிடத்தில்; நட்பு-உறவு, கேண்மை, தொடர்பு.


குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கூடு தனியேகிடக்கப் புள்ளுப் பறந்து போனாற்போலும்;
பரிப்பெருமாள்: கூடு தனியேகிடக்கப் புள்ளுப் பறந்து போனாற்போலும்;
பரிதி: பட்சி முட்டையிட்டு வாழ்கிற கூடும் முட்டையும் போலும்;
காலிங்கர்: இவ்வுலகத்துக் குருவி முதலிய பறவையானது தான் வாழும் கூடு தன்னையின்றித் தனித்து ஆங்கு ஒழியப் பறந்து போகிய அத்தன்மைத்தே;
குடம்பை என்பது புள் இயற்றும் கூடு என்றது.
பரிமேலழகர்: முன் தனியாத முட்டை தனித்துக் கிடப்ப அதனுள் இருந்த புள்ளுப் பருவம் வந்துழிப் பறந்து போன தன்மைத்து;
பரிமேலழகர் குறிப்புரை: 'தனித்துஒழிய' என்றதனான் முன் தனியாமை பெற்றாம்.

'கூடு தனியேகிடக்கப் புள்ளுப் பறந்து போனாற்போலும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்களுள் மணக்குடவர், பரிப்பெருமாள், காலிங்கர் ஆகியோர் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி 'பட்சி முட்டையிட்டு வாழ்கிற கூடும் முட்டையும் போலும்' என கூட்டையும் முட்டையையும் சேர்த்துக் கூறுகிறார். பரிமேலழகர் உரை 'முன் தனியாத முட்டை தனித்துக் கிடப்ப அதனுள் இருந்த புள்ளுப் பருவம் வந்துழிப் பறந்து போன தன்மைத்து' எனக் கூறுகிறது.

இன்றைய ஆசிரியர்கள் 'கூடுவிட்டுப் பறவை ஓடுவது போன்றது', 'கூடு தனியே கிடக்கப் பறவை பறந்து சென்றாற் போலும்', 'முட்டையின் ஓட்டை விட்டுவிட்டு அதிலிருந்து பட்சி பறந்து விடுவதைப் போன்றதுதான்', 'முட்டை தனித்துக் கிடப்பப் பருவம் வந்தவுடன் அதிலிருந்த குஞ்சு ஓடிப்போனாற் போலுந் தன்மையுடையது. (குடம்பை கூடு எனவும் கூறுப.)' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

கூடு தனியே கிடக்கப் பறவை பறந்து சென்றாற் போலும் என்பது இப்பகுதியின் பொருள்.

உடம்போடு உயிரிடை நட்பு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உடம்போடு உயிர்க்கு உள்ள நட்பு.
மணக்குடவர் குறிப்புரை: மேல் ஒருபொழுதென்று காலங்கூறினார் ஈண்டு உயிர் நினைக்காத பொழுது போமென்றார்.
பரிப்பெருமாள்: உடம்போடு உயிர்க்கு உள்ள நட்பு.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேல் ஒருபொழுதென்று காலங்கூறினார் ஈண்டு உயிர் நினைக்காத பொழுது போமென்றது.
பரிதி: உடலும் உயிரும்; ஆகையினாலே யாக்கை உள்ள பொழுதே தன்மம் செய்வான் என்றவாறு.
காலிங்கர்: மற்று யாதோ எனின் உடம்போடு உயிரின்கண் உளதாகிய உறவுபாடு என்றவாறு.
பரிமேலழகர்: உடம்பிற்கும் உயிர்க்கும் உளதாய நட்பு.
பரிமேலழகர் குறிப்புரை: அஃதாவது, கருவும் தானும்ஒன்றாய்ப் பிறந்து வேறாம் துணையும் அதற்கு ஆதாரமாய்நிற்றல் அதனால் அஃது உடம்பிற்கு உவமையாயிற்று; அதனுள் வேற்றுமையின்றி நின்றே பின் புகாமல் போகலின், புள்உயிர்க்கு உவமையாயிற்று. முட்டையுள் பிறப்பன பிறவும்உளவேனும், புள்ளையே கூறினார், பறந்து போதல் தொழிலான் உயிரோடு ஒப்புமை எய்துவது அதுவே யாகலின். 'நட்பு'என்பது ஈண்டுக் குறிப்பு மொழியாய் நட்பின்றிப்போதல் உணர்த்தி நின்றது. சேதனமாய் அருவாய்நித்தமாய உடம்பும் தம்முள் மாறாகலின் , வினைவயத்தால்கூடியதல்லது நட்பில என்பது அறிக. இனி, 'குடம்பை' என்பதற்குக்கூடு என்று உரைப்பாரும் உளர்; அது புள்ளுடன்தோன்றாமையானும், அதன் கண் அது மீண்டு புகுதல்உடைமையானும், உடம்பிற்கு உவமையாகாமை அறிக.

'உடம்போடு உயிர்க்கு உள்ள நட்பு/உறவுபாடு' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உடம்புக்கும் உயிருக்குமுள்ள தொடர்பு', 'உடம்புடன் உயிர்க்குள்ள தொடர்பு', 'உடலுக்கும் உயிருக்கும் உள்ள சம்பந்தம்', 'உடம்பிற்கும் உயிர்க்கும் உளதாகிய தொடர்பு' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

உடம்பிற்கும் உயிர்க்கும் உளதாகிய உறவு என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
உடம்பிற்கும் உயிர்க்கும் உளதாகிய உறவு கூடு தனியே கிடக்கப் பறவை பறந்து சென்றாற் போலும் என்பது பாடலின் பொருள்.
இக்குறள் கூறும் செய்தி என்ன?

உடலைத் தனித்துவிட்டுச் சொல்லாமலே உயிர் பறந்து மறைந்து போய்விடும்.

உயிருக்கு உடம்போடு உள்ள உறவு, ஒரு பறவை தான் இருத்தற்கு இடமாயிருந்த கூடு தனியே கிடக்க அக்கூட்டினை விட்டு வேறிடத்துக்குப் பறந்து செல்வது போன்றது.
உயிர் நிலையாமையை 'ஒருநாள் போல் மறுநாள் இருக்காது' என்றும் 'ஒரு பொழுதுபோல் அடுத்தபொழுது இல்லை' என்றும் முற்குறள்களில் (336, 337) கூறப்பட்டது. இங்கு, உயிர், அது நினைக்கும்போது போகும் அதாவது எதிர்பாராத நேரத்தில் உயிர் நீங்கும் எனச் சொல்லப்படுகிறது.
கூடுகட்டி வாழும் பறவை, ஒருநாள், கூட்டின் விளிம்பில் நின்று அங்குமிங்கும் பார்த்து விருட்டென்று ஏதோ ஒரு திக்கில் விண்வெளியில் பறந்து மறைந்து போகிறது. இத்தடவை அப்பறவை போனது போனதுதான்; தான் உறைந்த இடத்திற்கு திரும்ப வராது. நாளும் நாம் காணக்கூடிய இக்காட்சியைச் சுட்டிக்காட்டி நாம் நினைத்திராதபோது எப்போது வேண்டுமென்றாலும் உடம்பைவிட்டு உயிர் பிரியும் என்கிறது இக்குறள்.

குடம்பை என்ற சொல்லுக்கு கூடு என்றும் முட்டை என்றும் இரு வேறு பொருள் கொள்கின்றனர். யாக்கையைக் கூடு என்று சொல்வதே வழக்கேயல்லாமல் முட்டை என்பதல்ல என்றும் முட்டையில் குஞ்சுடன் மேல் ஓடும் இணைந்தே உள்ளதாலும் பறந்து போன குஞ்சு மீண்டும் திரும்பி வருவதற்குக் கூடு வாய்ப்பளிக்கிறது (உடைந்த முட்டையில் அந்த வாய்ப்பில்லை) என்பதாலும் முட்டை என்ற பொருளே பொருந்தும் என்றும் உரை வரைந்தனர்.
'இக்குறள் உடம்பை விட்டு உயிர் நீங்கும் தன்மை யையே கூறுகின்ற தென்பதையும், உடம்போடு உயிர் தோன்றுத லையாவது, உடம்பினுள் உயிர் மீண்டு புகாமை யையாவது கூற வந்ததில்லை; முட்டையை விட்டு வெளிப்படும் உயிரை அப் பருவத்தில் பார்ப்பு என்று சொல்லுதல் வழக்கே யன்றிப் புள் என்று சொல்லுதல் வழக்கன்று; முட்டையை விட்டு வெளிப்பட்டவுடன் பறக்கும் பார்ப்பை நாம் கண்டது மில்லை. கேட்டது மில்லை' என வ உ சிதம்பரம் பிள்ளை முட்டை என்ற பொருளை உடன்படார். ‘புள்ளுடன் தோன்றாமையின் குடம்பை கூடாகாதெனின், முட்டையினீங்கிய பார்ப்புப் பறவாமையின் குடம்பை முட்டையுமாகா தாதல் வேண்டும். அல்லதூஉம் முட்டை உருச் சிதையாமல், பார்ப்பு அதனி னீங்குமா றில்லை. யாக்கை உருச் சிதையாமல், பாப்பு அதனினீங்குமா றுண்டு. அது நீங்கிய பின்னர் யாக்கை சிதைவதே ஒருதலை. அதுவேயு மன்றி, யாக்கையைக் கூடென்பது மரபன்றி முட்டை யென்றல் மரபன்று. ‘கூடுவிட்டிங்ககாவிதான் போனபின்பு’ என்ற செய்யுள் வழக்குங் காண்க' என்பது தண்டபாணி தேசிகரின் மறுப்புரை.
முட்டையிலிருந்து பறவை வெளியே வருவது வாழ்வின் தொடக்கம்; சாவு என்பது வாழ்வின் முடிவு. இவை இரண்டையும் பொருத்துவது ஏற்க முடியாததாக உள்ளது. குடம்பை என்றசொல் சங்க நூல்களில் கூடு என்ற பொருளில் வருகிறதேயன்றி முட்டை என்ற பொருளில் ஆளப்படவில்லை. பழந்தமிழ் நூல்களில் உடம்பைக் கூடாகவும், உயிரைப் பறவையாகவும் உவமை கூறியிருப்பதைக் காணலாம் (அகநானூறு 113, நாலடியார் 30, நல்வழி 22). பரிமேலழகருக்குப் பின் தோன்றிய பிங்கலத்தை என்ற நிகண்டு மட்டுமே குடம்பை என்பதற்கு முட்டை என்று பொருள் கூறுகின்றது. 'புட்பறந்தற்றே' என்ற சொற்றொடரை நோக்கும்போது, முட்டையைவிட்டு, வெளிவந்த எதுவும் உடனே பறப்பதில்லை; முட்டையைவிட்டு வெளிவரும் எதுவும் குஞ்சு என்றே பெயர் பெறும்; கூண்டைவிட்டுப் பறந்து செல்வதே புள் எனப்படும் இவற்றை எல்லாம் நோக்கும்போது, குடம்பை என்ற சொல்லுக்குப் பொருத்தமான பொருள் 'கூடு' என்பதே. கூடு-முட்டை என்ற பொருள் வேறுபாடு அடிப்படைக் கருத்துக்குப் பெரிய வேற்றுமை ஏதும் தந்துவிடவில்லை. உடம்பை விட்டு உயிர் நினைக்காதபோது பிரிகிறதென்பதுதான் அடிக்கருத்து.

இக்குறள் கூறும் செய்தி என்ன?

உடம்பொடு உயிருக்குள்ள உறவை விளக்குவது போல நிலையாமை சொல்லப்படுகிறது. இவ்வுறவை நட்பு என்று குறிக்கிறார் வள்ளுவர். 'நட்பு என்பது ஈண்டுக் குறிப்பு மொழியாய் நட்பின்றிப்போதல் உணர்த்தி நின்றது' என்பது பரிமேலழகர் விளக்கவுரை. உயிருக்கும் உடலுக்கும் நட்பில்லாதிருத்தலை நட்பு என்று கூறியது எதிர்மறை இலக்கணை என்பது இவரது கருத்து. குறிப்பு மொழியாவது நேர் பொருளை யன்றிச் சொல்வோன் குறிப்பால் எதிரான பொருளைத் தருவது
கூடு தனித்து நீங்க அதில் குடியிருந்த பறவை எங்கோ பறந்து விட்டதைப் போல் உடம்பினின்று நீங்கி, உயிர் எந்த நேரத்திலும் போய்விடுவதால் அந்நட்பு சிதைந்து விடுகிறது. இப்படித்தான் இருக்கிறது வாழ்க்கை முடிவும். இதுவே உயிருக்கும் உடம்புக்கும் இடையேயுள்ள தொடர்பு;

உடல் நிலைப்பது உயிர் உள்ளவரையில்தான்; இரண்டும் எதற்கும் கட்டுப்பட்டது மல்ல; அவற்றின் நட்பும் நீடித்ததல்ல.
கூடு நீங்கப் பறந்த பறவை-வேறு கூட்டில் சென்று குடியேறும் என்றோ, உடல் நீங்க, போன உயிர் வேறு உடம்பில் சென்று குடிபுகும் என்றோ, வள்ளுவர் கூறவில்லை. மறுமைச் சிந்தனை மற்றும் வினைக்கோட்பாடு ஆகிய கருத்தமைவுகள் இக்குறளில் சொல்லப்பட்டதாகக் கொள்ள வேண்டியதில்லை.
இப்பாடல் உடம்பை விட்டு உயிர் நீங்குந் தன்மையையே கூறுகின்றது. உயிர் எங்கு போனது என்பது தெரியாது.
உடல் வேறு உயிர் வேறு என்ற கருத்தில் வள்ளுவர் உடன்பாடு கொண்டவர் எனத் தோன்றுகிறது.
இவை இக்குறள் கூறும் செய்திகள்.

உடம்பிற்கும் உயிர்க்கும் உளதாகிய உறவு கூடு தனியே கிடக்கப் பறவை பறந்து சென்றாற் போலும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

உயிர் உடம்பைவிட்டு எப்பொழுது பிரிந்துசெல்லும் என்று சொல்ல முடியாது என்று யாக்கை நிலையாமை உணர்த்தப்பட்டது.

பொழிப்பு

உடம்புடன் உயிர்க்குள்ள உறவு கூட்டைத் தனியே விட்டுப் பறவை பறந்து மறைந்தாற் போலும்