இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0340



புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு.

(அதிகாரம்:நிலையாமை குறள் எண்:340

பொழிப்பு (மு வரதராசன்): (நோய்களுக்கு இடமாகிய) உடம்பில் ஒரு மூலையில் குடியிருந்த உயிர்க்கு, நிலையாகப் புகுந்திருக்கும் வீடு இதுவரையில் அமையவில்லையோ?





மணக்குடவர் உரை: தனதல்லாத உடம்பினுள்ளே ஒதுக்குக்குடியாக விருந்த உயிர்க்குப் போயிருப்பதற்கிடம் அமைந்ததில்லையோ? அமைந்ததாயின் இதனுள் இராது.
புக்கில் என்பது முத்தி ஸ்தானம் இது மேற்கூறியவற்றால் உயிர் மாறிப் பிறந்து வரினும் ஓரிடத்தே தவறுமென்பது கூறிற்று.

பரிமேலழகர் உரை: உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு - வாதம் முதலியவற்றின் இல்லாய உடம்புகளுள் ஒதுக்கிருந்தே போந்த உயிர்க்கு , புக்கில் அமைந்தின்று கொல் - எஞ்ஞான்றும் இருப்பதோர் இல் இதுகாறும் அமைந்ததில்லை போலும்!
(அந்நோய்கள் இருக்க அமைந்த ஞான்று இருந்தும், வெகுண்ட ஞான்று போயும் ஓர் உடம்பினுள் நிலைபெறாது வருதலால், 'துச்சில் இருந்த' என்றார். பின் புறப்படாது புக்கேவிடும் இல் அமைந்ததாயின்,பிறர் இல்களுள் துச்சிலிராது என்பதாம், ஆகவே உயிரோடுகூடி நிற்பதோர் உடம்பும் இல்லை என்பது பெறப்பட்டது. இவைஏழு பாட்டானும் , முறையே யாக்கைகட்கு வரைந்த நாள்கழிகின்றவாறும், கழிந்தால் உளதாய நிலையாமையும், அவைஒரோவழிப் பிறந்த அளவிலே இறத்தலும், ஒரு கணமாயினும் நிற்கும்என்பது தௌளியப்படாமையும், உயிர் நீங்கிய வழிக்கிடக்குமாறும், அவற்றிற்கு இறப்பும் பிறப்பும் மாறி மாறிவருமாறும் அவைதாம் உயிர்க்குரிய அன்மையும் என்று, இவ்வாற்றால் யாக்கை நிலையாமை கூறியவாறு கண்டுகொள்க.)

இரா சாரங்கபாணி உரை: உடம்புக்குள் ஒட்டுக் குடியிருந்த உயிர்க்கு எப்பொழுதும் தங்குதற்கு நிலைத்த இல்லம் இதுவரை அமைந்ததில்லை போலும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு, புக்கில் அமைந்தின்று கொல்.

பதவுரை: புக்கில்-இருக்கும் இல்லம்; அமைந்தின்று-அமையவில்லை; கொல்லோ-(ஐயம்); உடம்பினுள்-உடம்புள்; துச்சில்-ஒதுக்கு இடத்தில்; இருந்த-இருந்து வந்த; உயிர்க்கு-உயிர்க்கு.


புக்கில் அமைந்தின்று கொல்லோ:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: போயிருப்பதற்கிடம் அமைந்ததில்லையோ? அமைந்ததாயின் இதனுள் இராது.
மணக்குடவர் குறிப்புரை: புக்கில் என்பது முத்தி ஸ்தானம்.
பரிப்பெருமாள்: போயிருத்தற்கிடம் அமைந்ததில்லையோ? அமைந்ததாயின் இதனுள் இராது.
பரிப்பெருமாள் குறிப்புரை: புக்கில் என்பது முத்தித்தானம்.
பரிதி: இப்படி ஒதுக்குக் குடியிருந்த உயிர் தனக்கென்று ஒரு வீடு பெற விசாரிக்கும் என்றவாறு.
பரிதி குறிப்புரை: வீடாவது மோட்சம் என்றவாறு.
காலிங்கர்: மற்று இன்னும் இங்ஙனம் புக்குப்புக்கு ஒழிகின்ற யாக்கையானது நிலைபெறாது ஐயோதான் என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: புக்கில் என்பது புக்குப்போதுகின்ற இல்லம் என்றது.
பரிமேலழகர்: எஞ்ஞான்றும் இருப்பதோர் இல் இதுகாறும் அமைந்ததில்லை போலும்!

'போயிருப்பதற்கிடம் அமைந்ததில்லையோ?' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நிலையான ஒரு வீடு கிடைக்க வில்லையோ?', 'சாசுவதமான ஒரு வீடு கிடைக்க வில்லையோ!', 'நிலையாய்ப் புகுந்து தங்கும் வீடு இன்னும் அமையவில்லை போலும்!', 'தனக்கெனத் தனி வீடு இன்னும் அமைந்தில்லை போலும். (நோய்களால் உயிர் போகும்; உடலில் நிலைத்திருக்கும் ஆற்றல் அதற்கு இல்லை.)' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

புகுந்து தங்குதற்கு நிலையான ஒரு இல்லம் அமைந்திடவில்லையே. ஐயோ! என்பது இப்பகுதியின் பொருள்.

உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தனதல்லாத உடம்பினுள்ளே ஒதுக்குக்குடியாக விருந்த உயிர்க்கு.
மணக்குடவர் குறிப்புரை: இது மேற்கூறியவற்றால் உயிர் மாறிப் பிறந்து வரினும் ஓரிடத்தே தவறுமென்பது கூறிற்று.
பரிப்பெருமாள்: தனதல்லாத உடம்பினுள்ளே ஒதுக்கடையாக விருந்த உயிர்க்கு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது மேற்கூறியவற்றான் மாறிப் பிறந்து வரினும் ஓரிடத்தே தவிருமென்பது கூறிற்று.
பரிதி: துச்சில் என்பது ஒருத்தர் அளவிலே ஒதுக்குக் குடியிருத்தல்.
காலிங்கர்: உடம்புகள்தோறும் குடியிருந்து வருகின்ற உயிர்க்கு.
காலிங்கர் குறிப்புரை: இதனால் என்சொல்லியவாறோ எனின் உலகத்து அளவிறந்த காலமெல்லாம் அளவிறந்த யாக்கைகள் தோறும் பிறந்தும் இறந்தும் உழன்று திரிதற்குக் காரணமாகிய பேதைமை நீங்கும் உணர்வு பெறுதற்கு உறுதவம் இயற்றும் ஒருப்பாடே இனித் தங்குவது(* தருவது ('தகுவது என்றிருக்கலாம்') )என்று பொருளாயிற்று என்றவாறு. துச்சில் இருந்து என்பது குடியிருந்து என்றது. பரிமேலழகர்: வாதம் முதலியவற்றின் இல்லாய உடம்புகளுள் ஒதுக்கிருந்தே போந்த உயிர்க்கு.
பரிமேலழகர்: அந்நோய்கள் இருக்க அமைந்த ஞான்று இருந்தும், வெகுண்ட ஞான்று போயும் ஓர் உடம்பினுள் நிலைபெறாது வருதலால், 'துச்சில் இருந்த' என்றார். பின் புறப்படாது புக்கேவிடும் இல் அமைந்ததாயின்,பிறர் இல்களுள் துச்சிலிராது என்பதாம், ஆகவே உயிரோடுகூடி நிற்பதோர் உடம்பும் இல்லை என்பது பெறப்பட்டது. இவைஏழு பாட்டானும் , முறையே யாக்கைகட்கு வரைந்த நாள்கழிகின்றவாறும், கழிந்தால் உளதாய நிலையாமையும், அவைஒரோவழிப் பிறந்த அளவிலே இறத்தலும், ஒரு கணமாயினும் நிற்கும்என்பது தௌளியப்படாமையும், உயிர் நீங்கிய வழிக்கிடக்குமாறும், அவற்றிற்கு இறப்பும் பிறப்பும் மாறி மாறிவருமாறும் அவைதாம் உயிர்க்குரிய அன்மையும் என்று, இவ்வாற்றால் யாக்கை நிலையாமை கூறியவாறு கண்டுகொள்க.

'உடம்பினுள்ளே ஒதுக்குக்குடியாக விருந்த உயிர்க்கு' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உடலில் ஒட்டுக் குடியிருக்கும் உயிர்க்கு', 'உடம்புக்குள் சிறிது காலம் ஒண்டுக் குடிபோல் இருந்து போய்விடுகிற உயிருக்கு', 'வாத பித்த கபங்கட்குரிய உடம்பில் ஒதுக்குக் குடியாயிருந்து உழல்கின்ற உயிர்க்கு', 'உடம்பினுள் நோய்களோடு பொருந்தியிருந்த உயிர்க்கு (ஒண்டிக் குடியிருந்த உயிர்க்கு)' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

உடம்பில் ஒதுக்குக் குடியாயிருந்த உயிர்க்கு என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
உடம்பில் துச்சில் இருந்த உயிர்க்கு புக்கில் அமைந்திடவில்லையே. ஐயோ! என்பது பாடலின் பொருள்.
புக்கில்-துச்சில் என்பன யாவை?

உயிர் அங்குமிங்கும் நிலையில்லாமல் ஏன் இப்படி ஓடிக்கொண்டே இருக்கிறது?

ஒரு மூலையில் ஒதுங்கிக் கிடந்த உயிருக்குப் புகுந்து குடிஇருக்கத்தக்க நிலையான இல்லம் ஒன்று இதுவரையில் அமையவில்லையா?
கழிவிரக்கம் மிகத் தோன்ற கவலை தோய்ந்த ஒலியுடன் மென்மையான நகைச்சுவை கலந்த உணர்வோடு உயிர் நிலையாமை பற்றிச் சொல்லும் கவிதை. 'தனதல்லாத உடம்பினுள்ளே ஒதுக்குக்குடியாக இருந்த உயிர்க்குப் போயிருப்பதற்கிடம் அமைந்ததில்லையோ?' என்ற மணக்குடவரின் உரை இப்பாடலின் பொருளை நன்கு விளக்கும். தனதல்லாத உடம்பு என்றது தனக்கு உரிமையானதல்லாத உடம்பு எனப்பொருள்படும். உடம்பே உயிர் தங்குவதற்குரிய இடம் என்பதும் பெறப்படுகிறது. உரிமையுள்ள இடமே எதுவுமே நிலைத்து வாழ்தற்கு ஏற்றதாகும். உயிர் நிலையற்றதான உடம்பில் எங்காவது போய் ஓரத்தில் ஒட்டிக்கொண்டு இருக்கிறது. குறள் சொல்லமைப்பை நோக்கும்போது உயிரானது நிலையாகத் தங்குவதற்காக இன்னொரு உடம்பைத் தேடி ஒன்றும் கிடைக்காமல் தவித்து நிற்பது போலவும், அதைக் கண்ட வள்ளுவர் 'இவ்வுயிர் ஏன் இங்கே அலைந்து கொண்டிருக்கிறது? ஐயோ! இன்னும் நிலையாகக் குடியிருந்து வாழ்வதற்கு ஏற்ற ஒரு இல்லம் அமைந்திடவில்லை போலும்!' என நெட்டுயிர்த்தார் போலவும் உள்ளது. எந்த நேரமும் உயிர் தனக்கு உரிமையில்லாத உடம்பை விட்டு நீங்கிவிடும் என்பது கருத்து.

உயிரதுவும் தான் குடியிருப்பதற்கான இடம் இன்றி வீடு தேடி அடிக்கடி இடம் மாற்றி அலைவதால்தான் பிறப்பிறப்பு நிகழ்கிறது என்றும் இக்குறளை விளக்குவர். உயிர் நிலையாமையை - உடலில்லாமையினால் உயிருக்கு ஒரு நிலையான இல்லம் இல்லாமல் போவதையும் இக்குறள் சொல்கிறது; முடிவில் உயிர் வேறுடலில் புகுந்து அதைத் தனது இல்லமாக ஆக்கிக் கொண்டாலும், உயிருக்கு ஒரிடம் நிலையில்லை என்பதைச் சுட்டவந்ததே இக்குறட்பா; உயிருக்கே நிலையில்லாத இடமென்ற நிலையைச் சொல்லி, நிலையாமையை உணரச் செய்கிறார் வள்ளுவர் என்பர் இவர்கள்.

இப்பாடலிலுள்ள புக்கில் என்ற சொல் 'வீடுபேற்றை'க் குறிப்பது என்று சொல்கின்றனர் சிலர். மேலும் உடம்பிலிருந்து நீங்கிய வுயிர்க்கு மீளப் புகுதற்கு உடம்பாகிய இடம் உள்ளது என்பது (பிறப்பை)க் குறிப்பால் உணர்த்தப்படுவதாலும், உயிர் முன்னே குடியிருந்து நீங்கிய வீடுகள் பலப்பல என்ற கருத்தினைத் தெரிவிப்பதாலும் பிறவிச் சுழற்சி / பிறப்பின் பன்மை பற்றியும் இக்குறள் பேசுவதாகக் கூறினர்.
ஆனால் இக்கருத்துக்களை மறுத்துரைக்கிறார் கு ச ஆனந்தன்: புக்கில் என்றது "வீடுபேறு" அல்ல; இவை இக்குறட்பாவில் தொக்கி நிற்பதும் இல்லை; வெளிப்படையாகவும் இல்லை. இக்குறட்பாவில் உயிர் வேறு, உடம்பு வேறு என்பது தெளிவாகிறது; ஆனால் உயிரால் உடம்பு ஆக்கப்பட்டதா, அன்றி உடம்பால் உயிர் வாழ்கிறதா என்ற இரண்டுமே இதில் கூறப்படவில்லை; மாறாக உடம்பு என்ற தனித்த ஒன்று இயல்கிறது; அதில் உயிர் என்ற இன்னொன்று குடிகொண்டுள்ளது; புகத்தக்க வேறோர் உடம்பு அமையாததே அதற்குக் காரணம் என்ற அளவில் மட்டுமே இக்குறட்பா பொருள் தருகிறது என்று வாதிட்டு, சமயங்கள் கூறுவதைப் போன்ற பிறவிச் சுழற்சிக் கொள்கையை அதன் அனைத்து நிலைகளிலும் இக்குறட்பா கூறுவதில்லை என்ற முடிவுக்கு வருகிறார் கு ச ஆனந்தன். ஓர் உடலில் குடிபுகுந்த உயிர்க்கு என்றும் தங்கியிருக்கக்கூடிய இடம் ஒன்றில்லையா என்று கேட்கப்படுவதால் மறுபிறவி பற்றிய கருத்து எதையும் அவர் முடிந்த முடிவாக ஏற்றுக் கொள்ளவில்லையென்பதும் தெளிவாகிறது என்பர் மற்றவர்கள்.
இன்னொருபக்கம், உடம்போடு எல்லாம் அழிந்து போய்விடுகிறது என்ற உலகாயுதக் கொள்கையை இப்பாடல் ஒப்புக் கொள்கிறது என்னும் கருத்தும் உள்ளது என்பர் சிலர்.
பிறிதொருமுறை பிறிதோர் உடலில் குடியேறுவதை இப்பாடல் ஐயத்திற்கு இடமாக்குவதால் மறுபிறப்பு/பல்பிறப்பு இல்லை என்றே கொள்ள வேண்டியிருக்கிறது.

உயிர் இந்த உடம்புக்கு உரிமையானது இல்லை. எனவே அது வேறொரு வீட்டைத் தேடிக்கொண்டே இருக்கும். அதாவது உயிரும் நிலையில்லை என்று சொல்கிறது இக்குறள். உயிர் வாழ்வதற்கு நிலையான இடம் இல்லை போலும் எனச் சொல்லப்பட்டதால் ஓருயிர்க்கு ஒருமுறைதான் வாழ்வு என்பதுதான் பொருத்தமாகிறது.

புக்கில்-துச்சில் என்பன யாவை?

அவரவர் கட்டி வாழும் இல்லத்தைப் 'புக்கில்' என்றும் அண்டி வாழும் ஒட்டுக் குடியைத் துச்சில் என்றும் சொல்வர்.

புக்கில்: புகு+ இல் = புக்கில் அதாவது புகுந்துபின் நீங்காத நிலையான இருப்பிடம். தனக்கு உரிமையுள்ள நிலையான இடம் புக்கில் என்று இங்கு சொல்லப்படுகிறது. புக்கில் என்பதற்குக் காலிங்கர் 'புக்கில் என்பது புக்குப்போதுகின்ற இல்லம்' எனவும் பரிமேலழகர் 'எஞ்ஞான்றும் இருப்பதோர் இல்' என்றும் விளக்கியுள்ளனர். தனக்கே உரித்தான சொந்த இடம் என்றும் நிரந்தரமான, தூய இடம் (இறைவன் திருவடி அதாவது 'வீடு') என்றும் வேறு சிலர் பொருள் கூறியுள்ளனர்.
தம்இல்லிருத்தல் என்பது எல்லோருக்கும் மகிழ்ச்சி தருவது. ஆனால் அனைவருக்கும் அந்த வாய்ப்பு கிட்டுவதில்லை. குடிக்கூலி இடந்தேடி அதிலும் ஒட்டுக்குடி, ஒண்டிக்குடி என்ற நிலையிலும் குடியிருக்கும் கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது.
புக்கில் என்பது புகுந்து பின் நீங்காத நிலையான இருப்பிடம் என்பதைக் குறிக்கும். அதாவது நிலைத்ததாய் உள்ள இல்லம் புக்கில் எனப்பட்டது. உயிர் இந்த உடம்புக்கு உரிமைப்பட்டதல்ல; எனவே, உயிர் இன்னோரு நிலையான இல்லம் தேடிக்கொண்டே இருக்கிறது என்கிறது பாடல். உயிரும் நிலையானதல்ல.

துச்சில்: துஞ்சு+ இல் = துச்சில் அதாவது ஒதுக்கிடம். ஒண்டக்கிடைத்த இடம் / உறங்கக்கிடைத்த இடம் / தங்குமிடம். அழியுந் தன்மையான வீடு எனவும் பொருள் கூறுவர். தனக்கு உரிமையான ஓர் இல்லத்தில் வசிக்கத்தக்க வளப்பம் இல்லாதவர்கள் ஒரு வீட்டின் ஒருசிறு பகுதியில் குடக்கூலி (குடியிருக்கக் கூலி என்பதே திரிந்து குடக்கூலி ஆனது) கொடுத்துக் குடியிருப்பர். இவ்வாறு ஒதுக்கு/ஒட்டுக் குடியிருக்கும் இடம் துச்சில் எனப்படுகிறது. பரிதி துச்சில் என்ற சொல்லுக்கு ஒருத்தர் அளவிலே ஒதுக்குக் குடியிருத்தல் என விளக்கமளிக்கிறார். ஒதுக்குக் குடியிருத்தல் துன்பத்திற் கேதுவானது என்பது அறியத்தக்கது. உயிர் ஓர் உடம்பில் தற்காலிகமாகக் குடியிருப்பதாக இங்குக் குறிப்பிடப்படுகின்றது. துச்சம் இல் எனக் கொண்டு இழிவான, தங்கியிருப்பதற்குத் தகுதியற்றதாகிய ஒதுக்கத்தக்க வீடு எனவும் பொருள் கொள்வர்.
துச்சில் என்பது தனக்கு உரிமையில்லாத குடக்கூலி வீட்டைக் குறிக்கும் சொல். சிற்றில்லமாகிய உடம்பில் ஒரு ஓரத்தில் ஒளிந்து வாழ்ந்திருந்த உயிர்க்கு நிலையாகத் தங்குவதற்கு நல்ல இல்லம் அமைய மாட்டேன் என்கிறது எனச் சொல்லப்பட்டது.

உடம்பில் ஒதுக்குக் குடியாயிருந்த உயிர்க்கு புகுந்து தங்குதற்கு நிலையான ஒரு இல்லம் அமைந்திடவில்லையே. ஐயோ! என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

உயிரும் நிலையாமை யிலிருந்து தப்புவதில்லை.

பொழிப்பு

ஒட்டுக் குடியிருந்த உயிர்க்கு நிலையான இருப்பிடம் அமையவில்லை போலும்!