இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0333



அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்

(அதிகாரம்:நிலையாமை குறள் எண்:333)

பொழிப்பு (மு வரதராசன்): செல்வம் நிலைக்காத இயல்பை உடையது; அத்தகைய செல்வத்தைப் பெற்றால், பெற்ற அப்பொழுதே நிலையான அறங்களைச் செய்ய வேண்டும்.

மணக்குடவர் உரை: நில்லாத வியல்பை யுடைத்துச் செல்வம்; அதனைப் பெற்றால் அப்பொழுதே நிற்பனவாகிய அறங்களைச் செய்க.
நிலையாமை மூன்று வகைப்படும்: செல்வ நிலையாமை, இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை என.

பரிமேலழகர் உரை: அற்கா இயல்பிற்றுச் செல்வம் - நில்லாத இயல்பினையுடைத்துச் செல்வம், அது பெற்றால் அற்குப ஆங்கே செயல் - அதனைப் பெற்றால் அதனால் செய்யப்படும் அறங்களை அப்பெற்ற பொழுதே செய்க.
('அல்கா' என்பது திரிந்து நின்றது. ஊழுள்ளவழியல்லது துறந்தாரால் பெறப்படாமையின், அது பெற்றால் என்றும் அஃது இல்வழி நில்லாமையின் 'ஆங்கே' என்றும் கூறினார். அதனால் செய்யப்படும் அறங்களாவன: பயன் நோக்காது செய்யப்படும் கடவுட் பூசையும், தானமும் முதலாயின. அவை ஞான ஏதுவாய் வீடு பயத்தலின் அவற்றை 'அல்குப' என்றும் 'செயல்' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் செல்வம் நிலையாமை கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: செல்வம் நிலைப்படாதது; அது கிடைத்தால் நிலைத்தவற்றை உடனே செய்து கொள்க.


பொருள்கோள் வரிஅமைப்பு:
செல்வம் அற்கா இயல்பிற்று; அதுபெற்றால் அற்குப ஆங்கே செயல்.

பதவுரை: அற்கா-நிலை நில்லாத; இயல்பிற்று-தன்மையுடையது; செல்வம்-செல்வம்; அது-அது; பெற்றால்-அடைந்தால்; அற்குப-நிலைபெறுபவை (அறச்செயல்கள்); ஆங்கே-அப்போதே; செயல்-செய்க.


அற்கா இயல்பிற்றுச் செல்வம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நில்லாத வியல்பை யுடைத்துச் செல்வம்;
பரிப்பெருமாள்: நில்லாத வியல்பை யுடைத்துச் செல்வம்;
பரிதி: செல்வம் ஓர் இடத்தில் தங்காது;
காலிங்கர்: உலகத்து யாவரும் மதித்த செல்வமானது நிலையாகத் தங்காத இயல்பை உடைத்து;
காலிங்கர் குறிப்புரை: அற்கா இயல்பிற்று என்பது நிலையாத இயல்பிற்று என்றது;
பரிமேலழகர்: நில்லாத இயல்பினையுடைத்துச் செல்வம்,
பரிமேலழகர் குறிப்புரை: 'அல்கா' என்பது திரிந்து நின்றது.

'நில்லாத இயல்பை யுடைத்துச் செல்வம்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'செல்வம் நிலையில்லாத இயல்பினது', 'பணச் செல்வம் ஒரு இடத்தில் தங்காத இயல்புடையது', 'செல்வம் நில்லாத இயல்பினை யுடையது', 'செல்வம் நிலைத்திராத தன்மையினையுடையது' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

செல்வம் நிலை நிற்காத இயல்பினை யுடையது என்பது இப்பகுதியின் பொருள்.

அதுபெற்றால் அற்குப ஆங்கே செயல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதனைப் பெற்றால் அப்பொழுதே நிற்பனவாகிய அறங்களைச் செய்க.
மணக்குடவர் குறிப்புரை: நிலையாமை மூன்று வகைப்படும்: செல்வ நிலையாமை, இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை என.
பரிப்பெருமாள்: அதனைப் பெற்றால் அப்பொழுதே நிற்குமதாகிய அறங்களைச் செய்க.
பரிப்பெருமாள் குறிப்புரை: நிலையாமை மூன்று வகைப்படும்: செல்வ நிலையாமை, இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை என. அவற்றுளிது செல்வ நிலையாதென்பதூஉம் அது பெற்றாலறஞ் செய்ய வேண்டும் என்பதூஉங் கூறிற்று.
பரிதி: தன்னிடத்தில் செல்வம் வந்தபோதே தன் ஆத்மாவுக்குத் தங்கும் படியாக அன்ன தானம் செய்வான் என்றவாறு.
காலிங்கர்: மற்று அச்செல்வத்தைத் தம் கைத்து உளதாகப் பெற்றால் அதனால் நிலைபேறுடையவாகிய மறுமைக் காரணங்களையும் அப்பொருள் பெற்ற அப்பொழுதே செய்க என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: அற்குப என்பது நிலைபெறுவன என்பது.
பரிமேலழகர்: அதனைப் பெற்றால் அதனால் செய்யப்படும் அறங்களை அப்பெற்ற பொழுதே செய்க.
பரிமேலழகர் குறிப்புரை: ஊழுள்ளவழியல்லது துறந்தாரால் பெறப்படாமையின், அது பெற்றால் என்றும் அஃது இல்வழி நில்லாமையின் 'ஆங்கே' என்றும் கூறினார். அதனால் செய்யப்படும் அறங்களாவன: பயன் நோக்காது செய்யப்படும் கடவுட் பூசையும், தானமும் முதலாயின. அவை ஞான ஏதுவாய் வீடு பயத்தலின் அவற்றை 'அல்குப' என்றும் 'செயல்' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் செல்வம் நிலையாமை கூறப்பட்டது.

'அதனைப் பெற்றால், அப்பொழுதே, நிற்பனவாகிய அறங்களைச் செய்க' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அச்செல்வத்தைப் பெற்றால், நிலைத்த செயலை அதனைப் பெற்ற அப்பொழுதே செய்ய வேண்டும்', 'அதைப் பெற்றுள்ளபோதே உடன் தங்கி உதவக்கூடிய புண்ணியங்களைச் செய்தல் வேண்டும்', 'அதனைப் பெற்றால் நிலைபெற்ற அறங்களை அதைக் கொண்டு அதைப் பெற்ற பொழுதே செய்க', 'ஆதலின் அச்செல்வத்தைப் பெற்றால் நிலையானவற்றை அப்பொழுதே செய்தல் வேண்டும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

செல்வம் கிடைத்தால், நிலையானவற்றை உடன் செய்ய வேண்டும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
செல்வம் நிலை நிற்காத இயல்பினை யுடையது; அதனைப் பெற்றால், அற்குப உடன் செய்ய வேண்டும் என்பது பாடலின் பொருள்.
'அற்குப' என்பதன் பொருள் என்ன?

செல்வம் பெற்றபொழுதே அறச்சிந்தனையும் எழவேண்டும்.

செல்வமானது நிலைத்து நில்லாத இயல்பினை உடையது; அதைப் பெற்றால், கிடைத்த அப்பொழுதே, நிலையானவற்றைச் செய்தல் வேண்டும்.
நிலையாமையை எடுத்துரைக்கின்ற வள்ளுவர், இக்குறளில் செல்வமுடையவரை எழுப்பி அறன் வலியுறுத்தி செல்வத்தை நல்வழியில் பயன்படுத்தச் சொல்கின்றார். அல்கா என்ற சொல், நிலையாமலிருப்பதைக் குறிப்பது. செல்வம் ஓரிடத்தில் நில்லாத தன்மையது ஆதலால் அது ஒருவரைவிட்டு அகன்று சென்று விடலாம். அதனால் அதைப்பெற்ற பொழுதே, புகழ் நிலைத்திருக்கக்கூடியவாறு அறச்செயல்களில் செலவழிக்க வேண்டும்.
செல்வத்தைக் காக்கும் வழிமுறைகளும் திறனும் இன்று நிறைய உள்ளன. நிதிமேலாண்மை கற்றவர்கள் நல்ல ஆலோசனைகளையும் வழங்குகிறார்கள். எனவே செல்வத்தை அழியாமல் காக்க முடியும் என்று சிலர் சொல்லலாம். ஆனால் என்ன வழிகளை மேற்கொண்டாலும் அழியவேண்டும் என்றிருக்கும் செல்வத்தை காக்கவே முடியாது. செல்வம் நிலையில்லாதது என்பது நிலைத்த உண்மை. எனவே செல்வம் இருக்கும்போதே அறநெறியில் ஈடுபடுதல் வேண்டும். பொருள் நிலையில்லாதது எனச் சொல்லப்பட்டதால் அது வெறுக்கத்தக்கது என்றோ அதைப் பெற முயற்சி செய்யக்கூடாது என்றோ குறளில் எங்கும் கூறப்படவில்லை; இவ்வுலக வாழ்வை விருப்புடையதாக ஆக்கி நிலைக்கத்தக்கவை எவை என்பதை உணர்ந்து நிலைத்த பணி செய்து வாழவேண்டும். காலந்தாழ்த்தாது அப்பொழுதே செய்க என்றுதான் கூறப்படுகிறது.

அறச் செயல்களை காலம் தாழ்த்தாமல் செய்யவேண்டும் என்று அழுத்தந் திருத்தமாகக் கூறுவதற்காகச் 'செயல்' என்னும் ஏவல் சொல் பயன்படுத்ததப்பட்டது.

'அற்குப' என்பதன் பொருள் என்ன?

'அற்குப' என்ற சொல்லுக்கு நிற்பனவாகிய அறங்கள், நிற்குமதாகிய அறங்கள், ஆத்மாவுக்குத் தங்கும் படியாக அன்ன தானம் செய்தல், நிலைபேறுடையவாகிய மறுமைக் காரணங்கள், நிலையான அறங்கள், நிலைபேறுடைய நற்செயல்கள், நிலைத்தவை, நிலைத்த செயல், தங்கி உதவக்கூடிய புண்ணியங்கள், நிலைபெற்ற அறச் செயல்கள், நிலைபெற்ற அறங்கள், நிலையானவை, நிலையான பயனுள்ள அறங்கள் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

நிலைத்தல் என்னும் பொருளையுடைய அல்குதல் என்பதன் பகுதியாகிய அல்கு என்பது அற்கு எனத் திரிந்து நின்றது. அற்குப என்ற சொல் நிலைத்தவை என்ற பொருள் தரும்.
நிலைத்தவை என்றது நிலைபெற்ற அறச்செயல்களைக் குறிக்கும். ‘அற்குப’ என்பதற்குக் கடவுட் பூசை, தானம் முதலாயின என்று பரிமேலழகரும் அன்னதானம் எனப் பரிதியும் பொருள் கூறினர்.
நிலைத்து நிற்கும் இயல்புடைய ஒப்புரவு, ஈகை, புகழ் போன்ற பண்புகளில் அதனைச் செயல்படுத்த வேண்டும். நிலைத்த அறச் செயல்களாக பசியாற்றல், கல்விக்கூடங்கள் அமைத்தல், மருத்துவ நிலையங்கள் நடாத்துதல், முதியோர், ஆதரவற்றோர் இல்லங்கள் நிறுவுதல், பூங்காக்கள், விளையாட்டு அரங்கங்கள், கலைக்கூடங்கள், ஓய்வு மன்றங்கள், நூலகங்கள் ஏற்படுத்துதல் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

'அற்குப' என்பதற்கு நிலையானவை என்பது பொருள்.

செல்வம் நிலை நிற்காத இயல்பினை யுடையது; அதனைப் பெற்றால், நிலையானவற்றை உடன் செய்ய வேண்டும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

செல்வம் நிலையாமைத் தன்மை கொண்டதானாலும் அதுகொண்டு நிலையான நன்மைகளைச் செய்ய இயலும்

பொழிப்பு

செல்வம் நிலையில்லாத இயல்பினது; அதைப் பெற்றால், நிலைத்தவற்றை உடனே செய்ய வேண்டும்.