இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0337



ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல

(அதிகாரம்:நிலையாமை குறள் எண்:337)

பொழிப்பு (மு வரதராசன்): அறிவில்லாதவர் ஒருவேளையாவது வாழ்க்கையின் தன்மையை ஆராய்ந்து அறிவதில்லை; ஆனால் வீணில் எண்ணுவனவோ ஒரு கோடியும் அல்ல; மிகப் பல எண்ணங்கள்.

மணக்குடவர் உரை: ஒரு பொழுதளவும் தம்முயிர் நிலைநிற்கும் என்பதனை யறியாராயிருந்தும், தமது வாழ்நாளை கோடியுமல்ல, பலவாகக் கருதுவர் உலகத்தார்.
மேல் ஒருநாளுளனானவன் பிற்றை ஞான்று செத்தானென்றார் ஈண்டு ஒருபொழுதளவும் உயிர் நிலையாகாது என்றார்.

பரிமேலழகர் உரை: ஒரு பொழுதும் வாழ்வது அறியார் - ஒரு பொழுதளவும் தம் உடம்பும் உயிரும் இயைந்திருத்தலைத் தெளியமாட்டார், கோடியும் அல்ல பல கருதுப - மாட்டாது வைத்தும், கோடியளவும் அன்றி அதனினும் பலவாய நினைவுகளை நினையா நிற்பர் அறிவிலாதார்.
(இழிவு சிறப்பு உம்மையால் பொழுது என்பது ஈண்டுக் கணத்தின்மேல் நின்றது. காரணமாகிய வினையின் அளவே வாழ்தற்கும் அளவாகலின், அஃது அறியப்படாதாயிற்று.பலவாய நினைவுகளாவன: பொறிகளான் நுகரப்படும் இன்பங்கள் தமக்கு உரியவாமாறும் அதற்குப் பொருள் துணைக்காரணம் ஆமாறும், அது தம் முயற்சிகளான் வருமாறும், அவற்றைத் தாம் முயலுமாறும், அவற்றிற்கு வரும் இடையூறுகளும் அவற்றை நீக்குமாறும் நீக்கி அப்பொருள் கடைக் கூட்டுமாறும், அதனைப் பிறர் கொள்ளாமல் காக்குமாறும், அதனால் நட்டாரை ஆக்குமாறும், நள்ளாரை அழிக்குமாறும் தாம் அவ்வின்பங்கள் நுகருமாறும் முதலாயின. அறிவிலாரது இயல்பின் மேல் வைத்து நிலையாமை கூறியவாறு. இனிக் 'கருதுப' என்பதனை அஃறிணைப் பன்மைப் பெயராக்கி உரைப்பாரும் உளர்.)

இரா சாரங்கபாணி உரை: ஒரு கணப்பொழுதும் தம்முயிர் நிலை நிற்கும் என்பதனை அறியமாட்டாதவர்கள் கோடியளவுமின்றி அதற்கு மேல் பலவாக நினைப்பார்கள்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கோடியும் அல்ல பல கருதுப.

பதவுரை: ஒருபொழுதும்-ஒரு கணமும்; வாழ்வது-வாழ்தல்; அறியார்-அறியாதவர்; கருதுப-நினைப்பர்; கோடியும்-கோடியும்; அல்ல-அல்லாதவையாகிய; பல-பல.


ஒருபொழுதும் வாழ்வது அறியார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒரு பொழுதளவும் தம்முயிர் நிலைநிற்கும் என்பதனை யறியாராயிருந்தும்;
பரிப்பெருமாள்: ஒரு பொழுதளவும் தம்முயிர் நிலைநிற்கும் என்பதனை யறியார்களாயிருந்தும்;
பரிதி: ஒருபொழுதும் யாக்கை நிலைநிற்கும் என்பது அறிவில்லை;
காலிங்கர்: இமைப்பொழுதளவில் சாதலும் பிறத்தலும் உயிர்களின் நிலையாமைக்கு இயல்பு எனினும் இவற்றின் இடைப்படு காலம் பெரிதாம் எனில் மற்றது தானும் உடம்பொடு உயிர் வாழுங்காலம் ஒருபொழுதும் ஒரு மாத்திரமும் துணிதல் அறியார்;
பரிமேலழகர்: ஒரு பொழுதளவும் தம் உடம்பும் உயிரும் இயைந்திருத்தலைத் தெளியமாட்டார்,
பரிமேலழகர் குறிப்புரை: இழிவு சிறப்பு உம்மையால் பொழுது என்பது ஈண்டுக் கணத்தின்மேல் நின்றது.

'ஒரு பொழுதளவும் தம்முயிர் நிலைநிற்கும் என்பதனை யறியாராயிருந்தும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மறுகணம் இருப்பதை அறிய மாட்டாதவர்', 'ஒரு கணப்பொழுதும் தம்முயிர் நிலை நிற்கும் என்பதனை அறியமாட்டாதவர்கள்', 'ஒரு நாள் முழுவதும்கூட உயிரோடிருப்பார்கள் என்பது நிச்சயமில்லாத மனிதர்கள்', 'ஒரு நொடியும் நிலைத்து வாழும் தன்மையை அறிய முடியாதார்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஒரு கணப்பொழுதுகூட உயிர் நிலை நிற்குமா என்பதனை அறியமாட்டாதவர்கள் என்பது இப்பகுதியின் பொருள்.

கருதுப கோடியும் அல்ல பல:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தமது வாழ்நாளை கோடியுமல்ல, பலவாகக் கருதுவர் உலகத்தார்.
மணக்குடவர் குறிப்புரை: மேல் ஒருநாளுளனானவன் பிற்றை ஞான்று செத்தானென்றார் ஈண்டு ஒருபொழுதளவும் உயிர் நிலையாகாது என்றார்.
பரிப்பெருமாள்: தமது வாழ்நாளை கோடியுமல்ல, பலவாகக் கருதுவர் உலகத்தார்.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேல் ஒருநாளுளனானவன் பிற்றை ஞான்று செத்தானென்றார். இஃது ஒருபொழுதளவும் உயிர் நிலையாகாது என்றார்.
பரிதி: இந்த சீவனுக்கு வேண்டின மூன்றாசையில், அப்பரந்த எண்ணிக்கை கோடியும் அல்ல என்றவாறு.
காலிங்கர்: மற்று இதன் நிலைமை இவ்வாறாயினும் அளவிறந்த காலமெல்லாம் இருந்து வாழ்வதற்குச் செய்துகொள்ளக் கருதுவன ஒருகோடியுமல்ல. பின்னும் பல; எனவே, இக்கருத்துக்கொண்டு (உண்டு) வாழ்தல் அரிது என்றவாறு.
பரிமேலழகர்: மாட்டாது வைத்தும், கோடியளவும் அன்றி அதனினும் பலவாய நினைவுகளை நினையா நிற்பர் அறிவிலாதார்.
பரிமேலழகர் குறிப்புரை: காரணமாகிய வினையின் அளவே வாழ்தற்கும் அளவாகலின், அஃது அறியப்படாதாயிற்று.பலவாய நினைவுகளாவன: பொறிகளான் நுகரப்படும் இன்பங்கள் தமக்கு உரியவாமாறும் அதற்குப் பொருள் துணைக்காரணம் ஆமாறும், அது தம் முயற்சிகளான் வருமாறும், அவற்றைத் தாம் முயலுமாறும், அவற்றிற்கு வரும் இடையூறுகளும் அவற்றை நீக்குமாறும் நீக்கி அப்பொருள் கடைக் கூட்டுமாறும், அதனைப் பிறர் கொள்ளாமல் காக்குமாறும், அதனால் நட்டாரை ஆக்குமாறும், நள்ளாரை அழிக்குமாறும் தாம் அவ்வின்பங்கள் நுகருமாறும் முதலாயின. அறிவிலாரது இயல்பின் மேல் வைத்து நிலையாமை கூறியவாறு. இனிக் 'கருதுப' என்பதனை அஃறிணைப் பன்மைப் பெயராக்கி உரைப்பாரும் உளர்.

மணக்குடவரும் பரிப்பெருமாளும் 'வாழ்நாளை கோடியுமல்ல, பலவாகக் கருதுவர் உலகத்தார்' என்று இப்பகுதிக்கு உரை கூறினர். காலிங்கரும் பரிமேலழகரும் 'கோடியளவும் அன்றி அதனினும் பலவாய நினைவுகளை நினையா நிற்பர்' என்ற பொருளில் உரை செய்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கட்டுகின்ற கோட்டைகள் எவ்வளவோ கோடி', 'கோடியளவுமின்றி அதற்கு மேல் பலவாக நினைப்பார்கள்', 'எண்ணுகிற எண்ணங்கள் ஒரு கோடி இரண்டு கோடியல்ல; பல கோடிகள்', 'கோடியும் அல்லாமல் அதற்கு மேலும் பலவான எண்ணங்களை நினைப்பர்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

கோடி அல்ல, அதற்கு மேலும் பலகோடி எண்ணங்களை நினைப்பர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஒரு கணப்பொழுதுகூட உயிர் நிலை நிற்குமா என்பதனை அறியமாட்டாதவர்கள், கோடி அல்ல, அதற்கு மேலும் பலகோடி எண்ணங்களை நினைப்பர் என்பது பாடலின் பொருள்.
'ஒருபொழுதும் வாழ்வது' குறிப்பது என்ன?

அடுத்த கணம் உயிரோடிருப்பாயோ என்பதே தெரியாது. ஆனால் நீ கட்டும் மனக்கோட்டையோ மிகப் பெரிது.

ஒரு கணப்பொழுதேனும் உயிர் வாழும் வகையினை அறியாதவர், கோடிக்கு மேற்பட்டவற்றை எண்ணுவர்.
இதற்கு முந்தைய குறளில் (336) நேற்று நன்றாக இருந்தான் இன்று ஆளே இல்லை என்று ஒருநாளில் நிலைமாறிப் போனது என்று கூறியவர் இங்கு ஒரு (நாளின்) பொழுதுகூட உயிர் நில்லாதது அதாவது இறப்பு எப்போது வரும் என்பதை அறிய முடியாத நிலையினை உணர்த்துகிறார். தம்முடைய உயிர் ஒரு கணமும் நில்லாதது என்பதனை அறியாமல், பலகோடி எண்ணங்களை உள்ளத்தில் உருவாக்கி அவற்றை நிறைவேற்றத் துடிக்கிறார்களே என எள்ளல் நடையில் கூறுகிறார் வள்ளுவர்.
எந்தக் கணமும் வாழ்வு பறிபோகும் என்ற நிலையில் வாழும் மாந்தர் கருதும் எண்ணங்களோ, கோடியல்ல, பலகோடி என்கிறது பாடல். உ‌டம்பின் நிலையற்ற தன்மையை அறிய இயலாதவர், 'அதைச் செய்து பொருள் ஈட்டலாமா?' 'இதைத் தடுத்தி நிறுத்தி வஞ்சம் தீர்த்துக் கொள்ளலாமா' அப்படி இப்படி என்று என்னென்ன சிந்தனைகள் இவர்களுக்கு உண்டாகின்றன! உண்பது நாழி உடுப்பது நான்குமுழம் எண்பது கோடி நினைந்து எண்ணுவன (நல்வழி 28 பொருள்: உண்பது ஒரு நாழியரிசி அன்னமேயாகும்; உடுப்பது நான்கு முழ உடையேயாகும்; (இப்படியாகவும்) நினைத்து எண்ணும் காரியங்களோ எண்பது கோடியாகின்றன) என்றார் ஔவையாரும்.
ஒரு நொடிப் பொழுதில் உயிர் மாய்ந்துபோகக் கூடியதை உணராமல் கோடிக்காலம் வாழப்போவதுபோல் நடந்துகொள்கிறார்கள் என்றும் இக்குறளுக்கு உரை கூறுவர். மனத்துள் கோடி எண்ணங்களை வளர்த்துக்கொண்டு வாழ்க்கையை வீணாய்க் கழிப்பதற்குப் பதிலாக, ஒருபொழுதையாவது வாழ்ந்துவிடுதல் சிறந்தது; வாழ்க்கையை வாழ் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்வதுபோல் உள்ளது என்றும் இக்குறளுக்கு விளக்கம் அளிப்பர்.

ஒன்று என்றும் கோடி என்றும் கணக்கியலின் கீழ் எல்லையையும் மேல் எல்லையையும் இக்குறள் தொடுகிறது. கோடியையும் கடந்த சிந்தனைகளைச் சுட்டுவதற்கும் வரம்பற்ற கணக்கை குறிக்கவும் பல என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. கோடியும் அல்ல என்று உயர்வுச் சிறப்பு உம்மை கொடுத்துக் கோடிக்கும் மேலானது சொல்லப்படுகிறது.
‘கோடி’ என்னும் பேரெண் வாழ்நாளைக் குறிப்பதாகவும் எண்ணங்களைக் குறிப்பதாகவும் இருதிறமாக விளக்கங்கள் காணப்படுகின்றன. இவற்றுள் நினைவைக் குறிக்கும் உரை பொருத்தமாகப்படுகிறது.

'ஒருபொழுதும் வாழ்வது' குறிப்பது என்ன?

'ஒருபொழுதும் வாழ்வது' என்றதற்கு ஒரு பொழுதளவும் தம்உயிர் நிலைநிற்கும் என்பது, ஒருபொழுதும் யாக்கை நிலைநிற்கும் என்பது, உடம்பொடு உயிர் வாழுங்காலம் ஒருபொழுதும் ஒரு மாத்திரமும் துணிதல், ஒரு பொழுதளவும் தம் உடம்பும் உயிரும் இயைந்திருத்தல், ஒருவேளையாவது வாழ்க்கையின் தன்மையை ஆராய்தல், ஒரு கணப்பொழுதுகூட வாழ வழி, அடுத்து வரும் ஒருநொடிப் பொழுதேனும் வாழ்தல், மறுகணம் இருப்பது, ஒரு கணப்பொழுதும் தம்முயிர் நிலை நிற்கும் என்பது, ஒரு நாளைக்குக் கூட உயிரோடிருப்பது, 'ஒரு பொழுதளவும் கூட உறுதியாக வாழ்வோம்' என்னும் நிலைபேறு, ஒரு கணப்பொழுதுகூடத் தாம் இவ்வுலகில் வாழ இருப்பது, ஒரு நொடியும் நிலைத்து வாழும் தன்மை, ஒரு கணப்பொழுது அளவேனும் உயிரும் உடலும் ஒன்று சேர்ந்து வாழும் வகை, நிலையா வாழ்வை உணர்ந்து ஒரு சிறுது நேரமேனும் பண்பாக வாழ்தல், ஒரு நொடிப் பொழுதேனும் தம் உடம்போடு கூடியிருத்தல் என்றவாறு பொருள் கூறினர்.

அனைவருமே உடல் நிலையாமையை இயைபுபடுத்தி, ஒரு கணம் கூட வாழ்வு நிலையற்றது என்ற பொருளில் விளக்கம் அளிக்கின்றனர். ‘ஒரு பொழுதும்’ என்பது கணப் பொழுதளவு அதாவது இமைப் பொழுதளவு (கணம் என்பது கண்+அம்=கணம் என் விரிந்து கண்ணிமைக்கும் காலத்தைக் குறிக்கும்) எனப் பொருள் தருவது. கண்ணிமைக்கும் நேரத்தில் உயிர்நிலை மாறிவிடுகிறது என்பது சொல்லப்பட்டது. ஒருபொழுதும் வாழ்வது என்பது அப்படிப்பட்ட நிலையா வாழ்வுச் சூழலில் இருப்பது எனப் பொருள்படும்.
நிலையில்லா இவ்வுலகில் உள்ளோர் வாழ்க்கையின் நிலையின்மையை ஒருபோதும் சிந்திக்காமல் கோடிக்கும் மேலாக நினைக்கின்றனர். எதுவும் எண்ண வேண்டாம் என்று குறள் சொல்லவில்லை. ஆனால் எதை எண்ணினாலும் மனத்தின் ஓரத்தில் 'ஒருபொழுதும் நிலையா' வாழ்க்கைத் தன்மையையும் நினைவில் கொள்க என அறிவுறுத்த வந்தது இப்பாடல்.

ஒரு கணப்பொழுதுகூட உயிர் நிலை நிற்குமா என்பதனை அறியமாட்டாதவர்கள், கோடி அல்ல, அதற்கு மேலும் பலகோடி எண்ணங்களை நினைப்பர் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

இமைப்பொழுதும் உயிர் நிலையாமையாய் உள்ளபோது ஏன் இவ்வளவு எண்ணுகிறார்களோ?

பொழிப்பு

மறுபொழுது இருப்போமோ என்பதை அறியமாட்டாதவர் கோடிக்கணக்கில் எண்ணங்களை வளர்ப்பர்.