இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0334நாள்என ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்

(அதிகாரம்:நிலையாமை குறள் எண்:334)

பொழிப்பு (மு வரதராசன்): வாழ்க்கையை ஆராய்ந்து உணர்வாரைப் பெற்றால், நாள் என்பது ஒரு கால அளவுபோல் காட்டி, உயிரை உடம்பிலிருந்து பிரித்து அறுக்கும் வாளாக உள்ளது.

மணக்குடவர் உரை: நாளென்பது இன்பந் தருவ தொன்று போலக் காட்டி, உயிரையீர்வதொரு வாளாம்: அதனை யறிவாரைப் பெறின்.
இஃது உயிரீரும் என்றமையால் இளமை நிலையாமை கூறிற்று.

பரிமேலழகர் உரை: நாள் என ஒன்றுபோல் காட்டி ஈரும் வாளது உயிர் - நாள் என்று அறுக்கப்படுவதொருகாலவரையறைபோலத் தன்னைக் காட்டி ஈர்ந்து செல்கின்ற வாளினது வாயது உயிர், உணர்வார்ப் பெறின் - அஃது உணர்வாரைப் பெறின்.
(காலம் என்னும் அருவப்பொருள் உலகியல் நடத்தற் பொருட்டு ஆதித்தன் முதலிய அளவைகளால் கூறுபட்டதாக வழங்கப்படுவதல்லது, தானாகக் கூறுபடாமையின், நாள் என ஒன்றுபோல் என்றும் அது தன்னை வாள் என்று உணரமாட்டாதார் தமக்குப் பொழுது போகாநின்றது என்று இன்புறுமாறு நாளாய் மயக்கலின் 'காட்டி' என்றும் இடைவிடாது ஈர்தலான் 'வாளின் வாயது' என்றும், அஃது ஈர்கின்றமையை உணர்வார் அரியர் ஆகலின் உணர்வார்ப் பெறின் என்றும் கூறினார். உயிர் என்னும் சாதியொருமைப் பெயர் ஈண்டு உடம்பின்மேல் நின்றது. ஈரப்படுவது அதுவேயாகலின். வாள் என்பது ஆகுபெயர். இனி இதனை நாள் என்பதொரு பொருள்போலத் தோன்றி உயிரை ஈர்வதொருவாளாம் என்று உரைப்பாரும் உளர் :'என' என்பது பெயரன்றி இடைச் சொல்லாகலானும், 'ஒன்றுபோல் காட்டி' என்பதற்கு ஒரு பொருள் சிறப்பு இன்மையானும், 'அது' என்பது குற்றியலுகரம் அன்மையானும், அஃது உரையன்மை அறிக.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: காலத்தின் மெய்த்தன்மையை உணர்வாரைப் பெற்றால், அது நாளென்கிற சிறு அளவு போல் தன்னைக் காட்டி உயிர் உடம்பில் தங்கும் காலமாகிய ஆயுளைச் சிறிது சிறிதாக அறுத்துக் குறைவுபடுத்துகின்ற வாளாயுதமாகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
உயிர், நாள்என ஒன்றுபோல் காட்டி ஈரும் வாளது, உணர்வார்ப் பெறின்.

பதவுரை: நாள்-நாள்; என-என்ற; ஒன்றுபோல்-ஒரே மாதிரி (மாறாமல்); காட்டி-தோன்றி, காண்பித்து; உயிர்-உயிர்; ஈரும்-அறுத்துச் செல்கின்ற, பிரிக்கும், பிளக்கும், இரண்டாக்கும்; வாள்-வாள்; அது-அது; உணர்வார்-அறிவார்; பெறின்-நேர்ந்தால்.


நாள்என ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும் வாள்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நாளென்பது இன்பந் தருவ தொன்று போலக் காட்டி, உயிரையீர்வதொரு வாளாம்:
மணக்குடவர் குறிப்புரை: இஃது உயிரீரும் என்றமையால் இளமை நிலையாமை கூறிற்று.
பரிப்பெருமாள்: நாளென இன்பந் தருவ தொன்று போலத் தோற்றி, உயிரையீர்வதொரு வாளாம்:
பரிப்பெருமாள் குறிப்புரை: உயிரீரும் என்றமையால் இளமை நிலையாமை கூறிற்று.
பரிதி: நாளெனப் பேர் பெற்றிருக்கிற உயிர் அறுக்கும் ஈர்வாள் அல்லது, ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்று தோன்றும் நாள் என்றவாறு.
காலிங்கர்: உலகத்தோர்க்கு நாளென்று கொண்டு வேறே ஒன்றுளதுபோல் ஒரு நெறி காட்டிச் செல்கின்றது யாதோஎனில், மற்றது மரத்தினது உருபு வேறுபட்டுக் கழியுமாறு அதனை ஈர்த்து செல்லும் ஈர்வாள் போல மற்று ஈண்டும் உடம்போடு நடைபெற்று இயல்கின்ற உயிரினையும் அந்தநிலை வேறுபட்டுக் கழியுமாறு அதனை ஈர்ந்து செல்லும் ஈர்வாளாம்;
பரிமேலழகர்: நாள் என்று அறுக்கப்படுவதொருகாலவரையறைபோலத் தன்னைக் காட்டி ஈர்ந்து செல்கின்ற வாளினது வாயது உயிர்,

'நாளென்பது இன்பந் தருவ தொன்று போலக் காட்டி, உயிரையீர்வதொரு வாளாம்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். மணக்குடவரது உரை 'நாள் என்ற பொருள்போலத் தோன்றி உயிரை அறுக்கும் வாள்' என்று பொருள் தருவதாகக் கூறிப் பரிமேலழகர் அதைத் தனது சிறப்புரையில் மறுத்துள்ளார்.

இன்றைய ஆசிரியர்கள் 'காலம் உயிரறுக்கும் வாள்; நாளன்று', 'நாள் என்று இன்பந் தருவதொன்று போலக் காட்டி உயிரை அறுக்கும் வாளாம்', 'நாள் என்பது ஒன்றைப் போலவே அடுத்தடுத்துப் பல நாள்களாகத் தோன்றி, சிறுகச் சிறுக உயிரை அறுத்துவுடுகிற இரம்பமாகும்', 'நாள் என்று கூறுபடுக்கக்கூடிய காலவரையறைபோல் தன்னைக் காட்டி உயிரை மாய்க்கும் வாளாகின்றது' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நாள் என ஒன்றுபோலத் (ஒரே மாதிரி மாறாது இருப்பதுபோல) தோன்றி, உயிர்தங்கும் வாழ்நாளை அறுத்துக் குறைவுபடுத்துகின்ற வாள்ஆகும் என்பது இப்பகுதியின் பொருள்.

அது உணர்வார்ப் பெறின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதனை யறிவாரைப் பெறின்.
பரிப்பெருமாள்: அதனை யறிவாரைப் பெறின்.
பரிதி: அறிவின் கண்ணால் பார்த்தால் ஈர்வாளாம்;
காலிங்கர்: எவ்விடத்து எனின் இதன் உண்மைப் பாட்டினை உற்றுணர்வாரைப் பெற்ற இடத்து என்றவாறு.
பரிமேலழகர்: அஃது உணர்வாரைப் பெறின்.
பரிமேலழகர் குறிப்புரை: காலம் என்னும் அருவப்பொருள் உலகியல் நடத்தற் பொருட்டு ஆதித்தன் முதலிய அளவைகளால் கூறுபட்டதாக வழங்கப்படுவதல்லது, தானாகக் கூறுபடாமையின், நாள் என ஒன்றுபோல் என்றும் அது தன்னை வாள் என்று உணரமாட்டாதார் தமக்குப் பொழுது போகாநின்றது என்று இன்புறுமாறு நாளாய் மயக்கலின் 'காட்டி' என்றும் இடைவிடாது ஈர்தலான் 'வாளின் வாயது' என்றும், அஃது ஈர்கின்றமையை உணர்வார் அரியர் ஆகலின் உணர்வார்ப் பெறின் என்றும் கூறினார். உயிர் என்னும் சாதியொருமைப் பெயர் ஈண்டு உடம்பின்மேல் நின்றது. ஈரப்படுவது அதுவேயாகலின். வாள் என்பது ஆகுபெயர். இனி இதனை நாள் என்பதொரு பொருள்போலத் தோன்றி உயிரை ஈர்வதொருவாளாம் என்று உரைப்பாரும் உளர் :'என' என்பது பெயரன்றி இடைச் சொல்லாகலானும், 'ஒன்றுபோல் காட்டி' என்பதற்கு ஒரு பொருள் சிறப்பு இன்மையானும், 'அது' என்பது குற்றியலுகரம் அன்மையானும், அஃது உரையன்மை அறிக.

'அதனை யறிவாரைப் பெறின்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உணர்வார்க்கு உண்மை விளங்கும்', 'அதனை ஆராய்ந்து அறிவாரைப் பெற்றால்', 'உணர்ந்து அறியக் கூடியவர்களுக்கு', 'அதனை உணர்வார்க்கு' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அதனை அறியக் கூடியவர்களுக்கு என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நாள் என ஒன்றுபோலத் (ஒரே மாதிரி மாறாது இருப்பதுபோல) தோன்றி, உயிர்தங்கும் வாழ்நாளை அறுத்துக் குறைவுபடுத்துகின்ற வாள்ஆகும் அதனை அறியக் கூடியவர்களுக்கு என்பது பாடலின் பொருள்.
இக்குறள் கூறும் செய்தி என்ன?

எல்லா நாளும் ஒன்றுபோல்தான் கடந்து செல்கிறது. நம் வாழ்நாள்தான் நாளும் அறுபட்டுக் கொண்டிருக்கிறது.

நாள் என்பது தன்னை (மாறாததுபோல) ஒன்றுபோலக் காட்டி, நம் உடலிலிருந்து உயிரினைப் பிளக்கும் வாளாக உள்ளது, அதை உணரும் தன்மை கொண்டவர்க்கு.
இவ்வதிகாரத்தின் முந்தைய பாடலில் செல்வ நிலையாமை பற்றிச் சொல்லப்பட்டது. இங்கு இளமை நிலையாமை பேசப்படுகிறது. நொடி, நாழிகை, மணிகள், திங்கள், ஆண்டு, ஊழி என்பன போன்று நாள் என்பது மனிதன் உண்டாக்கிய ஒரு கால அளவுகோல். ஞாயிறு தோன்றி மறைந்து மறுபடியும் எழும்வரை உள்ள கால அளவைக் குறிப்பது. ஒவ்வொரு நாள் கழியும்போது, உயிர்களுக்கான வாழ்நாள் ஒவ்வொன்றாகக் குறைகின்றது. பகலும் இரவும் ஒவ்வொரு நாளும் மாறுபாடு இல்லாமல் ஒன்றுபோல் தோன்றுகின்றன, இவ்விதம் நாள், தான் நிலைப்பதுபோல் தோற்றம் தந்து, உயிர்களின் வாழ்நாளைக் கூறுபோடும் வாளாக உள்ளது. அதாவது, ஒருநாள் போலவே எல்லா நாட்களும் மாறுபாடு இல்லாமல், ஒரே மாதிரி (ஒன்றுபோல்) இருப்பதாகக் காட்டிச் சென்றாலும், அது ஓர் உயிரை உடம்பிலிருந்து ஈர்ந்து செல்கின்ற வாளாகும் அதாவது வாழ்நாட்களை அறுக்கும் கருவியாக இருக்கிறது.
கால ஓட்டத்திலும் நாள் இளமையாகத் தோன்றுகிறது - அதே ஞாயிறு, அதே நிலவு, அதே பொழுது. ஆனால் உயிர்களுக்கு இளமை நிலைப்பதில்லை. அவற்றின் வாழ்நாள்கள், இன்று நாளை என்று கழிந்து, கடைசியில் ஒன்றுமில்லாமல் போகும் நிலை உண்டாகிறது. வாழ்நாள் குறைந்து கொண்டே செல்வது என்பது இளமை நிலையாமையைக் குறிக்கும்.

உணர்வார் என்ற சொல்லுக்கு அறிவார் என்பது பொருள். கண்ணுக்குப் புலனாகாத காலம் என்னும் தொகுதியில் நாள் என்பது உயிரினைப் பிரித்தெடுக்கும் வாளாகும் என்பதை அறிவோர் தம் வாழ்வில் ஒரு நாள்பகுதி அறுத்து எடுக்கப்பட்டு விட்டது என்பதை உணர்வர் என்பது கருத்து.
ஒருநாள் என்பது காலக்கழிவு என்பதோடு நம் வாழ்நாளில் ஒன்று கழிந்தது என்பதையும் உணரவைப்பது; உயிர்களது இளமை நில்லாத பொருள் என்பது கூறப்படுகிறது. நாட்கள் செல்லச் செல்ல வாழ்நாள் சுருங்கிக்கொண்டே போகிறது; இளமை கழிந்து முதுமையை நோக்கிச் செல்கிறது என்பது தெரியப்படுத்தப்படுகிறது. அவ்விளமை திரும்பப் பெற முடியாத ஒன்று. 'நேற்று' என்று இருந்த ஒன்று இனி எப்போதும் திரும்பாது.

இக்குறள் கூறும் செய்தி என்ன?

இளமை நிலையாதது. நாள் என்பது வாழ்நாளை அறுத்துக் கொண்டிருக்கும் வாள் ஆதலால் இளமை நீங்கி மூப்பு வந்துவிடும். உடல் தளர்ந்து முதுமை எய்துவதற்குமுன் நன்மை செய்க என்பது இக்குறள் தரும் செய்தி.

இக்குறள் கூறும் செய்தியாக உரையாளர்களும் ஆய்வாளர்களும் மொழிந்தவற்றிலிருந்து சில:

 • உண்டு உடுத்தி உறங்கிக் கழிக்கும் வேடிக்கை மனிதர்கள் தம் வாழ்நாளை அறுக்கும் வாள் என்று நாளை உணரமாட்டார்கள்; தமக்கு நாள் ஒன்றாய்க் கழிகின்றது என்ற மகிழ்ச்சியில் மயங்கிக் கிடப்பார்கள். நாள் என்பது வெறும் ஒரு கால அளவு மட்டும் அன்று; உண்மையில் அது உயிரை உடம்பில் இருந்து பிரித்து அறுக்கும் வாள் ஆகும் என அவர்கள் உணரவேண்டும்.
 • நாள் சிலவாக, செல்லுமாறு உணர்த்தாமல் செலுத்துதலால் நாள் பயன் கொள்ளப்படாமல் வறிதே கழிகின்றன. அது மட்டுமன்றி 'இன்று பொழுது போயிற்று' என்று அருமைப்பாடு தெரியாமல் வாழ்நாளை கழிக்கிறார்கள் என்ற இழிவு தோன்றக் கூறியதாயிற்று. ஒவ்வொரு நாளையும் பயனுடையதாக ஆக்க வேண்டும் என்பது இக்குறளின் திரண்ட கருத்து.
 • ஒவ்வொரு நாளும் இளமை குறைந்து, கொஞ்சம் கொஞ்சமாக மரணம் நெருங்கி வருவதை அவர்கள் உணர்வதில்லை. மரமறுக்கும் இரம்பத்தினுடைய கூரிய பற்கள் ஒன்று போல ஒன்று ஒன்றன் பின் ஒன்றாக வந்து சிறுகச் சிறுக மரத்தைத் தேய்த்துப் பிளந்துவிடுகின்றன. இரம்பத்தினுடைய ஒரு பல் மரத்தின் உராய்ந்துவிட்டுப் போன உடன் ஓரளவு மரம் தேய்ந்துவிடுகிறது. அதுபோல மனிதனுக்கு ஒரு நாள் வந்து போன உடன் அவன் உயிர் ஓரளவு தேய்ந்து விடுகிறது.
 • நாள் என்பது ஒரு அருவப் பொருள். அது இன்பத்தை வழங்குவது போல தெரிந்தாலும் உண்மையில் உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவை அறுத்துக்கொண்டிருக்கிறது. எனவே இந்த நாள் இனிமையானது என்று சொல்லவேண்டாம். ஒவ்வொரு நாளும் உயிரை அறுத்துக்கொண்டிருக்கும் வாள் என்று உணருங்கள் என்பதை வள்ளுவர் உணர்த்துகிறார்.
 • ஆம்குறள் இக்குறளால் யாக்கையாவது கணந்தோறும் மாறியும் அழிந்தும் வருகிற இயல்பினதென்றும், அதனை அளந்து காட்டுவது நாளென்றும், அந்நாளை வீணாகப் போக்காது பயன்படுத்த வேண்டுமென்றும், அந்நிலையறிதல் அருமை என்றும், அவ்வாறு அறியும் அறிவே மெய்யறிவு என்றும் கூறியவாறு.
 • உயிரினை அறுத்துச் செல்கின்ற வேலையினை இந்த நாள் என்பது செய்து வருகிறதென்றால், அப்படிப்பட்ட நாள் என்பதனை எவ்வளவு பொறுப்புடன் பயனுள்ளதாக நாம் கழித்தல் வேண்டும்-என்பது தெளிவுபடுத்தப்படுகின்றது.
 • நிகழும் கணமே சொர்க்கம், அதை அனுபவிப்பதைவிட்டு வரும் கணத்தைப் பற்றி ஏன் கவலைப்படவேண்டும் என்று ஆங்கிலத்தில் கூறுவது போல,'epicurean' கோட்பாட்டைத் தேர்ந்தெடுத்து வாழ்பவர்கள் பலர். ஆனால், வாழ்க்கையின் அருமையை உணர்ந்து அது மற்றவர்க்குப் பயன்பட வாழ்கிறவர்கள் ‘அரியராதலின்' ‘பெறின்' என்கிறார் பரிமேலழகர்.
 • 'அடடா! இன்று ஒரு நாள் போய்விட்டதே! நம்ம ஆயுளில் ஒருநாள் நீங்கிவிட்டதே என்று புரிந்துகொண்டு, மீதியிருக்கிற நாட்களில் நல்ல வாழ்வு மேற்கொள்வோம் எனத் தீர்மானம் செய்யவேண்டும்.
 • காலம் என்பது ஒரு கற்பனையாக இருந்தாலும், வாழ்நாள் எல்லைக்குள் தம் ஆற்றலைச் செயல்படுத்தியாக வேண்டும் என்று, எல்லாவற்றையும் உணர்கின்றவர்கள் முயற்சிக்கிறார்கள்
 • வாழ்க்கை வாழ்ந்து கழிப்பதற்குரியது. சிலர் வாழ்வாவது மாயம் என இகழ்வர். மண்ணாவது திண்ணம் என்றாலும் அதற்குள் நல்லது செய்ய வேண்டும் என்று கருதுபவர் காலத்தின் அருமை அறிவர்.
 • ஒவ்வொரு நாளும் வாழ்க்கை யென்னும் மரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அறுப்பது வாளே. காலமுள்ளபோதே பெறுதற்கரிய வாழ்க்கை யூதியத்தை பெற்றுவிட வேண்டும். நாளைக்குப் பார்த்துக்கொள்ளலாம் என்று ஒத்திப் போடாமல் வாய்ப்பு நேர்ந்த போதெல்லாம் நல்வினையையே செய்ய வேண்டும்.
 • உயிரினை அறுத்துச் செல்கின்ற வேலையினை இந்த நாள் என்பது செய்து வருகிறதென்றால், அப்படிப்பட்ட நாள் என்பதனை எவ்வளவு பொறுப்புடன் பயனுள்ளதாக நாம் கழித்தல் வேண்டும்-என்பது தெளிவுபடுத்தப்படுகின்றது. நாட்கள் பல சென்ற பிறகு உயிர் முடிவுக்கு வந்து விடும் நாளின் பெருஞ்சிறப்பினைப் படைவீரன் வாயிலாக ஆசிரியர் கூறி வீரனுக்கு ஒவ்வொரு நாளும் போர்ப்பற்று நிறைந்ததாக இருக்கும் என்பதனை விளக்கிக் காட்டினார்.

நாள் என ஒன்றுபோலத் (ஒரே மாதிரி மாறாது இருப்பதுபோல) தோன்றி, உயிர்தங்கும் வாழ்நாளை அறுத்துக் குறைவுபடுத்துகின்ற வாள்ஆகும் அதனை அறியக் கூடியவர்களுக்கு என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

இளமை நிலையாமையை நாள் பற்றிய உண்மையை உணர்வோர் அறிவர்.

பொழிப்பு

நாள் என ஒன்றுபோலத் தோன்றி உயிர் தங்கும் வாழ்நாளை அறுக்கும் வாள்படையாகும் அதனை உணர்வார்க்கு.