இதுதான் ஒழுக்கம் என்று வரைவிலக்கணம் கூறுதல் இயலாது. குறளும் அது என்ன என்று சொல்லவில்லை. நல்லொழுக்கம் நன்னடத்தை-நன்னடக்கை என்றும் இனநன்மக்களோடும்-மேம்பாட்டோடும் இயைபுபடுத்தி ஒழுக்கம் பற்றி சிறுது வரையறை செய்து உரையாளர்கள் விளக்கினாலும் ஒழுக்கம் என்றால் என்ன என்று அவர்களில் யாரும் கூறவில்லை. ஒழுக்கம் என்பது விரிந்த இந்த உலகத்தை, உயிரினத்தை, மக்கள் தொகுதியை ஒன்றோடொன்று முரணாகாமல்-மோதாமல் வழி நடத்துவதற்கு உதவுவது; இது ஒருவனது பழக்க வழக்கங்கள், ஒழுகும் விதம், வாழ்க்கைமுறை, நடத்தை இவை தொடர்பானவை; சுருக்கமாகச் சொல்வதானால் மனிதப் பிறவிக்கேற்ப மனிதத் தன்மையுடன் நடந்து கொள்ளுதல் என்பதைக் குறிக்கும்.
ஒழுக்க நெறி ஒருவர்க்கு உயர்வைத் தருவதால் உயிரினை விடவும் மேம்பட்டதாகப் பாதுகாக்கப்பட வேண்டும்; ஒழுக்கத்தைக் கைவிடாமல் இருப்பதற்காக எவ்வளவு துன்பம் நேர்வதானாலும் வருந்தி ஏற்க வேண்டும், அதுவே ஒருவரது வாழ்விற்கு என்றும் துணை நிற்கும் என்கின்றன இவ்வதிகார முதல் இரண்டு பாடல்கள். பின்வரும் பாக்கள் ஒழுக்கமுடைமையால் ஒருவன் அடையும் மேம்பாட்டினையும் அது இல்லாவிட்டால் உண்டாகும் இழிநிலையினனயும் விளக்குகின்றன. வாய்தவறி வார்த்தைகளைக் கொட்டிவிடக்கூடாது என்று சொல்ஒழுக்கத்தையும், பல நூல்களைக் கற்றிருந்தாலும் உலகத்தோடு ஓட்டிப் பழகத் தெரியாதவர்களும் உண்டு என்று காட்டி அவர்களை அறிவில்லாதார் என்றும் இறுதிப்பாக்கள் கூறுகின்றன.
தனிமனிதன் தன்னுடைய வாழ்க்கை வட்டத்தில், தனக்காகக் கடைப்பிடிக்கும் ஒழுக்கம் என்பது ஒருவகை ஒழுகலாறு. தான்வாழும் சமுதாயத்தோடு தொடர்புகொள்ளும் முறையில் கடைப்பிடிக்கும் ஒழுக்கம் என்பது இன்னொருவகை. தனிமனித ஒழுக்கமே மிகையாக இவ்வதிகாரத்துள் கூறப்பட்டுள்ளது. 'உலகத்தோடு ஒட்ட ஒழுகல்' அதாவது உலக மானுட சமுதாயத்துடன் ஒத்து, உடன் நின்று வாழ்வதே அறிவுடைமை என்னும் சமூகத்தோடு இணைந்தொழுகும் முறைமை கூறியது ஒழுக்கம் என்பதற்குப் புது இலக்கணமாகக் கருதப்படுகிறது.
நம் பிறப்புடன் ஒழுக்கமும் பிறக்கவில்லை. ஆனால் ஒழுக்கமே பிறப்பிற்குப் பெருமை சேர்ப்பது அல்லது அது குன்றுவது இழிவை உண்டாக்குவது என்கிறார் வள்ளுவர். நல் ஒழுக்கத்தைப் பேணாது இருந்தால் அது பிறவியையே தாழ்விற்கு உள்ளாக்கும்; ஒழுக்கத்தைப் பேண மறந்து ஒழுகினால் வாழ்வு சீர்மை குன்றிக் கெடும். பெற்றோர், சூழல், நண்பர் கூட்டுறவு, கல்விப் பயிற்சி இவை ஒருவனது ஒழுக்க வளர்ச்சிக்குக் காரணங்கள் எனலாம். உயர்குலம் என்று பெயரளவில் நிற்கும் போலிஉயர்வுக்கு இடந்தராமல் ஒழுக்கம் உடையவரே உயர்ந்தவர் என்று கூறுவார் வள்ளுவர்.