இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0140உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்

(அதிகாரம்:ஒழுக்கமுடைமை குறள் எண்:140)

பொழிப்பு (மு வரதராசன்): உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர், பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவரே ஆவர்.மணக்குடவர் உரை: அறிவிலாதார் பல நூல்களைக் கற்றாலும் உயர்ந்தாரோடு பொருந்த ஒழுகுதலை அறியார்.
இஃது ஒழுக்கமாவது உயர்ந்தாரொழுகின நெறியில் ஒழுகுதலென்பதூஉம் அவ்வொழுக்கம் கல்வியினும் வலி யுடைத்தென்பதூஉம் கூறிற்று.

பரிமேலழகர் உரை: உலகத்தோடு ஒட்ட ஒழுகல் கல்லார் - உலகத்தோடு பொருந்த ஒழுகுதலைக் கல்லாதார், பல கற்றும் அறிவிலாதார் - பல நூல்களையும் கற்றாராயினும் அறிவிலாதார்.
(உலகத்தோடு பொருந்த ஒழுகுதலாவது, உயர்ந்தோர் பலரும் ஒழுகிய ஆற்றான் ஒழுகுதல். அறநூல் சொல்லியவற்றுள் இக்காலத்திற்கு ஏலாதன ஒழிந்து, சொல்லாதனவற்றுள் ஏற்பன கொண்டு வருதலான் அவையும் அடங்க 'உலகத்தோடு ஒட்ட' என்றும் அக்கல்விக்குப் பயன் அறிவும், அறிவிற்குப் பயன் ஒழுக்கமும் ஆகலின், அவ்வொழுகுதலைக் கல்லாதார் 'பல கற்றும் அறிவிலாதார்' என்றும் கூறினார். ஒழுகுதலைக் கற்றலாவது, அடிப்படுதல். இவை இரண்டு பாட்டானும், சொல்லானும், செயலானும் வரும் ஒழுக்கங்கள் எல்லாம் தொகுத்துக் கூறப்பட்டன.)

இரா சாரங்கபாணி உரை: உலகத்தோடு பொருந்த ஒழுகுதலைக் கல்லாதவர் பல நூல்களைக் கற்றிருந்தாலும் அறிவில்லாதவரே.


பொருள்கோள் வரிஅமைப்பு:
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் கல்லார், பல கற்றும் அறிவிலாதார்.

பதவுரை: உலகத்தோடு-உலகத்துடன்; ஒட்ட-பொருந்த; ஒழுகல்-நடந்து கொள்ளுதல்; பலகற்றும்-பலவற்றைக் கற்றுத் தேர்ந்திருந்தாலும்; கல்லார்-அறியார்; அறிவிலாதார்-அறிவில்லாதவர்.


உலகத்தோடு ஒட்ட ஒழுகல் கல்லார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உயர்ந்தாரோடு பொருந்த ஒழுகுதலை அறியார்;
பரிதி: பல கல்வியைக் கற்றும் ஒழுக்கத்தைக் கல்லார் அறிவிலார்க்கு நிகராம்;
காலிங்கர்: உயர்ந்தோராகிய அந்தணர் முதலாக எண்ணப்பட்ட பெருமரபினருள் ஒருவன் இவ்வில்லற மரபினனாகலான் மற்றிவன் தானொழிந்த உயர்ந்தோர் கருத்தோடு பொருந்தத் தன் மன ஒழுக்கத்தை ஒழுகுதல் சிறந்தது;
பரிமேலழகர்: உலகத்தோடு பொருந்த ஒழுகுதலைக் கல்லாதார்;
பரிமேலழகர் குறிப்புரை: உலகத்தோடு பொருந்த ஒழுகுதலாவது, உயர்ந்தோர் பலரும் ஒழுகிய ஆற்றான் ஒழுகுதல்.

இப்பகுதிக்கு மணக்குடவர் 'உயர்ந்தாரோடு பொருந்த ஒழுகுதலை அறியார்' என்று உரை செய்தார். பரிதி 'ஒழுக்கத்தைக் கல்லார்' என்று கூறினார். காலிங்கர் உரை மக்களை உயர்ந்தோர், இல்லறத்தோர் என இரு பகுதியாக்கி இல்லறத்தாரை உயர்ந்தோர் கருத்தோடு ஒட்டுதல் வேண்டும் என்கிறது. பரிமேலழகர் 'உலகத்தோடு பொருந்த ஒழுகுதலைக் கல்லாதார்' என்றபடி உரை நல்கினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'உலகத்தோடு ஒட்டி ஒழுகத்தெரியாதவர்', 'உலகத்தோடு பொருந்த ஒழுகுதலைக் கல்லாதவர்', 'உலகப் போக்கை ஒட்டி நடந்து கொள்ளத் தெரியாதவர்கள்', 'உலக நன்மைக்குப் பொருந்த ஒழுகுதலைக் கல்லாதார்' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

உலகத்தோடு பொருந்த ஒழுகத்தெரியாதவர் என்பது இப்பகுதியின் பொருள்.

பல கற்றும் அறிவிலாதார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அறிவிலாதார் பல நூல்களைக் கற்றாலும்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது ஒழுக்கமாவது உயர்ந்தாரொழுகின நெறியில் ஒழுகுதலென்பதூஉம் அவ்வொழுக்கம் கல்வியினும் வலி யுடைத்தென்பதூஉம் கூறிற்று.
பரிதி: எப்படி என்றால், பலநூல் கற்றும் அதன் பயன் கொள்ளாதபடியினாலே என்றவாறு.
காலிங்கர்: மற்று அதனையும் அறிவிக்கின்ற மறை முதலாகிய நூல்கள் பலவற்றையும் கற்றறிந்தும் தம் ஒழுக்கத்தை அறியாதார் உலகத்தறிவு கேடு என்றவாறு.
பரிமேலழகர்: பல நூல்களையும் கற்றாராயினும் அறிவிலாதார்.
பரிமேலழகர் குறிப்புரை: அறநூல் சொல்லியவற்றுள் இக்காலத்திற்கு ஏலாதன ஒழிந்து, சொல்லாதனவற்றுள் ஏற்பன கொண்டு வருதலான் அவையும் அடங்க 'உலகத்தோடு ஒட்ட' என்றும் அக்கல்விக்குப் பயன் அறிவும், அறிவிற்குப் பயன் ஒழுக்கமும் ஆகலின், அவ்வொழுகுதலைக் கல்லாதார் 'பல கற்றும் அறிவிலாதார்' என்றும் கூறினார். ஒழுகுதலைக் கற்றலாவது, அடிப்படுதல். இவை இரண்டு பாட்டானும், சொல்லானும், செயலானும் வரும் ஒழுக்கங்கள் எல்லாம் தொகுத்துக் கூறப்பட்டன. [ஒழுகுதலைக் கற்றல்-பெரியோர் நடந்தபடி நடக்கத் தொடங்குதல்; அடிப்படுதல்-அப்பெரியோர் ஒழுக்கத்தை மேற்கொண்டு ஆதரித்து வருதல்]

'அறிவிலாதார் பல நூல்களைக் கற்றாலும்' என்று மணக்குடவரும் 'பலநூல் கற்றும் அதன் பயன் கொள்ளாதபடியினாலே' என்று பரிதியும் 'மறைநூல்கள் கற்றிருந்தும் தம் ஒழுக்கத்தை அறியாதார் உலகத்தறிவு கெட்டவர்கள்' என்று காலிங்கரும் இப்பகுதிக்கு உரை கூறினர். 'பல நூல்களையும் கற்றாராயினும் அறிவிலாதார்' என்று பரிமேலழகர் உரைத்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'பல கற்றிருந்தும் அறிவு இல்லாதவரே', 'பல நூல்களைக் கற்றிருந்தாலும் அறிவில்லாதவரே', 'எவ்வளவு படித்திருந்தாலும் அறிவில்லாதவர்கள்', 'பல நூற்களைக் கற்றிருந்தாரேனும் அறிவில்லாதவரே' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

பல கற்றிருந்தும் அறிவு இல்லாதவரே என்பது இப்பகுதியின் பொருள்.நிறையுரை:
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் தெரியாதவர் பல கற்றிருந்தும் அறிவு இல்லாதவரே என்பது பாடலின் பொருள்.
'உலகத்தோடு ஒட்ட ஒழுகல்' குறிப்பது என்ன?

ஊரோடு கூடி வாழ்ந்து உலகவொழுக்கத்தைக் கற்றுக்கொள்.

என்னதான் கற்றிருந்தாலும் உலகத்தாரோடு பொருந்த ஒழுகத் தெரியாதவர் அறிவு இல்லாதவரே.
இக்குறளில் உலகத்தோடு ஒட்ட ஒழுகல் என்ற உலகியல் சார்ந்த ஒழுகுமுறை உயர்த்திச் சொல்லப்படுகிறது. அவ்வொழுக்கம் நூற்கல்வி, கேள்வியறிவு போன்றவற்றால் பெறப்படும் ஒழுக்கநெறிகளைவிட சிறந்தது எனவும் கூறப்படுகிறது. உலகத்தோடு பொருந்த ஒழுகலைத் தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் அதைப் பயிலாதவன் அறிவிலியே என்பதும் இக்குறள் கூறும் செய்தி.

ஒழுகல் என்பது தனிமனித விழுப்பங்கள் பற்றியது மட்டுமல்ல; தான் வாழும் சமுதாய மக்களுடன் ஒத்திசைந்து வாழும் முறைமையயும் அது குறிக்கும்.
எது நல்லொழுக்கம் எது தீயொழுக்கம் என்ற ஐயப்பாடு எல்லோருக்கும் எழுவது உண்டு. இதைத் தீர்க்கப் பழம் நூல்களில் எழுதி வைக்கப்பட்டுள்ளனவற்றைப் பின்பற்றினால் போதும் என்று நினைப்பவர்களுக்கு. 'அது தவறு; காலம் மாறிக்கொண்டே இருக்கும்; அந்தந்த காலத்திற்கு ஏற்றவாறு உலகத்தோடு பொருந்த ஒழுகுவதே அறிவுடைமை' என்று அறிவுரை கூறும் வண்ணம் இக்குறள் அமைந்துள்ளது. 'பழையன கழிதலும் புதியன புகுதலும் குற்றம் அல்ல, கால வேற்றுமை அது ஆதலால்' என்று நன்னூல் (உரியியல், 462) கூறும். மணவாழ்க்கை என்பது 'ஆயிரங்காலத்துப் பயிர்' என்றும் திருமணம் ஆன ஆணும் பெண்ணும் மனம் ஒன்றியிருந்தாலோ இல்லாவிட்டாலோ சாகும்வரை ஒரே இல்லத்திலே இருக்கவேண்டும் என்னும் இறுக்கமான ஒழுக்க நெறி மாறி இன்று மனங்கள் இணங்கவில்லையானால் மணம் முறியலாம் என்பது ஒத்துக் கொள்ளப்பட்ட நடைமுறையாக மாறியிருக்கிறது. இது உலகத்தோடு ஒட்ட ஒழுகல் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு. இது போலவே, கருத்தடை, கருக்கலைப்பு, செயற்கை மரணம் போன்றவற்றில் இன்று ஏற்படுகின்றனபோல் ஒழுக்க நெறி மாற்றங்கள் உண்டாகிக் கொண்டே இருக்கும். உலகத்தின் பொதுநடையைத் தெரிந்து பின்பு அதனை ஒட்டியே ஒழுகல் வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டு வாழ்க்கையை வாழக் கற்றுகொள்ளவேண்டும் என்கிறது பாடல்.

ஒழுக்கம் பற்றிக் கூறும் இவ்வதிகாரத்தில் அது சமூகத்துடன் இணைந்து வாழும் ஒழுக்கமாக இருக்க வேண்டுமென இப்பாடல் சொல்கிறது. உலகத்தோடு ஒட்ட ஒழுகலைக் கல்விக்கும் அறிவுக்கும் பயனாக வள்ளுவர் கருதுகிறார். அதாவது நூல்களைக் கற்பது மட்டும் அறிவிற்கு முழுமையைத் தராது. இயற்கைஅறிவு, நூலறிவோடு, உலகத்தோடு ஒட்ட ஒழுகும் அறிவும் இன்றியமையாதது என்கிறது பாடல். நூல்கள்‌ கூறிய அறங்கள்‌ காலவேறுபாட்டானும்‌ இடவேறுபாட்டானும்‌ வேறுபடுத லுண்டாதலால்‌ அவ்வேறுபாடு அறிந்து ஒழுகும்‌ அந்தந்தக்காலத்திய உயர்ந்தோ ரொழுக்கத்தைப்‌ பின்பற்றல்‌ வேண்டுமென்பது கூறப்பட்டது. உலகநடையை அறிந்து அதனொடு பொருந்த ஒழுகவேண்டும். பல நூல்களைக் கற்றிருந்தும் இவ்வொழுகலைக் கல்லாதவர் அறிவிலிகளே; ஒழுகுதலைக்கற்றலாவது பின்பற்றி யொழுகுதல்.

மேலும் பின்வரும் அறிவுடைமை அதிகாரத்தில் உலகம் தழீஇயது ஒட்பம்... (அறிவுடைமை 425 பொருள்: உலகத்தோடு ஒத்து வாழ்வது கெட்டிக்காரத்தனம்...) என்றும் எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு (அறிவுடைமை 426 பொருள்: உலகப் போக்கு எவ்வாறு இருக்கிறதோ அதற்குத்தகத் தன்னை மாற்றி அமைத்துக்கொள்ளக்கூடிய திறன்பெறுவது அறிவுடைமை) என்றும் உலகத்தோடு ஒத்து ஒழுகுதலை வலியுறுத்துவார் வள்ளுவர்.

'உலகத்தோடு ஒட்ட ஒழுகல்' குறிப்பது என்ன?

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் என்பது 'ஊரோடு ஒத்து வாழ்' அதாவது பெரும்பான்மை மக்கள் எப்படி நடக்கிறார்கள் அதன்படி ஒழுகுவது' என்றும், 'உயர்ந்தோர் வகுத்தவழி செல்வது அதாவது நூல்களில் முன்னோர் சொல்லியிருக்கிறபடி வாழ்தல்' என்றும், 'உலக மக்களோடு கலந்து பழகி ஒழுகுதலே ஒட்ட ஒழுகல்' என்றும் வேறுவேறு வகையாக விளக்கினர்.

உலகம் என்று சொல்லப்பட்டுள்ளதால் பெரும்பான்மை மக்களின் வழி என்று பொருள் கொள்ள வேண்டும் என்று சிலர் கூறுவர். இவர்கள் உலகத்தோடு ஒட்ட ஒழுகுதல் என்பதற்குத் தாம் வாழும் காலத்தின் சமுதாயத்தின் போக்கோடு இயைந்து போவது என்பார்கள். இது ஒருவகையில் மக்களாட்சிக் கோட்பாட்டைத் தழுவியது. ஆனால் இதை ஏற்க மறுப்பவர்கள் 'ஒரு பகுதியிலே வாழும் மக்களின் இயல்பென்பது அப் பகுதிச் சூழலுக்கான இசைவின் அம்சம். அதனோடு ஒட்டுறவு கொண்டிருத்தலே சரியான வாழ்வு முறைமை என்பது புரிந்து கொள்ளக் கூடியதே. ஆனால் ஊர்மக்கள் தவறான ஒழுக்க நெறியைப் பின்பற்றினால் என் செய்வது? சில பகுதிகளில் குழந்தை மணம் இன்றும் நடைபெறுகிறது. ஊரார் கண்டு கொள்வதில்லை. கையூட்டு வாங்குதல் என்பது எங்கும் பரவி 'அமைப்புமுறை' ஆக்கப்பட்டு உள்ளது. இவை போன்ற நெறி வகைகள் ஏற்கக்கூடியனவா? அறமல்லாத இவற்றையெல்லாம் சரி என்று சொல்லும் உலகத்தோடு எப்படி ஒத்து வாழ்வது? உலகம் என்ற சொல் பெரும்பான்மையர் என்ற அடிப்படையில் குறளில் ஆளப்பட்டிருக்க முடியாது என்பர் இப் 'பெரும்பான்மை மறுப்பாளர்கள்'.
அடுத்து, இப்பாடலில் உள்ள உலகம் என்றதற்கு உயர்ந்தவர்கள் என்று பலர் உரை கண்டனர். இவர்கள் உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே.... (தொல்காப்பியம், பொருள், மரபியல் 96) என்கிற சூத்திரத்தை மனதிற்கொண்டு பொருள் கூறியிருக்கலாம். இவர்கள் சொல்லும் உயர்ந்தோர் கூற்று என்பது அவ் உயர்ந்தோர் வகுத்த ஒழுக்க நெறியையேயாகும். இது அறநூல்கள் சொல்லியவற்றைக் குறிப்பதாகலாம். அறநூல்கள் வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டனவாக உள்ளன. முன்னர் சில அறக்கோட்பாடுகள் மாந்தரால் எழுதப்பட்டு, அவை இறைவனால் தொகுக்கப்பட்டவை என்றும், அவை என்றென்றும் மாறாதன; உயிர்களின் அடித்தளமாக இருப்பன; அவற்றை யாராலும் மாற்றமுடியாது என்றும் சொல்லிச் சென்றுள்ளனர். கடவுள் படைத்தவையே என்றென்றும் மாறாதனவாக இருக்க இயலும். மனிதர் இயற்றிய கோட்பாடுகளில் எக்காலத்துக்கும் நிலைத்தவை என்று எதுவும் இல்லை; இருக்கவும் முடியாது. இதனால்தான் பரிமேலழகர் 'அறநூல் சொல்லியவற்றுள் இக்காலத்திற்கு ஏலாதன ஒழிந்து, சொல்லாதனவற்றுள் ஏற்பன கொண்டு வருதலான் அவையும் அடங்க 'உலகத்தோடு ஒட்ட' என்று கூறினார்' என்று இக்குறளுக்கான சிறப்புரையில் குறிப்பிடுகிறார். இன்றைய காலகட்டத்தில், சட்டங்கள் கூறும் விதிமுறைகளையும் நீதிமன்றங்கள் தெரிவிக்கும் கருத்துக்களையும் உயர்ந்தோர் கூற்றாக நாம் கொள்ள முடியும். ஆனால் இவற்றைக் கருத்துப் பிறழ்வாக உணர்ந்துகொண்டால் ஒழுக்கமுறைகள் மாறுபட்டுத் தோன்றும்.
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் என்பதை இன்னொரு வகையிலும் காண்பர். 'உலகவாழ்வில் காலப்போக்கில் நிகழும் மாற்றங்களை விரும்பாதவர்கள் 'உலகம் கெட்டுவிட்டது' என்று கூறிக்கொண்டு பிறரைப் பழித்து அந்த 'கெட்ட உலகத்தி'னின்றும் விலகி தனித்து வாழும் போக்கைக் கடைப்பிடித்து ஒழுகுவர் சிலர்; பழைய முறையிலேயே காலத்திற்கும் கருத்திற்கும் ஒவ்வாத வகையில் கிடந்து உழல்வர்; மேலும் சிலர் தமக்குத்தாமே ஏதோ ஒரு வகையில் பொய்ம்மையான உயர்வு (Snobbery) கண்டு உடன்வாழும் மக்களோடு ஒட்டாமல் இருப்பர், இத்தகைய அறிவில்லா மனிதர்களைக் குறித்தே இக்குறள் பாடப்பட்டது' என்பர்.

ஒழுக்கம் என்பது சமூகத்துடன் இணைந்து வாழும் ஒழுகுமுறையாகவே இருக்க வேண்டும். தான் வாழும் சமுதாயத்தோடு இயைந்து வாழவேண்டும் என்பது மட்டுமன்றி, பலதிறப்பட்ட மக்களுடன் கலந்து பழகக் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற செய்தியும் இக்குறளில் உள்ளது. ஒழுகுதல் என்பது பலரோடு பழகுதல், பலநிலை மாந்தரோடு உறவாடத் தெரிதல், அந்தந்தக் காலத்தில் வாழும் சமுதாயத்தின் உணர்வுகளை அறிந்து கொள்ளுதல் போன்றவற்றையும் உள்ளடக்கியது.
இயற்கைஅறிவு, கல்விஅறிவு (செயற்கை அறிவு), இவற்றுடன் மூன்றாவதாக உலகஅறிவும் மிகத்தேவையாகிறது. ஒருவரது இயற்கை அறிவும், செயற்கையறிவும் உலகில் வாழப் பயன்பட வேண்டும் என்றால் அவர் உலகியலை நன்கு அறிந்து கொள்ள வேண்டும். எவ்வளவு கற்றவராயினும் உலகியல்புக்கேற்பத்தான் நடந்து கொள்ள வேண்டும். காலப்போக்கை அறிந்தே உலகோர் தம் வாழ்வுநெறியைப் போற்றி வாழ்கின்றனர். ஆகையால் அவர்களுடைய வழியை ஒட்டி-உலகத்தோடு பொருந்த- ஒழுகுவதே அறிவுடைமையாகும்.
அரசியல் உலகம், சமய உலகம், தொழில் உலகம், நட்பு உலகம், கல்வி உலகம், கலை உலகம் என வெளி உலகத்தில் நம்மைச் சுற்றியுள்ள உலக மக்களோடு நல்ல மனித உறவை உண்டாக்கிப் பழக வேண்டும். வாழும் இடத்திற்கேற்பவும், மாறும் காலத்திற்கேற்பவும், மாறிவரும் வாழ்க்கை முறைகள், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், அறக் கருத்துகளுக்கு ஏற்பவும் வாழ்வதே உலகத்தோடு ஒட்டி வாழ்தலாம்.

உலகத்தோடு பொருந்த ஒழுகத் தெரியாதவர் பல கற்றிருந்தும் அறிவு இல்லாதவரே என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

வாழும் காலத்தில் உள்ள உலகத்தோடு ஒன்றி இசைந்து வாழும் ஒழுக்கம் உடைமையே அறிவார்ந்தது.

பொழிப்பு

உலகத்தோடு ஒட்டி ஒழுகத்தெரியாதவர் பல கற்றிருந்தும் அறிவு இல்லாதவரே.