இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0137ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி

(அதிகாரம்:ஒழுக்கமுடைமை குறள் எண்:137)

பொழிப்பு (மு வரதராசன்): ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுவதால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர்.

மணக்குடவர் உரை: ஒழுக்கத்தாலே தமக்கு எய்தாத மேம்பாட்டை எய்துவர்; அஃதின்மையாலே தமக்கு அடாதபழியை எய்துவர்.

பரிமேலழகர் உரை: ஒழுக்கத்தின் மேன்மை எய்துவர் - எல்லாரும் ஒழுக்கத்தானே மேம்பாட்டை எய்துவர்; இழுக்கத்தின் எய்தாப்பழி எய்துவர் - அதனின்றும் இழுக்குதலானே தாம் எய்துவதற்கு உரித்தல்லாத பழியை எய்துவர்.
(பகை பற்றி அடாப்பழி கூறியவழி, அதனையும் இழுக்கம் பற்றி உலகம் அடுக்கும் என்று கொள்ளுமாகலின், எய்தாப் பழி எய்துவர் என்றார். இவை ஐந்து பாட்டானும் ஒழுக்கம் உள்வழிப்படும் குணமும், இல்வழிப்படும் குற்றமும் கூறப்பட்டன.)

குன்றக்குடி அடிகளார் உரை: ஒழுக்கத்தினால் எல்லோரும் உயர்வடைவர். ஒழுக்கத்திலிருந்து தவறுவதால் தமக்கு உரியதல்லாத பழியையும் அடைவர். ஒருவர் ஒழுக்கத் தவறுடையவராக இருப்பின் அவர் செய்யாத குற்றங்களுக்கும் கூட, அவரைப் பொறுப்பாக்குவது உலக இயல்பு.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஒழுக்கத்தின் மேன்மை எய்துவர் இழுக்கத்தின் எய்தாப் பழி எய்துவர்.

பதவுரை: ஒழுக்கத்தின்-ஒழுக்கத்தினால்; எய்துவர்-அடைவராவர்; மேன்மை-உயர்வு; இழுக்கத்தின்-(ஒழுக்கம்)தவறுதலால்; எய்துவர்-அடைவர்; எய்தா-அடைவதற்கு உரித்தல்லாத; பழி-பழிக்கப்படுதல்.


ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒழுக்கத்தாலே தமக்கு எய்தாத மேம்பாட்டை எய்துவர்;
பரிதி: ஒழுக்கத்தின் மேன்மையினாலே பெருமை எய்துவர்;
காலிங்கர்: தமக்கு அடுத்த ஆசாரத்தினாலே எய்துவர் பெருமையை;
பரிமேலழகர்: எல்லாரும் ஒழுக்கத்தானே மேம்பாட்டை எய்துவர்;

'ஒழுக்கத்தானே மேம்பாட்டை எய்துவர்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'விடா ஒழுக்கத்தால் முன்னேற்றம் வரும்', 'ஒழுக்க நெறியால் மக்கள் மேன்மை பெறுவர்', 'எல்லாரும் ஒழுக்கத்தாலே மேம்பாட்டை அடைவர்', 'எல்லாரும் ஒழுக்கத்தால் மேம்பாட்டினை அடைவர்' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஒழுக்கத்தால் மேன்மை பெறுவர் என்பது இப்பகுதியின் பொருள்.

இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அஃதின்மையாலே தமக்கு அடாதபழியை எய்துவர். [அடாத பழி - தாங்க இயலாத பழிச்சொல்]
பரிதி: ஒழுக்கம் கெட்டால் அபகீர்த்தியாம், ஆதலால் ஒழுக்கம் கைவிடுவான அல்லன் என்றவாறு. [அபகீர்த்தி -இகழ்ச்சி]
காலிங்கர்: மற்று அதனின் இழுக்கத்தினால் எய்துவர் அளவிறந்த பழியினை என்றவாறு.
பரிமேலழகர்: அதனின்றும் இழுக்குதலானே தாம் எய்துவதற்கு உரித்தல்லாத பழியை எய்துவர்.
பரிமேலழகர் குறிப்புரை: பகை பற்றி அடாப்பழி கூறியவழி, அதனையும் இழுக்கம் பற்றி உலகம் அடுக்கும் என்று கொள்ளுமாகலின், எய்தாப் பழி எய்துவர் என்றார். இவை ஐந்து பாட்டானும் ஒழுக்கம் உள்வழிப்படும் குணமும், இல்வழிப்படும் குற்றமும் கூறப்பட்டன. [அடாப்பழி - பொருந்தாதபழி; அடுக்கும் - தகும்]

'ஒழுக்கத்தின் இழுக்கத்தினால் எய்துவதற்கு அளவிறந்த/உரித்தல்லாத பழியினை எய்துவர்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'விடுவதால் பொருந்தாப் பழி வரும்', 'ஒழுக்கக் கேட்டினால் பெறுதற்குரியதல்லாத பழியையும் பெறுவர்', 'அதனின் வழுவுதாலே, அடையக் கூடாத அடாப் பழியை யடைதல் கூடும். (இல்லாத குற்றத்தையும் உள்ளதாய்ப் பகைவர் தூற்றுவதாலென்க.)', 'அவ்வொழுக்கதிலிருந்து தவறுதலால் அடையக்கூடாத பெரும் பழியை அடைவர்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

ஒழுக்கத் தவறுதலால் பெறுதற்குரியதல்லாத பழியை அடைவர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஒழுக்கத்தால் எவரும் மேன்மை பெறுவர் அதனின் தவறுதலால் எய்தாப் பழி அடைவர் என்பது பாடலின் பொருள்.
'எய்தாப் பழி' குறிப்பது என்ன?

ஒழுக்கக் கேடுற்றவர் மீது செய்யாத குற்றத்திற்கான பழியும் வந்து சேரும்.

ஒழுக்கத்தை விடாமல் கடைப்பிடிப்பவர் எல்லாரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கம் தவறியவர் அடையக் கூடாத பழியையும் அடைவர்.
இக்குறளின் முதல்பகுதி ஒழுக்கத்தால் மக்கள் மேன்மை அடைவராவர் என்கிறது. பாடலிலுள்ள எய்தா என்னும் அடைமொழி பின்வரும் பழி என்ற சொல்லைத் தழுவியது. ஆனால் மணக்குடவர் இவ்வடையை மேன்மை என்பதனோடும் கூட்டி 'எய்தா மேன்மை எய்துவர்' என்றார். இது 'தம் நிலையில் எய்த முடியாத மேன்மையை ஒழுக்கம் உடையோர் எய்துவர்' என்ற பொருள் தருகிறது. இதுவும் சிறப்பாகவே உள்ளது; கல்வி, செல்வம் போன்ற பிறவற்றால் அடைய முடியாத உயர்வை ஒழுக்கம் ஒன்றினாலேயே அடையலாம் என்பது பெறப்படுகிறது.
பாடலின் பின்பகுதி, இழுக்கினால் ஒழுக்கக் கேடு உண்டானால் அடையக்கூடாத பெரும்பழி அடைவார்கள் என்கிறது. ஒழுக்கத்துக்கு நேர் மாறான சொல் இழுக்கம்; ஒழுக்கத்திலிருந்து வழுவுதலைக் குறிப்பது. ஒழுக்கத்தினால் உயர்ந்தவர்கள் இழுக்கினால் அதாவது அவ்வொழுக்கத்திலிருந்து தவறினால் தமக்கு உரியதல்லாத பழியையும் ஏற்க நேரிடும்.
ஒழுக்கத்தினால் மேன்மை அடைந்தவர் இழுக்கினால், ஒழுக்கம் தவறிய மற்றவரைவிட மிகையான கெட்ட பெயர் உண்டாகி, அடையக்கூடாத பழியையும் ஏற்க நேரும். ஒழுக்கம் உண்டாய வழித் தோன்றும் ஏற்றமும் ஒழுக்கம் இல்லாத வழி உண்டாகும் கேடும் கூறப்பட்டன.

'எய்தாப்பழி' குறிப்பது என்ன?

இத்தொடர்க்கு அடாதபழி, அபகீர்த்தி, அளவிறந்த பழி, எய்துவதற்கு உரித்தல்லாத பழி, வேண்டாத பழி, இழிந்த பழி, பொல்லாத பழி, அடையக்கூடாத அடாப்பழி, தமக்குரியதல்லாத பழி, ஏற்க ஒண்ணாத பழி, எவரும் அடையக்கூடாத பழிக்கப்படும் தாழ்வான நிலை எனப் பலவாறாக உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

‘எய்தாத பழி’ என்பதன் ஈறுகெட்டு எய்தாப்பழி என்று நின்றது.
இத்தொடரின் நேர்பொருள் தனக்கு உரித்தல்லாத பழி என்பது. அது என்ன உரித்தல்லாத பழி? ஒழுக்கமானவர் ஒரு சிறு குற்றம் செய்தாலும் அதன் பின்னர் அவர் செய்யாத குற்றத்தையும் செய்ததாய்ப் பார்க்கப்பட்டு இல்லாத பழியை உள்ளதாய் ஏற்க வேண்டி இருக்கும். இல்லாத குற்றத்தையும் உள்ளதாய் உலகோர் தூற்றுவர். உரித்தல்லாத பழி என்பது செய்யாத குற்றத்திற்காகச் சுமத்தப்படும் பழி எனப் பொருள்படும். ஒருவன் ஒழுக்கம் இல்லாமல் இருந்தால், ஒருமுறை செய்த குற்றத்திற்காக எப்போதெல்லாம் குற்றம் நிகழ்கிறதோ அப்போதெல்லாம் மற்றவர் பார்வை அவன்மீது விழத் தொடங்கும்; 'இவன் செய்திருப்பான், முன்னாடி செய்தவன் தானே' என்று அவன் செய்யாத தவறுகளுக்கும் ஆளாக்கப்படுவர்; பழி ஏற்க வேண்டி வரும். அவன் செய்யாத குற்றங்களுக்கும் கூட, அவரைப் பொறுப்பாக்கும் இவ்வுலகம். இதுவே எய்தாப் பழி.
மாந்தர் எவராலும் ஒழுக்கத்தினால் உயர்வு பெறமுடியும். அதுபோலவே அவர்கள் ஒழுக்கம் குன்றினால் மதிப்பு இழத்தலோடு, தமக்குரியவல்லாத பழியையும் பன்மடங்காகத் தம்மேற் சுமத்தப் பெறுவர். ஒழுக்கங் கெட்டவன் பெரும்பழி சுமப்பான். ஒழுக்கமின்மையால் எய்தும் பழியை பண்பட்ட மக்கள் நாணுவர். ஒழுக்கத்திற்காக பெயர் பெற்றவர்கள் அதைப் பேணிக்காக்கப் பன்மடங்கு விழிப்புடன் இருக்க வேண்டும்.

மக்கள் ஒழுக்க உயர்வாலேயே மேன்மையடைகிறார்கள். அதேநேரம் அவர்கள் ஒழுக்கம் தவறும்போது பன்மடங்கு மதிப்பிழந்து பெரும் இழிவை அடைவர்; மேலும் தமக்குரியவல்லாத பழியை தாங்கவேண்டியவராவர். இவரது இழுக்கம் காரணமாக உலகம் அதனையும் அடுக்குமென்று சொல்லும் அதாவது அப்பழியும் ஒவ்வுமென்று கொள்ளும். ஒழுக்கம் தவறி நடப்போர்க்கு இது ஓர் முன்னெச்சரிக்கை அறிவிப்பாக அமைகிறது- தவறியும் இழுக்கத்தில் விழுந்து பொல்லாப்பழி எய்திவிடாது தன்னக் காத்துக்கொள்ள வேண்டும். பின்னாளில் நல்லது செய்தாலும் உண்டான பழி நீங்காது.

'எய்தாப்பழி' என்பதற்கு அடையக்கூடாத பொருந்தாபழி என்பது பொருள்.

ஒழுக்கத்தால் எவரும் மேன்மை பெறுவர் அதனின் தவறுதலால் பெறுதற்குரியதல்லாத பழியை அடைவர் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

ஒழுக்கமுடைமை கொண்டவர் சிறுகுற்றமும் உண்டாகாமலிருக்குமாறு காத்துக் கொள்ள வேண்டும்.

பொழிப்பு

ஒழுக்கத்தால் மேன்மை பெறுவர்; அது தவறினால் பொருந்தாப் பழி வரும்.