இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0136ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக்கு அறிந்து

(அதிகாரம்:ஒழுக்கமுடைமை குறள் எண்:136)

பொழிப்பு (மு வரதராசன்): ஒழுக்கம் தவறுதலால் குற்றம் உண்டாவதை அறிந்து, மனவலிமை உடைய சான்றோர் ஒழுக்கத்தில் தவறாமல் காத்துக் கொள்வர்.

மணக்குடவர் உரை: ஒழுக்கத்தினின்று நீங்கார் அறிவுடையார்: அதனைத் தப்பினாற் குற்றம் வருதலை அறிந்து என்றவாறு.
இஃது, அதனை அறிவுடையார் தவிரார் என்றது; குற்றம் வருதல் பின்னே காணப்படும்.

பரிமேலழகர் உரை: ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் - செய்தற்கு அருமை நோக்கி ஒழுக்கத்தின் சுருங்கார் மனவலி உடையார்; இழுக்கத்தின் ஏதம் படுபாக்கு அறிந்து - அவ்விழுக்கத்தால் தமக்கு இழிகுலம் ஆகிய குற்றம் உண்டாம் ஆற்றை அறிந்து.
(ஒழுக்கத்தின் சுருக்கம் அதனை உடையார் மேல் ஏற்றப்பட்டது. கொண்ட விரதம் விடாமை பற்றி 'உரவோர்' என்றார்.)

வ சுப மாணிக்கம் உரை: உரமுடையவர் ஒழுக்கம் சிறுதும் தளரார்; தளரின் துன்பம் பல வருமென்று அறிவார்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இழுக்கத்தின் ஏதம் படுபாக்கு அறிந்து உரவோர் ஒழுக்கத்தின் ஒல்கார்.

பதவுரை: ஒழுக்கத்தின்-ஒழுக்கத்தினின்றும்; ஒல்கார்-தளரார், சுருங்கார், குன்றார்; உரவோர்-திண்மையுடையவர், மனவலி உடையார்; இழுக்கத்தின்-தவறுதலால்; ஏதம்-குற்றம்; படுபாக்கு-உண்டாதலை; அறிந்து-தெரிந்து, உணர்ந்து.


ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒழுக்கத்தினின்று நீங்கார் அறிவுடையார்;
பரிதி: ஒழுக்கநெறி கைவிடார்;
காலிங்கர்: தமது ஆசாரத்தில் சிறிதும் தளர்ந்து நில்லார் அறிவுடையாளர்;
பரிமேலழகர்: செய்தற்கு அருமை நோக்கி ஒழுக்கத்தின் சுருங்கார் மனவலி உடையார்; [சுருங்கார் - குறைவுறார்; மனவலியுடையார் - நெஞ்சு உரம் கொண்டவர்கள்]
பரிமேலழகர் குறிப்புரை: ஒழுக்கத்தின் சுருக்கம் அதனை உடையார் மேல் ஏற்றப்பட்டது. கொண்ட விரதம் விடாமை பற்றி 'உரவோர்' என்றார். [உரவோர் - மனவலியுடையோர்]

'ஒழுக்கத்தினின்று தளர்ந்து நில்லார் அறிவுடையார்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். உரவோர் என்பதற்கு பரிமேலழகர் மனவலி உடையார் என்றார்; மற்றவர்கள் அறிவுடையார் எனப் பொருள் கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அறிவுத் திட்பமுடையவர்கள் ஒழுக்க நெறியினின்றும் தளர மாட்டார்கள்', 'அறிவுடையோர் ஒழுக்கத்தில் தளரமாட்டார்கள்', 'அறிஞர் செய்யுங்கடமை அரிதாயினும், அதனைச் செவ்வையாகச் செய்யாது சுருக்கமாட்டார்', 'அறிவுடையோர் நல்லொழுக்கத்தில் குறைவுபடார்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

உள்ளத் திண்மையுடையார் ஒழுக்கத்தினின்று தளரார் என்பது இப்பகுதியின் பொருள்.

இழுக்கத்தின் ஏதம் படுபாக்கு அறிந்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதனைத் தப்பினாற் குற்றம் வருதலை அறிந்து என்றவாறு.
மணக்குடவர் குறிப்புரை: இஃது, அதனை அறிவுடையார் தவிரார் என்றது; குற்றம் வருதல் பின்னே காணப்படும்.
பரிதி: அது ஏன் எனில் ஒழுக்கம் கெட்டது பிராணச்சேதம் வந்ததற்கு ஒக்கும் என்று அறிந்து என்றவாறு. [பிராணச் சேதம் - உயிரழிவு]
காலிங்கர்: அது எங்ஙனம் எனின், தம் ஒழுக்கத்தை வழுவுதலில் தமக்குக் குற்றம் தங்கும் மிகுதிப்பாட்டினை உணர்ந்து என்றவாறு. [வழுவுதல் - தவறுதல்]
பரிமேலழகர்: அவ்விழுக்கத்தால் தமக்கு இழிகுலம் ஆகிய குற்றம் உண்டாம் ஆற்றை அறிந்து.

'ஒழுக்கத்தை வழுவுதலில் தமக்குக் குற்றம் வருதலை அறிந்து' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி 'உயிரழிவு உண்டாதலை அறிந்து' என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒழுக்கக் கேட்டால் துன்பம் உண்டாதலையறிந்து', 'ஒழுக்கம் தவறுவதால் வரக்கூடிய குற்றங்களை உணர்ந்து', 'ஒழுக்கக் குறைவினால், இடர் விளைதலை அறிந்து', 'நல் ஒழுக்கத்திலிருந்து தவறுதல் நமக்குக் குறைவைத் தரும் என்று அறிந்து' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

ஒழுக்கம் தவறுவதால் உண்டாகக்கூடிய குற்றங்களை உணர்ந்து என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஒழுக்கம் தவறுவதால் உண்டாகக்கூடிய குற்றங்களை உணர்ந்து, உரவோர் ஒழுக்கத்தினின்று தளரார் என்பது பாடலின் பொருள்.
'உரவோர்' யார்?

ஒழுக்கவாழ்வில் நிலைநிற்க உள்ளஉறுதி வேண்டும்.

ஒழுக்கம் தவறுவதால் குற்றம் உண்டாகப்போவதை உணர்ந்து, நெஞ்சுத் திண்மையர் ஒழுக்க நெறியில் குறைவுறார்.
ஒழுக்கம் என்றது மாந்தர் நன்னடத்தையுடன் வாழ்வதைக் குறிப்பது.
ஒல்காமை என்பது தளரவிடாமையைக் குறிக்கும் சொல். இதற்குச் சுருங்குதல், பின்வாங்காமை, குறைதல், எனவும் பொருள் கூறுவர். ஒல்கார் என்ற சொல்லுக்கு நீங்கார், கைவிடார், துறந்து நில்லார், சுருங்கார், விட்டுவிடார், குறைவுபடார், தளரார் என வேறுவேறு சொற்களால் உரை கூறப்பட்டாலும் எல்லாமே ஒரு பொருள் குறிப்பனவே.
ஏதம் என்ற சொல்லுக்குக் குற்றம் என்பது பொருள். இச்சொல்லுக்கு இடர், துன்பம் எனவும் பொருள் கொள்வர்.
படுபாக்கு என்ற சொல் 'உண்டாவது' அதாவது 'உண்டாகப்போவது' என்னும் பொருள் தரும்.

ஒழுக்கத்திலிருந்து தவறுதனாலே தமக்கு ஏற்படும் குற்றத்தை - பழியை உணர்ந்தவர் ஒழுக்கத்திலிருந்து பிறழாமல் உள்ளத் திண்மையுடன் தம்மைக் காத்துக் கொள்வர். ஒழுக்கம் குன்றினால் குற்றத்தில் வீழ்வது உறுதி என்பதையும் மனவலிமை கொண்டவர்கள் நல்லொழுக்கம் தவறார் என்பதையும் தெரிவிப்பதாக உள்ளது இப்பாடல்.
ஒழுக்கமான வாழ்க்கை மேற்கொள்வதற்கும் அதில் தொடர்ந்து நிற்பதற்கும் கடினமான முயற்சி தேவை. பழகப் பழக ஒழுக்கநெறி இயல்பாக அமைந்துவிடும். சிலர் சிறுசிறு இன்பம் கருதி, நல்லொழுக்கத்தைத் தளர விட்டுவிடுகிறார்கள். அதன் விளைவாக பல துன்பங்கள், இழிவு, பழி உண்டாகும். ஒழுக்க நெறியிலிருந்து வழுக்கி வீழக்கூடிய சமயங்களில் அறிவுரை கேட்டு நாணித் திருந்துவதும் கடினமானதுதான். ஒழுக்கக் குறைவினால் உண்டாகும் குற்றங்களை அறிந்தவர்கள் உள்ள உறுதியுடன் நின்று ஒழுக்க வாழ்விலிருந்து பின்வாங்க மாட்டார்கள். உள்ள உறுதி இல்லாதவர்களே ஒழுக்க வாழ்விலிருந்து வழுவி இழிவும் துன்பமும் அடைவார்கள்.
'உரவோர் இழுக்கத்தின் ஏதம் வருதலையறிந்து ஒழுக்கத்தின் ஒல்கார்' என ஒல்காமையை உரவோர் செயலாகவே கொண்டு உரவோர் ஒல்கார் எனக் கூறப்பட்டது.

'உரவோர்' யார்?

'உரவோர்' என்ற சொல்லுக்கு அறிவுடையார், அறிவுடையாளர், மனவலி உடையார், மனவலிமை உடையார், உரமுடையவர், அறிவுத் திட்பமுடையவர்கள், உறுதிப்பாட்டாளர், அறிஞர், அறிவுடையோர், உள்ளத்தில் உறுதி மிக்கோர், அறிவு உரம் பெற்ற சான்றோர், வலியோர், வல்லாளர் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

உரன் என்ற சொல்லுக்கு அறிவு, வலி என்றும் பொருள் உண்டு. இன்ன நன்மை செய்வேன்; இன்னவை செய்யாது ஒழிவேன் எனத் தனக்குத்தானே தனது ஆற்றலுக் கேற்றபடி உலகோர் உண்டாக்கிய கோட்பாடுகளை ஏற்று, மன உறுதியுடன் ஒழுகி, அவற்றை விடாமல் இருப்பது உரன் என்று இங்கு சொல்லப்படுகிறது. இங்ஙனம் ஏற்ற கொள்கையை விடாது கடைப்பிடிப்போர் உரவோர் ஆவர். ஒழுக்கம் மேன்மை தருவது எனத் தாமே உணர்ந்து கடைப்பிடிக்கும் திண்மை நெஞ்சம் கொண்ட உரவோர் ஒழுக்கத்தில் குறைவுபட நேர்ந்தாலும் கடிதில் திருந்தும் பண்புடையவராயுமிருப்பர்.
மன உறுதி, அறிவால் வருவது ஆதலால், பல உரைகாரர்கள் உரவோர் என்பதற்கு அறிவுடையார் என்றே பொருள் கூறியுள்ளனர். பிறர் மனவலியுடையார், பெரியோர்கள், சான்றோர்கள் எனப் பொருள் உரைத்தனர்.
'உரவோர்' என்றதற்கு வல்லாளர் எனப் பொருள் கண்டவர்கள் 'வல்லாண்மை (உரம்) இழுக்கத்திலிருந்து மீட்கலாமாயினும் ஒழுகுதலில் குறைபடமாட்டார்' என விளக்கம் தருவர்.

உரவோர் என்றதற்கு மனஉறுதி கொண்டோர் என்பது பொருள்.

ஒழுக்கம் தவறுவதால் உண்டாகக்கூடிய குற்றங்களை உணர்ந்து, உள்ளத் திண்மையுடையார் ஒழுக்கத்தினின்று தளரார் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

ஒழுக்கமுடைமைக் கொள்கைப் பிடிப்புக் கொண்டோர் பின்வாங்கமாட்டார்.

பொழிப்பு

உள்ள உறுதி கொண்டோர் ஒழுக்க நெறியினின்றும் தளர மாட்டார்கள்; ஒழுக்கக் கேட்டால் குற்றம் உண்டாதலை உணர்ந்து.