இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0135அழுக்காறு உடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்கம் இலான்கண் உயர்வு.

(அதிகாரம்:ஒழுக்கமுடைமை குறள் எண்:135)

பொழிப்பு (மு வரதராசன்): பொறாமை உடையவனிடத்தில் ஆக்கம் இல்லாதவாறு போல, ஒழுக்கம் இல்லாதவனுடைய வாழ்க்கையில் உயர்வு இல்லையாகும்.

மணக்குடவர் உரை: மனக்கோட்ட முடையவன்மாட்டு ஆக்கம் இல்லை யானாற் போல ஒழுக்கமில்லாதான் மாட்டு மிகுதியில்லையாம்.
இஃது உயர்ச்சியில்லையா மென்றது.

பரிமேலழகர் உரை: அழுக்காறு உடையான்கண் ஆக்கம் போன்று - அழுக்காறுடையான்மாட்டு ஆக்கமில்லாதாற்போல, ஒழுக்கம் இலான் கண் உயர்வு இல்லை - ஒழுக்கம் இல்லாதவன் மாட்டும் உயர்ச்சி இல்லை.
(உவமையான் ஒழுக்கம் இல்லாதவன் சுற்றத்திற்கும் உயர்ச்சி இல்லை என்பது பெற்றாம்; என்னை? கொடுப்பது அழுக்கறுப்பான் 'சுற்ற'மும் (குறள்.166)நல்கூர்தலின். 'உயர்வு' - உயர் குலமாதல்.)

வ சுப மாணிக்கம் உரை: பொறாமைப் பட்டவனுக்கு வளர்ச்சி உண்டோ? ஒழுக்கம் கெட்டவனுக்கு உயர்வு உண்டோ?


பொருள்கோள் வரிஅமைப்பு:
அழுக்காறு உடையான்கண் ஆக்கம்போன்று ஒழுக்கம் இலான்கண் உயர்வு இல்லை.

பதவுரை: அழுக்காறு-பிறர் ஆக்கம் பொறாமை; உடையான்கண்-உடையவனிடத்தில், உள்ளவனிடத்து; ஆக்கம்-வளர்ச்சி, செல்வம், முன்னேற்றம், மேன்மேல் உயர்தல்; போன்று-போல; இல்லை-இல்லை; ஒழுக்கம்-நன்னடத்தை; இலான்கண்-இல்லாதவனிடத்தில்; உயர்வு-உயர்ச்சி.


அழுக்காறு உடையான்கண் ஆக்கம்போன்று:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மனக்கோட்ட முடையவன்மாட்டு ஆக்கம் இல்லை யானாற் போல; [மனக்கோட்டம் - மனத்தின் விளையும் கோணல். அதனால் மனத்தில் விளையும் அழுக்காறு அவா முதலான குற்றங்கள்]
பரிதி: அழுக்கு மனமுடையார்க்குச் செல்வங்கூடாது.அது போல;
காலிங்கர்: பிறர் ஆக்கத்தின்கண் தன்நெஞ்சம் அழுக்காறு உடையவனிடத்து யாதொருபடி ஆக்கமில்லை மற்று அதுபோல;
பரிமேலழகர்: அழுக்காறுடையான்மாட்டு ஆக்கமில்லாதாற்போல;

அழுக்காறு உடையவனிடத்து ஆக்கமில்லாதாற்போல என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பொறாமையுடையவனிடம் செல்வம் இல்லாதது போல', 'பொறாமை உள்ளவனுக்குச் செல்வம் சேராது. சேர்ந்தாலும் நிலைக்காது. அதுபோல', 'பொறாமை உடையவனிடத்தே செல்வம் நிலை பெறாதது போல', 'பொறாமை உடையவனிடம் செல்வம் சேராதவாறு போல', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பொறாமை உள்ளவனிடத்தே செல்வம் (இல்லாதது) போல என்பது இப்பகுதியின் பொருள்.

இல்லை ஒழுக்கம் இலான்கண் உயர்வு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒழுக்கமில்லாதான் மாட்டு மிகுதியில்லையாம்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது உயர்ச்சியில்லையா மென்றது.
பரிதி: நல்லநெறி நடவாதார்க்கும் பெருமை இல்லை என்றவாறு.
காலிங்கர்: இல்லை ஒழுக்கம் இல்லாதானிடத்தும் பெரிய மேம்பாடு என்றவாறு.
பரிமேலழகர்: ஒழுக்கம் இல்லாதவன் மாட்டும் உயர்ச்சி இல்லை.
பரிமேலழகர் குறிப்புரை: உவமையான் ஒழுக்கம் இல்லாதவன் சுற்றத்திற்கும் உயர்ச்சி இல்லை என்பது பெற்றாம்; என்னை? கொடுப்பது அழுக்கறுப்பான் 'சுற்ற'மும் (குறள்.166)நல்கூர்தலின். 'உயர்வு' - உயர் குலமாதல்.

ஒழுக்கமில்லாதான் மாட்டு உயர்ச்சி இல்லை என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். மணக்குடவர் மிகுதியில்லை என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒழுக்கம் இல்லாதவனிடம் உயர்ச்சி இல்லை', 'ஒழுக்கமில்லாதவனுக்கு மேன்மை இருக்காது. இருந்தாலும் தங்காது', 'ஒழுக்கம் இல்லாதவனிடத்தே உயர்வு நிலைபெறாது, இலதாகும்', 'ஒழுக்கமில்லாதவனிடம் உயர்வு இல்லை' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

ஒழுக்கம் இல்லாதவனிடம் உயர்வு இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பொறாமை உள்ளவனிடத்தே வளர்ச்சி இல்லாதது போல ஒழுக்கம் இல்லாதவனிடம் உயர்வு இல்லை என்பது பாடலின் பொருள்.
அழுக்காறையும் ஒழுக்காற்றையும் இணைத்து ஏன் பேசுகிறது இப்பாடல்?

ஒழுக்கமில்லாதவனுக்கு அமையும் வாழ்க்கை உயர்வான வாழ்க்கையாக இருக்காது.

அழுக்காறு என்னும் உள்ளத்து மாசு கொண்டவனிடத்து முன்னேற்றம் நிலை பெறாதது போல, ஒழுக்கம் இல்லாதவனிடத்தே உயர்வு இலதாகும்.
பொறாமையில் புழுங்குகிறவனுக்கு வளமை இல்லாமல் போவது போல ஒழுக்கம் இல்லாதவனுக்கு மேம்பாடான வாழ்க்கை இல்லையாகும். ஒழுக்கம் இல்லாதவனிடம் உயர்வு இருக்காது என்று சொல்லப்பட்டதால், ஒழுக்கம் உள்ளவனிடம் உயர்வு இருக்கும் என்பது பெறப்படும். அதாவது அவனை உலகம் உயர்வாக மதிக்கும்.

அழுக்காறு என்பது எவ்வளவு கிடைத்தாலும் அமையாத உள்ளத்தைச் சொல்வது; அது பொறாமைக் குணத்தைக் குறிக்கும் ஒரு சொல்; அழுக்கு+ஆறு என விரியும். அழுக்கு மாசு குறித்தது. பிறர் ஆக்கங்கண்டு அழுக்குக் கொள்ளுதலே அழுக்காறு எனப்பட்டது. அழுக்காறுடையவன் பிறரது செல்வங் கண்டு பொறாமைப்படுகிறான். இவனது துப்புரவற்ற மனத்தால் அவனிடத்திலுள்ள செல்வமும் தேய்ந்து இல்லையாகிறது. இதை அழுக்காறு உடையான்கண் ஆக்கம் இல்லை போன்று என இப்பாடல் சொல்கிறது. ஆக்கம் என்பது செல்வம், மேம்பாடு, முன்னேற்றம், உள்ளத்தின் நிறைவு குறித்தது.
இரா இளங்குமரன் நயனுடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும்நீர செய்யாது அமைகலா வாறு (ஒப்புரவறிதல் 219 பொருள்: செய்யத்தக்க பொதுநலப் பணிகளைச் செய்ய இயலாதநிலையில், ஒப்புரவு செய்யும் நன்மையை உடையான் வறியன் ஆகிறான்) என்னும் குறளை மேற்கோள் காட்டி, 'நல்லவர்க்கு வறுமை என்பதோ இல்லை. அவர்க்கு வறுமை எனப்படுவது பிறர்க்கு உதவ முடியவில்லையே என்னும் ஏக்கமேயாம். அதுபோல நம் பார்வையில் செல்வமாகத் தோன்றுவது செல்வமும் இல்லை. வறுமையாகத் தோன்றுவது வறுமையும் இல்லை. அவர்கள் உளப் பார்வையால் உண்மை உணர்க என்பது குறிப்பு மொழியாம்; அழுக்காறுடையானுக்கு எவ்வளவு செல்வம் இருந்தாலும் உண்மையில் செல்வம் இல்லை! செல்வத்திற்கு உரிய மதிப்பைப் பெறாமல் குப்பைக் குவியலாய்க் கொள்ளப்படும். அவனுக்கும் பயனாகாது; பிறர்க்கும் அவன் உயிர் உள்ளவரை பயன் ஆகாது. எந்த ஆக்கத்திற்கும் ஆகாதது ஆக்கம் எனப்படுமா?' என வினவிப் பொறமை உள்ளம் கொண்டவனுக்கு ஏன் ஆக்கம் இல்லை என்பதை விளக்குவார்.

பிறரைக்கண்டு பொறாமைப் படுகிறவர்களுக்கு செல்வம் இல்லை போல ஒழுக்கநெறிகளிலிருந்து தவறியவர்களுக்கு வாழ்வில் உயர்வு இல்லை என்றும் ஒப்பு நோக்கி இப்பாடல் கூறுகிறது. ஒழுக்கமற்றவன், என்னதென்று தெரியாமலே, தன் மனம் போன போக்குகளில் தனது நடத்தைகளைச் செல்ல விட்டு சொல்ல முடியாத தீச்செயல்களில் சிக்கிக் கொள்வான். ஒழுக்கமற்றவனின் செயல்கள் கெடுதலைப் பெருக்குவதாக அமைவதால் அவன் உயர்வடைவதில்லை. ஒழுக்கம் தவறிய ஒருத்தனுக்கு உயர்வு உண்டாயினாலும் அவன் அவ்வுயர்வை இன்னும் ஒழுங்கீனமான கேடு செயல் புரிவதற்கே பயன்படுத்தி அழிவான். அது உயர்ச்சி ஆகாது. இதை ஒழுக்கம் இலான்கண் உயர்வு இல்லை என்கிறது இக்குறள்.

ஒழுக்கமே பொறாமையற்ற, மாசற்ற நல் மனத்தையும் பெறவைக்கும் என்ற கருத்தும் கூறப்பட்டது.

அழுக்காறையும் ஒழுக்காற்றையும் இணைத்து ஏன் பேசுகிறது இப்பாடல்?

இங்கு வள்ளுவர் அழுக்காற்றையும் ஒழுக்காற்றையும் இணைத்து ஒழுக்கம் மனிதனை உயர்த்தும்; அழுக்காறு தாழ்த்தும் என்கிறார்.
அவ்விய நெஞ்சத்தானுக்கு அதாவது அழுக்காறு கொண்டவனுக்கு செல்வம் சேராது என்று வள்ளுவர் திடமாக நம்பியதால் அச்செய்தியை இங்கு உவமையாக பயன்படுத்தியுள்ளார். அழுக்காறையும் செல்வத்தையும் இணைத்துப் பல குறள்களில் சொல்லியுள்ளார் அவர். அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் தவ்வையைக் காட்டி விடும் (அழுக்காறாமை 167: பொருள்: அழுக்காறு உடையவனிடத்திருந்து செல்வம் நீங்கும்), அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்துவிடும் (அழுக்காறாமை 168: பொருள்: பொறாமை என்னும் பாவம் செல்வமழித்து துன்பத்தீயில் வாட்டிவிடும்). அழுக்கற்று அகன்றாரும் இல்லைஅஃது இல்லார் பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல் (அழுக்காறாமை 170: பொருள்: பொறாமையினால் செல்வராயினாரும் இல்லை; பொறாமையில்லாமல் செல்வத்தில் குறைந்து போயினாரும் இல்லை.) என்பன அவை.
அப்படியே பொறாமைக்காரனுக்குச் செல்வம் சேர்ந்துவிட்டால் அது எவ்விதம் ஆனது என்பது ஆராயப்படவேண்டும் என்று அவனுக்குச் செல்வம் சேர்ந்தது பொறுக்க முடியாமல் கூறுகிறார் வள்ளுவர்: அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும் (அழுக்காறாமை 168: பொருள்: பொறாமை கொள்ளும் நெஞ்சுடையோன் செல்வமும் பொறாஅமையற்றோன் வறுமையும் ஆராயப்படும்) என்றார். முடிவாகப் பொறாமைப்பட்டு முன்னேறியவர்களும் இல்லை; பொறாமை இல்லாதவர்களாய் இருந்தவர்கள் தாழ்ந்து போனதும் இல்லை என்று உரைப்பார்: அழுக்கற்று அகன்றாரும் இல்லை; அஃதில்லார் பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல் (குறள் 170).

அழுக்காறான எண்ணமே ஒருவகையில் ஒருவனை ஒழுக்கக் குறைவாக நடக்கத் தூண்டுகிறது. அழுக்காறு என்பது என்ன கிடைத்தாலும் அமையாத உள்ளம். அதனால், பிறன் செல்வங் கண்டு பொறாமைப்படுகிறான். பொறாமைப் பட்டவனுக்குப் பிறரைக் கண்டு புழுங்கியே தன் நேரத்தையும் ஆற்றலையும் வீணடிக்கிறான். தன் வளர்ச்சி கருதியோ, பிறர்க்கு உதவவேண்டும் என்பது கருதியோ முயல்வதற்கு மனமில்லை. அது போலவே ஒழுக்கமில்லாதவனுக்கும், தன் இழிசெயலை மறைக்கவும், அந்தச் செயலை மேலும் செய்யவுமே ஆற்றல் செலவழியுமே தவிர, தன் உயர்வுக்கு வேலை செய்ய முயலமாட்டான். இதனால் பொறாமையும் ஒழுக்கமின்மையும் ஒப்பிடப்பட்டது.
அழுக்காறு (குணம்) ஒழுக்கம் (செயல்) இரண்டனுள் இரண்டும் ஒரு தன்மையன, காக்கத்தக்கன என்பதால், அழுக்காறற்ற ஒழுக்கச் சிறப்புரைத்ததுமாம் என்பார் மு கோவிந்தசாமி. இவ்வாறு வள்ளுவர் அழுக்காற்றையும் ஒழுக்காற்றையும் இணைத்துக் காண்கிறார்.

உவமம் கூறுவதில் வள்ளுவர் ஒரு வேறுபட்ட நெறியை இங்கு பின்பற்றியிருக்கிறார். ஒரு அறத்தை விளக்குமிடத்தில் தாம் வற்புறுத்த விரும்பும் பிறிதொரு அறத்தை உவமானமாக எடுத்துக் காட்டுவது ஓர் இலக்கிய உத்தி. அந்தவகையில் இக்குறட்பாவில் இருநீதிகள் கூறப்பட்டுள்ளன. உலகப் பொருள்களையும் அவற்றின் நிகழ்ச்சிகளையும் பண்புகளையும் எடுத்து உவமங் காட்டுதலே அன்றி, ஒரு கல்லில் இரண்டு மாங்காய் விழ எறிகின்றது போல ஒரு நீதிக்கு ஒரு நீதியையே உவமமாகக் காட்டி, இரு பயனை எல்லாரும் எய்த வைப்பார் வள்ளுவர். 'இதை ஒருவகைக் கூட்டியைபு (Synthesis) எனக் கூறி இவ்வியைபு (parellelism) பல குறட்பாக்களில் உள்ளதைச் சுட்டிக் காட்டுவார் காமாட்சி சீனிவாசன். இங்கு பொறாமை கொண்டவனுக்கு ஆக்கம் எப்படி இல்லையோ, அது போல ஒழுக்கம் இல்லாதவனுக்கு உயர்வு இல்லை என்கிறார் வள்ளுவர்.

பொறாமை உள்ளவனிடத்தே வளர்ச்சி இல்லாதது போல ஒழுக்கம் இல்லாதவனிடம் உயர்வு இல்லை என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

ஒழுக்கமுடைமை இல்லாதவனுக்கு மேன்மேல் உயர்வு இல்லை.

பொழிப்பு

பொறாமைப் பட்டவனுக்கு செல்வம் சேராதது போல, ஒழுக்கம் இல்லாதவனுக்கு உயர்வு இல்லை