இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0138



நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்

(அதிகாரம்:ஒழுக்கமுடைமை குறள் எண்:138)

பொழிப்பு (மு வரதராசன்): நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும்; தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்.

மணக்குடவர் உரை: முத்திக்கு விதையாகும் நல்லொழுக்கம்: தீயவொழுக்கம் என்றும் இடும்பையைத் தரும்.
தீயவொழுக்கம் நாடோறுந் துன்பத்தையே தருமென்றவாறு. என்றும்- இருமையின்கண்ணுமென்றவாறு.

பரிமேலழகர் உரை: நல் ஒழுக்கம் நன்றிக்கு வித்து ஆகும். - ஒருவனுக்கு நல் ஒழுக்கம் அறத்திற்குக் காரணமாய் இருமையினும் இன்பம் பயக்கும்; தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும் - தீய ஒழுக்கம் பாவத்திற்குக் காரணமாய் இருமையினும் துன்பம் பயக்கும்.
('நன்றிக்கு வித்தாகும்' என்றதனால் தீயொழுக்கம் பாவத்திற்குக் காரணமாதலும் 'இடும்பை தரும்' என்றதனால் நல் ஒழுக்கம் இன்பம் தருதலும் பெற்றாம், ஒன்று நின்றே ஏனையதை முடிக்கும் ஆகலின். இதனான் பின்விளைவு கூறப்பட்டது.)

இரா இளங்குமரனார் உரை: நன்மை என்னும் விளைவு பெறுவதற்காக விதைக்கப்படும் விதை நல்லொழுக்கமாகும். தீய ஒழுக்கமோ, அப்பொழுதே அன்றி எப்பொழுதும் துன்பமே தரும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நல்லொழுக்கம் நன்றிக்கு வித்தாகும்; தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்.

பதவுரை: நன்றிக்கு-நன்மைக்கு; வித்து-விதை, விரை, காரணம்; ஆகும்-ஆகும்; நல்லொழுக்கம்-நல்ல ஒழுக்கம், நல்ல நடத்தை; தீயொழுக்கம்-தீய ஒழுக்கம், கொடிய ஒழுக்கம்; என்றும்-எப்போதும், எந்நாளும்; இடும்பை-துன்பம்; தரும்-பயக்கும்.



நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: முத்திக்கு விதையாகும் நல்லொழுக்கம்; [முத்தி-வீடுபேறு]
பரிப்பெருமாள்: முத்திக்கு விதையாகும் நல்லொழுக்கம்;
பரிதி: நல்லொழுக்கம் இம்மை மறுமைப் பாக்கியத்துக்கு விதையாம்;
காலிங்கர்: தனக்கு எல்லா நன்மைக்கும் துணைக்காரணமாகும் அது யாதோ எனின், நன்னெறியுடைய சான்றோரும் நூல்களும் நன்று என்று அவரவர்க்கு அடுப்பதாகச் சொன்னவற்றின் சாரமானது; [துணைக்காரணம்-காரியம் முடியும் அளவு உடனிருக்கும் காரணம்; அடுப்பதாக-ஏற்புடையதாக; சாரம் - சிறந்த கருத்து]
பரிமேலழகர்: ஒருவனுக்கு நல் ஒழுக்கம் அறத்திற்குக் காரணமாய் இருமையினும் இன்பம் பயக்கும்;

நல்லொழுக்கம் முத்திக்கு விதையாகும் என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் கூற, பரிதி இம்மை மறுமைப் பாக்கியத்துக்கு விதை என்றார். காலிங்கர் எல்லா நன்மைக்கும் துணைக்காரணமாகும் நல்லொழுக்கம் என்றார். நல்லொழுக்கம் அறத்திற்குக் காரணமாய் இருமையினும் இன்பம் பயக்கும் என்று பரிமேலழகர் இப்பகுதிக்கு உரை நல்கினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'நல்லொழுக்கம் நன்மைக்கெல்லாம் வித்து', 'நல்லொழுக்கம் நன்மைக்குக் காரணமாய் இன்பம் தரும்', 'நல்ல நடத்தையினால் உடனே நன்மைகள் கிடைக்காவிட்டாலும் பின்னால் நன்மைகள் முளைப்பதற்கு அது விதை தெளிப்பதாகும்', 'நல் ஒழுக்கம் நன்மைக்குக் காரணமாகும்' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நல்லொழுக்கம் நன்மைக்கு வித்து ஆகும் என்பது இப்பகுதியின் பொருள்.

தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தீயவொழுக்கம் என்றும் இடும்பையைத் தரும்.
பரிப்பெருமாள்: தீயவொழுக்கம் என்றும் இடும்பையைத் தரும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: தீயவொழுக்கம் நாடோறுந் துன்பத்தையே தரும் என்றவாறு. என்றும்-இம்மையின் கண்ணும் என்றவாறு.
பரிதி: பொல்லா ஒழுக்கம் இம்மை மறுமைக்குத் தரித்திரம் காட்டும் என்றவாறு. [பொல்லா ஒழுக்கம் - தீய ஒழுக்கம்; தரித்திரம் - வறுமை]
காலிங்கர்: மற்று அதனான், அதனின் நீங்கிய ஒழுக்கம் எஞ்ஞான்றும் தான் அநுபவிக்க இடும்பையைக் கொடுக்கும் என்றவாறு. [இடும்பை - துன்பம்]
பரிமேலழகர்: தீய ஒழுக்கம் பாவத்திற்குக் காரணமாய் இருமையினும் துன்பம் பயக்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: 'நன்றிக்கு வித்தாகும்' என்றதனால் தீயொழுக்கம் பாவத்திற்குக் காரணமாதலும் 'இடும்பை தரும்' என்றதனால் நல் ஒழுக்கம் இன்பம் தருதலும் பெற்றாம், ஒன்று நின்றே ஏனையதை முடிக்கும் ஆகலின். இதனான் பின்விளைவு கூறப்பட்டது.

தீய ஒழுக்கம் என்றும்/ இருமையினும் துன்பம் பயக்கும் என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தீயொழுக்கத்தால் எந்நாளும் துன்பமே', 'தீயொழுக்கம் தீமைக்குக் காரணமாய்த் துன்பம் தரும்', 'ஆனால் தீய ஒழுக்கத்தால் உடனேயும் துன்பமுண்டாகும். பின்னாலும் துன்பம் வரும்', 'கெட்ட ஒழுக்கம் எப்பொழுதும் துன்பத்தையே தரும்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

தீயொழுக்கம் எப்பொழுதும் துன்பம் தரும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நல்லொழுக்கம் நன்மைக்கு வித்து ஆகும்; தீயொழுக்கம் எப்பொழுதும் துன்பம் தரும் என்பது பாடலின் பொருள்.
'வித்து' என்ற சொல் குறிப்பதென்ன?

இன்பப்பயன் என்னும் விளைவு பெறுவதற்காக நன்னடத்தை என்னும் விதையைத் தெளி.

நல்லொழுக்கம் நன்மைகள் விளைய விதை ஆகிறது. தீயொழுக்கம் எப்போதுமே துன்பத்தையே தரும்.
நன்றி என்னும் சொல்லுக்கு அறம், நன்மை, இன்பம், எனப் பலவாறு உரையாளர்களால் பொருள் கூறப்பட்டது. நன்றி என்பதற்கு நேர்பொருளான நன்மை என்பதே இங்கு பொருத்தம். ஒழுக்கமான வாழ்க்கை உரிய காலத்தில் நன்மை பயக்கவல்லது.
மக்கள் ஒழுக்கத்தால் மேன்மை அடைவார்கள் என்றும் ஒழுக்கக் கேட்டால் பெரும்பழி அடைவார்கள் என்றும் கூறப்பட்டாலும் உண்மையில் ஒழுக்கம் உடையவர்கள் கண்டுகொள்ளப்படாதவர்களாகவே இருப்பதாகவும், எப்பொழுதுமே செல்வமும் செல்வாக்கும் உடையவர்கள் மேன்மைக்கு உரியவராகவும் வறுமையாளர்கள் பழிக்குக் காரணமாக விளங்குபவர்களாக இருப்பதாகவும் பலர் உணர்கிறார்கள். அவர்களைப் பார்த்து வள்ளுவர் சொல்கிறார்: 'நல்லொழுக்கத்தால் நன்மை உடனே கிடைக்காவிட்டாலும் அது பின்னால் வரப்போகிற நன்மைகளுக்கெல்லாம் வித்தாகிறது. தீயொழுக்கம் எப்போதுமே இடும்பையே தரும். எனவே நல்லொழுக்கத்தைக் கைவிடாதீர்கள்!' என்று.
நல்ல நடத்தையினால் பின்னாட்களில் அதிலிருந்து நன்மைகள் விளையும் என்ற பொருளில் நல்லொழுக்கம் பின்தோன்றும் நல்லவைகளுக்கெல்லாம் விதையாகும் எனச் சொல்லப்பட்டது. அமைதியான வாழ்வு, நோயற்ற உடல்நலம், சமூகத்தில் மேன்மையான இடம், இவற்றால் உண்டாகும் இன்பம். போன்றவை நல்லொழுக்கத்தால் உண்டாகும் நன்மைகள். ஆனால் கெட்ட நடத்தை உடனேயும் பிற்காலத்திலும் துன்பம் உண்டாவதற்குக் காரணமாகும். தீயொழுக்கத்தால் இன்பம் ஏற்படுவது போல் தோன்றினாலும் அது மெய்யானதல்ல; அது தொடர்வதில்லை. அது அப்பொழுதே அன்றி எப்போதும் துன்பத்தையே தரும்.

மறுபிறப்பை வள்ளுவர் நம்புகிறார் எனக் கருதி அதுபற்றி இக்குறளில் எந்தவொரு குறிப்பு இல்லாதபோதும் அதனைத் தேவையின்றி இயைத்து இதற்குப் பொருள் கூறினர் பலர். முத்திக்கு விதை, இம்மை மறுமைப் பாக்கியத்துக்கு விதை, அறத்திற்குக் காரணமாய் இருமையினும் இன்பம் பயக்கும், இருமையினும் சுகத்தைக் கொடுக்கும், இம்மை மறுமையினும் இன்பம்தரும், இம்மையிலும் மறுமையிலும் இன்பத்திற்குக் காரணமாகும், மறுமையில் விளையும் இன்பத்திற்கு இம்மையில் ஒழுகும் நல்லொழுக்கம் வித்துப்போன்றிருத்தல் போன்ற விளக்கங்களைத் தந்தனர் இவர்கள். இவை பொருந்தா உரைகள்.

'வித்து' என்ற சொல் குறிப்பதென்ன?

வித்து என்றதற்கு விதை, காரணம், துணைக்காரணம், உயிர்விதை, விளைவு பெறுவதற்காக விதைக்கப்படும் விதை என உரையாசிரியர்கள் பொருள் கூறினர். பலரும் காரணம் என்ற பொருளே கொண்டனர்.

இக்குறளில் விதை என்பது உவமைப் பொருளாக உள்ளது. நல்லொழுக்கம் உடையவனை வித்து எனப் பாராட்டுகிறார் வள்ளுவர்.
வேளாண்மையில் விதை தூவுகின்றவனுக்குத் தெளிக்கிற நேரத்திலே அவனுக்கு துணை நிற்காது போனாலும் அறுவடை காலத்தில் பயன் கிடைக்கும். அதுபோல இன்றைய நல்ல நடத்தை பின்னால் விளையப்போகிற மேலான வாழ்க்கைக்கு விதை தெளிப்பதாகும். விதை என்றது நாள் கழித்து பயன் தருவது என்பதைக் குறிப்பதற்காக வந்தது. 'ஆகும்' என்ற சொல் நிலை மாற்றம் நடைபெறுவதைக் குறிக்கும்; கால இடைவெளி மிகை என்பதும் உய்த்துணரப்படும்.
இன்றைக்குள்ள நன்னடத்தை வருங்காலத்தில் நன்மைகளைப் பயக்கும் என்பது இக்குறட்கருத்து.

வித்து என்ற சொல் ....வரனென்னும் வைப்பிற்கோர் வித்து (நீத்தார் பெருமை 24 பொருள்:... மேலான இடம் செல்வதற்கான விதை), ......தவாப் பிறப்பீனும் வித்து (அவாவறுத்தல் 361 பொருள்: ....துன்பம் தோன்றுவதற்கான விதை) எனக் குறளின் பிற இடங்களிலும் பயிலப்பட்டுள்ளது.

'வித்து' என்றது விளைவு பெறுவதற்காக விதைக்கப்படும் விதை என்ற பொருள் தருவது.

நல்லொழுக்கம் நன்மைக்கு வித்து ஆகும்; தீயொழுக்கம் எப்பொழுதும் துன்பம் தரும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

இன்றைய ஒழுக்கமுடைமை நாளைய நல்வாழ்வு.

பொழிப்பு

நல்லொழுக்கம் நன்மைக்கு வித்து ஆகும்; தீயொழுக்கம் எந்நாளும் துன்பம் தரும்.