பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வருந்திப் போற்றி யொழுக்கத்தினைக் காக்க; [வருந்தி - முயன்று]
பரிப்பெருமாள்: வருந்திப் போற்றி யொழுக்கத்தினைக் காக்க;
பரிதி: ஒழுக்கமுடைமையைத் தன் பிராணனைப் போலே பாதுகாப்பான்;
காலிங்கர்: தாம் பொருள் முதலியவற்றைக் கெடாமல் காப்பதினினும் விரும்பிக் குறிக்கொண்டு பரிகரிக்க ஒழுக்கத்தினை; [குறிக்கொண்டு-இலட்சியமாகக் கொண்டு; பரிகரிக்க - காக்க] .
பரிமேலழகர்: ஒழுக்கத்தினை ஒன்றானும் அழிவுபடாமல் பேணி வருந்தியும் காக்க;
பரிமேலழகர் குறிப்புரை: 'பரிந்தும்' என்னும் உம்மை விகாரத்தால் தொக்கது.
'வருந்திப் போற்றி ஒழுக்கத்தினைக் காக்க' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். காலிங்கர் மட்டும் பரிந்து என்பதற்கு 'விரும்பி' எனப் பொருள் கொண்டு விரும்பிக் காக்க எனப் பொருள் கூறினார்.
இன்றைய ஆசிரியர்கள் 'எவ்வளவு வருந்தினாலும் ஒழுக்கமாக இரு', 'ஒழுக்கத்தைப் பேணி வருந்தியும் காக்க', 'உடல் வருந்தியாவது மிகவும் கருத்தாக ஒழுக்கம் என்னும் நன்னடத்தையை வளர்க்க வேண்டும்', 'வருந்தியும் ஒழுக்கத்தைப் பாதுகாத்தல் வேண்டும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
வருந்தினாலும் ஒழுக்கத்தைப் பேணிக் காக்க என்பது இப்பகுதியின் பொருள்.
தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எல்லா வறங்களினும் நல்லதனைத் தெரிந்து அதனையுந் தப்பாமலாராய்ந்து பார்ப்பினும் தமக்கு அவ்வொழுக்கமே துணையாமாதலால்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது ஒழுக்கங் காக்கவேண்டுமென்றது
பரிப்பெருமாள்: எல்லா வறங்களினும் நல்லதனைத் தெரிந்து அதனையுந் தப்பாமலாராய்ந்து பார்ப்பினும் தமக்கு அவ்வொழுக்கமே துணையாமாதலால்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது ஒழுக்கங் காக்கவேண்டுமென்றது.
பரிதி: அது இம்மைக்கும் மறுமைக்கும் துணையாம் என்றவாறு.
காலிங்கர்: எங்ஙனம் எனின், தமக்கு இதனை ஒப்பது மறை முதலிய நூல்களால் மிகத் தெளிந்து குறிக்கொண்டாராயினும் பின்னும் அதுவே அதற்கு ஒப்பதாகிய துணை என்றவாறு.
பரிமேலழகர்: அறங்கள் பலவற்றையும் ஆராய்ந்து, அவற்றுள் இருமைக்கும். துணையாவது யாதென்று மனத்தை ஒருக்கித் தேர்ந்தாலும், துணையாய் முடிவது அவ்வொழுக்கமே ஆகலான். [ஒருக்கித் தேர்ந்தாலும் - ஒருமனப்பட்டு ஆராயினும்]
'எல்லா வறங்களினும் நல்லதனைத் தெரிந்து அதனையும் ஆராய்ந்து பார்ப்பினும் தமக்கு அவ்வொழுக்கமே துணையாமாதலால்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதியும் பரிமேலழகரும் இம்மைக்கும் மறுமைக்கும் துணை எனக் கூட்டி உரைத்தனர்.
இன்றைய ஆசிரியர்கள் 'எவ்வளவு ஆராய்ந்தாலும் அதுவே துணை', 'பலவகையால் நன்கு ஆராய்ந்து தேர்ந்தாலும் ஒழுக்கமே உயிர்க்குத் துணையாகின்றது', 'எத்துணை நூல்களைப் படித்து எவ்வளவு சிந்தனை செய்து ஆராய்ந்து பார்த்தாலும் நல்லொழுக்கந்தான் ஒருவனுக்குத் துணை புரியக்கூடியது', 'அறங்கள் பலவற்றையும் ஆராய்ந்து, இஃது இல்லாமல் முடியுமாவென்று கழித்துக் கழித்துப் பார்த்தாலும், ஒழுக்கமானது இன்றியமையாத துணையாகவே நிற்கின்றது' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.
நன்கு ஆராய்ந்து தேர்ந்தாலும் ஒழுக்கமே ஒருவர்க்குத் துணையாகின்றது என்பது இப்பகுதியின் பொருள்.
|