எண்ணத்தாலும் பேச்சாலும் செயலாலும் அறத்தைப் போற்றி வாழ வேண்டுமானால், மனம், மொழி, மெய் என்பவற்றைத் தன் ஆட்சியின் கீழ் வைத்திருக்கும் ஆற்றல் வேண்டும். அவ்வாறு மனம் முதலியவை அடங்கி ஒத்துழைக்கும் வாழ்வே சிறந்த வாழ்வு.
- மு வரதராசன்
அடக்கமுடைமையாவது மன மொழி மெய் நினைத்தவழிச் செல்லாமல் அடங்கி ஒழுகுதலைச் சொல்வது. இப்பண்பு ஐம்புலனடக்கம், நாவடக்கம். சினம் காத்தல் என்ற தன்மைகளை உள்ளடக்கியது. அடக்கம் என்பது ஒன்றும் செய்யாமல் வாளா இருப்பதன்று. நல்லன தீயன ஆய்ந்து புலன்களை இயக்கும் உணர்வகளை, தீயனவற்றை நீக்கி, நல்லனவற்றில் செல்லுமாறு, அடக்கியாள்வதாகும்.
அடக்கமும் தற்கட்டுப்பாடும் இல்லாதபோது செருக்கும் வீண் பெருமையும் மிஞ்சும். எனவே அவை தன்னலம் சார்ந்த நேர்மையற்ற நெறிக்கண் இட்டுச் செல்லும்.
குறள் கூறும் அடக்கமுடைமை என்பது அடங்கிய நிலையன்று; அடக்கிய நிலையே. அடக்கமான வாழ்வு என்பது ஆரவாரமற்ற, செருக்கில்லாத, வரம்புக்குட்பட்ட ஒழுகலாற்றைக் குறிக்கும்.
அடக்கமுடைமை
அடக்கமுடைமை என்னும் பண்பு பற்றி விரித்துரைக்கும் அதிகாரம் இது. மெய், மொழி, மனங்கள் தீய வழியில் செல்லாது அடங்குதல் உடையன்ஆதல் எனப் பரிமேலழகர் இதை விளக்குவார்.
பொறிபுலன்களை அடக்கநிலையில் மற்றவர்க்குத் தீங்கு செய்யா நிலையில் இயங்குதலைச் சொல்வது இத்தொகுப்பு. ஐம்புலன்களையும் வேண்டியபோது தொழில் செய்யவிட்டு, வேண்டாதபோது ஆற்றலுடன் அடங்கியிருக்கச் செய்வது. ஆர்ப்பாட்டம், செருக்கு, தீச்சொல் உமிழ்தல், சினத்தோற்றம் போன்றவை அடக்கமின்மை வெளிப்படும் வாயில்கள். இவை வெளியே தோன்றாவண்ணம் உள்ளம், உரை, உடல் ஆகியவை அடங்கியிருத்தல் அடக்கமுடைமையாம். நாக்கு ஒர் கொடூரமான ஆயுதம் என்பதால் சொற்காத்தல் மிகவும் வலியுறுத்தப்படுகிறது. அதிகாரத்து மூன்று பாடல்கள் மொழியடக்கம் பேசுகின்றன. சினத்தை அடக்கியவனைத் தெய்வம் தேடிச் செல்லும் என்று கதம் காத்தவன் மிக உயர்த்திச் சொல்லப்படுகிறான்.
செல்வர்க்கு அடக்கம் இருக்காதென்பது உலகியல்பாகக் கருதப்படுவதால் அவர்களிடத்தில் காணப்படும் அடக்கம் அவர்களுக்கு மேன்மை தரும் என விதந்து சொல்கிறது ஒரு பாடல்.
அடக்கம் மனிதனிடத்தில் இருக்கின்ற முனைப்பை அழிப்பதாகாதா? அது ஒருவரிடத்தில் தாழ்வு மனப்பான்மையை வளர்த்து விடாதா? அடக்கம் ஒரு தேவையற்ற குணம் என்று சொல்பவர்களும் உண்டு.
வள்ளுவர் சொல்லும் அடக்கம் பலர் நம்மிடம் எதிர்பார்க்கும் கைகட்டி வாய்பொத்தி அறிவொடுங்கிய, உடல் முடக்கம் அன்று.
அது எதுவும் பேசாது கேட்டவற்றை யெல்லாம் தலையசைவால் ஒத்துக்கொள்ளுமாறு குனிந்து நிற்கும் அடக்கமன்று.
அடக்கம் வேறு; ஒடுக்கம் வேறு. ஒடுக்கம் என்பது ஐம்புலன்களையும் தொழில் செய்யாதவாறு ஆற்றல் ஒடுங்கியிருக்கச் செய்வது. அடக்கம் என்பது ஐம்புலன்களையும் வேண்டியபோது தொழில் செய்யவிட்டு வேண்டாதபோது ஆற்றலுடன் அடங்கியிருக்கச் செய்வது.
அடக்கமுடையவன் செல்வம் சேர்ந்த நிலையிலும் தருக்கித் திரியமாட்டான்; புறங்கூறமாட்டான்; இழிசொல் பேசமாட்டான்; பிறர் இழிபுகளைச் சொல்லி மகிழமாட்டான்; வாய்க்கு வந்தபடி பேசமாட்டான்; சினம் காத்துக்கொள்வான்; அறிவுடையனாய்த் தன்னைக் குற்றம் அணுகாமல் காத்துக் கொள்பவன் அவன்.
வள்ளுவர் அறிவுறுத்துவது பீடுநடைபோடும் ஐம்புல, மொழி, மனவடக்கமாகும்.
தன் நிலை உயர்ந்தாலும் அதனால் தருக்காமல் அடக்கமாக உள்ளவனைக் காணும்போது வள்ளுவருக்கு நெடிதுயர்ந்த மலைதான் நினைவுக்கு வருகிறது.
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது (124) எனச் சொல்கிறார். அடக்கமானவன் என்றால் அடங்கி ஒடுங்கி இரங்கத்தக்கவனாக இருப்பான் என்று எண்ணிவிடவேண்டாம் எனக் காட்டும் வகையில் அவனுக்கு மலைத் தோற்றம் தருகிறார்.
தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு என்ற பாடலில் (129) உள்ள புண், வடு என்ற ஒரே பொருள் தரும் சொற்களை இடத்திற்கேற்றவாறு வேறுபாடு தோன்ற அமைத்த சொல்லாட்சி நினைந்து இன்புறத்தக்கது.
சினம் காக்கும் அடக்கமுடையவனை அறக்கடவுள் தேடிச் செல்லும் என்ற பொருள்பட அமைந்த கதம்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து (130) என்ற கவிதை அவனை மிக மிக உயரமான இடத்துக்கு எடுத்துச் செல்கிறது.
அமரருள் உய்க்கும், காக்க பொருளா, சீர்மை பயக்கும், மலையினும் மாணப்பெரிது, செல்வர்க்கே செல்வம் தகைத்து, சோகாப்பார், நன்றாகாதாகிவிடும் ஆகிய தொடர்கள் கருத்துச் செறிவுடன் உள்ளன.