இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0126ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து

(அதிகாரம்:அடக்கமுடைமை குறள் எண்:126)

பொழிப்பு (மு வரதராசன்): ஒரு பிறப்பில், ஆமைபோல் ஐம்பொறிகளையும் அடக்கியாள வல்லவனானால், அஃது அவனுக்குப் பல பிறப்பிலும் காப்பாகும் சிறப்பு உடையது.

மணக்குடவர் உரை: ஒருபிறப்பிலே பொறிகளைந்தினையும் ஆமைபோல அடக்க வல்லவனாயின், அவனுக்கு அதுதானே எழுபிறப்பினுங் காவலாதலை யுடைத்து.

பரிமேலழகர் உரை: ஆமை போல் ஒருமையுள் ஐந்து அடக்கல் ஆற்றின் - ஆமைபோல, ஒருவன் ஒரு பிறப்பின்கண் ஐம்பொறிகளையும் அடக்கவல்லன் ஆயின்; எழுமையும் ஏமாப்பு உடைத்து - அவ் வன்மை அவனுக்கு எழுபிறப்பின் கண்ணும் அரண் ஆதலை உடைத்து.
(ஆமை ஐந்து உறுப்பினையும் இடர் புகுதாமல் அடக்குமாறு போல இவனும் ஐம்பொறிகளையும் பாவம் புகுதாமல் அடக்க வேண்டும் என்பார் 'ஆமை போல' என்றார். ஒருமைக்கண் செய்த வினையின் பயன் எழுமையும் தொடரும் என்பது இதனான் அறிக. இதனான் மெய்யடக்கம் கூறப்பட்டது.)

இரா சாரங்கபாணி உரை: ஒரு பிறப்பில் ஒருவன் ஆமைபோல் ஐம்பொறிகளையும் அடக்க வல்லவனாயின், அவனுக்கு ஏழு பிறப்பிலும் பாதுகாப்பு உண்டு.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஆமைபோல் ஒருமையுள் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்பு உடைத்து.

பதவுரை: ஒருமையுள்-ஒருவழிப்பட்ட உள்ளத்தினுள்; ஆமைபோல்-ஆமை போல; ஐந்து- ஐம்பொறிகட்குத் தொகைக் குறிப்பு; அடக்கல்-அடங்கச் செய்தல்; ஆற்றின்-வல்லவனானாயின்; எழுமையும்-பலகாலத்தும்; ஏமாப்பு-பாதுகாப்பு; உடைத்து-உடையது.


ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருபிறப்பிலே பொறிகளைந்தினையும் ஆமைபோல அடக்க வல்லவனாயின்;
பரிப்பெருமாள்: ஒருபிறப்பிலே பொறிகளைந்தினையும் ஆமைபோல அடக்க வல்லவனாயின்;
பரிப்பெருமாள் குறிப்புரை: ஆமைபோல என்றது தனக்குள்ள உறுப்பைப் பிறர்க்குப் புலனாகாது அடக்குமது போல பொறிகள் நுகரவற்றாயிருக்க, நுகராமல் அடக்க வேண்டும் என்றவாறு.
பரிதி: ஆமையானது நாலு காலும் தலை ஒன்றும் மனுஷனைக் கண்ட மாத்திரத்திலே அடங்கினாப் போலவே இவனும் ஐம்புலன்களையும் அறிவினால் அடக்கின்;
காலிங்கர்: ஆமையானது முகமுதலாகிய தன் உறுப்பு ஐந்தனையும் வேண்டுழி விரித்தும் வேண்டாக்கால் அடக்கியும் தன்னைப் பாதுகாத்து கொண்டொழுகுமாப் போல் தன் ஒருவழிப்பட்ட உள்ளத்தினாலே இங்குசொன்ன ஐம்புலன்களையும் நன்னெறிக்கண் நடாத்தியும் தீநெறிக்கண் குவித்தும் இங்ஙனம் இவற்றை அடக்குதல் வல்லனாயின்;
பரிமேலழகர்: ஆமைபோல, ஒருவன் ஒரு பிறப்பின்கண் ஐம்பொறிகளையும் அடக்கவல்லன் ஆயின்;
பரிமேலழகர் குறிப்புரை: ஆமை ஐந்து உறுப்பினையும் இடர் புகுதாமல் அடக்குமாறு போல இவனும் ஐம்பொறிகளையும் பாவம் புகுதாமல் அடக்க வேண்டும் என்பார் 'ஆமை போல' என்றார்.

'ஒருவன் ஒரு பிறப்பின்கண் ஆமைபோல ஐம்பொறிகளையும் அடக்கவல்லன் ஆயின்' என்றபடி மணக்குடவர்/பரிப்பெருமாள், பரிமேலழகர் ஆகிய பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். ஒருமையுள் என்பதற்குப் பரிதி பொருள் கூறாமல் விடுத்தார். காலிங்கர் அதற்கு 'ஒருவழிப்பட்ட உள்ளத்தினாலே' எனப் பொருள் கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒருபிறப்பில் ஆமைபோல் ஐம்பொறியும் அடக்கின்', 'ஆமையானது தன்னுடைய நான்கு கால்கள் தலை ஆகிய ஐந்தையும் தன் இச்சைப்படி தன் ஓட்டுக்குள் அடக்கிக் கொள்வதைப்போல் மனிதன் தன் ஐந்து ஆசைகளையும் ஒரு பிறவியில் அடக்கியாள முடியுமானல்', 'ஆமை தன் உறுப்புக்களை அடக்கிக் கொள்ளுதல் போல ஒருவன் ஒரு பிறப்பிலே தன் ஐம்பொறிகளை அடக்க வல்லனாயின்', 'ஒருவர் ஒரு பருவத்துள் ஆமைபோல ஐம்பொறிகளையும் அடக்கக்கூடிய ஆற்றல் பெறுவாராயின்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஒருவழிப்பட்ட உள்ளத்தினுள் ஆமைபோல் ஐம்பொறியும் அடக்கக்கூடிய ஆற்றல் பெறுவாராயின் என்பது இப்பகுதியின் பொருள்.

எழுமையும் ஏமாப்பு உடைத்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவனுக்கு அதுதானே எழுபிறப்பினுங் காவலாதலை யுடைத்து.
பரிப்பெருமாள்: அவனுக்கு அதுதானே எழுபிறப்பினுங் காவலாதலை யுடைத்து.
பரிப்பெருமாள் குறிப்புரை: அன்றாயின் வாதனை தொடரும் என்றவாறு. பொறிகள் ஐந்தனையும் அடக்க வல்லார்க்கு ஏழுபிறப்பும் நன்மை உண்டாம் என்றவாறு. [வாதனை - துன்பம்]
பரிதி: அவனுக்கு ஏழு சென்மத்திலும் துன்பம் இல்லையாம். [சென்மம் - பிறவி]
காலிங்கர்: அது அவ்வடக்குகின்ற ஒப்பிறந்தானுக்கு இம்மைக் கண்ணும் மறுமைக் கண்ணும் சேமமாகிய உறுதியைப் பெறுவிக்கும் என்றது. [ஒப்பிறந்தானுக்கு-உவமையற்றவனுக்கு; பெறுவிக்கும் - பெறச் செய்யும்]
பரிமேலழகர்: அவ் வன்மை அவனுக்கு எழுபிறப்பின் கண்ணும் அரண் ஆதலை உடைத்து.
பரிமேலழகர் குறிப்புரை: ஒருமைக்கண் செய்த வினையின் பயன் எழுமையும் தொடரும் என்பது இதனான் அறிக. இதனான் மெய்யடக்கம் கூறப்பட்டது.

'எழுபிறப்பினுங் காவலாதலை உடைத்து' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். எழு பிறப்பு என்பதற்குக் காலிங்கர் இம்மைக்கண்ணும் மறுமைக்கண்ணும் எனப் பொருள் கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஏழு பிறப்பிலும் சேமம் உண்டு', 'அது பின்வரும் ஏழு பிறவிகளுக்கும் பாதுகாப்பளிப்பதாகும்', 'அஃது அவனுக்கு எழுவகைப் பிறப்பின்கண்ணும் உறுதிதருந் தன்மையது', 'அவ்வாற்றல் மிகுதியும் துணையாதல் சிறப்புடைத்து' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

பல காலத்துக்கும் பாதுகாப்பு அளிப்பதாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஒருமையுள் ஆமைபோல் ஐம்பொறியும் அடக்கக்கூடிய ஆற்றல் பெறுவாராயின், அது எழுமையும் பாதுகாப்பு அளிப்பதாகும் என்பது பாடலின் பொருள்.
ஒருமை-எழுமை குறிப்பன எவை?

ஐம்புலன்களையடக்கி ஒழுகும் தூய வாழ்க்கை பலகாலம் தொடர்ந்து பயனளிக்கும்.

ஆமை தனக்கு ஊறு நேராமல் தன் தலை கால்கள் ஆகியவைகளைத் தன் ஓட்டுக்குள் அடக்கிக் காத்துக் கொள்ளும். அதுபோல் ஒருவன் தன் ஐம்பொறிகளையும் தீவினை அண்டாமல் அடக்கும் திறம் பெற்றால், அது அவனுக்கு நீண்டகாலத்திற்கும் பாதுகாப்பாகும்.
மெய்யடக்கம் பற்றிப் பேசுகிறது இக்குறள். மன வாயில்களான வாய், கண், மெய், செவி, மூக்கு என்னும் ஐந்தின் வழியாக ஏற்படக்கூடிய சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் உணர்வுகளைத் தக்கவாறு அடக்கிக் காப்பதே மன அடக்கமாகும். நுகரவேண்டும் என்ற மனஎழுச்சி புலனுணர்வின் பின்னே பிறக்கிறது. ஆகவே உணர்வாகிய புலனைப் பொறிவாயிலாகச் செல்ல ஏவும் மனநிலையிலேயே அடக்க வேண்டும் என்பதே மன அடக்கம். ஒருவர் தம்முடைய ஐந்து புலன்களையும் அடக்கி வசப்படுத்தி உலக இன்பங்களை அளவாக அனுபவிக்க வேண்டும் எனச் சொல்லப்படுகிறது. மனத்தை அடக்கி மெய்யடக்கத்துடன் ஒழுகவேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது.

ஆமை போன்று ஒருமுகப்பட்ட நிலையில் ஐம்புலன்களை அடக்கிச் செயலாற்றினால், அது பலகாலம் அரணாய்க் காத்து நிற்கும் தன்மை உடைத்து. ஆமை தன் தலையையும் நான்கு கால்களையும் தேவையானபோது ஓட்டிற்கு வெளியே நீட்டி நுகர்ந்தும் நலம் பயக்காத சூழல்களில் அவை பிறர்க்குத் தெரியாதவாறு சுருக்கியும் தன்னைக் காத்து நடந்து கொள்ளும். அது போல மாந்தர் ஒருவழிப்பட்ட உள்ளத்தினாலே ஐம்புலன்களையும் நல்ல நெறியில் செலுத்தியும் தீயநெறி கண்டால் உள்ளடக்கியும் நடந்துகொண்டால் அது அவர்க்குப் பலகாலம் பாதுகாப்பாக அமையும். ஐந்தடக்கல் என்பது நுகர்தல் கூடாது என்பதல்ல; அளவுக்கு மீறாமல் உரிய எல்லையில் ஐம்புல இன்பங்களைத் துய்ப்பதைக் குறிப்பது. இது புலனின்பங்கள் ஐந்தையும் அடியோடு ஒழிப்பதிலிருந்து வேறானது.
பொறியடக்கம் என்பது வஞ்சகமாக அவற்றை அடக்கி வைத்தலும் அன்று; தீவினைகள் புரியாமல் தன்னைக் காத்துக் கொள்வது ஆகும். ஒருவன் தன்‌ ஐம்புலன்களையும்‌ அடக்குவது‌ தீவினைகளால்‌ தனக்கு ஊறு வராமற்‌ பாதுகாத்துக் கொள்ளுதற்காகவே என்பதை உணர்த்த 'ஏமாப்புடைத்து' எனச் சொல்லப்பட்டது‌.

ஒருமை-எழுமை குறிப்பன எவை?

ஒருமையுள் என்பதற்குப் பல உரையாசிரியர்கள் 'ஒரு பிறப்பில்' என்றே உரை கண்டனர். இவர்கள் எழுமை என்ற சொல்லுக்கு ஏழு பிறப்பு எனக் கொண்டு அதன் எதிர்சொல்லாக ஒருமை வந்ததாகக் கருதி ஒரு பிறப்பில் எனப் பொருள் கண்டனர். இவர்கள் ஒருமைக்கண் செய்தவினை ஏழுபிறவியிலும் தொடரும் என்பதை வள்ளுவர் நம்பினார் என்பவர்கள். தொல்லாசிரியர்களில் பரிதியும் பரிப்பெருமாளும் இதற்குப் பொருள் கூறாமல் விட்டனர். காலிங்கர் ஒருமையுள் என்ற சொல்லுக்கு 'ஒருவழிப்பட்ட உள்ளத்திலே' எனப் பொருள் கொண்டார். இன்றைய உரையாளர்களில் சிலர் இப்பகுதிக்கு ஒரு கூட்டிற்குள் என்றும் தன் ஓட்டுக்குள் என்றும் ஒருநெறியுள் அடக்கல் என்றும் பொருள் கூறினர். சி இலக்குவனார் ஒரு பருவத்துள் என உரைத்தார்.
அதுபோலவே எழுமையும் என்றதற்கு மிகுதியும், எழுபிறப்பிலும், எழுவகைப் பிறப்பின் கண்ணும், பின்வரக்கடவ எழுவகைப் பிறப்பினும், இனி வரக்கூடிய ஏழு பிறவிகளிலும், ஏழு பிறப்பளவு அரணாதலையுடையது என உரையாளர்கள் பொருள் கூறினர்.
காலிங்கர் இம்மைக் கண்ணும் மறுமைக்கண்ணும் என மொழிந்தார்.

ஒரு பிறப்பு, ஏழு பிறப்பு என்பன சமயம் சார்ந்த நம்பிக்கைகளால் உண்டானவை. அடக்கம் அமரருள் உய்க்கும்....... (121) என்று இவ்வதிகாரத்து முதல் குறளில் எழுதியவர் அதற்கு மாறாக அதே அதிகாரத்தில் ஐம்புல அடக்கமுடைமையோனுக்கு ஏழு பிறப்புகள் உண்டு என்று பொருள்படுவதாகிய இக்குறளை எழுதியிருப்பாரா என்ற ஐயவினா எழுப்பப்படுகிறது.
'எழுமை' என்ற சொல் சங்ககால இலக்கியங்களிலும், மற்ற பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலும் பயிலப்படவில்லை என்று சொல்லும் கு ச ஆனந்தன், எழுமை என்பதற்கு 'ஏழுநிலை' அல்லது 'ஏழு தன்மை' என்றே வள்ளுவர் பொருள் கொண்டார் என்று கூறினார். இதற்குச் சான்றாக பரிமேலழகரின் குறள் 1269-ஆம் உரையில் கண்ட 'சேணிடைச் சென்ற நம் காதலர் மீண்டுவரக் குறித்த நாளை உட்கொண்டு அது வருந்துணையும் உயிர் தாங்கி வருந்தும் மகளிர்க்கு ஒருநாள் பலநாள் (ஏழுநாள்)போல நெடிதாகக் காட்டும்', 'ஏழ் என்பது அதற்கு மேலாய மிக்க பன்மை குறித்து நின்றது' என்னும் பகுதிகளைக் காட்டுவார். எனவே ஒன்று-ஏழு, அல்லது ஏழு என்னும் சொற்கள் குறளில் அந்த எண்ணை மட்டுமே சுட்டாது, ஒன்று-பல என்னும் பொருளையே குறிக்கும்; 'ஒருமை' 'எழுமை' என்பவை 'ஒன்று-பல' என்ற பொருளையே குறளில் தந்து நிற்கின்றன என்றும் விளக்கினார் கு ச ஆனந்தன். 'நாலைந்தெடு, ஏழெட்டுபேர்' என்னும் வழக்குப்போல, எழுமை என்னும் எண்ணுப் பெயரைப் பல என்னும் பொருளிலேயே ஆளுகின்றார் வள்ளுவர் என்று சொல்லும் குழந்தை 'ஒரு பிறப்பில் ஐந்தடக்கினால் அவனுக்குத்தான் பிறப்பில்லையே; அவ்வளவு வருந்திப் பொறிகளை யடக்கியும் பிறப்பறாமல் பின்னும் எழுபிறப்புண்டெனில் ஒருவன் எதற்காக ஐம்பொறியடக்க வேண்டும்? எனவும் வினவுவார். சி இலக்குவனார் எழுமை என்ற சொல்லுக்கு மிகுதி என்று பொருள் கொண்டார்.

ஒருமையுள் என்பதற்கு காலிங்கர் உரையில் கண்டபடி 'ஒருவழிப்பட்ட உள்ளத்திலே' என்ற பொருள் சிறப்பாக உள்ளது.
ஏழு என்றது பன்மை குறித்து நின்றது எனவே இச்சொல்லுக்குப் 'பல' என்று பொருள் கொண்டு எழுமையும் என்றதற்கு பல காலத்தும் எனப் பொருள் கொள்வது நன்கு.

ஒருவழிப்பட்ட உள்ளத்திலே ஆமைபோல் ஐம்பொறியும் அடக்கக்கூடிய ஆற்றல் பெறுவாராயின், அது பல காலத்துக்கும் பாதுகாப்பு அளிப்பதாகும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

தீயநெறிகளிலிருந்து தமது பொறிகளை மீட்டுப் பாதுகாத்துக் கொள்ளுதல் மெய்அடக்கமுடைமையாம்.

பொழிப்பு

ஒருவழிப்பட்ட உள்ளத்திலே ஒருவன் ஆமைபோல் ஐம்பொறிகளையும் அடக்க வல்லவனாயின், அது அவனுக்கு பல காலத்துக்கும் பாதுகாப்பு அளிக்கும்.