தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு
(அதிகாரம்:அடக்கமுடைமை
குறள் எண்:129)
பொழிப்பு (மு வரதராசன்): தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும்; ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது.
|
மணக்குடவர் உரை:
தீயினாற் சுட்டபுண் உள்ளாறித் தீரும்: நாவினாற் சுட்ட புண் ஒருகாலத்தினுந் தீராது.
பரிமேலழகர் உரை:
தீயினால் சுட்டபுண் உள் ஆறும் - ஒருவனை ஒருவன் தீயினால் சுட்ட புண் மெய்க்கண் கிடப்பினும், மனத்தின்கண், அப்பொழுதே ஆறும்; நாவினால் சுட்ட வடு ஆறாது - அவ்வாறன்றி வெவ்வுரை உடைய நாவினால் சுட்ட வடு அதன் கண்ணும் எஞ்ஞான்றும் ஆறாது.
(ஆறிப்போதலால் தீயினால் சுட்டதனைப் 'புண்' என்றும், ஆறாது கிடத்தலால் நாவினால் சுட்டதனை 'வடு' என்றும் கூறினார். தீயும் வெவ்வுரையும் சுடுதல் தொழிலான் ஒக்கும் ஆயினும், ஆறாமையால் தீயினும் வெவ்வுரை கொடிது என்பது போதரலின், இது குறிப்பான் வந்த வேற்றுமை அலங்காரம். இவை மூன்று பாட்டானும் மொழி அடக்கம் கூறப்பட்டது.
வ சுப மாணிக்கம் உரை:
தீச்சுட்ட புண்ணோ உள்ளே ஆறிப்போம்; சுடுசொல்லோ வடுவாகி என்றும் ஆறாது.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.
பதவுரை:
தீயினால்-நெருப்பால்; சுட்ட- சுட்ட (முதல் அடியில் உள்ள 'சுட்ட' நெருப்பினால் சுட்டதைக் குறிக்கும்); புண்-வடு; உள்-உள்ளுக்குள். ஆறும்-தீரும்; ஆறாதே-ஆறமாட்டாதே (மனக்கொதிப்பு ஆறாததைக் குறிக்கும்); நாவினால்-நாக்கினால்; சுட்ட-எரித்த (ஈற்றடியில் உள்ள 'சுட்ட' வெம்மையான மொழியால் சுட்டதைக் குறிக்கிறது); வடு-தழும்பு.
|
தீயினால் சுட்டபுண் உள்ளாறும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தீயினாற் சுட்டபுண் உள்ளாறித் தீரும்;
பரிப்பெருமாள்: தீயினாற் சுட்டபுண் உள்ளாறித் தீரும்;
பரிதி: தீயினால் சுட்டபுண் உள்ளே ஆறி மேலே வடுவாகி இருக்கும்;
பரிமேலழகர்: ஒருவனை ஒருவன் தீயினால் சுட்ட புண் மெய்க்கண் கிடப்பினும், மனத்தின்கண், அப்பொழுதே ஆறும்;
'தீயினாற் சுட்டபுண் உள்ளாறித் தீரும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'தீச்சுட்ட புண்ணோ உள்ளே ஆறிப்போம்', 'தீயினால் ஒருவனைச் சுட்டபுண் மனத்தில் ஆறிவிடும்', 'தீயினால் சுடப்பட்டு உண்டான புண், வெளியே தழும்பு நிலைத்துவிட்டாலும் உள்ளே ஆறிப்போகும்', 'தீப்பட்டுச் சூட்டினால் உண்டாகிய புண் ஆறுமுன் அதனாலய மனத்துன்பம் ஆறிப்போம்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
தீயினால் சுட்டபுண் உள்ளத்தில் ஆறிவிடும் என்பது இப்பகுதியின் பொருள்.
ஆறாதே நாவினால் சுட்ட வடு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நாவினாற் சுட்ட புண் ஒருகாலத்தினுந் தீராது.
பரிப்பெருமாள்: நாவினாற் சுட்ட புண் ஒருகாலத்தினுந் தீராது.
பரிப்பெருமாள் குறிப்புரை: சொற்சோர்வினால் வருங்குற்றம் என்னை? என்றார்க்கு அது கேட்டார்க்குச் சுடும், அதனானே, தனக்குக் குற்றம் வரும் என்றது.
பரிதி: நாவினால் சுட்டபுண் மேலே ஆறி உள்ளே வடுவாகி இருக்கும்.
பரிதி குறிப்புரை: அதனால் ஒருவரையும் வாக்குத்தோஷம் சொல்ல வேண்டாம் என்றவாறு.
பரிமேலழகர்: அவ்வாறன்றி வெவ்வுரை உடைய நாவினால் சுட்ட வடு அதன் கண்ணும் எஞ்ஞான்றும் ஆறாது.
பரிமேலழகர் விரிவுரை: ஆறிப்போதலால் தீயினால் சுட்டதனைப் 'புண்' என்றும், ஆறாது கிடத்தலால் நாவினால் சுட்டதனை 'வடு' என்றும் கூறினார். தீயும் வெவ்வுரையும் சுடுதல் தொழிலான் ஒக்கும் ஆயினும், ஆறாமையால் தீயினும் வெவ்வுரை கொடிது என்பது போதரலின், இது குறிப்பான் வந்த வேற்றுமை அலங்காரம். இவை மூன்று பாட்டானும் மொழி அடக்கம் கூறப்பட்டது.
'நாவினாற் சுட்ட வடு ஒருகாலத்தினுந் தீராது' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். .
இன்றைய ஆசிரியர்கள் 'சுடுசொல்லோ வடுவாகி என்றும் ஆறாது', 'ஆனால் நாவினால் சுடுமொழியாற் சுட்ட வடு உள்ளத்தில் எப்பொழுதும் ஆறாது', 'ஆனால் வாயினால் சுடப்பட்டு உண்டான புண் வெளியே தெரியாவிட்டாலும் உள்ளத்தில் ஆறாமல் இருந்துகொண்டே துன்பமுண்டாக்கும்', 'அவ்வாறு அன்றி நாவினால் உரைத்த சொல்லால் ஏற்பட்ட வருத்தம் (அச்சொல் மறக்கப்படாமையால்) மனத்தின்கண் என்றும் மாறாது நிலைத்திருக்கும்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.
கடுஞ்சொல்லால் சுட்ட வடு ஆறாமல் இருக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
தீயினால் சுட்டபுண் உள்ளத்தில் ஆறிவிடும்; கடுஞ்சொல்லால் சுட்ட வடு ஆறாமல் இருக்கும் என்பது பாடலின் பொருள்.
புண்-வடு வேறுபாடு என்ன?
|
|
உடம்பில் தீயினால் சுட்டதினால் உண்டான உள்ளக் காயம் ஆறிவிடும்; நாவினால் சுட்டது மனத்துள் ஆறாமல் வடுவாகி நெடிது நிற்கும்.
சொல்லாட்சியில் சிறந்து எளிதாகப் புரிந்துகொள்ளும்படியான பாடல் இது.
ஒருவனது உடலில் ஒருவன் சூடிடுகிறான்; மற்றொருவன் அவனிடம் கடுஞ்சொல் கூறுகிறான். தீயினால் உண்டான புண், நாவினால் சுட்டதால் ஏற்பட்ட வடு இவை இரண்டும் சூடு வாங்கியவன் உள்ளத்தில் ஏற்படுத்திய விளைவுகளின் வேறுபாட்டை விளக்குகிறது பாடல்.
நெருப்பிடப்பட்டதால், அவனது உடலிலும் உள்ளத்திலும் காயங்கள் உண்டாகும். ஆனால் வெளிப்புறத்தில் உண்டான தீக்காயம், மருத்துவத்தாலும் காலப்போக்கிலும், ஆறித் தழும்பாய் மாறும் முன்னரே சூடேற்றவன் உள்ளத்தில் உண்டான காயம் ஆறிவிடும். அதாவது புண் ஆறும்முன்பாகவே அதனால் ஏற்பட்ட மனத்துன்பம் மறக்கப்படும்.
ஆனால் ஒருவன்மீது வீசப்பட்ட சுடுசொற்கள், உடம்புக் காயங்கள் ஏற்படுத்துவதில்லையாயினும், அச்சொற்கள், மறக்கப்படாததால், அவனது உள்ளத்தில் கனன்று கொண்டே இருந்து வடுவாகிக் கிடக்கும். அவ்வடு மறையாது தீராத் துன்பம் தந்துகொண்டே இருக்கும். சுடு சொற்கள் என்பன வெறுப்புடன் வெம்மை தோன்ற கூறப்படும் கடுஞ்சொல், பழிச் சொல், இழிவான சொல், ஏளனச் சொல், வசைச் சொல் போன்றவை. இவை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ - சிலவேளை எதிர்பாராத நேரங்களில் - பேசப்படுவன.
'உள்ளாறும்' என்றது வலி மறைந்து போய்விடும் என்ற பொருளிலும், ஆறாது என்றது நினைக்குந்தோறும், அப்போது உண்டாவது போல, மனம் கொதிக்கும் என்ற பொருள் தருமாறும் பாடலில் சொல்லப்பட்டன.
சுடுசொல் ஏற்றவன் மனநிலையைக் காட்டுவதாக உள்ள இப்பாடல் ஏன் 'அடக்கமுடைமை' அதிகாரத்துள் சொல்லப்பட்டது? இதற்குப் பரிப்பெருமாள் உரை 'சொற்சோர்வினால் வருங்குற்றம் என்னை? என்றார்க்கு அது கேட்டார்க்குச் சுடும், அதனானே தனக்குக் குற்றம் வரும் என்றது' என விளக்கம் தருகிறது. அதாவது 'கேட்பவர் உள்ளம் வேகும்படியான எரியூட்டும் சொற்களால் பேசாது நாவை அடக்குக; பிறருடைய உள்ளத்தைப் புண்படுத்தும் சொல்லைச் சொல்லித் தனக்குக் குற்றம் வராமல் காத்துக்கொள்க' என்பது இதன் உட்பொருள். கேட்போர் மனம் புண்படுமாறு கொடுஞ்சொற் கூறலாகாது என்பது பாடல் தரும் செய்தி.
|
புண்-வடு வேறுபாடு என்ன?
புண் என்பது காயத்தைக் குறிக்கும். வடு என்ற சொல் தழும்பு என்ற பொருள் தரும்.
புண் ஆறிப்போகும் இயல்புடையது. வடுவோ ஆறிப்போன புண்ணுடைய தழும்பாய்ப் பலகாலம் நீடித்து இருக்கும். இவ்வேறுபாடு தோன்றவே இரண்டு வெவ்வேறு சொற்களை ஆண்டார் வள்ளுவர். ஆறிவிடும் தீச்சூட்டை வள்ளுவர் புண் என்றும் நீண்டகாலம் ஆறாத நாச்சூட்டை வடு என்றும் அடையாளப்படுத்திக் கூறினார். நாவினாற் சுட்டது புண்ணிலைமையும் வடுநிலைமையும் ஒருங்கே கொண்டது என்பதை உணர்த்தச் 'சுட்ட வடு' என்றார். தீப்பட்ட இடம் புண்ணாகிப் பிறகு உலர்ந்து போய்விடும். ஆனால் சுடுசொற்களால் பட்ட புண், மனத்து உள்ளே இருந்து மாறாத வடு போல வலி தந்துகொண்டே இருக்கும். ஆற்ற முடியாத வடுவை ஏற்படுத்தக் கூடிய கொடுமையானவை அவை.
பரிதி 'தீயினால் சுட்டபுண் உள்ளே ஆறி மேலே வடுவாகி இருக்கும். நாவினால் சுட்டபுண் மேலே ஆறி உள்ளே வடுவாகி இருக்கும்' எனவும் பரிமேலழகர் 'ஆறிப்போதலால் தீயினால் சுட்டதனைப் 'புண்' என்றும், ஆறாது கிடத்தலால் நாவினால் சுட்டதனை 'வடு' என்றும் கூறினார்' எனவும் விளக்கம் தந்தனர்.
ச சோமசுந்தர பாரதியார் இப்பாடலுக்கான உரையில் 'தீயினால் சுட்டபுண் மனத்தின் கண்ணே ஆறிவிடும். சூடு வாங்கியவன் மனக்கொதிப்பு ஆறிவிடும். புண்ணின் தளிம்பு மாறினாலும் மாறும். இருந்தாலும் இருக்கும் என்றதனால் ‘புண் உள்ளாறும்’ என்றார். ஆறுதல் வடுவின் தன்மையன்று. புண்ணின் தன்மையே. ஆகவே ஆறாது என்று கொள்ளாமல் மாறாது என்று கொள்ளவேண்டும். நாவினால் சுட்டு அதனால் உண்டாகிய புண் ஆறியும் வடுவானது மாறாது நிலைத்திருக்கும். இதை நோக்கியே மாறாது என்றார் வள்ளுவர். வடுவானது நிலைத்திருப்பது போல் மனிதனது அடக்கமில்லாத சொல் பிறன் மனத்தின்கண் ஓயாது உறுத்திக் கொண்டே யிருக்கும்' என்கிறார். இவர் உள்ளாறும் + மாறாதே என இக்குறளைப் பிரித்து நாவினால் சுட்ட வடு (தழும்பு) 'எப்பொழுதும் மாறாமல் நிலைத்திருக்கும் எனப் பொருள் கண்டுள்ளார். மற்றவர்கள் உள்ளாறும் + ஆறாதே எனப்பிரித்து உரை கண்டவர்கள்.
உள்ளத்தே ஆறிவிடும் தீச்சூட்டைப் புண் என்றும் மனதுள் ஆறாத நாச்சூட்டை வடு என்றும் வேறுபடுத்தி இப்பாடல் கூறுகிறது.
|
நெருப்பினால் சுட்ட உள்ளப்புண் ஆறிவிடும்; கடுஞ்சொல்லால் சுட்ட வடு ஆறாது என்பது இக்குறட்கருத்து.
சுடுசொல் கூறவேண்டா அடக்கமுடைமை பயில்க.
தீச்சுட்ட மனப்புண் ஆறிப்போய்விடும்; சுடுசொல்லால் உண்டான வடு ஆறாது.
|