காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூங்கு இல்லை உயிர்க்கு
(அதிகாரம்:அடக்கமுடைமை
குறள் எண்:122)
பொழிப்பு (மு வரதராசன்): அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு போற்றிக் காக்கவேண்டும். அந்த அடக்கத்தைவிட மேம்பட்ட ஆக்கம் உயிர்க்கு இல்லை.
|
மணக்குடவர் உரை:
ஒருவன் தனக்குப் பொருளாக அடக்கத்தை யுண்டாக்குக. அவனுயிர்க்கு ஆக்கம் அதனின் மேற்பட்டது பிறிதில்லை.
பரிமேலழகர் உரை:
உயிர்க்கு அதனின் ஊங்கு ஆக்கம் இல்லை - உயிர்கட்கு அடக்கத்தின் மிக்க செல்வம் இல்லை; அடக்கத்தைப் பொருளாகக் காக்க - ஆதலான் அவ்வடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு அழியாமல் காக்க.
(உயிர் என்பது சாதியொருமை. அஃது ஈண்டு மக்கள் உயிர்மேல் நின்றது, அறிந்து அடங்கிப் பயன் கொள்வது அதுவே ஆகலின்.)
வ சுப மாணிக்கம் உரை:
அடக்கத்தை ஒரு குறிக்கோளாகப் போற்றுக; உயிர்க்கு அதனினும் முன்னேற்றம் இல்லை.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
அடக்கத்தை பொருளா காக்க; உயிர்க்கு அதனினூங்கு ஆக்கம் இல்லை
பதவுரை: காக்க-காப்பாற்றுக; பொருளா-பொருளாக, உறுதிப் பொருளாக, அழியாத பொருளாக; அடக்கத்தை-அடக்கமாகிய பண்பை, தன்னை அடக்கிக் கொள்ளுதலை; ஆக்கம்-செல்வம், பெருக்கம், முன்னேற்றம்; அதனின் -அதனைக் காட்டிலும், அதைவிட; ஊங்கு-மேம்பட்டது, மேற்பட்ட; இல்லை-இல்லை; உயிர்க்கு-உயிர்களுக்கு.
|
காக்க பொருளா அடக்கத்தை:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர் ('ஆக்கபொருளா' பாடமாகலாம்): ஒருவன் தனக்குப் பொருளாக அடக்கத்தை யுண்டாக்குக;
பரிப்பெருமாள் ('ஆக்கபொருளா' பாடமாகலாம்) : ஒருவன் தனக்குப் பொருளாக அடக்கத்தை யுண்டாக்குக;
பரிதி: பொருள் பற்றிய அடக்கத்தின் வழியிலே நிற்க;
காலிங்கர்: மற்றெல்லாவற்றினும் அடக்கப் பொருளாகக் கொண்ட அடக்கத்தைச் சோர்வுபடாமல் பாதுகாக்க;
பரிமேலழகர்: ஆதலான் அவ்வடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு அழியாமல் காக்க;
மணக்குடவர்/பரிப்பெருமாள் காக்க என்பதற்கு ஆக்க என்று பாடம் கொண்டிருப்பதுபோல் தெரிவதால் அவர்கள் உரை 'தனக்குப் பொருளாக அடக்கத்தை உண்டாக்குக' அமைந்தது. பரிதி உரை பொருள் பற்றிய அடக்கத்தைப் பேசுகிறது. காலிங்கர் 'அனைத்திலும் அடக்கப் பொருளாகக் கொண்டஅடக்கத்தைச் சோர்வுபடாமல் பாதுகாக்க' எனச் சொல்கிறார். பரிமேலழகர் 'அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு அழியாமல் காக்க' என இப்பகுதிக்கு உரை நல்கினார்.
இன்றைய ஆசிரியர்கள் 'ஒருவன் அடக்கத்தைச் செல்வமாக மதித்துக் காப்பானாக', 'அடக்கத்தைப் பொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டும்', 'அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு போற்றுக', 'அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கருதிக் காத்தல் வேண்டும்' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு விடாது கடைப்பிடிக்க வேண்டும் என்பது இப்பகுதியின் பொருள்.
ஆக்கம் அதனினூங்கு இல்லை உயிர்க்கு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவனுயிர்க்கு ஆக்கம் அதனின் மேற்பட்டது பிறிதில்லை.
பரிப்பெருமாள்: அவனுயிர்க்கு ஆக்கம் அதனின் மேற்பட்டது பிறிதில்லை.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது அடக்கம் வேண்டும் என்றது.
பரிதி: ஆத்மாவுக்கு இதுபோலும் பயனில்லை என்றவாறு. [ஆத்மா- உயிர்]
காலிங்கர்: மற்று அதுவே தமக்கு இம்மையாக்கமும் மறுமையாக்கமுமாகிய ஆக்கம்; அவ்வடக்கத்தின் வழியாயிருப்பது மற்றொன்று மக்கட்கு உயிர்நிலை இல்லை என்றவாறு. [இம்மையாக்கம் - இப்பிறவிக்குரிய வளர்ச்சி; மறுமையாக்கம் - மறுபிறவிக்குரிய ஆக்கம்; உயிர்நிலை - உயிர்நிற்கும் இடமாகிய உடம்பு]
பரிமேலழகர்: உயிர்கட்கு அடக்கத்தின் மிக்க செல்வம் இல்லை
பரிமேலழகர் குறிப்புரை: உயிர் என்பது சாதியொருமை. அஃது ஈண்டு மக்கள் உயிர்மேல் நின்றது, அறிந்து அடங்கிப் பயன் கொள்வது அதுவே ஆகலின்.
'உயிர்க்கு ஆக்கம் அதனின் மேற்பட்டது பிறிதில்லை' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'மக்களுக்கு அவ்வடக்கத்தினும் மிக்க செல்வம் வேறு இல்லை', 'உயிருக்கு அதைக் காட்டிலும் சக்தியுண்டாக்குவது வேறொன்றுமில்லை', 'அதனைப் பார்க்கிலும் சிறந்த செல்வம் உயிர்க்கு வேறு இல்லை', 'அதனின் மிகச் செல்வம் உயிர்க்குக் கிடையாது' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.
உயிர்கட்கு அடக்கத்தினும் மேம்பட்ட செல்வம் வேறு இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
காக்க பொருளா அடக்கத்தை; உயிர்கட்கு அடக்கத்தினும் மேம்பட்ட செல்வம் வேறு இல்லை என்பது பாடலின் பொருள்.
'காக்க பொருளா அடக்கத்தை' குறிப்பது என்ன?
|
அடக்கம் உயிர்க்கு மேம்பாட்டை உண்டாக்கும்.
அடக்கத்தை உயிருக்குதவும் உறுதிப் பொருளாகக் கொண்டு போற்றுக; உயிர்க்கு அடக்கத்தினும் மேம்பட்ட செல்வம் வேறு இல்லை.
அடக்கத்தை உயிருக்குதவும் உறுதிப் பொருளாகக் கொண்டு கடைப்பிடிக்க வேண்டும்.
அடக்கம் என்ற பண்பை அரும் பொருளாக எண்ணிக் காக்க வேண்டும் மாந்தர்க்கு மேன்மை தரும் ஆக்கம் அதைவிட வேறுஇல்லை என்கிறது பாடல். ஆக்கம் என்ற சொல்லுக்கு செல்வம் தரும் நன்மை. வளம் பெருக்கும் கருவி, வல்லமை, பயன் எனப் பொருள் கூறினர். இவற்றுள் செல்வம் என்ற பொருள் பொருத்தமாக உள்ளது. நற்பண்புகளை உயிருக்கு ஆக்கம் எனக் கூறுவது வள்ளுவரது வழக்கம்.
ஊங்கு என்பதற்கு (ஆங்கு அப்பால், ஈங்கு இப்பால் போன்று) ஊங்கு உப்பால் என்றும் மேம்பட்ட, மிக்க, மேலான, சிறந்த மற்றொன்று என்றும் பொருள் கூறினர். மேலான என்பது பொருத்தம்.
உயிர் என்பது பொதுவாக அனைத்துயிரையும் குறிக்கும் அடங்கிப் பயன்பெறுவது அனைத்துயிர்களும் ஆதலின்.
அடக்கம் என்ற நற்குணத்தை மதிப்பில் உயர்ந்த பொருளாய்க் கருதி, உறுதியுடன் நன்கு பாதுகாக்க வேண்டும் என இக்குறள் கூறுகிறது.
மக்களுக்கு அடக்கத்திலும் மிக்க செல்வமில்லை. ஆதலால், அதனை உறுதிப் பொருளாகக் கொண்டு போற்றுக.
|
'காக்க பொருளா அடக்கத்தை' குறிப்பது என்ன?
தனக்குப் பொருளாக அடக்கத்தை உண்டாக்குக, பொருள் பற்றிய அடக்கத்தின் வழியிலே நிற்க, மற்றெல்லாவற்றினும் அடக்கப் பொருளாகக் கொண்ட அடக்கத்தைச் சோர்வுபடாமல் பாதுகாக்க, அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு அழியாமல் காக்க, அடக்கத்தை உறுதியான பொருளாக எண்ணி அழியாமல் காக்க வேண்டும், அடக்கத்தைத் தனக்கு உறுதிப் பொருளாகக் காக்க, அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு போற்றிக் காக்கவேண்டும், அடக்கத்தை உயிருக்குதவும் உறுதிப் பொருளாகக் கொண்டு கடைப்பிடிக்க வேண்டும், அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொள்க, அடக்கத்தை ஒரு குறிக்கோளாகப் போற்றுக, அடக்கத்தைச் செல்வமாக மதித்துக் காப்பானாக, அடக்கத்தைப் பொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டும், எப்பொருளினும் உயர்பொருளாக ஒருவன் அடக்கத்தைக் காப்பானாக, அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு போற்றுக,
அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கருதிக் காத்தல் வேண்டும், அடக்கம் என்னும் பொருளை உறுதிப்பொருளாகக் கொண்டு காப்பாற்ற வேண்டும், அடக்கமுடைமையை ஒரு செல்வமாகப் போற்றுக, அடக்க முடைமையை ஒரு செல்வமாகப் பேணிக் காக்க, அடக்கத்தைப் பொருளைக் காப்பது போல முயன்று காப்பானாக, அடக்கத்தைக் காக்க வேண்டிய ஒரு பொருளாகக் காக்கக் கடவர் என்றவாறு உரையாசிரியர்கள் விளக்கினர்.
'காக்க' என்றது பாதுகாக்க என்ற பொருள் தருவது. 'பொருளாக' என்பதற்கு செல்வம் போன்று என்பது பொருள். காக்க பொருளா என்பது செல்வம் போன்று பாதுகாக்க எனப் பொருள்படும்.
மணக்குடவர் 'ஆக்க பொருளா' எனப் பாடம் கொண்டிருக்கலாம். எனவே இத்தொடர்க்கு இவர் 'தனக்குப் பொருளாக அடக்கத்தை யுண்டாக்குக' என உரை தருகிறார். இவர் கூறும்
'ஆக்க' என்பது இல்லாத பண்பை உண்டாக்குக என்று பொருள்படுவதால் இவரது உரை அடக்கம் என்பது படைக்கப்படுபொருள் என்றவாறு கருதச் செய்கிறது. 'அடக்கம் படைத்துக் கொள்ளப் பெறும் குணமானால் இவ்வுரை பொருந்தும். ஆனால் வள்ளுவர் அடக்கம் இயல்பான பண்பு அதற்கு இடையீடு வராமற் காக்க எனக் கருதுகிறார்' என்பது தண்டபாணி தேசிகரது குறிப்பு. எனவே 'ஆக்க' என்ற பாடம் சிறக்கவில்லை.
...நா காக்க...(127) பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம்...... (132) .....கள்ளாமை காக்க தன் நெஞ்சு (281).....சினங்காக்க.... (305) என வரும் குறள்களில் 'காக்க' என்ற சொல் ஆளப்பட்டது போன்று இங்கும் 'காக்க' என்பதே பாடமாகும்.
'காக்கப் பொருளா அடக்கத்தை’ என்பதற்குப் பொருள் பற்றிய அடக்கத்தின் வழி நிற்க என பரிதி உரை கூறினார். இவர் உரை பொருளின் அளவு, வருவாய் அளவு இவற்றைப் பலரறியக் கூறுதல் கூடாது என்ற அடக்கத்தையும் பொருள் செருக்கால் அடக்கமின்றி அலைதலாகாது என்ற உண்மையை உணர்த்துவதாகிறது என விளக்குவர். காலிங்கர் எல்லாவற்றினும் அடக்கப் பொருளாகக் கொண்டது என அடக்கத்தைப் போற்றிச் சொல்கிறார். பரிமேலழகர் 'அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு அழியாமல் காக்க' எனப் பொருள் கூறுவார். பொருட்செல்வம் நற்பண்புகளுடன் ஒப்பிடக் கூடாதது என்பதால் இவர் உறுதிப்பொருள் எனக் கூறி இருக்கலாம் எனத் தோன்றுகிறது.
பிற்கால உரையாளர்கள் 'பொருள் ஈட்டவும் அடக்கம் துணை செய்யும். பொருள் செய்யும் முயற்சியில் தொடர்புடையாரிடத்திலெல்லாம் அடக்கமாகப் பழகுக; அடக்கமுடையராக இருப்பது பொருள் காக்கும் முயற்சியிலும் துணை செய்யும். மற்றவர் இவர் செல்வமுடையாரென்று கருதாவண்னம் அடக்கி ஒழுகினால் செல்வத்திற்குக் கேடு இல்லை. காப்புப் பெறும்' என்றும் 'அடக்கத்தைப் பொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டும்' என்றும் 'எப்பொருளினும் உயர்பொருளாக ஒருவன் அடக்கத்தைக் காப்பானாக;' என்றும் 'உயிர்க்கு அவ்வடக்கம் போல நன்மை செய்யும் வேறு சிறந்த பொருள் ஒன்றும் இல்லை' என்றும் இக்குறளுக்கு விளக்கம் தந்தனர்.
வ சுப மாணிக்கம் 'அடக்கத்தை ஒரு குறிக்கோளாகப் போற்றுக; உயிர்க்கு அதனினும் முன்னேற்றம் இல்லை' எனச் சற்று வேறுபாடான கருத்துரை வழங்குகிறார்.
தம்பொருளென்பதம் மக்கள்...... (புதல்வரைப்பெறுதல் குறள் 63) என்ற இடத்து தம் மக்களைப் பொருளாக அதாவது செல்வமாகப் போற்றுதல் குறித்துப் சொல்லப்பட்டது. அதே பொருளில் இங்கும் பொருள் என்பதற்குச் செல்வம் எனக் கொள்ளவேண்டும் எனச் சிலர் உரை வரைந்தனர்.
இவர்கள் பிள்ளையைப் பார்ப்பதைப் போல அடக்கத்தை காக்க வேண்டும். அடக்கம் என்பது மனம், வாக்கு செயல் வழி வெளிப்படுவதால், அவற்றை பிள்ளைகளைப் போல காக்க வேண்டும் என்றுரைத்தனர்.
'காக்க பொருளா அடக்கத்தை' என்பதற்கு அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு காக்க என்பது பொருள்.
|
அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு விடாது கடைப்பிடிக்க வேண்டும்; உயிர்கட்கு அடக்கத்தினும் மேம்பட்ட செல்வம் வேறு இல்லை என்பது இக்குறட்கருத்து.
அடக்கமுடைமை காக்கப்படுவதால் உண்டாகும் நன்மை.
அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு காக்க; மாந்தர்க்கு அதைவிட மேம்பட்ட செல்வம் வேறு இல்லை.
|