இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0128



ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்

(அதிகாரம்:அடக்கமுடைமை குறள் எண்:128)

பொழிப்பு (மு வரதராசன்): தீய சொற்களின் பொருளால் விளையும் தீமை ஒன்றாயினும் ஒருவனிடம் உண்டானால், அதனால் மற்ற அறங்களாலும் நன்மை விளையாமல் போகும்.

மணக்குடவர் உரை: ஒரு சொல்லேயாயினும் கேட்டார்க்கு இனிதாயிருந்து தீயசொல்லின் பொருளைப் பயக்குமாயின், நன்மையாகாதாகியே விடும்.
இது சால மொழிகூறினாலுந் தீதாமென்றது.

பரிமேலழகர் உரை: தீச்சொல் பொருள் பயன் ஒன்றானும் உண்டாயின்- தீயவாகிய சொற்களின் பொருள்களால் பிறர்க்கு வரும் துன்பம் ஒன்றாயினும் ஒருவன் பக்கல் உண்டாவதாயின்; நன்று ஆகாது ஆகிவிடும் - அவனுக்குப் பிற அறங்களான் உண்டான நன்மை தீதாய்விடும்.
(தீயசொல்லாவன - தீங்கு பயக்கும் பொய், குறளை, கடுஞ்சொல் என்பன. ஒருவன் நல்லவாகச் சொல்லும் சொற்களின் கண்ணே ஒன்றாயினும் 'தீச்சொற்படும் பொருளினது பயன் பிறர்க்கு உண்டாவதாயின்' என்று உரைப்பாரும் உளர்.)

இரா சாரங்கபாணி உரை: ஒரு சொல்லே ஆயினும் பொருளால் பிறர்க்குத் துன்பம் உண்டாகுமாறு ஒருவன் சொல்லுவானாயின், அது நாவடக்கமின்மையைக் காட்டிவிடும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் நன்றாகா தாகி விடும்.

பதவுரை: ஒன்று ஆனும்-ஒன்று ஆயினும், ஒன்றுதான் என்றாலும்; தீச்சொல்-கொடிய மொழி; பொருள்-சொற் பொருள்; பயன்-விளைவு; உண்டாயின்-உண்டானால், உண்டாகும் என்றால்; நன்று-நன்மை; ஆகாது-ஆகாமல்; ஆகிவிடும்-ஆகியே தீரும், போகும்.


ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒரு சொல்லேயாயினும் கேட்டார்க்கு இனிதாயிருந்து தீயசொல்லின் பொருளைப் பயக்குமாயின்;
பரிதி: இல்லறத்தின் நடத்தும் ஒழுக்கம் தப்பி, ஒரு காரியமாகில் குற்றம்வரில்;
பரிமேலழகர்: தீயவாகிய சொற்களின் பொருள்களால் பிறர்க்கு வரும் துன்பம் ஒன்றாயினும் ஒருவன் பக்கல் உண்டாவதாயின்;
பரிமேலழகர் குறிப்புரை: தீயசொல்லாவன - தீங்கு பயக்கும் பொய், குறளை, கடுஞ்சொல் என்பன. ஒருவன் நல்லவாகச் சொல்லும் சொற்களின் கண்ணே ஒன்றாயினும் 'தீச்சொற்படும் பொருளினது பயன் பிறர்க்கு உண்டாவதாயின்' என்று உரைப்பாரும் உளர்.

மணக்குடவர் 'ஒருவன் நல்லவாகச் சொல்லும் சொற்களின் கண்ணே ஒன்றாயினும் தீயசொல்லின் பொருளைப் பயக்குமாயின்' என்றும் பரிமேலழகர் 'தீயவாகிய சொற்களின் பொருள்களால் பிறர்க்கு வரும் துன்பம் ஒன்றாயினும் ஒருவன் பக்கல் உண்டாவதாயின்' என வேறுபட இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒரு சொல்லிலேனும் தீமை நேருமாயின்', 'பேசுவதில் ஒரு சொல்லானாலும் கெட்ட அர்த்தத்தைக் கொடுக்கக்கூடியதாக இருந்துவிட்டால்', 'நல்ல சொற்களைக் கூறுமிடத்து, அவற்றுள் ஒன்றாவது தீய சொல்லாக இருந்து அதன் பொருளால் பிறர்க்குத் துன்பமாகிய பயன் விளையுமாயின்', 'தாம் சொல்லும் சொற்களுள் ஒன்றேனும் தீய சொல்லின் பொருளைத் தந்து விடுமேயானால்' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஒரு சொல்லிலேனும் பொருளால் பிறர்க்குத் துன்பம் உண்டாயின் என்பது இப்பகுதியின் பொருள்.

நன்றாகா தாகி விடும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நன்மையாகாதாகியே விடும்.
மணக்குடவர் குறிப்புரை: இது சால மொழிகூறினாலுந் தீதாமென்றது. [சாலமொழி - வஞ்சச்சொல்]
பரிதி: நன்றாகாதாம். ஆதலால், திரிவித கரணங்களும் பாபத்தில் செல்லாமல் காப்பது நன்று.
பரிமேலழகர்: அவனுக்குப் பிற அறங்களான் உண்டான நன்மை தீதாய்விடும்.

'நன்மையாகாதாகியே விடும்' என மணக்குடவரும் 'பிற அறங்களான் உண்டான நன்மை தீதாய்விடும்' என்று பரிமேலழகரும் வெவ்வேறு வகையாய் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'எல்லா நன்மையும் கெடுதலாகி விடும்', 'காரியமும் கெட்டு அடக்கமுடைமையும் கெட்டுப் போகும்', 'பிற நல்ல சொற்களாலாகக் கூடிய நன்மையும் ஆகாததாய் ஒழிந்துபோம்', 'எல்லாம் நன்மை அற்றதாக ஆகிவிடும்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

எல்லாமே நன்மை இல்லாதனவாக ஆகிவிடும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஒரு சொல்லிலேனும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் எல்லாமே நன்மை இல்லாதனவாக ஆகிவிடும் என்பது பாடலின் பொருள்.
'தீச்சொல் பொருட்பயன்' குறிப்பது என்ன?

தெறுமொழி உன் நாவிலிருந்து வராமல் காத்துக்கொள்க.

நற்பொருள் தருமாறு ஒருவன் சொல்லும் சொற்களிலே தீயசொல் ஒன்று உண்டாயினும், தான் கருதிய பொருளின் நன்மை நல்காது போய்விடும்.
நல்ல சொற்களைக் கூறுமிடத்து, அவற்றுள் ஒன்றேனும் தீச்சொல்லாக இருந்து அதன் பொருளால் பிறர்க்குத் துன்பப் பயன் விளையுமாயின், பிற நல்ல சொற்களாலாகக் கூடிய நன்மையும் ஆகாததாய் ஒழிந்துபோம். பிறர்க்கு நன்மை கருதியவழியும்‌ நாவைக்‌ காவாமையால்‌ குற்றம்‌ வரும் என்கிறது இப்பாடல். ‌ நல்ல சொற்களுக்கு இடையே வாய்தவறி தீய சொல் ஒன்றுகூடக் கலந்துவிடாமல் காத்துக் கொள்ள வேண்டும். தீயசொல் என்றும் தீமைதான் பயக்கும்; நல்ல சொல்லே ஆயினும் பொருளால் தீய பயன் உண்டாவதானால் அதுவும் பேச்சினிடையே ஊடுருவாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
ஒரு சொல்கூடத் தீயதாய்ப் பேசக்கூடாது என்றதால் தப்பித் தவறியும் நாக்குத் தடுமாறக் கூடாது என்று சொல்லப்படுகிறது. அதாவது கவனக் குறைவால் தீச்சொல் பிறந்தது என்பதும் மன்னிக்கப்படாது- அது ஒரு சொல்லேயானாலும் சரி. உரைத்த சொற்களுள் ஒன்று கூட நேராகவோ மறைமுகமாகவோ தீய பொருளையோ, பயனையோ தரத்தக்கதாக இல்லாமல் இருத்தல் வேண்டும்.
நன்கு சிந்தித்துத் திட்டமிட்டு வழங்கிய நல்ல சொற்களிடையே கருத்து ஊன்றாமையால் தீய சொல் ஒன்றாயினும் கலந்துவிட்டால் அது சொல்பவனது நாவடக்கமின்மையைக் காட்டிவிடும். ஒரு குடம் நிறைய உள்ள பாலை ஒரு துளி நஞ்சு முற்றிலும் கெடுத்துவிடுவது போல ஒரு தீச்சொல் பிற நன்மைகளையும் இல்லாதனவாகச் செய்துவிடும் என்பது கருத்து.
சொல்லும் சொற்களில் ஒரு சொல்லும் மற்றவரைப் புண் படுத்தும் வகையில் அமையாமல், பிறர் மனதைச் சுடும் கடுஞ்சொல் இல்லாததாய், கொடுஞ்செயலைத் தூண்டத்தக்கதாய் இராமல் அமைய வேண்டும் எனச் சொல்லப்படுகிறது. பேசும் பேச்சில் ஒரு சொல்லும் தீப்பயன் தருவதாக இல்லாமல் மொழிஅடக்கம் திகழ வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

'தீச்சொல் பொருட்பயன்' குறிப்பது என்ன?

'தீச்சொல்' என்றதற்குச் சலமொழி (வஞ்சச்சொல்), தீங்கு பயக்கும் பொய் குறளை கடுஞ்சொல், தீயசொல், பிறர்க்குத் தீங்கு வருகிற வார்த்தை, தீய சொற்கள், தீய சொல், தீமை தரும் சொல், துன்பம் உண்டாக்கும் சொல், கெட்ட வார்த்தை, தீய பயனைத் தரும் சொல், பிறர்க்குத் துன்பமாகிய பயன் விளைக்கும் சொல், பயனில் சொல் அல்லாதது, தீமையான சொல், தீய கருத்துக்குத் துணைபோகும் சொல் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

தீச்சொல் என்பது கடுஞ்சொல், வஞ்சச்சொல் போன்றவற்றைக் குறித்தது. இவை பேச்சிடையே வராது காத்துக்கொள்ள வேண்டும் எனச் சொல்லப்படுகிறது. தீச்சொல் என்றதை அடுத்துப் பொருட்பயன் என்ற சொல் பெய்யப்பட்டுள்ளதால், தீய பொருள் தருவது' அல்லது 'தீய பயன் தருவது' என்று இச்சொல்லுக்குப் பொருள் காண்பர். இதற்கு வசைச்சொல், சபிக்கும் மொழி என்றும் பொருளுரைக்கப்பட்டது. பிறர்க்கு நன்மை கருதி ஒருவர் நல்லுரைகள் பல கூறியிருப்பார். ஆனால், ஒரே ஒரு தீச் சொல் - 'ஒன்றுக்குமற்றுப்போவாய்!' போன்றதை - அவரிடம் சொல்லி, அதுவும் நடந்து விட்டால், இது வரை செய்த நன்மைகளுக்குண்டான பயன்கள் எல்லாம் இல்லாமல் போய்விடும். அந்த தீமையை மட்டுமே அவர்கள் நினைத்து கொண்டு இருப்பார்கள். தீச்சொல் சொன்னவருமே தான் சொன்னதை நினைந்து நினைந்து வருந்துவர்; அவரது மனச்சான்று மற்றவர்க்குத் தீமையுண்டானதை நினைப்பூட்டி வாழ்நாள் முழுவதும் அவரை வாட்டிக்கொண்டே இருக்கும்.

ஒருவர்மீது சினம் கொண்டு அவருக்குத் தீங்கு அல்லது அழிவு நேர வேண்டுமென்று கூறுவது தெறுமொழி அதாவது சாபம் எனப்படும். தீச்சொல் பயன் என்றதால் அதைச் சாபச் சொல்லைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். எவர்க்காவது தீமை வழங்க ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட ஆற்றலைக் கோருவதை நோக்கமாகக் கொண்டது சாபம். சினம் அல்லது எரிச்சலை வெளிப்படுத்தத் தெறுமொழி கூறுபவர் மனத்தைப் புண்படுத்தும் சொல்லைப் பயன்படுத்துவர். சில கெட்ட நிகழ்வுகள் வாழ்வில் நடந்தால் அவை சாபங்களால் நிகழ்கின்றன என்று நம்புவர்கள் உலகில் உண்டு; கொடுத்த சாபம் கொடுத்தவருக்கே திரும்ப வரும்; சாபச் சொற்கள் கொடுத்தவரையும் சுற்றிக்கொண்டே இருக்கும் என்பதும் சிலரது நம்பிக்கை. 'யாருடைய சாபமோ, இக்குடும்பம் இப்படித் துன்புறுகிறது என்பதை நாம் அவ்வப்பொழுது கேள்விப்படுவதுதான்.
தெறுமொழி சொல்லுதல் பயன் தருவது என்பது மூடநம்பிக்கையே என்றாலும் அது மனக்கசப்பைத் தந்து நல்லெண்ண உறவுகளைப் பாதிப்பதால் அது கூறவேண்டாம் எனப்படுகிறது.

தீச்சொல் என்பது தீயபொருள் தரும் அல்லது தீயபயனை விளைக்கும் சொல் குறித்தது.

ஒரு சொல்லிலேனும் பொருளால் பிறர்க்குத் துன்பம் உண்டாயின் எல்லாமே நன்மை இல்லாதனவாக ஆகிவிடும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

கருத்தின்மையாலே நாவைக்‌ காவாவழியும் நாஅடக்கமுடைமை இல்லாததாகிவிடும்.

பொழிப்பு

ஒரு சொல்லிலேனும் அதன் பொருளால் தீமை நேருமாயின் மற்ற எல்லா நன்மையும் கெடுதலாகி விடும்.