எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து
(அதிகாரம்:அடக்கமுடைமை
குறள் எண்:125)
பொழிப்பு (மு வரதராசன்): பணிவுடையராக ஒழுகுதல் பொதுவாக எல்லோர்க்கும் நல்லதாகும்; அவர்களுள் சிறப்பாகச் செல்வர்க்கே மற்றொரு செல்வம் போன்றதாகும்.
|
மணக்குடவர் உரை:
அடங்கியொழுகல் எல்லார்க்கும் நன்மையாம்: அவரெல்லாரினுஞ் செல்வமுடையார்க்கே மிகவும் நன்மை உடைத்தாம் என்றவாறு.
செல்வம்-மிகுதி.
பரிமேலழகர் உரை:
பணிதல் எல்லார்க்கும் நன்றாம் - பெருமிதம் இன்றி அடங்குதல் எல்லார்க்கும் ஒப்ப நன்றே எனினும்; அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து - அவ்வெல்லாருள்ளும் செல்வம் உடையார்க்கே வேறொரு செல்வம் ஆம் சிறப்பினை உடைத்து.
(பெருமிதத்தினைச் செய்யுங் கல்வியும் குடிப்பிறப்பும் உடையார் அஃது இன்றி அவை தம்மானே அடங்கியவழி அவ்வடக்கஞ் சிறந்து காட்டாது ஆகலின், 'செல்வர்க்கே செல்வம் தகைத்து' என்றார். 'செல்வத்தகைத்து' என்பது மெலிந்து நின்றது. பொது என்பாரையும் உடம்பட்டுச் சிறப்பாதல் கூறியவாறு. இவை ஐந்து பாட்டானும் பொதுவகையான் அடக்கத்தது சிறப்புக் கூறப்பட்டது.)
இரா சாரங்கபாணி உரை:
செருக்கின்றி அடங்கி நடத்தல் எல்லார்க்கும் ஒப்ப நல்லது என்றாலும், அவ்வெல்லாருள்ளும் செல்வமுடையார்க்கே அது வேறொரு செல்வமாம் சிறப்பினைத் தரும்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து.
பதவுரை: எல்லார்க்கும்-எல்லோருக்கும், யாவர்க்கும்; நன்றாம்-நன்மையுடையதாம், நல்லதாம்; பணிதல்-பணிவுடன் அடங்கி இருத்தல், அடங்கி ஒழுகுதல்; அவருள்ளும்-அவர்களுக்குள்ளும், அவ்வெல்லாருள்ளும்; செல்வர்க்கே-பொருளுடையார்க்கே; செல்வம்-செல்வம்; தகைத்து-சிறப்புத் தகுதி கொண்டதாம், சிறப்பினையுடையது.
|
எல்லார்க்கும் நன்றாம் பணிதல்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அடங்கியொழுகல் எல்லார்க்கும் நன்மையாம்;
பரிதி: ஆரளவினும் ஆங்காரம் அற்றுத் திரிவித கரணங்களையும் அடக்குவானகில் நன்று; [ஆரளவிலும் - யார் இடத்தும்; ஆங்காரம்- அகங்காரம்; கிரமம்- முறை]
காலிங்கர்: யோகிகள், தவத்தோர், துறவா வறியோர் முதலாகிய யாவர்க்கும் சால நன்மையே யாம் பணிதலாகிய அடக்கமுடைமை;
பரிமேலழகர்: பெருமிதம் இன்றி அடங்குதல் எல்லார்க்கும் ஒப்ப நன்றே எனினும்;
'பணிதலாகிய அடக்கமுடைமை எல்லார்க்கும் நன்மையாம்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'எல்லார்க்கும் பணிவுடைமை வேண்டும்', 'பிறரிடத்தில் பணிவாக அடங்கி நடப்பது எல்லாருக்கும் நல்லதுதான்', 'பணிவாய் நடத்தல் வறியர் செல்வர் என்னும் எல்லார்க்கும் வேண்டப்படும் நன்மையே', 'செருக்கு இன்றி அடங்கிப் பணிதல் யாவர்க்கும் நல்லதாம்' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
'பணிவாய் நடத்தல் யாவர்க்கும் நல்லதாம் என்பது இப்பகுதியின் பொருள்.
அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவரெல்லாரினுஞ் செல்வமுடையார்க்கே மிகவும் நன்மை உடைத்தாம் என்றவாறு.
மணக்குடவர் பதவுரை: செல்வம்-மிகுதி.
பரிதி: இந்தக்கிரமத்திற்கு நிகருண்டோ என்னில், குறைவறப் பெற்ற பாக்கியத்துக்கு நிகர்த்த பாக்கியம் அதுவே என்றவாறு.
காலிங்கர்: அவருள்ளும் சிறப்பினை உடைய இல்வாழ்வார்க்கு மிகவும் அழகுத்தன்மை உடைத்து என்றவாறு.
பரிமேலழகர்: அவ்வெல்லாருள்ளும் செல்வம் உடையார்க்கே வேறொரு செல்வம் ஆம் சிறப்பினை உடைத்து.
பரிமேலழகர் குறிப்புரை: பெருமிதத்தினைச் செய்யுங் கல்வியும் குடிப்பிறப்பும் உடையார் அஃது இன்றி அவை தம்மானே அடங்கியவழி அவ்வடக்கஞ் சிறந்து காட்டாது ஆகலின், 'செல்வர்க்கே செல்வம் தகைத்து' என்றார். 'செல்வத்தகைத்து' என்பது மெலிந்து நின்றது. பொது என்பாரையும் உடம்பட்டுச் சிறப்பாதல் கூறியவாறு. இவை ஐந்து பாட்டானும் பொதுவகையான் அடக்கத்தது சிறப்புக் கூறப்பட்டது.
'அவரெல்லாரினுஞ் செல்வமுடையார்க்கே மிகவும் நன்மை உடைத்து' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அது செல்வர்க்கு இருப்பது இன்னும் செல்வமாம்', 'ஆனாலும் செல்வமுள்ளவர்களிடத்தில் அந்தப் பணிவான அடக்கம் அமையுமானால் அது செல்வத்தோடு செல்வம் சேர்ந்தது போலாகும்', 'அவருள்ளுஞ் செல்வர்க்கு அப் பணிவு பொருட்செல்வத்தோடு மற்றொரு அழியாச் செல்வமாய்ச் சிறத்தற்குரியது. (உள்ள செல்வத்தைச் சிறப்பிக்குஞ் செல்வமாதற்கு உரித்து என்றவாறு)', 'செல்வம் உடையவர்கள் பணிதல் இன்னும் செல்வத்தைப் பெருக்கிக் கொள்ளும் சிறப்பினையுடையது' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.
அவருள்ளும் பொருளுடையவர்கள் பணிதல் அவர்க்கு அதுவும் ஓர் செல்வம் ஆகும் தன்மையுடையது என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
பணிவாய் நடத்தல் யாவர்க்கும் நல்லதாம்; அவருள்ளும் பொருளுடையவர்கள் பணிதல் அவர்க்கு அதுவும் ஓர் செல்வம் ஆகும் தன்மையுடையது என்பது பாடலின் பொருள்.
இக்குறளிலுள்ள 'செல்வம்' என்ற சொல்லின் பொருள் என்ன?
|
அடக்கமுடைமை செல்வர்க்குக் கூடுதல் செல்வமாக அமையும்.
செருக்கின்றி பணிவாய் அடங்கி ஒழுகுதல் எல்லார்க்கும் நல்லதாகும்; அவ்வெல்லாருள்ளும் முன்னமே பொருளுடையவருக்கு அதுவே வேறொரு செல்வமாய் சிறப்பு சேர்க்கும்.
செல்வநிலை செருக்கைத்தரும் தன்மையது. செல்வச் செழிப்பு மிகமிக அடக்க குணம் மறைந்துகோண்டே செல்லும். கல்வி, அருள் போன்ற ஏனைச் செல்வமுடையோர் அச்செல்வங்கள் காரணமாகவே அடங்கி நடத்தல் இயலும், ஆனால் இடம் பொருள் ஏவல் என்ற வளஆதாரங்கள் கொண்ட செல்வர் அடக்கமுடையராயிருத்தல் இயல்பன்று. எனவே அவரிடத்து பணிவு அமைவது அவர்க்குச் சிறப்பாகிறது. இப்பணிவு அவர்க்குச் செல்வமாய் சிறக்கும் என்கிறது குறள். அதாவது உள்ள செல்வத்தையும் சிறப்பிக்கும் என்பது கருத்து. 'தகைத்து என்பதற்குத் தகைமை (சிறப்பு) உடையது என்று பொருள் கொள்ளலே இயல்பு. 'இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே......’ ( இரவச்சம் 1064 பொருள்: (உலகத்தில்) இடமெல்லாம் கொள்ளாத அவ்வளவு பெருமையுடையதாகும்....) என்னும் குறள் காண்க' என்பார் இரா சாரங்கபாணி.
செல்வத்தின் துணைகொண்டு நினைத்ததை முடிக்கக்கூடும் என்ற செருக்குக் கொள்ளத்தக்க பொருள்உடையாரிடத்துக் காணப்படும் அடக்கம் மற்ற எல்லாரிடம் உள்ள அடக்கத்தினும் மதிப்பு மிகுந்து விளங்கும் என்பது கருத்து.
செல்வம் தகைத்து என்பதற்கு அழகுத்தன்மை, செல்வம் சேர்க்கும், உண்மையான செல்வம் எனப் பொருள் உரைத்தனர். 'அச்செல்வம் கேடுறாமல் வளரும்; அதனால் அதனை வேறொரு செல்வம் என்றார்' என்றும் 'செல்வர்க்கு இன்னும் செல்வங்கள் சேர்க்கின்ற வாய்ப்பைச் சேர்க்கும்' என்றும், 'பெரும்பொருள் செலவில்லாமல் கைகூடும்' என்றும் பொருள் கூறினர். '(இன்னொரு) செல்வமாம் தன்மையது' என்று பொருள் கொள்வது பொருத்தமாகும்.
|
இக்குறளிலுள்ள 'செல்வம்' என்ற சொல்லின் பொருள் என்ன?
இச்சொல்லுக்கு மிகுதி, நன்மை, பாக்கியம், அழகுத்தன்மை, செல்வமாம் சிறப்பு, அழியாச் செல்வம், செல்வத்தின் மேல் செல்வம், பிறிதொரு செல்வம், இன்னும் செல்வத்தைச் சிறப்பித்துக் கொள்ளும் சிறப்பினையுடைத்து, தனிச் சிறப்பு வாய்ந்த மெய்யான செல்வம் என்றவாறு உரையாளர்கள் பொருள் கூறினர்.
இவற்றுள் 'செல்வத்தின் மேல் செல்வம்' என்ற பொருள் சிறந்து நிற்கிறது.
|
பணிவாய் நடத்தல் யாவர்க்கும் நல்லதாம்; அவருள்ளும் பொருளுடையவர்கள் பணிதல் அவர்க்கு அதுவும் ஓர் செல்வம் ஆகும் தன்மையுடையது என்பது இக்குறட்கருத்து.
செல்வரின் அடக்கமுடைமை அவரது மதிப்பைக் கூட்டும்.
எல்லார்க்கும் அடக்கவுடைமை நல்லது; அவ்வெல்லாருள்ளும் செல்வமுடையார்க்கு அதுவும் ஓர் செல்வம் ஆகும் தன்மையுடையது.
|