இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் திறன்-0071 குறள் திறன்-0072 குறள் திறன்-0073 குறள் திறன்-0074 குறள் திறன்-0075
குறள் திறன்-0076 குறள் திறன்-0077 குறள் திறன்-0078 குறள் திறன்-0079 குறள் திறன்-0080

மனைவியும் மக்களும் பிறருமாகத் தம்மொடு தொடர்புடையார்கண் காதலுடையனாதல். தொடர்புபற்றி எழும் இவ்வன்பு சேய்க்கும் தாய்க்குமிடையே சிறந்து தோன்றுதலின் இதனை மக்கட்பேற்றின்பின் தொடர வைத்தார். இல்லறம் இனிது நடத்தற்கும் பிற உயிர்களின்மேல் அருள் பிறத்தற்கும் காரணம் அன்பாதலின் இது வேண்டப்பட்டது.
- நாகை சொ தண்டபாணிப் பிள்ளை

இல்வாழ்வார்க்கு அமைய வேண்டிய இன்றியமையாத குணம் அன்பு. அகத்தே உணரப்படும் மென்மையான உணர்வு அன்பாம்; இதற்குப் புறவடிவம் இல்லை. மணமான ஆண்-பெண் தாங்கள் ஒருவருக்காக ஒருவர் உள்ளதாக உணருவது அன்பின் தொடக்கநிலையாக அமையும். காமத்தில் தோன்றிய, தன்னலம் சார்ந்த அன்பு பின்னர் அதனைக் கடந்து பிள்ளைகள், உற்றார், உறவினர், நட்பினர் என்று, தன்னலம் மறைந்து, பரந்து விரிகிறது. அன்புமுதிர்ந்து ஆர்வம் என்ற அடுத்த நிலைக்கு உயர்கிறது. ஆர்வம் இன்னும் உயர்ந்த நிலையான நண்பைத் தருகிறது. அன்புடைமைதான் மனிதனை மனிதனாக்குகிறது என்கிறது இவ்வதிகாரம். உடலுக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு அன்புதான். அன்பகத்தில்லா உயிர் வாழ்க்கை இறுகிய நிலத்தில் பட்டமரம் துளிர்த்தல் போன்றது; அன்புள்ள உடலே உயிருடையது; அன்பில்லாதவன் வெறும் தோல்போர்த்திய உடல் கொண்ட உயிரற்ற பிணம் போன்றவன் - என அன்பு இல்லாவிட்டால் உண்டாகும் குற்றங்களும் பேசப்படுகின்றன.

அன்புடைமை

இல்லறவாழ்வில் அன்பு உடையவராய் இருத்தல் பற்றிய அதிகாரம் இது; தொடர்புடையார் மாட்டுள்ள உள்ளநெகிழ்வைச் சொல்வது.
அன்பு என்பது நாம் அடக்க விரும்பினாலும் கட்டுப்பாட்டை மீறிக் கண்ணீராக வெளிப்பட்டுவிடும் உணர்வு என முதற்குறட்பா கூறுகின்றது; அன்புள்ளம் கொண்டோர் தன்னலமற்றவராயிருப்பர், தம் உடம்பையும் பிறர்க்கு உரியதாக்குவர் என்கிறது ஒரு பாடல்; உடலும் உயிரும் கூடுவது அன்பு என்னும் பயன் கருதியே என்று ஆன்றோர் கூறினர் என உடல், உயிர். அன்பு இவற்றிற்கு இடையேயான தொடர்புபற்றிச் சொல்கிறது ஒரு குறட்பா; அன்பிலிருந்து பிறர்மீது விருப்பமுடைமை பிறக்கிறது, அதனின்று அது மனிதநேயம் என்ற நிலைக்கு வளர்கிறது; இந்த உலகிலே இன்பம் அடைந்து சிறப்புற்ற எல்லாரும் அன்பு செய்து வாழ்ந்தவர்களே என்கிறது மற்றொரு பாடல்; அறத்திற்கு மட்டுமல்லாமல் மறச்செயல்கள் நிகழ்வதற்கும் அன்பே காரணமாக அமைகிறது என்பதும் சொல்லப்பட்டது; இறைவன் ஒறுத்தல் என்பது குறளில் அரிதாகக் காணப்படுவது. அன்பில்லாதவர்களை அறக்கடவுள் ஒறுக்கும் என இவ்வதிகாரத்துள்ள ஒரு குறள் கூறுகிறது. உள்ளத்துள் அன்பற்றவர்கள் வாழ்வு இறுகிய நிலத்தில் உள்ள பட்டமரம் தழைப்பது போன்றாம் என அன்பிலார் உயிரற்றுத் தோன்றுவர் எனக் கூறுகிறது இன்னொரு பாடல்; புறத்துறுப்புக்களால் அழகுநலன் பெற்று விளங்கினாலும் அகத்துறுப்பான அன்பு இல்லையென்றால் அவர் வாழும் இல்லறம் எப்படிச் சிறக்கும்? எனக் கேட்கிறது மற்றொரு பாடல்; அன்பில்லாதவர்கள் எலும்பைச் சுற்றிப் போர்த்திய தோல் போன்றவர்களே என அவர்கள் நடைப்பிணங்களே என்று கடைசிப் பாடல் சாடுகிறது.
இல்லறத்திலுள்ள அன்புடைமை அதிகாரத்துக்கு ஒத்த கருத்துடைய துறவற அதிகாரம் அருளுடைமை ஆகும்.

அன்புடைமை அதிகாரப் பாடல்களின் சாரம்:

  • 71 ஆம்குறள் அன்பு செய்யப்பட்டார் துன்பம் உறுதலைப் பொறுக்கமாட்டாமல் அன்புடையார் கண்ணீரும் கம்பலையுமாய் ஆகிவிடுவர் என்கிறது.
  • 72 ஆம்குறள் அன்புள்ளம் கொண்டவர் தன்னலம் கருதாதவராயிருப்பர் என்பது.
  • 73 ஆம்குறள் உடலுக்கும் உயிருக்கும் தொடர்பு உண்டாக்குவது அன்புதான் என்பதைச் சொல்கிறது.
  • 74 ஆம்குறள் அன்பு எப்படி மனிதநண்பாக வளர்ச்சி பெறுகிறது என்பதைச் சொல்வது.
  • 75 ஆம்குறள் அன்புடையார் இன்பச் சிறப்பு அடைகின்றனர் என்கிறது.
  • 76 ஆம்குறள் அறசெயல்கள் மட்டுமன்றி மறச்செயல்களும் அன்பின் ஆட்சியாலேயே நடைபெறுகின்றன எனக் கூறுகிறது.
  • 77 ஆம்குறள் அன்பில்லாதவனை அறம் ஒறுக்கும் என்று சொல்கிறது.
  • 78 ஆம்குறள் அன்பில்லாதவர் உயிரற்றுக் காட்சியளிப்பர் எனச் சொல்வது.
  • 79 ஆம்குறள் அன்பு என்ற உறுப்பே இல்லற வாழ்வைப் பயனுள்ளதாக்கும் என்று குறிக்கிறது.
  • 80 ஆவதுகுறள் அன்பில்லாத உடம்பு உயிரற்றது ஆகிறது எனச் சாடுகிறது.

அன்புடைமை அதிகாரச் சிறப்பியல்புகள்

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்.. (71) என்ற பாடல் அன்பிற்குரியோர் இவ்வுலகத்திலிருந்து மறையும் போது உண்டாகும் கண்ணீரையும் கம்பலையையும் நம் முன்னே கொண்டு வருகிறது.

அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்; மறத்திற்கும் அஃதே துணை. (76) 'அன்பின் துணையாலேயே மறச்செயலும் நிகழ்கிறது' என்றது அன்பைப் புதிய கோணத்தில் பார்க்கப்பட்ட அறிவுக்கு விருந்தாகும் பாடலாகும்.

அன்பிலாரை அறக்கடவுள் ஒறுக்காமல் விடாது என்பதை என்பில்லாத புழுக்களை வெயில் காய்வது என்ற சிறந்த உவமையுடன் விளக்குவது என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம் (77) என்னும் பாடல்.




குறள் திறன்-0071 குறள் திறன்-0072 குறள் திறன்-0073 குறள் திறன்-0074 குறள் திறன்-0075
குறள் திறன்-0076 குறள் திறன்-0077 குறள் திறன்-0078 குறள் திறன்-0079 குறள் திறன்-0080