அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை
(அதிகாரம்:அன்புடைமை
குறள் எண்:76)
பொழிப்பு (மு வரதராசன்): அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்; ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்கும் அதுவே துணையாக நிற்கின்றது.
|
மணக்குடவர் உரை:
அன்பானது அறஞ்செய்வார்க்கே சார்பாமென்பர் அறியாதார். அவ்வன்பு மறஞ் செய்வார்க்குந் துணையாம்.
பரிமேலழகர் உரை:
அன்பு சார்பு அறத்திற்கே என்ப அறியார் - அன்பு துணையாவது அறத்திற்கே என்று சொல்லுவர் சிலர் அறியார்; மறத்திற்கும் அஃதே துணை - ஏனை மறத்திற்கும் அவ்வன்பே துணையாவது.
(ஒருவன் செய்த பகைமைபற்றி உள்ளத்து மறம் நிகழ்ந்துழி, அவனை நட்பாகக் கருதி அவன் மேல் அன்புசெய்ய அது நீங்குமாகலின், மறத்தை நீக்குதற்கும் துணையாம் என்பார், 'மறத்திற்கும் அஃதே துணை' என்றார். துன்பத்திற்கு யாரே துணையாவார் (குறள் 1299) என்புழிப்போல. இவை ஐந்து பாட்டானும் அன்பினது சிறப்புக் கூறப்பட்டது.)
இரா இளங்குமரன் உரை:
அன்பியல் அறியாதவரே அன்பு நற்செயலுக்கு மட்டுமே துணையாகும் என்பர். ஆனால் பாவ, வீரச் செயல்களுக்குங்கூட அவ்வன்பு துணையாதல் உண்டு.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
அறியார் அறத்திற்கே அன்புசார்பு என்ப; மறத்திற்கும் அஃதே துணை.
பதவுரை: அறத்திற்கே-நற்செயலுக்கே; அன்பு-உள்ள நெகிழ்ச்சி; சார்பு-சார்ந்து நிற்பது, பற்று, துணை; என்ப-என்று சொல்லுவர்; அறியார்-அறியாதவர்; மறத்திற்கும்-மறத்திற்கும், அறச்செயல் அல்லாததற்கும்; அஃதே-அதுவே; துணை-உதவி.
|
அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அன்பானது அறஞ்செய்வார்க்கே சார்பாமென்பர் அறியாதார்;
பரிப்பெருமாள் ('சார்பென்பர்' - பாடம்): அன்பானது அறஞ்செய்வார்க்கே சார்பாமென்பர் அறியாதார்;
பரிதி: தன்மத்தினாற் பெரியது அன்புடைமை; அது ஆத்துமாவை ரட்சிக்கும்; பரகெதி கொடுக்கும்; .
காலிங்கர்: ('சால்பென்ப' - பாடம்.) ஒருவன் அனைத்துயிர்மாட்டும் வைக்கின்ற உள்ளன்பானது தான் நடத்துகின்ற இல்லறத்தினுக்கே சால்பு அமைந்தது என்பர் அறியாதார்;
பரிமேலழகர்: அன்பு துணையாவது அறத்திற்கே என்று சொல்லுவர் சிலர் அறியார்;
'அன்பு துணையாவது அறத்திற்கே என்று சொல்லுவர் அறியாதார்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். காலிங்கர் 'சார்பு' என்பதற்குச் 'சால்பு' எனப் பாடம் கொண்டு அன்பே இல்லறத்திற்குச் சால்பு அமைந்தது அதாவது அன்பு அறத்திற்குப் பெருமை தருவது என்கிறார்;
இன்றைய ஆசிரியர்கள் 'அறத்திற்கு மட்டும் அன்பு துணையில்லை', 'அறியாதார் அறத்திற்கு மட்டுமே அன்பு துணை என்பர்', 'தர்மமான நல்ல காரியங்களைச் செய்வதுதான் அன்பு என்பதைச் சேர்ந்தது', 'அன்பின் தன்மை முழுவதையும் அறியாதவர்கள் நன்மை செய்வதற்கே அன்பு துணையென்று சொல்லுவார்கள்', என்ற பொருளில் உரை தந்தனர்.
அறவாழ்விற்கே அன்பு சார்பாகும் என்று அறியாதார் சொல்வர் என்பது இப்பகுதியின் பொருள்.
மறத்திற்கும் அஃதே துணை:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவ்வன்பு மறஞ் செய்வார்க்குந் துணையாம்.
பரிப்பெருமாள்: அவ்வன்பு மறஞ் செய்வார்க்குந் துணையாம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: மறம் செய்யுங்கால், சுற்றத்தார் மாட்டு அன்புடையார்க்கு அல்லது வெற்றிகோடல் இன்றாகலின் மறம் செய்வார்க்கும் அன்பு வேண்டும் என்றது. மறம் செய்தல் பொருள் காரணமாதலின் பொருட்கும் அன்பு வேண்டுமென்றவாறு ஆயிற்று. என்னை? 'அன்பிலன் ஆன்றதுணையிலன் தான் துவ்வான் என்பரியும் ஏதிலான் துப்பு' என்றார் ஆகலின்.
பரிதி: அறிவில்லார் செய்யும் மறத்தையும் அன்பு வெல்லும் என்றவாறு.
காலிங்கர்: ஈண்டுப் பாவமாகிய மறத்திற்கும் அவ்வன்பே துணை என்றவாறு.
பரிமேலழகர்: ஏனை மறத்திற்கும் அவ்வன்பே துணையாவது.
பரிமேலழகர் குறிப்புரை: ஒருவன் செய்த பகைமைபற்றி உள்ளத்து மறம் நிகழ்ந்துழி, அவனை நட்பாகக் கருதி அவன் மேல் அன்புசெய்ய அது நீங்குமாகலின், மறத்தை
நீக்குதற்கும் துணையாம் என்பார், 'மறத்திற்கும் அஃதே துணை' என்றார். துன்பத்திற்கு யாரே துணையாவார் (குறள் 1299) என்புழிப்போல. இவை ஐந்து பாட்டானும் அன்பினது சிறப்புக் கூறப்பட்டது.
'மறத்திற்கும் அவ்வன்பே துணையாம்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிப்பெருமாள் 'பொருள் காரணமாக நிகழும் போரிலே தொடர்புடையாரிடம் அன்பு கொண்டவனுக்கே வெற்றி கிடைக்கும்' என மறத்திற்கு அன்பு துணையாதலை விளக்கினார்.
காலிங்கர் பாவமாகிய மறம் எனக் குறிப்பதால் இவர் மறம் என்பதற்குத் தீச்செயல் என்று பொருள் கொண்டு அன்பு மறத்திற்குத் துணையாகிறது என்கிறார்.
பரிமேலழகர் உரைநோக்கின் அவர் மறம் என்பதற்குச் சினம் என்ற பொருள் கொண்டார் என்று தெரிகிறது.
இன்றைய ஆசிரியர்கள் 'வீரத்திற்கும் அதுவே துணை', 'ஆழ்ந்து நோக்கினால் வீரத்திற்கும் அவ்வன்பே துணையாகிறது', 'அதர்மமான தீய காரியங்களையும் அன்புக்காகச் செய்யலாம் என்பவர்கள் அறியாதவர்கள்', 'அவ்வன்பே தீமையை யொழிப்பதற்கும் (தக்க) துணையாகும்' என்றபடி பொருள் உரைத்தனர்.
மறத்திற்கும் அவ்வன்பே துணையாக நிற்கிறது என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
அறவாழ்விற்கே அன்பு சார்பாகும் என்று அறியாதார் சொல்வர்; மறத்திற்கும் அவ்வன்பே துணையாக நிற்கிறது என்பது பாடலின் பொருள்.
'மறத்திற்கும்' என்ற சொல் குறிப்பதென்ன?
|
மறச்செயல்களும் அன்பின் ஆட்சியாலேயே நடைபெறுகின்றன.
அறச்செயல்கள் மட்டுமே அன்பு சார்ந்தன எனக் கூறுவர் சிலர். அவர்கள் அறியாதவர்கள்; மறச்செயல்கள் நிகழ்வதற்கும் அன்பே துணை செய்கிறது.
அன்பின் தன்மை அறியாதவரே அது அறச்செயல்களைச் சார்ந்தே அமையும் என்பர். ஆனால் வீரச் செயல்களுக்கும், தீயச் செயல்கள் என்று கருதப்படுவனவற்றிற்கும் கூட அவ்வன்பு துணையாதல் உண்டு.
அறம் என்பது அறவாழ்வைக் குறிக்கும் சொல்; இது பொதுவாக நற்செயல்களைச் சுட்டி நிற்பது. மறம் என்ற சொல் அறம் என்பதற்கு எதிர்ச்சொல்லாக ஆளப்பட்டுள்ளதாக உள்ளது இக்குறளமைப்பு. மறம் என்பது இங்கு வீரச்செயல்களைக் குறிக்க வந்ததெனவே பலரும் கூறுவர்.
இவ்வாறாக இக்குறளிலுள்ள அறம், மறம் என்ற சொற்கள் முறையே நற்செயல்கள், வீரச்செயல்கள் செயல்கள் இவற்றைக் குறிப்பனவாக உள்ளன.
வீரச் செயல்கள் எல்லாம் அன்பு சார்ந்தனவாக இருப்பதில்லை. அன்பற்ற மறச்செயல்களும் நிகழ்வதுண்டு.
நற்செயல்கள் உண்டாவதற்கு மட்டுமன்றி மறத்திற்கும் அன்புதான் தூண்டுகோலாக உதவுகிறது என்கிறது இக்குறள்.
இதனால் அன்பு, அறம், மறம் என்பவை ஒன்றோடொன்று இணைந்தும் கலந்தும் இருப்பனவாகின்றன.
குறளின் முதற் பகுதி அறவாழ்விற்கு அன்பு துணையாகிறது என்கிறது. இது எளிதில் புரிந்து கொள்ளக்கூடியது. பிற்பகுதியான 'அன்பின் துணையாலேயே மறமும் நிகழ்கிறது' என்பதில் உள்ள மறம் என்ற சொல் வன்செயல்களையும் உள்ளடக்கியிருப்பதால் அதை விளக்குவதில் இடர் உண்டாகிறது.
அன்பு என்பது சார்புச் சொல்; சில வேளைகளில் அன்புச் செயல் ஒருவர்க்கு அறமாகவும் மற்றவர்க்கு மறமாகவும் அமையலாம் என்பது ஒருவகை விளக்கம்.
தொடர்புடையார் மீதான அன்பு காரணமாகத் தனி மனிதன் களவு போன்ற அறமல்லாத செயல்களை மேற்கொள்கிறான்; நலிந்தவர்கள் மீதான பரிவு காரணமாக வன்முறையாளர்கள் என்று அடையாளம் காட்டப்படுகிறவர்கள் கொடுஞ்செயல்களையும் மேற்கொள்கின்றனர்; போர்மறவர்கள் பகைவரை உயிர்க்கொலை செய்தலும் தன் நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்றும் அன்பின் சார்பாக அமைந்தனவே. இவ்வாறாக அறமற்ற செயல்கள் என்று ஒருசாரார்க்குத் தோன்றுவன அச்செயல்களைப் புரிவோருக்கு வேறுவகையாகத் தெரிகின்றன.
வீரச்செயலுக்குச் சார்பான அன்பு போற்றப்படுவது; தீச்செயலுக்குச் சார்பாம் அன்பு பழிக்கப்படுவது என்னும் விளக்கம் மேற்சொன்ன இடர் நீக்கும்.
அறச்செயல்களானாலும் அல்லது மறச் செயல்களானாலும் அவற்றின் பின்னிருந்து இயக்குவது அன்பாகத்தான் இருக்கவேண்டும் என்பதைச் சொல்லவந்த பாடல் இது.
|
'மறத்திற்கும்' என்ற சொல் குறிப்பதென்ன?
மறம் என்ற சொல்லுக்கு வீரம் என்றும் தீச்செயல் (பாவச்செயல்) என்றும் பொருள் கூறுவர். அது அறமற்றது எனவும் பொருள்படும்.
வீரம் என்பது தீமையை அழிக்கும் வல்லமையாகும்; தீச்செயல் என்பது வன்முறை அல்லது அறமற்ற செயல்களில் ஈடுபடுவதைக் குறிப்பது.
இவ்வேறுபாடுகளால் உருவான சில உரைக் கருத்துக்கள்:
- ஒருவன் செய்த பகைமைபற்றி உள்ளத்து மறம் நிகழ்ந்துழி, அவனை நட்பாகக் கருதி அவன் மேல் அன்புசெய்ய அது நீங்குமாகலின், மறத்தை நீக்குதற்கும் துணையாம்.
- அறிவில்லார் செய்யும் மறத்தையும் அன்பு வெல்லும்.
- ஈண்டுப் பாவமாகிய மறத்திற்கும் அவ்வன்பே துணை.
- தம் மனைவிமக்கள் முதலியோரிடத்து வைத்த அன்பினால், அவர்கள் வேண்டுவனவற்றை அறவழியாற் பெற்றுத் தரவியலாவிடத்து கொலை களவு முதலிய மறவழியால் அவற்றைச் கைக்கொண்டு தருவோர் உளராதலை உலக நிகழ்ச்சியிற் கண்டு பாவத்திற்கு அன்பு துணையாதல் அறிக.
- தன்னலம் கருதாது அறத்தை ஒருவன் செயல்படுத்த வேண்டும் என்றால் அவனுக்குள் மறம் என்னும் வீரம் இருக்க வேண்டும். வீரம் உள்ளவன் தான் அன்பு செய்ய முடியும். அறம் இல்லாதவனுக்கு அன்பு தெரியாது. தன்னுள் மன உறுதியோடு கூடிய வீரன்தான் அறத்திலும் அன்பு செய்ய உறுதியாக இருக்க முடியும். கோழைக்கு அன்பு, அறம் தெரியாது
- தீமைகளைக் கண்டும் பொறுத்துக் கொள்ளுதல் அன்பு அல்ல; அவைகளை ஆற்றாது கடிதல், ஒறுத்தல் போன்ற அன்பற்றமை போலத் தோன்றும் மறச் செயல்களை மேற்கொள்தலும் அன்பால் விளைவன. தேவைப்பட்டால் வன்முறையால்கூட அவர்களைத் திருத்தலாம்.
இவ்வாறாக 'மறத்திற்கும்' என்பது வீரச்செயல் புரிதலுக்கும், தீச்செயல் நீக்குதலுக்கும், தீமை உண்டாவதற்கும், வன்செயல் முற்படுதலுக்கும் என்று வெவ்வேறு வகையில் விளக்கப்பட்டது.
மறத்திற்கும் அன்பே துணை எனச் சொல்வது குறளின் பிற்பகுதி. அன்பு என்னும் நற்பண்பு தீச்செயல்களுக்குப் பயன்படுதல் ஆகாது என்பதுவே வள்ளுவமாக இருக்கும். அறமற்ற செயல்களுக்கும் அன்பு துணையாகும் என்று வள்ளுவர் சொல்லமாட்டாராதலால் மறம் என்பதை அவர் வீரம் என்ற பொருளிலேயே இக்குறளில் ஆள்கிறார் என்று பலர் கருத்துரைத்தனர். மறமானது தீமையை யொழிக்கும் கருவி என அமைதி கூறுவர் இவர்கள்.
அறம்-மறம் என இணைத்துரைக்கப்பட்ட மற்றொரு குறளான அறன்இழுக்காது அல்லவை நீக்கி மறன்இழுக்கா மானம் உடையது அரசு (இறைமாட்சி 384 பொருள்: அறத்திலிருந்து வழுவாமல் அறமல்லாதன நிகழவொட்டாமல் காத்து வீரத்தில் வழுவாது மானம் உடையதாக இருப்பது அரசு) என்றவிடத்தும் மறம் என்ற சொல் வீரம் என்ற பொருளிலேயே ஆளப்பட்டது.
மறம் என்பதற்கு வீரம் எனப் பொருள் கொள்ளும்போது தீமையை எதிர்க்கும் வீரச்செயல்களுக்கும் அன்பு துணையாகிறது அல்லது தூண்டுகோலாக உதவுகிறது என்னும் பொருள் கிடைக்கிறது. இதற்குப் பருந்திடமிருந்து தன் அன்புக் குஞ்சுகளைக் மீட்கக் கோழி பாய்ந்து தாக்குவதைக் காட்டாக்குவர்.
மெல்லியலாய் குடும்பப் பெண்ணாய் வளர்ந்த கண்ணகி தன் கணவன் மீது பொய்யான களவுக் குற்றம் சுமத்தப்பட்டு கொலையுண்ட அநீதியை உலகத்திற்கு உணர்த்த நாடாளும் மன்னனையும் எதிர்த்து வழக்குரைத்து ஊரை அழிக்கவும் ஆற்றல்பெறுமளவு அவள் நெஞ்சை வன்மையுறச் செய்தது கோவலனின் மீதான அன்பே காரணம்.
அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான் என்பரியும் ஏதிலான் துப்பு (பகைமாட்சி 862 பொருள்: அன்பில்லாதவன், பொருந்திய துணையில்லாதவன், தானே வலியில்லாதவன் பகைவனது வலிமையை எவ்வாறு தொலைப்பான்) என்னும் பின்வரும் குறள் ஒன்றில் பகையை வெல்ல அன்புடைமை தேவை எனச் சொல்லப்படும்.
முதலில் அறச்செயல்களுக்கு அன்பு சார்பு என்று கூறி, அடுத்து அறத்திற்கு மறுதலையான சொல்லான மறத்தைப் பயன்படுத்தி மறச்செயல்களுக்கும் அன்புதான் காரணம் என்று அழுத்தம் கொடுத்து சொல்லப்படுகிறது. மறம் என்பது தீமையை வெல்லும் வீரத்தைக் குறிப்பதாக இருந்தாலும் அது வன்முறைச் செயல்களையும் உள்ளடக்கியதுமாகலாம். எனவேதான் மறத்திற்கும் என்பதிலுள்ள உம்மை.
'அறத்திற்கே' 'அஃதே' என்னும் ஏகார ஓசை அமைந்த சொற்களும், மறத்திற்கும் என்பதில் உள்ள உம்மையும் அவர் கூறவந்த இந்த நுட்பமான கருத்தை அழுத்தமாக வெளியிடத் துணை செய்கின்றன.
|
அன்பு அறச்செயல்களுக்கே சார்பாகும் என்று அறியாதார் சொல்வர்; மறச்செயல்களுக்கும் அவ்வன்பே துணையாக நிற்கிறது என்பது இக்குறட்கருத்து.
உயிர்களின் இயக்கங்கள் அனைத்தும் அன்புடைமை சார்ந்தனவே.
அறம் மட்டும்தான் அன்போடு பொருந்தி நிற்பது என்பவர்கள் அறியாதவர்கள்; மறத்திற்கும் அவ்வன்பே துணையாகும்.
|