இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0078அன்புஅகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று

(அதிகாரம்:அன்புடைமை குறள் எண்:78)

பொழிப்பு (மு வரதராசன்): அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழக்கை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது.

மணக்குடவர் உரை: தன்னிடத்து அன்பில்லாத உயிரினது வாழ்க்கை வலிய பாரிடத்து (பாறை) உண்டாகிய உலர்ந்த மரம் தளிர்த்தாற் போலும்.
தளிர்த்தற்குக் காரணமின்மையால் தளிராதென்றவாறு.

பரிமேலழகர் உரை: அகத்து அன்பு இல்லா உயிர் வாழ்க்கை - மனத்தின்கண் அன்பு இல்லாத உயிர் இல்லறத்தோடு கூடி வாழ்தல்; வன்பாற்கண் வற்றல் மரம் தளிர்த்தற்று - வன்பாலின்கண் வற்றல் ஆகிய மரம் தளிர்த்தாற் போலும்.
(கூடாது என்பதாம். வன்பால் - வல்நிலம். வற்றல் என்பது பால் விளங்கா அஃறிணைப் படர்க்கைப் பெயர்.)

வ சுப மாணிக்கம் உரை: நெஞ்சத்தில் அன்பின்றி வாழமுடியுமா? பாலை நிலத்தில் பட்டமரம் தளிர்க்குமா?


பொருள்கோள் வரிஅமைப்பு:
அன்புஅகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று.

பதவுரை: அன்பு-தொடர்புடையார்மாட்டு உள்ள நெகிழ்ச்சி; அகத்து-உள்ளே; இல்லா-இல்லாத; உயிர்-உயிர்; வாழ்க்கை-வாழ்தல்; வன்-வலியதாகிய; பாற்கண்-நிலத்தில்; வற்றல்-உலர்ந்தாகிய; மரம்-மரம்; தளிர்த்து-தளிர்த்து, கொழுந்துவிட்டு; அற்று-போலும், அத்தன்மைத்து.


அன்புஅகத்து இல்லா உயிர்வாழ்க்கை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தன்னிடத்து அன்பில்லாத உயிரினது வாழ்க்கை;
பரிப்பெருமாள்: தன்னிடத்து அன்பில்லாத உயிரினது வாழ்க்கை;
பரிதி: அன்பு மனத்திடத்து இல்லாதார் உயிர்வாழ்க்கை நிலைபெறும் என்பது எத்தன்மை யென்னில்;
காலிங்கர்: யாவர் மாட்டும் அன்பானது தன்னெஞ்சத்து இல்லாது உயிருடலொடு வாழ்கின்ற வாழ்க்கை;
பரிமேலழகர்: மனத்தின்கண் அன்பு இல்லாத உயிர் இல்லறத்தோடு கூடி வாழ்தல்;

'மனத்திடத்து அன்பில்லாத உயிரினது வாழ்க்கை' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிமேலழகர் 'மனத்தின்கண் அன்பு இல்லாத உயிர் இல்லறத்தோடு கூடி வாழ்தல்' என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'உள்ளத்தில் அன்பில்லாத உயிர் வாழ்தலென்பது', 'மனதில் அன்பில்லாத மனிதனுடைய வாழ்க்கை', 'உள்ளத்தில் அன்பில்லாத உயிர்கள் சிறப்புற வாழ்தல்', 'மனத்தின்கண் அன்பில்லாத உயிர் இல்லறத்தில் வாழ்தல்' என்ற பொருளில் உரை தந்தனர்.

உள்ளத்தில் அன்பு இல்லாமல் இல்லறவாழ்வு நடாத்துதல் என்பது இப்பகுதியின் பொருள்.

வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வலிய பாரிடத்து (பாறை) உண்டாகிய உலர்ந்த மரம் தளிர்த்தாற் போலும்.
மணக்குடவர் குறிப்புரை: தளிர்த்தற்குக் காரணமின்மையால் தளிராதென்றவாறு.
பரிப்பெருமாள்: வலிய பாரிடத்து (பாறை) உண்டாகிய உலர்ந்த மரம் தளிர்த்தாற் போலும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: தளிர்த்தற்குக் காரணமின்மையால் தளிராதென்றவாறு. இது அன்பிலாதார்க்கு ஆக்கமில்லை என்றவாறு.
பரிதி: வன்பாலாகிய பாறையிலே பட்டமரம் தழையும் தன்மையாம்.
காலிங்கர்: ('வன்பார்க்கண்' - பாடம்) கற்செறிந்து வற்கென்ற தரையின்கண் நிற்கின்ற வறலாகிய மரம் பின்பு தளிர்த்த 'அத்தன்மை போல இவனுக்கும் வெறும் தோற்றமே அன்றிப் பின் ஆக்கமில்லை என்பது கருத்து என்றவாறு.
பரிமேலழகர்: வன்பாலின்கண்வற்றல் ஆகிய மரம் தளிர்த்தாற் போலும்.
பரிமேலழகர் குறிப்புரை: கூடாது என்பதாம். வன்பால் - வல்நிலம். வற்றல் என்பது பால் விளங்கா அஃறிணைப் படர்க்கைப் பெயர்.

'வலிய பாறையில் உலர்ந்த மரம் தழையும் தன்மையாம்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பாலை நிலத்தில் வற்றல் மரம் தளிர்த்துச் செழித்தல் போலும்', 'கெட்டியான தரையில் முளைத்துவிட்ட மரம் தழைத்துச் செழிக்கும் என்று எதிர்பார்ப்பதைப் போன்றது', '(பாறை போன்ற) வன்மையுடைய நிலத்தின்கண் பட்டுப்போன மரம் தழைத்தாற் போலும்', 'வலிய பாலை நிலத்தில் வற்றல் மரம் தளிர் விட்டதை ஒக்கும். (பாலை நிலத்தில் வற்றல் மரம் தளிரும் விடாது, அன்பில்லாதவர் இல்லறத்தில் சிறந்த வாழவும் மாட்டார்)' என்றபடி பொருள் உரைத்தனர்.

வலிய நிலத்தில் நிற்கின்ற வற்றல் மரம் தளிர்த்தாற் போலும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
உள்ளத்தில் அன்பு இல்லாமல் இல்லறவாழ்வு நடாத்துதல் வன்மையுடைய நிலத்தின்கண் வற்றல் மரம் தளிர்த்தற்று என்பது பாடலின் பொருள்.
இக்குறள் கூறும் செய்தி என்ன?

ஈரமில்லா நெஞ்சினரிடத்து அன்பு எப்படி மலரும்?

உள்ளத்திலே அன்பு இல்லாதவருடைய வாழ்க்கையானது, வன்மையான வறண்ட நிலத்திலே உலர்ந்த மரம் தளிர்த்தாற் போன்றது.
உள்ளத்தன்பில்லாத வாழ்க்கை, கெட்டியான நிலத்தில், வற்றல் மரம் தளிர்த்தல் என்று நகைச்சுவைபட ஓர் உவமை மூலம் விளக்கப்பட்டது. அங்கு தளிர்த்தற்குக் காரணம் எதுவும் இல்லையாதலால் தளிர்க்க மாட்டாது தவிக்கும்; வேரில் ஈரமில்லாததால் செழிப்பாகத் தழைக்காது என்பது கருத்து.

அன்புஅகத்து இல்லா உயிர்வாழ்க்கை:
அகத்து என்ற சொல்லுக்கு உள்ளத்துள் என்று பொருள். உயிர் வாழ்க்கை என்பதற்கு உயிரினது வாழ்க்கை, உயிருடலொடு வாழ்கின்ற வாழ்க்கை, உயிர் இல்லறத்தோடு கூடி வாழ்தல், இல்லறத்திலே இருந்து வாழ்கிறது, இல்வாழ்க்கை நடத்துதல் என்றவாறு பொருள் கூறினர். அன்பு என்பது தொடர்புடையார்கண் விளைவதாதலால் உயிர் வாழ்க்கை என்றது இல்லறவாழ்வு பற்றியது எனக் கொள்வது பொருத்தமே. எனவே 'அன்புஅகத்து இல்லா உயிர்வாழ்க்கை' என்றது உள்ளத்தில் அன்பு இல்லாதவர்கள் இல்லறத்தோடு கூடி வாழ்தலைச் சொல்வதாகிறது. இங்கு மனதில் அன்பில்லை என்று சொல்லப்படுவதால் அன்பு காட்டாத உயிர்வாழ்வு குறிக்கப்பெறுகிறது.
'அன்பகத்து இல்லா' என்றதற்கு 'அன்பை வெளிப்படுத்தாத உள்ளம்' அதாவது அன்பை வெளிப்படுத்த வேண்டியபோது வெளிப்படுத்த வேண்டிய இடத்தில் வெளிப்படுத்தாத உள்ளம் என்றும் விளக்குவர்.

வன்பாற்கண் வற்றல் மரம் தளிர்த்தற்று:
வன்பாற்கண் என்றது வன்பால்+கண் என விரியும். வன்பால் என்பது வன்னிலத்தைக் குறிப்பது. வன்பாற்கண் என்பது மரம், செடி, கொடிகள், போன்றவை வளர்வதற்குக் கடினமான, நீர்வளம் இல்லாத வறட்சியான இடத்து எனப் பொருள்படும். வன்பால் என்பதற்கு வன்பார் என்ற பாடமும் உண்டு. வன்பார் என்பது வலிய பாறை என்று பொருள்படும். பாறைமீது மழை பெய்தாலும் அதை உழுது வெட்டினாலும் மெலிதாதல் எப்பொழுதும் இல்லையாகவே மரம் தளிர்க்க வாய்ப்பேயில்லை. எனவே இப்பாடமும் பொருத்தமே. காலிங்கர் ‘வன்பார்’ என்றதற்கு, ‘கல்செறிந்து வற்கென்ற தரை’ என்று பொருள் கூறுவார்.
வற்றல் என்ற சொல்லுக்கு வற்றிய அல்லது வேனில் வெப்பத்தால் உலர்ந்த என்பது பொருள். வற்றல் மரம் என்பதற்கு வெயிலின் கடுமையால் உலர்ந்துபோன மரம், பசுமையற்றுப் பட்டுப்போன மரம் என விளக்கம் தருவர். வற்றல் மரம் என்பது இலையும் தளிரும் இல்லாத வெறுங்கிளைகளாகவே தழைக்கக் கூடிய ஒருவகை மரம் என்றும் கூறினர்.
தளிர்த்து என்ற சொல் தழைத்து வளர்தல் என்பதைக் குறிக்கும்.
அற்று என்ற சொல் போலும் என்ற ஒப்புமை நோக்குவது.
'வன்பாற்கண் வற்றல் மரம் தளிர்த்தற்று' என்பது வலிய நிலத்தில் நிற்கும் உலர்ந்த மரம் தளிர்த்தது போலும் என்னும் பொருள் தருவது.

இக்குறள் கூறும் செய்தி என்ன?

இக்குறள் அமைப்பு 'அன்பில்லாமல் குடும்பத்துள் எப்படி வாழமுடிகிறது?' எனக் கேட்பதுபோல் உள்ளது.
அன்பற்று இல்லறத்துள் வாழமுடியாது என்பது ஒரு உவமை மூலம் விளக்கப்படுகிறது. ௮ன்பிலாமல் இருத்தற்கு உவமம்‌ நீர் இல்லா சூழல். மரத்துக்குச் செழிப்பான நிலமும் நல்ல நீரும் தேவையோ அப்படி உயிருக்கு அன்பும் நல்ல உள்ளமும் தேவை. அன்பில்லாதவர்கள் வறட்சியான இடத்திலுள்ள வளர்ச்சி தடைப்பட்ட பட்ட மரத்தைப் போலிருப்பர். பட்ட மரம் தளிர்த்தலே அரிது. அதிலும் கெட்டியான நிலத்தில் அது தளிர்த்தற்கு வாய்ப்பு உண்டோ? அது போலவே அன்பு எனும் ஈரம் இல்லாத இறுகிய மனம் கொண்ட அன்பில்லாதவனது வாழ்க்கையும் செழுமையுறாது; அன்பில்லாதவர் உயிரற்ற தோற்றம் தருவர். இவ்வாறு அன்பகத்தில்லா உயிர் வாழ்க்கையின் இழிவு கூறப்பட்டது.

இப்பாடல் அன்பிலாதார்க்கு இல்லறவாழ்வு பொருந்தி வராது என்பதைச் சொல்ல எழுந்தது.
இறுகிய நிலம், பட்டமரம் ஆகிய சொற்கள் தளிர்ப்பதற்குக் குறைவான வாய்ப்புக்களே உள்ளன என்பதைத் தெரிவிக்கிறது. அன்பகத்தில்லா உயிர் வாழ்க்கை வற்றல் மரம் போன்றது என்று கூறாமல் வற்றல் மரம் தளிர்த்தல் போன்றது எனப் பெருக்கிக் கூறுகிறது பாடல். பாறைநிலத்தில்‌ வற்றல்‌ மரத்திற்குக்‌ துளிர்விட்டுச்‌ செழித்தல்‌ இல்லை என்ற உவமை ஆளப்பட்டதால் வன்பார் வற்றல் மரம் போலவே அன்பில்லாதவர் இல்வாழ்வில் இன்பம் துளிர்க்காது என்பது சொல்லப்படுகிறது.
வற்றல் மரம் என்னும் சொற்றொடரே அதன் பசுமை நீங்கிய, வாடிய, இரங்கத்தக்க நிலையை நன்கு படம் பிடித்துக் காட்டுகிறது. அன்பு இல்லாதவர் தோற்றமும் அது போன்றே உயிரற்று, எவரும் ஏறெடுத்துப் பார்க்க இயலாதவகையில் அமையும்.
அன்பும் உறவும் காட்டிக் கூடிவாழ வேண்டிய வாழ்வு. அந்நெறியிலிருந்து விலகியதால் வறண்ட பாலைவனமாகி விடுகிறது. அன்பைச் சொரிதற்குரிய வாய்ப்பையும் அன்பைப் பெறுதற்குரிய வாய்ப்பையும் இல்வாழ்வார் இழந்து விடுகின்றமையால் வாழ்வு வற்றல் மரம் போலச் சாரமற்றது ஆகிவிடுகிறது.

தளிர்ப்பது மிகவும் கடினம் என்றாலும் அன்பு என்னும் ஈரம், உள்ளத்தே சுரந்தால் வறட்டுத்தன்மை நீங்கி. அவர்களாலும் பசிய மரம் தழைப்பதுபோல குளிர்ச்சியாகவும் மலர்ச்சியாகவும் அன்பு செலுத்தி பழக இயலும் என்னும் கருத்தைத் தருவதாகவும் இக்குறளைக் கொள்ளலாம்.
தளிர்த்தற்று என்பது 'தளிர்க்கலாமே!' என்று வற்றல் மரத்தைப் பார்த்து எண்ணுவதுபோலவும் அன்பிலாதாரிடம் அன்பு மலரலாமே என்று எதிர்பார்ப்பதையும் தெரிவிப்பதாக உள்ளது இது. அவர்களின் வாழ்க்கை இனிமையுறும் வாய்ப்பு முற்றிலும் இற்றுப் போய்விடவில்லை. அகத்து ஈரம் சுரந்தால் அதிலுள்ள வறட்சி நீங்கி உயிர்வாழ்க்கை செழித்தோங்கும் என்பது செய்தி.

இக்குறள் பற்றி உரையளர்கள் கூறிய கருத்துக்களிலிருந்து சில:

  • அன்பில்லாதவருக்கு இல்லறவாழ்வு கூடாது.
  • வற்றல் மரம் எப்படித் தளிர்க்காதோ அது போலவே மனத்தகத்தே அன்பில்லாதவரின் வாழ்க்கை சிறக்காது.
  • பசிய மரமே தளிர்த்து நிற்கும்; அதுபோல அன்புடைய வாழ்க்கையே செழுமையுடையதாகும்.
  • உயிரற்ற பட்டமரம் எக்காலத்திலும் எவ்வாறு தளிர்க்க முடியாதோ அதைப்போன்று உயிர்ப் பண்பாகிய அன்பில்லாதவருடைய வாழ்க்கை இந்த உலகில் இன்பம் நிறைந்து இனிய வாழ்வைப் பெறமுடியாது.
  • அன்பில்லாதவர் இல்லறத்தோடு கூடி வாழ்தல் கூடாது அதாவது அன்பில்லாதவருக்கு இல்லறவாழ்வு உகந்ததல்ல.
  • அன்பகத்தில்லாதவனது வாழ்க்கை பலைவனத்தில் வளர்ந்து தளிர்க்கும் வற்றல் மரம் போன்றது. வற்றல் மரம் எவரும் விரும்பிச் செல்லாத பாலை நிலத்தில் தோன்றி வளர்ந்து தளிர்க்கின்றது. தான் மட்டும் பசையோடு செழிப்புற்று வாழ்கிறது. அதனால் ஒருவர்க்கும் பயனில்லை. அந்த மரத்தைப் போல் அன்பில்லாதவனும் தான்மட்டும் உண்டு உடுத்து மகிழ்ந்து எவருக்கும் நன்மை செய்யாமல் வாழ்கிறான்.
  • அப்பெருமகனாரிடம் எல்லா வகையான செல்வங்களும் நிறைந்துள்ளன. ஆனால் அவர் பெற்ற மக்களிடத்திலேயே அவருக்குச் சிறுதும் அன்பு கிடையாது. அதனால் குடும்பத்தினரும் ஊராரும் அவரை வெறுத்துவந்தனர். அதன் விளைவாகத் தாம் ஒரு தனி மரமாகி விட்டதை அவர் உணர்ந்தார். ஆனால் மனிதப் பண்புகளுள் முதன்மையான அன்பு இல்லாத காரணத்தினால் தாம் பட்ட மரமாகப் போய்விட்டதை அவர் புரிந்து கொள்ளவில்லை.

உள்ளத்தில் அன்பு இல்லாமல் இல்லறவாழ்வு நடாத்துதல் வலிய நிலத்தில் நிற்கின்ற வற்றல் மரம் தளிர்த்தாற் போலும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

அன்புடைமை இல்லாதவரது இல்வாழ்வு தத்தளிப்புக்குள்ளாகும்.

பொழிப்பு

உள்ளத்தில் அன்பில்லாது உயிர் வாழ்தல் என்பது வன்மையுடைய நிலத்தின்கண் வற்றல் மரம் தளிர்த்தல் போலும்.