அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
(அதிகாரம்:அன்புடைமை
குறள் எண்:80)
பொழிப்பு (மு வரதராசன்): அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்; அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல் போர்த்த வெற்றுடம்பே ஆகும்.
|
மணக்குடவர் உரை:
உயிர்க்கு நிலைபேறு அன்பின் வழியதாகிய அறத்தினான் வரும். ஆதலால் அவ்வன்பில்லாதார்க்கு உளதாவது என்பின்மேல் தோலினால் போர்க்கப்பெற்ற உடம்பு
என்றவாறு.
இது வீடு பெறார் என்றவாறு.
பரிமேலழகர் உரை:
அன்பின் வழியது உயிர்நிலை - அன்பு முதலாக அதன் வழிநின்ற உடம்பே உயிர்நின்ற உடம்பாவது; அஃது இலார்க்கு உடம்பு என்பு தோல் போர்த்த - அவ்வன்பு இல்லாதார்க்கு உளவான உடம்புகள் என்பினைத் தோலால் போர்த்தன ஆம்; உயிர் நின்றன ஆகா.
(இல்லறம் பயவாமையின், அன்ன ஆயின. இவை நான்கு பாட்டானும் அன்பில்வழிப்படும் குற்றம் கூறப்பட்டது.)
இரா சாரங்கபாணி உரை:
அன்பினை அடிப்படையாகக் கொண்டு அதன் வழி நின்ற உடம்பே உயிருள்ள உடம்பு. அன்பில்லாதார்க்குள்ள உடம்பு எலும்பினைத் தோலால் போர்த்தனவாம். (நடைப்பிணம் போன்றது.)
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு.
பதவுரை: அன்பின் வழியது-அன்பின் வழியது, அன்பை அடிப்படையாகக் கொண்டது, வழியது-வழியே; உயிர்நிலை-உயிர் நிற்பது; அஃதிலார்க்கு-அது இல்லாதவருக்கு (அதாவது அன்பு இல்லாதவர்களுக்கு); என்பு-எலும்பு; தோல்-தோல்; போர்த்த-சுற்றி மூடிய; உடம்பு-உடம்பு.
|
அன்பின் வழியது உயிர்நிலை:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உயிர்க்கு நிலைபேறு அன்பின் வழியதாகிய அறத்தினான் வரும்;
பரிதி: அன்பின் வழியிலே நடப்பான் உயிர்நிலை நிற்கும்;
காலிங்கர்: யாவர் மாட்டும் அன்புடையராகிய இல்வாழ்வார்க்கு அன்பின் கண்ணதே உயிர்க்கு நிலைபேறானது;
பரிமேலழகர்: அன்பு முதலாக அதன் வழிநின்ற உடம்பே உயிர்நின்ற உடம்பாவது;
'அன்பின் கண்ணதே உயிர்க்கு நிலைபேறானது' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'உயிருடைய உடம்பாவது அன்புடைய வாழ்வு', 'அன்பு வழியில் நடந்துகொள்ளுகிறவர்களுடைய உடல் தான் உயிருள்ளது', 'உயிர் நிற்கின்ற உடம்பு அன்பு நெறியில் இயங்குவதாகும்', 'அன்பின் வழிச் செல்லுதலே உயிர் உள்ளமைக்கு அடையாளம்' என்ற பொருளில் உரை தந்தனர்.
அன்பின்வழி நிற்பது உயிர்கொண்ட வாழ்வு என்பது இப்பகுதியின் பொருள்.
அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஆதலால் அவ்வன்பில்லாதார்க்கு உளதாவது என்பின்மேல் தோலினால் போர்க்கப்பெற்ற உடம்பு என்றவாறு.
மணக்குடவர் கருத்துரை: இது வீடு பெறார் என்றவாறு.
பரிப்பெருமாள் கருத்துரை: இது வீடு பெறார் என்றவாறு. இத்துணையும் அன்பின்மையால் வரும் குற்றம் கூறியவாறு.
பரிதி: அன்பில்லார் உயிர் என்பும் தோலும் போர்த்த உடம்பு என்றவாறு.
காலிங்கர்: இனி இவ் அன்பில்லாதார்க்கு எல்லாம் என்பினைத் தோலால் பொதிந்து வைத்த உடம்பு. அதனால் அவர்க்கு ஒருபயனும் இல்லை என்றவாறு.
பரிமேலழகர்: அவ்வன்பு இல்லாதார்க்கு உளவான உடம்புகள் என்பினைத் தோலால் போர்த்தன ஆம்; உயிர் நின்றன ஆகா.
பரிமேலழகர் குறிப்புரை: இல்லறம் பயவாமையின், அன்னஆயின. இவை நான்கு பாட்டானும் அன்பில்வழிப்படும் குற்றம் கூறப்பட்டது. [அன்னவாயின-எலும்பில்லாத தோலால் மூடிய உடம்புகள் ஆயின. உயிர் நின்ற உடம்பாகா. பிணம் என்பது கருத்து]
'அன்பில்லாதார்க்கு என்பின்மேல் தோலினால் போர்க்கப்பெற்ற உடம்பு' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அன்பிலார் உடம்புகள் எலும்புத் தோல்கள்', 'அன்பில்லாத உடல் வெறுந்தோலால் மூடப்பட்ட எலும்புகள்தாம்', 'அன்பு இல்லாதவர்களது உடம்பு உயிர் நயமில்லாது தோலால் மூடப்பட்ட எலும்புக் கூடே', 'அன்பில்லாதார் உயிரோடு இருப்பினும் உயிரற்ற பிணங்களே போல்வர்' என்றபடி பொருள் உரைத்தனர்.
அன்பு இல்லாதவர்களது உடம்பு எலும்பைத் தோலால் பொதிந்து வைத்தது என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
அன்பின் வழியது உயிர்நிலை; அன்பு இல்லாதவர்களது உடம்பு எலும்பைத் தோலால் பொதிந்து வைத்தது என்பது பாடலின் பொருள்.
'அன்பின் வழியது உயிர்நிலை' குறிப்பது என்ன?
|
அன்பில்லாதவர் உயிர் இருந்தும் இல்லாதவர் என்றே எண்ணப்படுவார்.
அன்பின் வழியாக அமைந்ததே உயிர்நிலை என்பது; அன்பிலார்க்குள்ளது உயிரோடு கூடிய உடலன்று, அது எலும்பைத் தோலால் போர்த்த உடம்பு மட்டுமேயாகும்.
ஒருவருக்கு உயிர் இருக்கிறது என்பதற்கு அடையாளமே அவர் அன்புடையராயிருத்தல்தான்.
அன்பே உயிர்; அன்பின் வழியாகத்தான் உயிர் உடம்பில் நிலைத்திருக்கிறது; அன்பில்லாதவர்கள் எலும்பைத் தோலால் போர்த்திய வெறும் உடம்பைக் கொண்டவர்கள்தாம் என்கிறது இக்குறள். மாந்தரின் உடம்பு இரண்டுவகையாகப் பிரித்துப் பேசப்படுகிறது. ஒன்று உயிர் நிற்கும் உடம்பு. மற்றொன்று உயிர் நில்லா உடம்பு. அன்பின்வழி நடப்பது உயிர் நிற்கும் உடம்பு என்றும் மற்றையது என்பினைத் தோலால் பொதிந்து வைத்த வெறும் தோல்கள் போன்றவை என்றும் சொல்லப்படுகிறது. அன்பின் வழியது உயிர்நிலை என்றதால் அன்பே உயிர் காத்துப் பேணும் ஆற்றல் கொண்டது என்பதும் அதுவே வாழ்வைத் தருவது என்பதும் பெறப்படும். அன்புடையது உயிருள்ள உடம்பு; அன்பில்லாதது உயிரில்லா உடம்பு.
முன்பு அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு (73) என்று கூறப்பட்டது. அதை உறுதிப்படுத்துவதாக இப்பாடல் அமைந்தது.
ஒருவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பதை அறிய அவர் விடுகிற மூச்சுக்காற்று வழியாலோ, இதயத்துடிப்பு வழியாகவோ அல்லது குருதி ஓட்டம் வழியாகவோ மருத்துவர் முடிவு கட்டுவர். ஆனால் அன்பின் வழியாக மட்டுமே ஒருவருக்கு உயிர் உள்ளதா அன்றி இல்லையா என்பது அறியப்படவேண்டும் என்று வள்ளுவர் கூறுகிறார். அன்பில்லாதவர் உயிருடன் கூடிய பிணத்தை ஒப்பர். அன்பற்றவர் வாழ்க்கை ஒளிர்வதில்லை; இன்பமாக அமைவதில்லை; அவர் வாழ்வுக்குப் பொருளும் இல்லை. அவர் உளர் எனினும் இல்லாதவரே. எனவே அது நடைப்பிணம். உயிர்த்திருக்கும் எல்லோரும் அன்புடையவராய் இருக்கவேண்டும் என்பது கருத்து.
|
'அன்பின் வழியது உயிர்நிலை' குறிப்பது என்ன?
'அன்பின் வழியது உயிர்நிலை' என்ற தொடர்க்கு உயிர்க்கு நிலைபேறு அன்பின் வழியதாகிய அறத்தினான் வரும், அன்பின் வழியிலே நடப்பான் உயிர்நிலை நிற்கும், யாவர் மாட்டும் அன்புடையராகிய இல்வாழ்வார்க்கு அன்பின் கண்ணதே உயிர்க்கு நிலைபேறானது, அன்பு முதலாக அதன் வழிநின்ற உடம்பே உயிர்நின்ற உடம்பாவது, அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும், உடலில் உயிர் நிலைபெறுவது அன்பின் வழிப்பட்டதேயாகும், அன்பின் வழி நின்று ஒழுகும் உடம்பே உடம்பென்று வழங்கப் பெறும், உயிருடைய உடம்பாவது அன்புடைய வாழ்வு, அன்பினை அடிப்படையாகக் கொண்டு அதன் வழி நின்ற உடம்பே உயிருள்ள உடம்பு, அன்புடையவர்களாக நடந்து கொள்ளுகிற மனிதர்கள் தாம் உயிருள்ளவர்கள், அன்புடன் கூடிய உடலே உயிருடன் கூடிய உடல், உயிர் நிற்கின்ற உடம்பு அன்பு நெறியில் இயங்குவதாகும், அன்பின் வழிச் செல்லுதலே உயிர் உள்ளமைக்கு அடையாளம், அன்பின் வழிநின்ற உடலே உயிரோடு கூடிய உடலாகும், அன்பின் வழிப்பட்ட உடம்பே உயிர்நிலை என்று சிறப்பித்துச் சொல்லப் பெறுவது, அன்பின் வழியாகத்தான் உயிர் உடம்பில் நிலைத்திருக்கிறது, அன்புள்ளவனே உயிருடன் இருக்கிறவன், அன்பு நெறியிலே நடப்பான் உயிர் நிலைநிற்கும், அன்பு உறுப்பாக நின்ற உடம்பே உயிர்நின்ற உடம்பாவது என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
அன்புடைய வாழ்வு நடத்துபவனே உயிருடைய உடம்பைக் கொண்டவனாவான் அதாவது அன்பூறினால்தான் அது உயிருள்ள உடம்பாம். உயிர் நிற்றற்கு இடமாக இருத்தலால் உடம்பு உயிர்நிலை எனவும் கூறினர். இதன் பொருள் உயிர்நின்ற உடம்பு அன்பு நெறியில் இயங்குவது என்பது. அன்பே உயிரின் நிலைக்களன்; அது இல்லாதவர் உளரெனினும் இல்லாரோடு ஒப்பர் என்பது கருத்து.
உயிர்நிலை என்பதற்கு உயிர் இருத்தலைக் காட்டும் நிலை என்றும் உயிர்துடிப்பு என்றும் பொருள் காண்பர்.
உண்ணாமை உள்ளது உயிர்நிலை... (புலால்மறுத்தல் 255 பொருள்: உயிருக்கு உறுதியான நிலை, ஊன் உண்ணாமையால் உள்ளது..) கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை..... (கள்ளாமை 290 களவு செய்வார்க்கு உயிர்வாழும் வாழ்வும் தவறிப்போகும்...) என்ற பாடல்களிலும் உயிர்நிலை என்ற சொல் இதே பொருளிலிலேயே ஆளப்பட்டுள்ளது.
'அன்பின் வழியது உயிர்நிலை' என்பதற்கு உயிர் நிலைகொண்டு இருப்பது அன்பின் வழியே என்பது பொருள்.
|
அன்பின்வழி நிற்பது உயிர்கொண்ட வாழ்வு; அன்பு இல்லாதவர்களது உடம்பு எலும்பைத் தோலால் பொதிந்து வைத்தது என்பது இக்குறட்கருத்து.
உயிர்த் தோற்றம் என்பது அன்புடைமையின் தோற்றமே.
அன்பின் வழி நிற்பது உயிர் வாழ்வு; அன்பு இல்லாதார்க்குள்ள உடம்பு எலும்பினைத் தோலால் போர்த்தியதாகும்..
|