இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0073



அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.

(அதிகாரம்:அன்புடைமை குறள் எண்:73)

பொழிப்பு (மு வரதராசன்): அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழ்ந்த வாழ்க்கையின் பயன் என்று கூறுவர்.

மணக்குடவர் உரை: முற்பிறப்பின்கண் அன்போடு பொருந்தச் சென்ற செலவென்று சொல்லுவர்; பெறுதற்கரிய வுயிர்க்கு இப்பிறப்பின்கண் உடம்போடு இடைவிடாத நட்பினை.

பரிமேலழகர் உரை: ஆர் உயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு - பெறுதற்கு அரிய மக்கள் உயிர்க்கு உடம்போடு உண்டாகிய தொடர்ச்சியினை; அன்போடு இயைந்த வழக்கு என்ப - அன்போடு பொருந்துதற்கு வந்த நெறியின் பயன் என்று சொல்லுவர் அறிந்தோர்.
(பிறப்பினது அருமை பிறந்த உயிர்மேல் ஏற்றப்பட்டது. 'இயைந்த' என்பது உபசார வழக்கு; வழக்கு: ஆகுபெயர். உடம்போடு இயைந்தல்லது அன்பு செய்யலாகாமையின், அது செய்தற் பொருட்டு இத்தொடர்ச்சி உளதாயிற்று என்பதாம். ஆகவே இத்தொடர்ச்சிக்குப் பயன் அன்புடைமை என்றாயிற்று.)

தேவநேயப் பாவாணர் உரை: பெறுதற்கரிய மக்களுயிர்க்கு உடம்போடு பொருந்திய தொடர்பை அன்பு செய்தற்கு ஏற்பட்ட நெறியின் பயன் என்று கூறுவர் அறிவுடையோர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு அன்போடு இயைந்த வழக்கென்ப.

பதவுரை: அன்போடு-அன்புடன்; இயைந்த-பொருந்திய, இணங்கிய; வழக்கு-நெறி, வழி, பழக்க முறை, பயன், முறைமை; என்ப-என்று சொல்லுவர்; ஆருயிர்க்கு-அருமையான உயிருக்கு; என்போடு-உடம்போடு, எலும்புடன் கூடிய உடலோடு; இயைந்த-உண்டாகிய; தொடர்பு- உறவு, தொடர்ச்சி.


அன்போடு இயைந்த வழக்கென்ப:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: முற்பிறப்பின்கண் அன்போடு பொருந்தச் சென்ற செலவென்று சொல்லுவர்;
பரிப்பெருமாள்: முற்பிறப்பின்கண் அன்போடு பொருந்தச் சென்ற செலவென்று சொல்லுவர்;
பரிதி: உயிர்க்கும் அன்பினாலே ஆதாரம் பெறில் நிலைபெறும் என்றவாறு.
காலிங்கர்: உலகத்தின்கண் பல உயிர்கட்குத் தான்வைத்த அன்பொடு பொருந்திய உயிர்கள் முறைமை என்று சொல்லுவர் சான்றோர்.
பரிமேலழகர்: அன்போடு பொருந்துதற்கு வந்த நெறியின் பயன் என்று சொல்லுவர் அறிந்தோர்.

மணக்குடவர் முற்பிறப்பில் கொண்ட அன்போடு இணைத்துப் பொருள் காண்கிறார். பரிதி உயிர்க்கு ஆதாரம் அன்பாக இருக்கவேண்டும் என்று எழுதினார். காலிங்கர் பல உயிர்களுக்கு அன்புடன் உயிர்த்தொடர்பு உண்டு என்கிறார். பரிமேலழகர் பொருந்துதற்கு வந்த நெறியின் பயன் என விளக்குகிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'இருவர் அன்புத்தொடர்பால் வந்தது என்பர்', 'அன்போடு பொருந்திய நெறியின் பயன் என்பர். (பெற்றோர் கொண்ட அன்பே மக்கட்பிறப்புக்குக் காரணம் என்பது கருத்து)', '(அன்புடைமைதான் மனிதனை மனிதனாக்குவது) அன்போடு கூடிய வாழ்க்கைதான்', 'அன்போடு பொருந்திய ஒழுக்கத்தின் பொருட்டே யாமென்று அறிஞர் கூறுவார்கள்' என்ற பொருளில் உரை தந்தனர்.

அன்பின் கூட்டுறவால் உண்டான வாழ்வுநெறி என்று கூறுவர் என்பது இப்பகுதியின் பொருள்.

ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பெறுதற்கரிய வுயிர்க்கு இப்பிறப்பின்கண் உடம்போடு இடைவிடாத நட்பினை.
பரிப்பெருமாள்: பெறுதற்கரிய வுயிர்க்கு இப்பிறப்பின்கண் உடம்போடு இடைவிடாத நட்பினை.
பரிப்பெருமாள் குறிப்புரை: என்பு ஆகுப்பெயர். இது நெடிது வாழ்வர் என்றவாறு. [என்பு என்னும் சினைப்பெயர் அதனையுடைய உடம்பிற்கு ஆதலின் சினையாகு பெயர்]
பரிதி: உடலாவது நவதாதுவினால் ஆதாரம் பெற்ற தன்மைபோல. [நவதாது- தோல், இரத்தம் இறைச்சி மேதை எலும்பு மச்சை சுவேதநீர் வியர்வை நரம்பு என்பன]
காலிங்கர்: அது எங்ஙனம் எனின் அன்புடையாளனுக்குத் தன் உடம்பொடு பொருந்திய உயிரினது தொடர்ச்சியினைப் போல என்றவாறு.
அல்லதூஉம் அன்புடைமை நிறைய வருமளவும், உடம்புக்கும் உயிருக்கும் உறவாய் நின்று பின்பு வீட்டின்பத்தைப் பெறும் என்றவாறு.
பரிமேலழகர்: பெறுதற்கு அரிய மக்கள் உயிர்க்கு உடம்போடு உண்டாகிய தொடர்ச்சியினை.
பரிமேலழகர் குறிப்புரை: பிறப்பினது அருமை பிறந்த உயிர்மேல் ஏற்றப்பட்டது. 'இயைந்த' என்பது உபசார வழக்கு; வழக்கு: ஆகுபெயர். உடம்போடு இயைந்தல்லது அன்பு செய்யலாகாமையின், அது செய்தற் பொருட்டு இத்தொடர்ச்சி உளதாயிற்று என்பதாம். ஆகவே இத்தொடர்ச்சிக்குப் பயன் அன்புடைமை என்றாயிற்று. [அருமை+உயிர்=ஆருயிர். இதில் அருமை எனும் அடைமொழி உயிரைத் தழுவியுள்ளது; வழக்கினால் ஆய பயனை வழக்கு என்பது காரணவாகுபெயர்]

'பெறுதற்கரிய வுயிர்க்கு இப்பிறப்பின்கண் உடம்போடு இடைவிடாத நட்பினை' என்று மணக்குடவர் பொருள் தருகிறார். ஆனால் இப்பிறப்பு என்றது மூலத்தில் சொல்லப்படவில்லை. பரிதி உடலுக்கு 'எலும்பு போன்ற தாதுக்கள் ஆதாரம் போல' என்று பொருள் கூறுகிறார். காலிங்கர் குறளில் இல்லாத வீட்டின்பத்தைத் தொடர்புபடுத்திக் கூறுகிறார். பரிமேலழகர் தொடர்பு என்ற சொல்லுக்குத் தொடர்ச்சி என்று கொண்டு உரை செய்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'உயிர் உடம்பினைப் பெற்ற தொடர்பு', 'மக்களுயிர்க்கு உடம்போடு உண்டாகிய இயைபினை', 'அரிய பிறவியாகிய மனிதப் பிறவிக்கு அதன் எலும்போடு பிறந்த குணம்', 'உடம்பு எடாதபோது அறிவதற்கு அரிய உயிர்க்கும் எலும்பினை அடிப்படையாக உடைய உடம்பிற்கும் உண்டாகிய தொடர்பு' என்றபடி பொருள் உரைத்தனர்.

அரிய உயிர்க்கு உடம்போடு உண்டாகிய தொடர்பு என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அரிய உயிர்க்கு உடம்போடு உண்டாகிய தொடர்பு அன்போடு இயைந்த வழக்கு என்ப என்பது பாடலின் பொருள்.
'வழக்கு' குறிப்பது என்ன?

அன்புடன் கூடிய வாழ்க்கைநெறி உயிரும் உடம்பும் போன்றதாக வேண்டும்.

உயிர் உடம்போடு நீக்கமின்றி நிற்றலானது, அன்போடு பொருந்தி வாழும் வாழ்வுக்காகவே என்பர்.
உயிர்கள் பிற உயிர்களிடத்து அன்பாய் இருக்க வேண்டும். உயிர்கள் அன்பு செய்தலால் உயிர் உடலோடு உறவு கொண்டுள்ளது.
உயிர், உடம்பு இரண்டும் எப்படிப் பொருந்தி நிற்கின்றன என்பதை ஆராயும் பாடல் இது. உயிர் உடம்பு இரண்டும் முறையாக எப்படிப் பொருந்துகின்றன என்ற ஆராய்ச்சி காலம் காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விடைதான் காணமுடியவில்லை; காணமுடியுமா என்பதையும் யாராலும் சொல்ல முடியாது. ஆனால் இந்த இரண்டும் கூடியதால் உண்டான பயன் ஒன்று உண்டு என்பதை அறிந்துகொண்டார்கள். அப்பயன் என்ன? அதுதான் அன்பு. அன்பு தோன்றுவதற்காகத்தான் உயிரும் உடலும் கூடின என்று முடிவு செய்தார்கள். அதனால் உடலும் உயிரும் கூடுவது அன்பு என்னும் பயன் கருதியே என்பது தெளிவானது என்று ஆன்றோர் கூறினர். இதையே வள்ளுவரும் இப்பாடலில் 'என்ப' எனக் கூறிச் செல்கிறார்.

உயிர் என்போடு இயைவது வாழ்வில் அன்போடு கூடி ஒழுகுவதற்கு என்கிறது பாடல். அதாவது ஒருவருடைய உயிர்க்கும் உடலுக்கும் பெற்றுள்ள தொடர்பு எவ்வளவு நெருங்கியதோ அத்தகைய பிரிக்கமுடியாத நெருக்கத்திற்கு உரியது அன்பும் வாழ்க்கையும். உயிர் இருப்பது, எலும்பால் ஆகிய ஓர் உடல் வழிதான் தெரியவருகிறது. உயிரும் உடலும் இணைபிரியாதன. இந்த உடலை உயிர் விட்டு விட்டால் உயிருக்கு மதிப்பு இல்லை, உடலுக்கும் மதிப்பு இல்லை. அதுபோல் அன்பும் வாழ்க்கையும் அமையவேண்டும் என்கிறார் வள்ளுவர். அன்பை விட்டு விட்டால், நாம் வாழும் வாழ்க்கைக்குப் பொருள் இல்லாமல் போகும்.
இக்குறட்கருத்தையொட்டிய பாடல் ஒன்று கம்பராமாயணத்தில் காணப்படுகிறது. அது:
என்பு என்பது, யாக்கை என்பது, உயிர் என்பது, இவைகள் எல்லாம்,
பின்பு என்ப அல்ல; என்றும் தம்முடை நிலையின் பேரா;
முன்பு என்றும் உளது என்றாலும், முழுவதும் தெரிந்தவாற்றால்,
அன்பு என்பது ஒன்றின் தன்மை அமரரும் அறிந்ததுஅன்றே
(கம்பராமாயணம் யுத்த காண்டம் மருத்துமலைப் படலம் 8706 பொருள்: எலும்பு என்பதும் உடல் என்பதும் (அதனோடியைந்த) உயிர் என்பதும் ஆகிய இவையெல்லாம் பிற்பட்டது என்பதல்லாமல், அவ்வன்பு விளங்கித் தோன்றுவதற்கேதுவாக, அதன் முன்பே தோன்றி இயைந்து தம்முடைய நிலையில் மாறுதலின்றி நிற்கின்றன; இப்படிப்பட்ட தொடர்பு (உடலுயிர் ஆகியன அன்பு தோன்றி விளங்குதற்குக் காரணமாய் முன்தோன்றுவதும், பின்பு, அன்பு அவை மாட்டுத் தோன்றி விளங்குவது மாகிய தொடர்பு) என்றும் உள்ளதென்றாலும் முழுவதுமாக ஆராய்ந்து பார்த்தால், அன்பு என்பதாகிய ஒன்றனுடைய (உடலுயிர் ஆகியவற்றைத் தளிர்ப்பச் செய்தலும், சிதைப்பச்செய்தலுமாகிய) இருவேறுபட்ட தன்மையினை வானோர்களும் அறிந்தவர் களல்லவே?)
அருமையான உயிருக்கு எலும்பு (உடம்பு) எவ்வாறு ஆதாரமாக இருக்கிறதோ, அவ்வாறே அன்பு என்ற குணமும் வாழ்வுமுறைக்கு ஆதாரமாக இருக்கவேண்டும். அதாவது உடலும் உயிரும் போல், அன்பும் வாழ்வும் பிரிதலின்றி இருக்க வேண்டும்.

'வழக்கு' குறிப்பது என்ன?

வழக்கு என்ற சொல்லுக்கு முற்பிறப்பின் செலவு, முறைமை, நெறியின் பயன், வந்தது, வாழ்க்கையின் பயன், வழக்கம், நியாயம், வாழ்க்கை, ஒழுக்கம், வாழ்வதற்காக, செயல், வழங்கும் நெறி, முறைமை, பண்பு மரபு எனப் பலவாறாகப் பொருள் கூறினர்.

இக்குறட்கருத்தை, நேர் பொருளாகவும், உயிர்மலர்ச்சிக் கொள்கை அதாவது உயிரியல் வளர்ச்சிமுறை{The Theory of Evolution] கொண்டும், முற்பிறவியோடு தொடர்புபடுத்தியும் வேறுவேறுவகையாக உரையாளர்கள் விளக்கினர்.
அன்போடு இயைந்த வழக்கு என்பதற்கு 'இருவர் அன்புத் தொடரால் வந்தது'. 'உயிர் உடலோடு கூடிய வாழ்வு அன்போடு கூடிய பழக்க முறையால் ஆனது', 'அன்போடு பொருந்திய நெறியின் பயன் அதாவது இருவர் கலந்த அன்பால் பிறந்தோம். ஆதலின்' அன்பைப் பெறுவதற்காக வந்த நெறியின் பயன்', 'அன்போடு பொருந்திய நெறி', 'அன்போடு பொருந்தி வந்த வழியின் பயன்' என்றவாறு விளக்கம் செய்தனர்.

வழக்கு என்பது நெறி, வழி எனப் பொருள்படுவது. இங்கு வாழ்வுநெறி குறிக்கப்பெறுகிறது. அன்பு என்பது தன்னலத்தையோ தற்காதலையோ அடிப்படையாகக் கொண்டதல்ல. அது உயிர்களிடம் இயல்பாய் அமைந்துள்ள உணர்வு. அன்பு வாழ்க்கையை நெறிப்படுத்துகிறது; வழக்கம் ஆக்குகிறது. அன்போடு இயைந்த வழக்கு என்றால் அன்போடு சேர்ந்த அல்லது இணைந்த வழி எனப் பொருள்படும். அன்புக்கும் வாழ்வுமுறைக்கும் உறவு எப்படி இருக்க வேண்டும் என்றால் உயிர்க்கும் உடம்புக்கும் உள்ள தொடர்பு போன்றிருக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர். உயிர், இந்த உடலை விட்டு விட்டால் உடலுக்கு மதிப்பு இல்லை. அது போல அன்பு இல்லாத வாழ்க்கை பொருளற்றதாகும். உடலோடு கூடிய வாழ்வு அன்போடு கூடிய பழக்க முறையால் ஆனது என்ற கருதில் அமைந்த இக்குறள் அன்பு வாழ்க்கையை இயல்பு ஆக்குகிறது; வழக்கம் ஆக்குகிறது.

'வழக்கு' என்ற சொல் வாழ்க்கை நெறி எனப்பொருள்படும்.

அரிய உயிர்க்கு உடம்போடு உண்டாகிய தொடர்பு அன்பின் கூட்டுறவால் உண்டான வாழ்வுநெறி என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

வாழ்வுநெறி அன்புடைமையால் அமைய வேண்டும்.

பொழிப்பு

உயிர்க்கும் உடம்பிற்கும் உண்டாகிய தொடர்பு, அன்பின் கூட்டுறவால் வந்தது என்பர்.