இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0074



அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு

(அதிகாரம்:அன்புடைமை குறள் எண்:74)

பொழிப்பு (மு வரதராசன்): அன்பு, பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்; அஃது எல்லோரிடத்திலும் நட்பு என்று சொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்.

மணக்குடவர் உரை: அன்பு தரும் ஆர்வமுடைமையை; அவ்வார்வமுடைமை தரும் நட்பென்று சொல்லப்பட்ட ஆராய்தலில்லாத சிறப்பினை.

பரிமேலழகர் உரை: அன்பு ஆர்வமுடைமை ஈனும் - ஒருவனுக்குத் தொடர்புடையார் மாட்டுச் செய்த அன்பு அத்தன்மையால் பிறர் மாட்டும் விருப்பமுடைமையைத் தரும்; அது நண்பு என்னும் நாடாச்சிறப்பு ஈனும் - அவ்விருப்பமுடைமைதான்.அவற்குப் பகையும் நொதுமலும் இல்லையாய் யாவரும் நண்பு என்று சொல்லப்படும் அளவிறந்த சிறப்பினைத் தரும்.
(உடைமை, உடையனாம் தன்மை. யாவரும் நண்பாதல் எல்லாப் பொருளும் எய்துதற்கு ஏதுவாகலின், அதனை 'நாடாச்சிறப்பு' என்றார்.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: உற்றாரிடத்தே செய்யும் அன்பானது பிறரிடத்தும் விருப்பமுடைமையை விளைவிக்கும். அவ்விருப்பம் நட்பு என்று சொல்லப்படும் எய்துதற்கரிய சிறப்பினை உண்டாக்கும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அன்பு ஆர்வம்உடைமை ஈனும்; அது நண்பென்னும் நாடாச் சிறப்புஈனும் .

பதவுரை: அன்பு-அன்பு, உள்ள நெகிழ்ச்சி; ஈனும்-பயக்கும்; ஆர்வம்உடைமை-விருப்பம்உடைமை; அதுஈனும்-அது தரும்; நண்பு-தோழமை; என்னும்-என்கின்ற; நாடா-(நாடுதல்-ஆராய்தல்) ஆராய்தற்கரிய, ஆராய்ந்து அளவிடக் கூடாத, வருந்தித் தேடா, தேடிக் காணாத; சிறப்பு-உயர்ச்சி, பெருமை.


அன்புஈனும் ஆர்வம் உடைமை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அன்பு தரும் ஆர்வமுடைமையை;
பரிப்பெருமாள்: அன்பு தரும் ஆர்வமுடைமையை;
பரிப்பெருமாள் குறிப்புரை: என்றது அன்பினானே பக்தி உண்டாம்;
பரிதி: அன்பு ஆர்வம் என்று சொல்லப்பட்ட ஞானநேயத்தைக் கொடுக்கும்;
காலிங்கர்: ஒருவன் தான் பல உயிரிடத்தும் வைத்த உள்ளன்பானது பகைவர் முதலாயவர்களாலும் விருப்பப்பட்ட உள்ளன்பினைத் தரும்;
பரிமேலழகர்: ஒருவனுக்குத் தொடர்புடையார் மாட்டுச் செய்த அன்பு அத்தன்மையால் பிறர் மாட்டும் விருப்பமுடைமையைத் தரும்; [விருப்பம் உடைமை- பிறரிடம் விருப்பம் கொள்ளுதற்குரிய தன்மை]
பரிமேலழகர் குறிப்புரை; உடைமை, உடையனாம் தன்மை.

மணக்குடவர் இப்பகுதிக்கு அன்பு தரும் ஆர்வமுடைமை எனப் பொருளுரைத்தார். பரிப்பெருமாளும் பரிதியும் ஆர்வமுடைமை என்பதற்கு முறையே பக்தி, ஞானம் என்று பொருள் கூறினர். காலிங்கரும் பரிமேலழகரும் ஆர்வமுடைமை என்பதற்கு 'பிறர்மாட்டும் விருப்பமுடைமை' என்று உரை செய்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அன்பு பழகும் விருப்பத்தைத் தரும்', 'அன்புடைமை விருப்பத்தைத் தரும்', 'அன்பு என்பதுதான் ஒருவரையொருவர் விரும்புகின்ற பிரியத்தை உண்டாக்குவது', 'பிறர்மீது கொள்ளும் அன்பு பிறரை விரும்பச் செய்யும்' என்ற பொருளில் உரை தந்தனர்.

அன்பு பழகும் விருப்பத்தைத் தரும் என்பது இப்பகுதியின் பொருள்.

அதுஈனும் நண்பென்னும் நாடாச் சிறப்பு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவ்வார்வமுடைமை தரும். நட்பென்று சொல்லப்பட்ட ஆராய்தலில்லாத சிறப்பினை.
பரிப்பெருமாள்: அவ்வார்வமுடைமை தரும். நட்பென்று சொல்லப்பட்ட ஆராய்தலில்லாத சிறப்பினை.
பரிப்பெருமாள் குறிப்புரை: அதனாலே வேறுபாடில்லாத முக்தி உண்டாம் என்றவாறு ஆயிற்று. நாயகனோடு நட்டலின் நட்பு எனப்பட்டது. ஆராய வேண்டாமையின் உலக நட்பல்லவாயிற்று. இத்துணையும் அன்பினால் உளதாகும் அறப்பயன் கூறப்பட்டது.
பரிதி: அந்த ஞானம் பிறவா நெறியாகிய முத்தியைக் கொடுக்கும் என்றவாறு.
காலிங்கர்: மற்ற அவ்வன்பானது நண்பென்று சொல்லப்படுகின்ற கெடுதற்கரிய சிறப்பினைத் தரும் என்றவாறு..
பரிமேலழகர்: அவ்விருப்பமுடைமைதான்.அவற்குப் பகையும் நொதுமலும் இல்லையாய் யாவரும் நண்பு என்று சொல்லப்படும் அளவிறந்த சிறப்பினைத் தரும். [நொதுமல்-பகையும் நட்புமில்லாத இடைப்பட்ட நிலை]
பரிமேலழகர் குறிப்புரை: யாவரும் நண்பாதல் எல்லாப் பொருளும் எய்துதற்கு ஏதுவாகலின், அதனை 'நாடாச்சிறப்பு' என்றார்..

ஆர்வமுடைமை நட்பு என்ற சிறப்பைத் தரும் என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். நாடா என்பதற்கு மணக்குடவர் ஆராய்தலில்லாத என்று பொருள் கூறினார்; பரிப்பெருமாளும் பரிதியும் முத்தி கொடுக்கும் என்றனர்; பரிமேலழகர் அளவிறந்த என்று பொருள் தருகிறார்

இன்றைய ஆசிரியர்கள் 'அவ்விருப்பம் புதிய நட்புச் சிறப்பைத் தரும்', 'அவ்விருப்பம் நட்பு என்னும் அளவற்ற சிறப்பைத் தரும்', 'அந்தப் பிரியத்திலிருந்து தான் சினேகம் என்ற உறவு தானாகவே உண்டாகிறது', 'அவ்விருப்பம் நட்பு என்னும் சிறந்த செல்வத்தைத் தரும்' என்றபடி பொருள் உரைத்தனர்.

அது உலகநட்பு என்ற பெருமையைத் தானாகவே தரும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அன்பு பழகும் விருப்பத்தைத் தரும்; அது நண்பென்னும் நாடாச் சிறப்பு தரும் என்பது பாடலின் பொருள்.
'நாடாச் சிறப்பு' குறிப்பது என்ன ?

அன்பை அடிநிலையாகக் கொண்டே மனிதஉறவு வளரும்.

அன்பு பிறரிடத்து விருப்பமுடைமையைத் தோற்றுவிக்கும்; அது எல்லாரும் அவருக்கு நண்பர் என்று சொல்லும்படியான பெருமை பெற வழிவகுக்கும்.
அன்பு, ஆர்வம், நண்பு என்னும் மூன்று படிவளர்ச்சியைக் காட்டுகிறது இப்பாடல். அன்பானது பரந்து விரிந்து அனைவரையும் நட்புடன் நோக்கும் தன்மையை வளர்த்துக்கொள்வது சொல்லப்படுகிறது. அன்புடைமையிலிருந்து உருவாவனவே சமூக உணர்ச்சியும் உலக உறவுகளும் என்கிறது இது.
அன்பு என்பது தொடக்கத்தில் உறவு முதலான தொடர்புடையார் மாட்டு விளைவது; உயிர்ப்புள்ள இந்த உணர்வுக்கு வளர்ச்சி உண்டு.
ஆர்வமுடைமை என்பது அன்பின் முதிர்வுற்ற நிலையை அதாவது. தொடர்புடையாரிடமிருந்து விரிந்து புறத்தேயுள்ளோர் மீது விருப்பமுடைமையை-அக்கறையை ஏற்படுத்துவதைக் குறிக்கும். 'ஆர்தல்-நிறைதல்; ஆர்வு-நிறைவு. ஆர்வம் நிறைமை உண்டாக்குவது. அன்பு பற்றுள்ளமாகப் பிறர்பாற் சென்று பற்ற, அவர்கள் இல்லையாயின் வாழ்வு நிறைவுறாது என்ற தேவைப் பெருக்கமே ஆர்வம்' என்று சொல் விளக்கம் தருவார் தண்டபாணி தேசிகர். ஆர்வமுடைமை என்பதற்குச் சமுதாயத் தொண்டுகளில் ஈடுபடமுந்தும் செயல் உணர்வு பொங்கும் உளப்பண்பு என விளக்கம் செய்வார் கா.அப்பாத்துரை. ஆர்வமுடைமை என்பதற்கு உலகில் விரும்பி வாழும் தன்மையைக் கொடுப்பது என்றும் பொருள் கூறுவர்.
ஆர்வமுடைமையிலிருந்து உலகோரிடம் தோழமை என்ற நிலைக்கு அன்பு பரந்துபடுகிறது. அது உலகில் பகையும் நட்பும் இல்லாதவகையில் மாந்தர் யாவரும் நண்பு என்று சொல்லப்படும் சிறப்பினைத் தரும். அகத்திலிருக்கும் அன்பு படிப்படியே வளர்ந்து ஆர்வமாகி எங்கும் யாரிடமும் உள்ள நெகிழ்ச்சியாகும்போது நண்பாகிறது. இங்கு சொல்லப்பட்ட நண்பு என்பது பெரும்பொருளுடையது, அழுக்காறு, வெகுளி, பகை முதலியவற்றைக் கடந்தது (திரு வி க); 'யாவரும் கேளிர்' என்பது போல் எல்லோரும் நம் நண்பர்கள் என்னும் நிலையை எய்தச் செய்வது. அதாவது நண்பு என்ற சொல் மக்களுக்கிடையே உண்டாம் நட்புத்‌ தொடர்பைச் சொல்வது. அது இன்று மனிதநேயம் (humanitarianism) என்று எதைக் கூறுகிறோமோ அதைக் குறிப்பதாக உள்ளது; எல்லாருடனும் இயற்கையாக இயைந்து வாழ வகை செய்வது இது; நண்பானது மனித சமுதாயம் உள்ளொன்றிய நண்பர் கூட்டமாக வாழவழி செய்வது.
இவ்விதம் அகத்துள்ள அன்பு எல்லையில்லாததும். ஆராய வேண்டாததுமான நிலைக்குச் சென்று பகைவரும் புதியவரும் இல்லாத உலகம் வரை நீள்கிறது. நண்பு என்னும் இக்குணம் கொண்டோர் அருளுணர்வும் உதவுவதற்கு உறுதியான செயல்பாடுகளும் கொண்டிருப்பர். அவர்கள் உயிரிரக்கப் பண்பு உள்ளவர்களாம். பிறருக்கு துன்பம் அளிக்காமல் இருக்கும் எண்ணம் உள்ளவர்கள்; இயலாதவர்களின் துன்பத்தை நீக்கும் மனம் கொண்டவர்களுமாவர். இன்னொரு மனிதனைப் அன்போடும் நட்போடும் அருளுணர்வோடும் நோக்கும் நிலையே நண்பு என்று சொல்லப்படும் மனிதநேயம்.

அன்பே மனிதநட்பாக வளர்ச்சி பெறுகிறது. இல்லத்திலுள்ளோரிடம் அன்பு காட்டமுடியாதவர் மனிதநேயம் கொண்டவராக மாறமுடியாது. நண்பு என்பதை நட்பு அதிகாரத்தில் சொல்லப்படும் நட்பு பற்றியாதாகவே பல உரைகாரர்கள் கூறுகின்றனர். நட்பு பற்றிய அதிகாரங்களில் ஒருவர் நட்பை ஆராய்ந்தே கொள்ளவேண்டும் எனச் சொல்வார் வள்ளுவர். அந்த நட்பு நாடிக்கொள்வது. இங்கு கூறப்படும் நண்பு வேறு; இது மனிதஇன நலப் பற்றுடைமையைக் குறிப்பது. இது தேடாமல் வருவது. இதைப் பெற ஆராய்ச்சி வேண்டுவதில்லை.

'நாடாச் சிறப்பு' குறிப்பது என்ன?

'நாடாச் சிறப்பு' என்ற தொடர்க்கு ஆராய்தலில்லாத சிறப்பு, பிறவா நெறியாகிய முத்தி, கெடுதற்கரிய சிறப்பு, அளவிறந்த சிறப்பு, நாடுதற்குரிய சிறப்பு, அளவற்ற சிறப்பு, அளவிடக்கூடாத சிறப்பு, நாம் தேடிப்போகாது தானே நம்மை வந்தடையச் செய்யும் சிறப்பு, புதிய நட்புச் சிறப்பு, தேடாமல் வரும் நட்பு உறவு, அளவற்ற நன்மை, எய்துதற்கரிய சிறப்பு, சிறந்த செல்வம், கிடைத்தற்கரிய சிறப்பு, யாவரும் அடையமுடியாத சிறப்பு என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

நாடா என்ற சொல்லுக்கு ஆராய்தலில்லாத, நாடாத அதாவது தேடாத அல்லது அளவிறந்த என்று பொருள் கொள்வர். சிறப்பு என்ற சொல் பெருமை, செல்வம் என்ற பொருள் தருவது.
பரிமேலழகர் 'பகையும் நொதுமலும் இல்லையாய் யாவரும் நண்பு என்று சொல்லப்படும் அளவிறந்த சிறப்பு' எனச் சொல்லித் தனது சிறப்புரையில் 'யாவரும் நண்பாதல் எல்லாப் பொருளும் எய்துதற்கு ஏதுவாகலின், அதனை 'நாடாச்சிறப்பு' என்றார்' என்று அதற்கு விளக்கமும் கூறினார். மற்றவர்கள் 'நட்பு என்று சொல்லப்படும் சிறந்த உறவைத் தேடாமலேயே உண்டாக்கிவைக்கும்', என்றும் 'நட்பு எனும் சிறப்பை, நாம் தேடிப்போகாது தானே நம்மை வந்தடையச் செய்யும்' என்றும் கூறினர்.
குறுகிய அன்பு வளையத்தில் வாழ்ந்த நிலையிலிருந்து பகையில்லா உள்ளம் கொண்ட மனித நேயம் கொண்டவர்கள் என்ற நிலைக்கு ஏற்றம் பெறுவதற்கு இல்லத்தில் தோன்றும் அன்பே காரணம் என்பதைச் சொல்ல வந்த பாடல் இது. இந்த நிலை மிகுந்த பெருமையுடையது என்றும் கூறுகிறார் வள்ளுவர்.

நாடாச் சிறப்பு என்பது அளவிறந்த பெருமை எனப் பொருள்படும்.

அன்பு பழகும் விருப்பத்தைத் தரும்; அது உலகநட்பு கொண்டவர் என்ற அளவிறந்த பெருமையைத் தரும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

அன்புடைமையே மக்களுக்கிடையே உண்டாகும் நட்புத்‌ தொடர்பை வளர்க்கிறது.

பொழிப்பு

அன்பு பழகும் விருப்பத்தைத் தரும்; அவ்விருப்பம் மனிதநேயம் என்னும் மிகுந்த சிறப்பைத் தரும்.