இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0075அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.

(அதிகாரம்:அன்புடைமை குறள் எண்:75)

பொழிப்பு (மு வரதராசன்): உலகத்தில் இன்பம் உற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு உடையவராகிப் பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன் என்று கூறுவர்.

மணக்குடவர் உரை: முற்பிறப்பின்கண் பிறர்மேலன்பு வைத்துச் சென்ற செலவென்று சொல்லுவர்: இப்பிறப்பின்கண் உலகத்தில் இன்பமுற்றார் அதன் மேலுஞ் சிறப்பெய்துதலை.
இது போகம் துய்ப்பர் என்றது.

பரிமேலழகர் உரை: அன்பு உற்று அமர்ந்த வழக்கு என்ப - அன்புடையராய் இல்லறத்தோடு பொருந்திய நெறியின் பயன் என்று சொல்லுவர் அறிந்தோர்; வையகத்து இன்பு உற்றார் எய்தும் சிறப்பு - இவ்வுலகத்து இல்வாழ்க்கைக்கண் நின்று, இன்பம் நுகர்ந்து, அதன்மேல் துறக்கத்துச் சென்று எய்தும் பேரின்பத்தினை.
('வழக்கு' ஆகுபெயர். இல்வாழ்க்கைக்கண் நின்று மனைவியோடும் மக்களோடும் ஒக்கலோடும் கூடி இன்புற்றார் தாம் செய்த வேள்வித்தொழிலால் தேவராய் ஆண்டும் இன்புறுவர் ஆகலின் இன்புற்றார் எய்தும் சிறப்பு என்றார். தவத்தால் துன்புற்று எய்தும் துறக்க இன்பத்தினை ஈண்டு இன்புற்று எய்துதல் அன்பானன்றி இல்லை என்பதாம்.)

சி இலக்குவனார் உரை: உலகத்தில் இன்பம் அடைந்தவர் எய்தும் சிறப்பினை அன்பு உடையவராய் இல்லறத்தோடு பொருந்திய நெறியின் பயன் என்று சொல்லுவர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு அன்புற்று அமர்ந்த வழக்கென்ப.

பதவுரை: அன்புற்று-உள்ள நெகிழ்ச்சியுடன், அன்பு செய்யப்பட்டு, அன்பின் வழியே, அன்பில் ஒன்றி; அமர்ந்த-பொருந்திய, ஒழுகிய; வழக்கு- பொருந்திய முறை, வழங்கும் நெறி, நெறி, வழி, பழக்க முறை, பயன், நெறியின் பயன், முறைமை, ஒழுகலாறு, பண்பு மரபு; என்ப-என்று சொல்லுவர்; வையகத்து-உலகத்தில்; இன்புற்றார்-மகிழ்ச்சியடைந்தவர்; இன்பம் நுகர்ந்தவர், மகிழ்ச்சி பெற்றவர்; எய்தும்-அடையும்; சிறப்பு-சிறப்பு, பெருமை.


அன்புற்று அமர்ந்த வழக்கென்ப:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: முற்பிறப்பின்கண் பிறர்மேலன்பு வைத்துச் சென்ற செலவென்று சொல்லுவர்;
பரிதி: சென்ம சென்மங்களிலே தினையத்தினை அன்புண்டான பலன் என்றவாறு.
காலிங்கர்: அனைத்துயிர்க்கும் பொருந்திய முறையினால் மிக அன்பு செய்த அதுவே.
பரிமேலழகர்: அன்புடையராய் இல்லறத்தோடு பொருந்திய நெறியின் பயன் என்று சொல்லுவர் அறிந்தோர்;
பரிமேலழகர் குறிப்புரை: 'வழக்கு' ஆகுபெயர்.

'அன்புடையராய் இல்லறத்தோடு பொருந்திய நெறியின் பயன்' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை நல்கினர். முற்பிறவியோடு அன்பைத் தொடர்புபடுத்திக் கூறுகிறார் மணக்குடவர். 'பல்வேறு பிறவிகளிலும் சிறுது சிறிதாகத் தோன்றிய அன்பே' என்று பரிதி எழுதுகிறார். 'அனைத்துயிர்க்கும் பொருந்திய முறையினால் மிக அன்பு செய்தது' என்றார் காளிங்கர். 'அன்புடையராய் இல்லறத்தோடு பொருந்திய நெறியின் பயன்' என்பது பரிமேலழகர் உரைக்கருத்து.

இன்றைய ஆசிரியர்கள் 'அன்போடு வாழ்ந்ததால் வந்தது என்பர்.', 'இல்லறத்தில் அன்போடு கூடி வாழ்ந்த நெறியின் பயன் என்பர்', 'அன்பினைப் போற்றி அதில் நிலைத்து அவர் வாழ்ந்த வாழ்வின் பயனென அறிந்தோர் கூறுவர்', 'அன்பு உடையவராய் இல்லறத்தோடு பொருந்திய நெறியின் பயன் என்று சொல்லுவர்' என்ற பொருளில் உரை தந்தனர்.

அன்புடையராய் அமைந்த வாழ்க்கைநெறியின் பயன் என்பர் என்பது இப்பகுதியின் பொருள்.

வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இப்பிறப்பின்கண் உலகத்தில் இன்பமுற்றார் அதன் மேலுஞ் சிறப்பெய்துதலை.
மணக்குடவர் குறிப்புரை: இது போகம் துய்ப்பர் என்றது.
பரிதி: எண்பத்து நான்கு நூறாயிரம் பேதத்திற் பிறவாமல் மானிட யாக்கையிலே பிறந்த தன்மை.
காலிங்கர்: வையத்து இன்புற்றவராய் வாழ்கின்றனர் எய்தும் செல்வச் சிறப்பு என்றவாறு,
பரிமேலழகர்: இவ்வுலகத்து இல்வாழ்க்கைக்கண் நின்று, இன்பம் நுகர்ந்து, அதன்மேல் துறக்கத்துச் சென்று எய்தும் பேரின்பத்தினை.
பரிமேலழகர் குறிப்புரை: இல்வாழ்க்கைக்கண் நின்று மனைவியோடும் மக்களோடும் ஒக்கலோடும் கூடி இன்புற்றார் தாம் செய்த வேள்வித்தொழிலால் தேவராய் ஆண்டும் இன்புறுவர் ஆகலின் இன்புற்றார் எய்தும் சிறப்பு என்றார். தவத்தால் துன்புற்று எய்தும் துறக்க இன்பத்தினை ஈண்டு இன்புற்று எய்துதல் அன்பானன்றி இல்லை என்பதாம். [ஒக்கல் - சுற்றத்தார்; வேள்வி - விரும்பிச் செய்யும் தொழில்; ஆண்டும்-விண்ணுலகத்தும்]

'வையத்து இன்புற்றரவராய் வாழ்கின்றனர் எய்தும் சிறப்பு' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை நல்கினர். மணக்குடவர் 'இப்பிறப்பில் உலகத்தில் இன்பமுற்றார் எய்தும் சிறப்பு' என்று இப்பகுதிக்கு உரை வரைந்தார். பரிதி 'மற்றப் பிறவி தவிர்த்து மானிடப் பிறந்த சிறப்பு' என்பார். காலிங்கர் 'உலகத்தில் இன்பமாய் வாழ்வோர் எய்தும் செல்வச் சிறப்பு' என்றெழுதினார். பரிமேலழகர் 'இவ்வுலகத்தில் இன்பமும் மேலுலகில் பேரின்பமும் எய்துவர்' என்று உரை செய்கிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'உலகத்தில் காதலர்கள் அடையும் சிறப்பு', 'இவ்வுலகத்து இன்பம் எய்தினார் பெறும் சிறப்பெல்லாம்', 'இவ்வுலகத்தில் இன்பமடைந்து வாழ்பவர் பெறும் சிறப்புகள் எல்லாம்', 'உலகத்தில் இன்பம் அடைந்தவர் எய்தும் சிறப்பினை' என்றபடி பொருள் உரைத்தனர்.

உலகின்கண் இன்பம் துய்த்தவர் அடையும் சிறப்பு என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
உலகின்கண் இன்புற்றார் அடையும் சிறப்பு அன்புடையராய் அமைந்த வாழ்க்கைநெறியின் பயன் என்பர் என்பது பாடலின் பொருள்.
'இன்புற்றார்' யார்?

அன்புடையார் இனிமை நிறைந்த வாழ்வு பெறுவர்.

இவ்வுலகத்திலே இன்பம் துய்த்தவர் அடையும் சிறப்பு, அவர் அன்புடையவராகப் பொருந்தி வாழ்ந்த வாழ்க்கையின் பயனே என்பர்.
அன்புக்கும் இன்பத்துக்கும் உள்ள தொடர்பு குறித்தது இக்குறள். இந்த உலகிலே இன்பமைடைந்து சிறப்புற்ற எல்லாரும் அன்பு செய்து வாழ்ந்தவர்களே என்கிறது இது. அன்பு என்பது உறவு, நட்பு முதலான தொடர்புடையார்கண் விளைவதாதலால் இது இல்லறத்தில் குடும்பத்தில் நிகழ்வதைச் சொல்வதாம். அதாவது இல்லத்திலுள்ளோரிடம் அன்பு செலுத்துவது பற்றியது. அன்புற்று என்றதற்கு ௮ன்புடையவராகி அதாவது அன்பில் ஒன்றி என்பது பொருள். இதற்குப் பிறரால் அன்பு செய்யப் பெற்று எனவும் பொருள்கொள்ள முடியும். அன்பு செய்யப் பெறுவதற்கு ஒருவர் தாமும் அன்புடையராக இருத்தல் வேண்டும். இல்லறத்தில் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி மேற்கொள்ளப்படும் வாழ்வின் பயன் இனிமையான வாழ்வு பெற்ற சிறப்பு என்பது கருத்து.

அன்புள்ளம் கொண்டவர்களுக்கு வாய்க்கும் சிறப்பு உலகில் இன்புற்று வாழ்வதுதான் எனச் சொல்லப்படுகிறது. அன்பு செலுத்தி அன்பைப் பெற்று இன்பம் எய்துவது ஒரு சிறப்புத்தான். உலகத்தில் இன்பமாக வாழும் பேறு பெற்றவர்கள் அடைந்துள்ள சிறப்புக்குக் காரணம் அன்பு பொருந்தி வாழும் வாழ்க்கையே.
வழக்கு என்பது நீண்ட கால பண்பு மரபு என்பர். ஓரோ வழியன்றி இடையீடின்றி எப்பொழுதும் தொடர்ச்சியாக அன்புடையராதலைக் குறிக்க வழக்கு- வழக்கம் என்ற சொல் ஆளப்பட்டது. அன்புடையராக வாழ்தலே வையகத்தில் இன்பம் உண்டாகும் சிறப்பினைத் தருமாதலால் அன்புடையராக இருத்தலை வாழ்வுநெறியாகக் கொள்க என்கிறது பாடல்.
'முற்பிறப்பில் அன்பு செய்தார் இப்பிறப்பில் இல்வாழ்க்கையினராய்ச் சிறப்பு எய்துவர்' என்றும் 'இப்பிறப்பில் வையத்து அன்பினராய் வாழ்ந்தார் மறுமையில் துறக்க இன்பத்தைப் பெறுவர்' என்றும் 'வேள்வித் தொழிலால் தேவராய் இன்புறுவர்' என்றும் சிறப்பு என்பதை விளக்கினர். இவை பொருத்தமற்றவை. முற்பிறவியையும் வீடு பேற்றையும் இணைத்து இக்குறளுக்குப் பொருள் காண்பது சிறப்பில்லை. இவ்வுலகத்தில் அன்புன்புடன் கூடிய ஒழுகலாற்றை மேற்கொண்டார் அடையும் இன்பப்பயனே இங்கு சொல்லப்படுகிறது.
'உலகத்தில் காதலர்கள் அடையும் சிறப்பு அன்போடு வாழ்ந்ததால் வந்தது' என்பது வ சுப மாணிக்கம் உரையாகும். காதலர்கள் ஒருவர்க்காக மற்றவர் என்று அன்பு செலுத்தி வாழ்பவர்கள் என்பதால் இக்குறட்கு இக்கருத்து மிகவும் ஏற்புடையதாகிறது.

'இன்புற்றார்' யார்?

'இன்புற்றார்' என்ற சொல்லுக்கு இன்பமுற்றார், இன்புற்றவராய் வாழ்கின்றனர், இல்வாழ்க்கைக்கண் நின்று இன்பம் நுகர்வோர், சுகத்தினை அனுபவிக்கிறபேர், இல்வாழ்க்கை இன்பமுற்றவர், (இல்வாழ்க்கையிலே நின்று) இன்பம்‌ நுகர்ந்தவர்‌, இன்பம் உற்று வாழ்கின்றவர், இன்புற்று வாழ்பவர்கள், இன்பம் துய்ப்பவர்கள், இன்பம் எய்தினார், இன்பமாக அனுபவித்துப் புகழ் பெற்றவர்கள், இன்பமடைந்து வாழ்பவர், இல்லற வாழ்க்கையிலே இன்பம் அடைந்தவர்கள், இன்பம் அடைந்தவர், இல்வாழ்க்கை நடத்தி மகிழ்ந்தவர், இல்லறத்தில் நின்று இன்பம் நுகர்ந்தவர், இன்பமைடைந்தவர் என்றவாறு உரையாளர்கள் பொருள் கூறினர்.

இன்புற்றார் என்றது இன்புற்று வாழ்பவர்கள் எனப் பொருள்படும். அன்புள்ளம் கொண்டோர் வாழ்வில் இகல் இல்லை; அவர்கள் தெளிவான சிந்தனையோடு இருப்பர். இத்தகையோர்கள் வாழ்க்கையிலே என்றும் அமைதி நிலவும், இதனால் இவர்கள் இன்பமாய் வாழ முடியும். அன்பைக் கடைப்பிடித்து நடந்து கொண்ட காரணத்தினால்தான் இவ்வுலகில் இன்பம் துய்த்துச் சிறப்புப் பெற்றவர்களாகின்றனர். அறத்தான் வருவதே இன்பம் என்று சொன்ன வள்ளுவர் அன்பு செய்வதால் இன்பச் சிறப்பு ஏற்படுகிறது என்கிறார் இங்கு. அன்பற்ற வாழ்க்கையில் சிறப்பில்லை. இன்பப் பேறு அன்பார்ந்த இல்வாழ்க்கையைப் பொறுத்து அமைகிறது. இல்லத்திலுள்ளோரிடத்து அன்புடையவர்கள், வாழ்க்கையில் இன்பமாக இருப்பர் என்பதை அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பட்டறிவால் உணர்வர்.
உலகத்தில் மகிழ்ச்சியாக அமைகிற வாழ்க்கை அன்பு திகழும் இல்வாழ்க்கையினால் விளைவது. இன்பம் எனும் உணர்வு அன்பு செய்வதிலும் அன்பு செய்யப்படுவதிலும், அக்கறை காட்டுதலிலும் அக்கறை காட்டப்படுதலிலும், விட்டுக்கொடுத்தலிலும், பகிர்தலிலும், கிடைக்கும். இன்பம்‌ பெறுதற்குரிய இல்லறம்‌ சிறந்ததாதல் கூறப்பட்‌டது எனவும் கொள்ளலாம்.

இல்லறத்தில் அன்புவாழ்வில் அமைந்திருப்பவர் இன்புற்றார் ஆவர்.

உலகின்கண் இன்பம் துய்ப்பவர் அடையும் சிறப்பு அன்புடையராய் அமைந்த வாழ்க்கைநெறியின் பயன் என்பர் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

வாழ்வில் இன்பம் எய்த அன்புடைமையை வழக்காக்குக.

பொழிப்பு

இல்லறத்தில் அன்போடு கூடி வாழ்ந்தோர் இவ்வுலகத்தில் இன்பச் சிறப்பு எய்தினார் என்பர்.