இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் திறன்-1301 குறள் திறன்-1302 குறள் திறன்-1303 குறள் திறன்-1304 குறள் திறன்-1305
குறள் திறன்-1306 குறள் திறன்-1307 குறள் திறன்-1308 குறள் திறன்-1309 குறள் திறன்-1310

தலைவன் தலைவியரிடையே நிகழும் சிறுசிறு ஊடல்கள் இவை; கூடலின்பத்தை மிகுவிப்பன; கலவிகளுக்கிடையேயான இடைவெளியைக் கூட்டி, தீரப் பசித்தவன் ஆரப் புசிப்பது போல, பக்குவப்பட்ட காதலின்பத்திற்கு வழிவகுப்பன. திருவள்ளுவர் கலவியைவிடப் புலவியையே மிக வற்புறுத்துகிறார். அவர் கூறும் புலவி, ஊடல் என்பன கணவன் மனைவியரின் நட்பு, மகிழ்வு தரும் உரையாடல்கள், செல்லக் கோபங்கள், சிரிப்பு விளையாட்டுக்கள், இன்பப் பொழுதுபோக்குகள் என இவையாவும் அடங்கியவையாகும்.
- தமிழண்ணல்

தொழில் காரணமாகப் பிரிந்து சென்றிருந்த கணவர் இல்லம் திரும்பியிருக்கிறார். இதுகாறும் ஆற்றாமையால் வாடியிருந்த தலைவி இன்று மிக்க மகிழ்ச்சியுடன் காணப்படுகிறாள். அவர்கள் இருவரும் நெருங்கிக் கூடும் வேளைக்காகக் காத்திருக்கின்றனர். இப்பொழுது படுக்கையறைக் காட்சி. தலைவி பாயலில் காதல்நோய் மேலிட உள்ளாள். நீண்ட பிரிவிற்குப் பின் மனைவியைக் காணப்போவதால் அவரும் காதல் வேகம் மிகக் கொண்டிருப்பார் என்பதை அவள் அறிவாள். தன் உள்ளத்தில் வேட்கை மிகக்கொண்டிருந்தாலும் செயற்கையாகப் பிணங்கி புணர மறுப்பது போல் காட்டிக் கொள்ள எண்ணுகிறாள். அந்த ஊடல் காமத்திற்குச் சுவை ஊட்டும் என்பதையும் அது பின்வரும் புணர்ச்சி இன்பத்தை இருவரிடையேயும் கூட்டுவிக்கும் என்பதையும் உணர்ந்தவள் அவள்.

புலவி

இல்லற வாழ்வில் கணவன் மனைவி இருவரின் இடையே நிகழும் சடைவு நிலைகளை மூன்றாகப் பிரித்துப் பார்த்தனர் ஆன்றோர். புலவி, ஊடல், துனி என்பன அவை. காதலர் ஒருவர்க்கொருவர் பிணக்கம் கொள்வது புலவி எனப்பட்டது. புலவி காதற்பூசலின் தொடக்கநிலை; ஊடல் அதற்கு அடுத்த நிலை. இவை வேறுபாடின்றி ஒரு பொருளிலே இப்பொழுது ஆளப்பட்டுவருகின்றன. மூன்றாவதான துனி இன்பத்திற்கு மாறான துன்பந்தரும் முதிர்ந்த காதற்பூசல். துனி என்பது பிணக்கின் பெருநிலை; மனத்தில் வெறுப்புணர்வைத் தோற்றுவிப்பது; மன வெடிப்பு நிலைக்குக் காரணமாக அமைவது; மணமுறிவுக்கும் வழி வகுக்கலாம். எனவே துனி விலக்கப்படவேண்டியது. துனியும் புலவியும் இல்லாயின் காமம் கனியும் கருக்காயும் அற்று (1306 பொருள்: முதிர்ந்த பூசலும் சிறு பிணக்கும் இல்லாவிட்டால், காதலின்பம் (முறையே) கனியும் பழுக்காத காயும் போன்றது) என்னும் இவ்வதிகாரத்துப் பாடல் இனிமையான இல்லறவாழ்வில் புலவியும் துனியின்மையும் வேண்டும் என்பதைத் தெளிவுறுத்துகின்றது.

அவ்வப்போது ஒன்றுபட்டும், மனவேறுபாடு வந்து ஊடியும், பின் மீண்டும் கூடியும் வாழ்வது காதல் வாழ்வின் மிகச்சுவையான பகுதி ஆகும். கூடிப்பெறும் இன்பத்திற்குச் செயற்கையாகத் தடை ஏற்படுத்தி ஏக்கம் பிறப்பிக்க வைப்பது காதலர் இருவருக்கும் இன்பம் தருவதாகும். புலத்தல் தலைவிக்கு மட்டுமன்றித் தலைவனுக்கும் உரியது. இவ்வதிகாரப் பாடல்களில் பெரும்பான்மை இருசாரார்க்கும் பொருந்துமாறே அமைந்துள்ளன. ஆனாலும் வள்ளுவர் புலவி என்பதைப் பெண்ணுக்கு மட்டுந்தான் உரியதாக்குகிறாரோ என எண்ணத் தோன்றுகிறது.
ஊடலுக்கு உண்மையான காரணம் இருக்க வேண்டுவதில்லை. புலவியும் ஊடலும் காதலின் அடிப்படையில் தோன்ற வேண்டும். காதல் அடிப்படையில்லா ஊடல் இன்பம் நல்காது; அது வெறும் பூசலாய் முடியும். ஊடலை உணர்ந்து காதலுடைய மற்றவர் அதை நீக்க வேண்டும். குளிர்ப்பக் கூறல், தளிர்ப்ப முயங்கல் முதலியவற்றால் புலவி நீங்கும் என்றும், ஊடல் அதற்குக் காரணமாகிய பொய்மை அல்லது உண்மையைத் தெரிவிக்க நீங்கும் என்றும் சொல்வர். ஊடல் என்னும் பாயற் சிறு பிரிவு பின் வரும் புணர்ச்சி இன்பத்தை மிகுவிக்கக் கூடியது.

காதலரிடையே உண்டாகும் பிணக்கமான மனநிலை ஊடல் எனப்படுகிறது. பிணக்கம் என்று சொல்லப்பட்டாலும் காதல்கொண்டவர்களின் உள்ளத்து வேர்ப்பகுதியில் ஐயம் இல்லை, வெறுப்பில்லை, பிணக்கம் இங்கு பிணைப்பான உளநிலையை உண்டாக்கக் காரணமாகின்றது. பிணக்க நீட்டிப்பு உணவுக்கு உப்பு போன்ற அளவில் அமையவேண்டும். அது மிகையாகிவிட்டால் உணவைக் கரித்துப்போகச் செய்து கெடவைக்கும். ஊடல் தீர்க்கப்படாவிட்டால் ஏற்கனவே வாடியுள்ள கொடியைத் தூரில் அரிந்ததது போலாம். ஊடல் உணர்தல் இங்கு மிகையாகப் பேசப்படுகின்றது. நீரும் நிழலிடத்து இருந்தால் நன்றாக இருப்பதுபோல் ஊடலும் தன்னை விரும்புவாரிடத்தே இனிதாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

காதலர் தவறு செய்யாதபோதும் தவற்றைக் கற்பனை செய்து ஊடுவதாகவே வள்ளுவர் புலவிக் காட்சிகளை குறளில் அமைத்துள்ளார். இவ்வதிகாரமும் காதலி தலைவனின் தவிப்பை பிணக்கம் காட்டி வேடிக்கை பார்க்கலாம் என்று சொல்வதாகத்தான் தொடங்குகிறது.
உண்மை வாழ்க்கையில் கணவன் -மனைவி இடையே ஏற்படும் ஊடல் எல்லாமே விளையாட்டுக்காக நடப்பதில்லை. இங்குள்ள பாடல்கள் மணவாழ்வின் உளநிலைக் கூறுகளை ஆராய்ந்து கூறப்பட்டுள்ளனவாக உள்ளன. ஊடல் நீடிக்கும் கால அளவு, ஊடலை உணர்தல், அதை நீக்குதல் எனச் சொல்லப்பட்டவை எல்லாம் இல்லறக் காம வாழ்வு செழிப்பதற்கு நல்ல பாடங்களாக அமைகின்றன.

புலவி அதிகாரப் பாடல்களின் சாரம்

  • 1301 ஆம்குறள் அவர் வரும்போது தழுவாமல் பிணக்கம் கொள்ள வேண்டும்; அப்பொழுது அவர் தவிப்பதைக் காணலாம் எனத் தலைவி சொல்வதைக் கூறுகிறது.
  • 1302 ஆம்குறள் ஊடல் உணவுக்கு உப்பு அளவு போன்றது; அதனைக் கொஞ்சம் கூடுதலாக நீளவிடுதல் உப்பு மிகுதியானாற்போல எனச் சொல்கிறது.
  • 1303 ஆம்குறள் தம்மிடம் ஊடல் கொண்டவரைத் தழுவாது விடுதல் வருந்தியவரை மேலும் துன்பம் செய்தாற் போன்றது என்கிறது.
  • 1304 ஆம்குறள் ஊடல் கொண்டவரை உணராமல் இருத்தல் வாடிய கொடியைத் தூரிலே அரிந்ததை ஒக்கும் எனச் சொல்கிறது.
  • 1305 ஆம்குறள் நற்குணத் தகுதியுடைய காதலர்க்கு அழகாகும், மலர் போன்ற கண்களையுடைய காதலியின் ஊடலை அறிந்து நீக்குதல் எனக் கூறுகிறது.
  • 1306 ஆம்குறள் முதிர்ந்த பூசலும் சிறு பிணக்கும் இல்லாவிட்டால், காதலின்பம் (முறையே) கனியும் பழுக்காத காயும் போன்றது என்கிறது.
  • 1307 ஆம்குறள் புணர்ச்சி நீட்டியாதோ என்று நினைத்தலால் ஊடலிலும் ஒரு துன்பம் உண்டு எனச் சொல்கிறது.
  • 1308 ஆம்குறள் பிணங்கியுள்ளார் என்று ஊடலை உணராத காதலர் இல்லாத போது நாம் வருந்துவது என்னத்துக்கு? எனத் தலைவி சொல்வதைக் கூறுகிறது.
  • 1309 ஆம்குறள் நீரும் நிழலிடத்து இருப்பதாயின் நன்றாம்; ஊடலும் விரும்புவார் இடத்தே இனிதாக இருக்கும் எனத் தலைவி கூறுவதைச் சொல்கிறது.
  • 1310 புலவியை வாட விடுவாரோடு என் உள்ளம் கூட நினைப்பது பெரு விருப்பத்தினாலே எனக் காதலர் சொல்வதைக் கூறுகிறது.

புலவி அதிகாரச் சிறப்பியல்புகள்

ஊடலுக்குக் காரணம் பரத்தையர் பிரிவு என்பதான ஒரு இலக்கிய மரபு வகுத்துக்கொண்டு சங்கப்புலவர்கள் பாக்கள் யாத்தனர். இதனை வள்ளுவர் ஏற்காமல் புறந்தள்ளியுள்ளார் என்பதை குறளின் ஊடல் தொடர்பான பாக்கள் மூலம் புரிந்துகொள்வது ஒன்றும் கடினமன்று. பரத்தையரைப் புகுத்தாமல் புலமை நலம் பொதுளப் பிற காரணங்களைக் காட்டி இலக்கியச் சுவையுடன் வள்ளுவர் ஊடல்களைப் புனைந்து காட்டியுள்ளார் என்பது குறளுக்குத் தனிப்பெருமை சேர்ப்பது. குறளில் உள்ள புலவிக்கான காரணங்கள் பற்றிய பாடல்கள் அனைத்தும் சங்க இலக்கிய மரபிலிருந்து வெகுவாக விலகி இயற்றப்பட்டவையாம். ஊடலுக்கு பரத்தையர் உறவு உண்மையான காரணமாக இருந்தால் தலைவிக்குப் புணர்ச்சியில் ஆர்வம் தோன்றாது. கற்பனை செய்து கூறும் ஊடற்காரணம் உண்மையடிப்படையில் எழாததால் அது நிலைத்து நில்லாமல் ஊடல் முடிவில் மகிழ்வைத் தரும். பரத்தமை புலவிப்பொருளாகக் கொள்ளப்படவில்லை என்பதை அதிகாரப் பாடல்கள் வழி அறியலாம்.

பணி காரணமாக நீண்ட பிரிவில் சென்றிருந்த கணவர் ஆவலுடன் மனைவியைக் காண இல்லம் திரும்பியுள்ள நிலையில் 'காதலரைத் தழுவாது இருந்து பிணக்கம் கொள்; அவர் அல்லலுறுவதைச் சிறுது வேடிக்கை பார்ப்போம்' எனத் தலைவி உள்ளத்தில் குறும்புத்தனம் பொங்கச் சொல்லும் அதிகார முதற்பாடல் படிப்போர்க்கு இன்பம் பயப்பது.

உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது மிக்கற்றால் நீள விடல் (1302) என்ற பாடலில் கரிப்புத் தன்மை உடைய உப்பு, அளவோடு இருக்கும் வரை உணவு சுவை மிக்கதாக இருக்கும். அளவைவிடக் கூடினாலும், குறைந்தாலும் அப்பண்டம் வீணாகிவிடும் என்று உப்பை உவமையாக்கி காம இன்பத்துக்கும், ஊடலுக்கும் உள்ள உறவு எத்தன்மையது என்று விளக்கப்பட்டது. இதிலுள்ள ஒப்புவமை நன்கு பொருந்த அமைந்து குறட்கருத்துக்குத் துணை நிற்கின்றது.

ஊடி யவரை உணராமை வாடிய வள்ளி முதல்அரிந் தற்று (1304) என்ற பாடல் ஊடல் செய்பவரைப் புரிந்து கொள்ளாமல் விடுவது வாடிய கொடியை தூரோடு அரிந்துவிடுவதைப் போன்றது என்கிறது. நீர்வளம் காணாமல் வாடியதொரு கொடியினை வேரோடு அறுத்துப் பிடுங்கி எறிவது காண்பதற்கு எவ்வளவு இரக்கமற்ற கொடுஞ்செயலாக உள்ளது என்பதை எடுத்துக்காட்டி ஊடியவரை உணராதிருப்பது ஒரு கொடிய செயல் என நன்கு உணர்த்தப்பட்டது.

ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது நீடுவது அன்றுகொல் என்று (1307) என்ற செய்யுள் ஊடல் செய்வாரது உணர்வுக்கும் உடலுக்கும் உள்ள போராட்டத்தைக் காட்சிப்படுத்துகிறது. புணர்ச்சி நீட்டிக்குமோ நீட்டியாதோ என்ற எண்ணத்தை உண்டாக்குவதால் இன்பத்திற்கு இன்றியமையாத ஊடலின் கண்ணேயும் ஒரு துன்பம் நிகழும் என்கிறது பாடல்.
குறள் திறன்-1301 குறள் திறன்-1302 குறள் திறன்-1303 குறள் திறன்-1304 குறள் திறன்-1305
குறள் திறன்-1306 குறள் திறன்-1307 குறள் திறன்-1308 குறள் திறன்-1309 குறள் திறன்-1310