ஊடலின் உண்டாங்கோர் துன்பம்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஊடல் செய்யின் இன்பம் உண்டாயினும், அதன் கண்ணும் ஒரு துன்பம் உண்டு;
பரிப்பெருமாள்: ஊடல் செவ்வி இன்பம் உண்டாயினும், அதன் கண்ணும் ஒரு துன்பம் உண்டு;
பரிதி: புலவிக்கு ஒரு துன்பம் உண்டு;
காலிங்கர்: ஊடற்செவ்வி இன்பம் உண்டாயினும் அதன் கண்ணும் ஒரு துன்பம் உண்டு;
பரிமேலழகர்: (இதுவும் அது.) இன்பத்திற்கு இன்றியமையாத ஊடலின் கண்ணேயும் ஒரு துன்பம் நிகழும்.
சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது, 'ஆங்கு' என்பது அசைநிலை;
'ஊடலின் கண்ணேயும் ஒரு துன்பம் உண்டு' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'ஊடலிலும் ஒரு துன்பம் உண்டு', 'இன்பத்திற்கு வேண்டத்தக்கதாகிய ஊடலிலும் ஒரு துன்பம் நிகழ்கிறது', 'பிணங்கினால் அதிலும் ஒரு துன்பம் இருக்கிறது', 'பிணக்கிலேயும் புணர்ச்சி விருப்பமாகிய ஒரு துன்பமுண்டாகும்' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
ஊடலிலும் ஒரு துன்பம் உண்டு என்பது இப்பகுதியின் பொருள்.
புணர்வது நீடுவது அன்றுகொல் என்று:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: புணருங்கால் அது நீட்டிக்குங்கொல்லோ? நீட்டியாதோ? என்று ஐயுறுதலால்.
மணக்குடவர் குறிப்புரை: இது தலைமகள் ஆற்றாமை வாயிலாகப் புலக்கத் தலைமகன் அது கண்டு சொல்லியது.
பரிப்பெருமாள்: புணருங்கால் அது நீடுங்கொல்லோ? நீடாது கொல்லோ? என்று ஐயுறுதலால்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது தலைமகள் ஆற்றாமை வாயிலாகப் புலக்கத் தலைமகள் புலவி கண்டு சொல்லியது.
பரிதி: புணர்வது நாட்செல்லும் என்னும் துயரம் அது என்றவாறு.
காலிங்கர்: புணருங்கால் நீடுவது கொல்லோ நீடாது கொல்லோ என்னுதல் என்றவாறு.
பரிமேலழகர்: இனிய புணர்ச்சி நீட்டிக்குமோ நீட்டியாதோ என்று கருதலான்;
பரிமேலழகர் குறிப்புரை: 'என்று' என்னும் எச்சத்திற்குக் 'கருதலான்' என்பது வருவிக்கப்பட்டது. 'கொல்' என்பதனை 'நீடுவது' என்பதுடனும் கூட்டுக. ஊடல் - கூடற்கண்¢ விரைவித்தல் கூறியவாறு.
'புணர்ச்சி நீட்டிக்குமோ நீட்டியாதோ என்று ஐயுறுதலால்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'கூட்டம் நீளாதா என்று ஐயப்படுதலின்', 'முயங்குவது நீட்டிக்காதோ என்னும் கருத்து எழுதலால்', 'என்னவெனில் புணர்ச்சி இன்பம் நேரம் கழித்தாயினும் கிடைக்குமோ அல்லது புணர்ச்சி இல்லாமலேயே போய்விடுமோ என்று (ஏங்கும் துன்பம்)', 'புணர்ச்சி நீட்டிக்குமோ நீட்டியாதோ என்று நினைத்தலால்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
புணர்ச்சி நீட்டியாதோ என்று நினைத்தலால் என்பது இப்பகுதியின் பொருள்.
|