இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1309



நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது

(அதிகாரம்:புலவி குறள் எண்:1309)

பொழிப்பு (மு வரதராசன்): நீரும் நிழலை அடுத்திருப்பதே இனிமையானது; அதுபோல், ஊடலும் அன்பு செலுத்துவோரிடத்தில் கொள்வதே இன்பமானது.

மணக்குடவர் உரை: குளிர்ச்சியைத் தனக்கு இயல்பாகவுடைய நீரும் நிழலின் கண்ணதே யாயின், இனிதாம்: அதுப்போலப் புலவியும் அன்புடையார்மாட்டேயாயின் இனிதாம்.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) நீரும் நிழலதே இனிது - உயிர்க்கு இன்றியமையாத நீரும் நிழலின் கண்ணதே இனிதாவது, ஏனை வெயிலின் கண்ணது ஆகாது; புலவியும் வீழுநர்கண்ணே இனிது - அது போலக் கலவிக்கு இன்றியமையாத புலவியும் அன்புடையார்கண்ணே இனிதாவது, ஏனை அன்பிலார்கண் ஆகாது.
(நிழற்கண் இருந்த நீர் குளிர்ச்சிமிக்குத் தாகம் தணித்தலின், இனிதாயிற்று. வீழுநர் - ஆற்றாமைக்கு நோதலும் கூடுதற்கண் வேட்கையும் உடையராவார். 'இவள் நம்மாட்டு அவ்விரண்டும் இன்மையின் இப்புலவி தானும் இன்னாதாகா நின்றது', என்பதாம்.)

இரா சாரங்கபாணி உரை: நீரும் நிழலிடத்து இருப்பதாயின் இனிமையாக இருக்கும். அதுபோலப் புலவியும் அன்புடையவரிடத்துக் கொண்டால்தான் இனியதாகும். (அன்பிலாரிடத்து புலவி இனிதாகாது.)


பொருள்கோள் வரிஅமைப்பு:
நீரும் நிழலது இனிதே புலவியும் வீழுநர் கண்ணே இனிது.

பதவுரை: நீரும்-நீரும்; நிழலது-நிழலில் இருப்பது; இனிதே-நன்றானதே; புலவியும்-ஊடலும்; வீழுநர்-விரும்பிக் காதலிப்பார்; கண்ணே-இடத்தே; இனிது-இனிமையானது.


நீரும் நிழலது இனிதே:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: குளிர்ச்சியைத் தனக்கு இயல்பாகவுடைய நீரும் நிழலின் கண்ணதே யாயின், இனிதாம்;
பரிப்பெருமாள்: குளிர்ச்சியைத் தனக்கு இயல்பாகவுடைய நீரும் நிழலின் கண்ணது யாயின், இனிதாம்;
பரிதி: நிழலைச் சேர்ந்த நீர் நன்று;
காலிங்கர்: குளிர்ச்சியைத் தனக்கு இயல்பாக உடைய நீரும் நிழலின்கண்ணே இனிதாம்;
பரிமேலழகர்: (இதுவும் அது.) உயிர்க்கு இன்றியமையாத நீரும் நிழலின் கண்ணதே இனிதாவது, ஏனை வெயிலின் கண்ணது ஆகாது;
பரிமேலழகர் குறிப்புரை: (நிழற்கண் இருந்த நீர் குளிர்ச்சிமிக்குத் தாகம் தணித்தலின், இனிதாயிற்று.

'குளிர்ச்சியைத் தனக்கு இயல்பாக நீரும் நிழலின்கண்ணே இனிதாம்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நீரும் நிழலிடத்தே குடித்தல் இனியது', 'தண்ணீரும் (உருவத்தைத் திருப்பி எதிர் உருவமாக) நிழல் காட்டக் கூடியதாக (தெளிந்திருந்தால்தான்) நன்மை பயக்கும்', 'நீரும் நிழலின்கண் இருப்பின் குடிக்க இனிதாகும்', 'நீரும் நிழலின் கண்ணே இனிதாவது' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நீரும் நிழலிடத்து இருப்பதாயின் நன்றாம் என்பது இப்பகுதியின் பொருள்.

புலவியும் வீழுநர் கண்ணே இனிது:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதுப்போலப் புலவியும் அன்புடையார்மாட்டேயாயின் இனிதாம்.
பரிப்பெருமாள்: அதுப்போலப் புலவியும் அன்புடையார்மாட்டேயாயின் இனிதாம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேல் புலவியின் கண் ஒரு துன்பமுண்டு என்று தலைமகன் கூறிய சொற்கேட்டு, 'அஃது இன்பமாவது அன்புடையார்க்கு; நுமக்கு அன்பின்மையால் துன்பம் உண்டாயிற்று' என்று தலைமகள் கூறியது.
பரிதி: அதுபோல நாயகர் நல்லராகில் புலவி நன்று என்றவாறு.
காலிங்கர்: அதுபோலப் புலவியும் அன்புடையார் மாட்டே ஆயின் இனிதாம் என்றவாறு.
பரிமேலழகர்: அது போலக் கலவிக்கு இன்றியமையாத புலவியும் அன்புடையார்கண்ணே இனிதாவது, ஏனை அன்பிலார்கண் ஆகாது.
பரிமேலழகர் குறிப்புரை: வீழுநர் - ஆற்றாமைக்கு நோதலும் கூடுதற்கண் வேட்கையும் உடையராவார். 'இவள் நம்மாட்டு அவ்விரண்டும் இன்மையின் இப்புலவி தானும் இன்னாதாகா நின்றது', என்பதாம். [அவ்விரண்டும் -ஆற்றாமைக்கு நோதலும் கூடுதற்கண் வேட்கையும்; இன்னாது ஆகாநின்றது-துன்பம் செய்வதாகின்றது]

'புலவியும் அன்புடையார் மாட்டே ஆயின் இனிதாம்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிணக்கமும் விரும்புவாரிடத்தே இனியது', 'அதுபோல, பிணக்கமும் (நம் விருப்பத்துக்கு நேரான எதிர்) விருப்பம் காட்டக் கூடியவர்களிடத்தில்தான் நன்மை பயக்கும்', 'அதுபோலப் பிணக்கமும் அன்பு காதலர்பாலுள்ள தானாற்றான் இனிதாகும்', 'ஊடலும் காதலர் கண்ணே இனிமையைத் தரும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

ஊடலும் விரும்புவார் இடத்தே இனிதாக இருக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நீரும் நிழலிடத்து இருப்பதாயின் நன்றாம்; ஊடலும் விரும்புவார் இடத்தே இனிதாக இருக்கும் என்பது பாடலின் பொருள்.
'நீரும் நிழலது இனிதே' குறிப்பது என்ன?

அன்பானவருடன் ஊடல் நிகழ்த்தலே இனிமை பயக்கும்.

நிழலில் உள்ள நீர்தான் தண்மையைத் தந்து நன்றாகும்; ஊடலும் விரும்பிக் காதலிப்பார் இடத்தே இனிதாகும்.
காட்சிப் பின்புலம்:
கடமை முடித்து நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் தலைவர் இல்லம் திரும்பியுள்ளார். படுக்கை அறையில் தலைவி, கணவர் வந்தால் ஊடல் இன்பம் கொண்டு பின் கூடலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறாள் தலைவி. புலவியின் பின்விளைவுகளையும் உள்ளத்துள் அலசிப் பார்க்கின்றாள்.
தலைவர் வரும்போது அவரைத் தழுவாமல், ஊடியிருந்து, அவர் 'துன்புறுவதை'க் கண்டு இன்புறலாம் என எண்ணுகிறாள்; உணவுக்கு உப்பு எவ்வளவு தேவையோ அதுபோலவே ஊடல் கொள்ளும் காலமும் மிகையாக இல்லாமலும் மிகக்குறைவாக இல்லாமலும் இருந்து காதலுணர்வு கெடாமல் காத்துக்கொள்ள வேண்டும் என்கிறாள்; காதல் கணவரும் இவளது ஊடலை அறியாதவர்போல் இருந்து அவளைத் தழுவாதிருந்து 'துன்பமடைய'ச் செய்யலாம் என நினைக்கிறாரானாலும் அது துன்பமுறும் தலைவியை மேலும் துயரடையச் செய்யுமே என்ற எண்ணமும் தோன்றுகிறது; மனைவி ஊடல் கொண்டுள்ளாள் என்பதைத் தலைவர் உணராதிருத்தல் அது ஏற்கனவே வாடியுள்ள வள்ளிக் கொடியை அடியோடு அரிந்துவிடுவது போலாம்; மனைவியிடம் ஊடல் மிகுந்து தோன்றினால் அது குணமுள்ள தலைவருக்கு ஓர் அழகாம்; ஊடல் முதிர்ச்சியான துனியும் புலவியும் இல்லாவிட்டால் காதல் மிகவும் பழுத்த கனியும் இளங்காயும் போன்றது. அளவறிந்து ஊடல் கொண்டு இன்பம் துய்க்கவேண்டும்; கலவிக்காக ஊடலை விரைவுபடுத்தினால் ஊடல் இன்பத்தையும் துய்க்கமுடியாது; நாம் ஊடலை மேற்கொண்டுள்ளோம் என்பதை அறியாத தலைவராக இருந்தால் நாம் ஊடல் கொள்வது எதற்கு?; இவ்வாறு ஊடல் எவ்வளவு கொள்ள வேண்டும் என்பதைக் கணித்துக் கொண்டிருக்கிறாள் தலைவி.

இக்காட்சி:
சென்ற குறளில் நாம் ஊடலை மேற்கொண்டுள்ளோம் என்பதை அறியாத தலைவராக இருந்தால் நாம் ஊடல் கொள்வது எதற்கு? எனக் கேட்டாள் தலைவி. ஆனால் குறளில் வரும் அவளது கணவர் அவள் மீது விருப்பமுடையவர். எனவே ஊடல் தீர்ப்பார். நிழலின் கீழ் இருக்கும் நீரே குளிர்ந்து இனிமையானதாக இருக்கும். அதுபோன்றே, தம்மீது விருப்பம் கொண்டோரிடம் ஊடல் கொள்வதே இனிமையானதாகும் எனச் சொல்கின்றாள்.
ஊடும் நோக்கத்தை உணரமுடியாதவரிடம் ஊடுவது ஆகாது; அது எதிர்மறை விளைவுகளைக்கூட ஏற்படுத்தவல்லது. ஊடல் கொள்வது கூட அன்பின் அடிப்படையில் தோன்ற வேண்டும். காதல்விருப்பம் இல்லாவிட்டால் புலவி இன்பம் பயவாது கசப்புணர்வில் முடியம். இப்பாடல் மண வாழ்வில் உள்ளோர் கருத்தில் கொள்ளவேண்டிய வள்ளுவரின் அறிவுரை ஆகும்.
குறுந்தொகைப் பாடல் ஒன்றும் புலவிக்கு அன்பு அடிப்படை என்பதனை வலியுறுத்துகிறது. புலவி அஃது எவனோ, அன்பிலங்கடையே? (குறுந்தொகை 93 பொருள்: அன்பு எனக்கு அவரிடம் இல்லாவிடத்து அவரோடு நான் ஏன் ஊட வேண்டும்?) எனச் சங்கத் தலைவி அன்பு உள்ள ஒருவரிடமே ஊடுதல் வேண்டும் என்பதை எதிர்மறை நடையில் சொல்கிறாள்.

'நீரும் நிழலது இனிதே' குறிப்பது என்ன?

'நீரும் நிழலது இனிதே' என்ற பகுதிக்குக் குளிர்ச்சியைத் தனக்கு இயல்பாகவுடைய நீரும் நிழலின் கண்ணதே யாயின் இனிதாம், நிழலைச் சேர்ந்த நீர் நன்று, குளிர்ச்சியைத் தனக்கு இயல்பாக உடைய நீரும் நிழலின்கண்ணே இனிதாம், உயிர்க்கு இன்றியமையாத நீரும் நிழலின் கண்ணதே இனிதாவது ஏனை வெயிலின் கண்ணது ஆகாது, நீரும் நிழலை அடுத்திருப்பதே இனிமையானது, நீரும் நிழலின்கண்ணிருந்தால்தான் பருகுதற்கு இனிதாகும், நீரும் நிழலிடத்தே குடித்தல் இனியது, நீர் நிழலோடு கூடியிருப்பின் குளிர்ச்சியாயிருக்கும், நீரும் நிழலிடத்து இருப்பதாயின் இனிமையாக இருக்கும், தண்ணீரும் (உருவத்தைத் திருப்பி எதிர் உருவமாக) நிழல் காட்டக் கூடியதாக (தெளிந்திருந்தால்தான்) நன்மை பயக்கும், தண்மையான நீரும் நிழல் சார்ந்திருப்பின் மிக இனிதாம், நீரும் நிழலின்கண் இருப்பின் குடிக்க இனிதாகும், நீரும் நிழலின் கண்ணே இனிதாவது, நிழலில் இருக்கும் நீர் குளிர்ச்சி தந்து இனிமை உடையதாய் இருக்கும், உயிர்வாழ்க்கைக் கின்றியமையாத நீரும் நிழலடியுள்ளதே குளிர்ந்து இன்பந்தரும், கோடையில் தண்ணீரும் நிழலில் இருந்தால்தான் குளிர்ந்து இன்பமாக இருக்கும், நிழலருகே நீர் இருப்பது இனிது என்றபடி உரையாளர்கள் பொருள் கூறினர்.

ஊடல் எப்போது இனிமை பயக்கும்? ஊடலும் ஊடல் தெளிதலும் அன்புக் காதலுடைய இணையர்க்கே நலமாய் முடியும். இருவருள் ஒருவர் அன்பற்றவராயிருந்தால் உணர்தல் நிகழ்தல் அரிதாகும். அதனால் இன்பம் கிட்டாமல் போகும். இது 'நீரும் நிழலது இனிதே' என்ற உவமை மூலம் விளக்கப்பட்டது.
நிழலும் நீரும் மக்களால் விரும்பப்படுவன. நீரிலும் நிழல் கீழுள்ள நீரை மக்கள் மிக விரும்புவர். குடிப்பதற்கு மட்டுமன்றி ஆறு, குளம் முதலிய நீர்நிலைகளிலும் நிழல் நீராடுவதும் இன்பம் பயக்கும். காய்ந்த நீர் அவ்வளவு இனிமையாக இராது. நிழலின் கீழ் உள்ள நீர் வெப்பம் நீக்கிக் குளிர்ச்சியைத் தந்து இனிமை பயப்பதுபோல புலவியும் விருப்பம் உடையவரிடம் கொண்டால் மட்டுமே இன்பம் உண்டாகும். காதல் கொண்டவர்க்கே ஊடல் உணர்தல் முடியும்; அதை நீக்குவதிலும் அவர்கள் வல்லவராயிருப்பர். காதல்விருப்பம் கொண்டவரிடம் ஊடல் கொள்வது இன்பம் தரும் என்பது கருத்து. தன்மீது விருப்பம் இல்லாத காதலரிடம் ஊடல் கொண்டால் அது கசப்பில்தான் முடியும்.
இதே கருத்துக் கொண்ட நிழல்நீர் பற்றிய மற்றொரு குறள் உள்ளது. நிழனீரும் இன்னாத இன்னா... (உட்பகை, 881 பொருள்: இன்பம் தரும் நிழலும் நீரும் நோய் செய்வனவாக இருந்தால் தீயனவே ஆகும்..) என்பது அது. அங்கும் நிழலை அடுத்துள்ள நீர் இனிமை பயக்கும் என்று சொல்லப்படுகிறது.

'நீரும் நிழலது இனிதே' என்றது நீர் நிழலோடு கூடியிருப்பின் இனிதாயிருக்கும்; அதுபோல ஊடலும் உணர்ந்த காதலன் கண்ணே இனிதாம் என்பதை உணர்த்த வந்தது.

நீரும் நிழலிடத்து இருப்பதாயின் நன்றாம்; ஊடலும் விரும்புவார் இடத்தே இனிதாக இருக்கும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

காதலுடையவர் இடத்துதான் புலவி மகிழ்ச்சி தரும்.

பொழிப்பு

நீரும் நிழலிடத்து நன்று; புலவியும் விரும்புவாரிடத்தே இனியது.