இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1301புல்லாது இராஅப் புலத்தை அவர்உறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது

(அதிகாரம்:புலவி குறள் எண்:1301)

பொழிப்பு (மு வரதராசன்): (ஊடும்போது அவர் அடைகின்ற) துன்பநோயைச் சிறிது காண்போம்; அதற்காக அவரைத் தழுவாமலிருந்து பிணங்குவாயாக.

மணக்குடவர் உரை: நம் காதலர் வந்தால் புல்லாதிருந்து புலத்தல் வேண்டும்: அவ்விடத்து அவருறும் கலக்கத்தை யாம் சிறிது காண்பேமாக.
இது வாயில் வேண்டிச் சென்ற தோழி தலைமகள் புலவிக் குறிப்புக் கண்டு முகங்கொடாமைப் பொருட்டு இனிமை கூறியது.

பரிமேலழகர் உரை: (வாயிலாகச் சென்ற தோழி தலைமகள் வாயில் நேர்தற்பொருட்டு அவளொடு நகையாடிச் சொல்லியது.) அவர் உறும் அல்லல் நோய் சிறிது காண்கம் - அங்ஙனம் புலந்தால் காதலரெய்தும் அல்லல் நோயினை யாம் சிறிது காணக்கடவோம்; புல்லாது இராப் புலத்தை - நீ அவரை விரைந்து சென்று புல்லாதே; இத்தொழிலை மேலிட்டுக் கொண்டிருந்து புலப்பாயாக.
(அல்லல் நோய் - துன்பத்தைச் செய்யும் காமநோய். 'சிறிது' என்றாள், புலவியை நீள விடலாகாது என்பது பற்றி. 'புலத்தை' என்புழி ஐகாரம் 'கடம்பூண்டொருகால் நீ வந்தை' (கலித்.குறிஞ்சி.27) என்புழிப்போல, முன்னிலை வினை விகுதி. 'புலத்தி' என்பதூஉம் பாடம். புலவிக்குறிப்புக்கண்டு அவள் வழியளாய் நின்று, 'நாம் உற்ற வருத்தம் அவரும் சிறிதுற்று அறிதல் வேண்டும்' என நகையாடி நேர்வித்தவாறு.)

சி இலக்குவனார் உரை: விரைந்து சென்று அவரைத் தழுவாமல் ஊடிக் கொண்டிருப்பாயாக. அவர் அடையும் துன்ப நோயினைச் சிறுது காண்போம்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
புல்லாது இராஅப் புலத்தை அவர்உறும் அல்லல்நோய் காண்கம் சிறிது.

பதவுரை: புல்லாது-தழுவாமல்; இராஅ-இருந்து; புலத்தை-ஊடல் கொள்வாய்; அவர்-அவர் (காதலர்); உறும்-அடைகின்ற; அல்லல்-துன்பம்; நோய்-(காம)வருத்தம்; காண்கம்-காணக்கடவோம்; சிறிது-கொஞ்சம்.


புல்லாது இராஅப் புலத்தை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ('புலத்தி' பாடம்); நம் காதலர் வந்தால் புல்லாதிருந்து புலத்தல் வேண்டும்;
பரிப்பெருமாள் ('புலத்தி' பாடம்): நாம் காதலர் வந்தால் புல்லாதிருந்து புலக்க வேண்டும்;
பரிதி: இராக்காலம் இன்று சற்று நேரம் புலக்காமலிருந்து;
காலிங்கர் ('புலத்தல்' பாடம்): நம் காதலர் வந்தால் புல்லாது இருந்து புலத்தல் வேண்டும்;
பரிமேலழகர்: (வாயிலாகச் சென்ற தோழி தலைமகள் வாயில் நேர்தற்பொருட்டு அவளொடு நகையாடிச் சொல்லியது.) நீ அவரை விரைந்து சென்று புல்லாதே; இத்தொழிலை மேலிட்டுக் கொண்டிருந்து புலப்பாயாக.
பரிமேலழகர் குறிப்புரை: 'புலத்தை' என்புழி ஐகாரம் 'கடம்பூண்டொருகால் நீ வந்தை' (கலித்.குறிஞ்சி.27) என்புழிப்போல, முன்னிலை வினை விகுதி. 'புலத்தி' என்பதூஉம் பாடம்.

'காதலர் வந்தால் புல்லாது இருந்து புலத்தல் வேண்டும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். 'இரா' என்ற சொல்லுக்கு மற்றவர்கள் இருந்து என்று பொருள் கொள்ள பரிதி இராக்காலம் எனக் கொண்டார்.

இன்றைய ஆசிரியர்கள் 'தழுவாது இருந்து பிணங்குக', 'நீ அவரை விரைந்து சென்று முயங்காமல் இருந்து புலப்பாயாக', '(மனமே!) அவரைத் தழுவாமல் இருந்து பிணங்கிக் கொள்ளுக', 'அவரைத் தழுவாதிருந்து பிணங்குவாயாக', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தழுவாது இருந்து பிணக்கம் கொள் என்பது இப்பகுதியின் பொருள்.

அவர்உறும் அல்லல்நோய் காண்கம் சிறிது:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர் ('அல்லல் யாம்' பாடம்): அவ்விடத்து அவருறும் கலக்கத்தை யாம் சிறிது காண்பேமாக.
மணக்குடவர் குறிப்புரை: இது வாயில் வேண்டிச் சென்ற தோழி தலைமகள் புலவிக் குறிப்புக் கண்டு முகங்கொடாமைப் பொருட்டு இனிமை கூறியது.
பரிப்பெருமாள்('அல்லல் யாம்' பாடம்): அவ்விடத்து அவருறும் கலக்கம் யாம் சிறிது பொழுது காண்பேமாக.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது வாயில் வேண்டிச் சென்ற தோழி தலைமகள் புலவிக் குறிப்புக் கண்டு முகங் கோடல் பொருட்டு இனிமை கூறியது.
பரிதி: நாயகர் வருத்தம் காணவேணும் என்றவாறு.
காலிங்கர்: அவ்விடத்து அவர்உறும் கலக்கம் யாம் சிறுது காண்போமாக என்றவாறு.
பரிமேலழகர்: அங்ஙனம் புலந்தால் காதலரெய்தும் அல்லல் நோயினை யாம் சிறிது காணக்கடவோம்.
பரிமேலழகர் குறிப்புரை: அல்லல் நோய் - துன்பத்தைச் செய்யும் காமநோய். 'சிறிது' என்றாள், புலவியை நீள விடலாகாது என்பது பற்றி. 'புலத்தி' என்பதூஉம் பாடம். புலவிக்குறிப்புக்கண்டு அவள் வழியளாய் நின்று, 'நாம் உற்ற வருத்தம் அவரும் சிறிதுற்று அறிதல் வேண்டும்' என நகையாடி நேர்வித்தவாறு.

'அவர்உறும் கலக்கம்/அல்லல் நோயினை யாம் சிறுது காண்போமாக' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அப்போது அவர் படும் துன்பத்தைச் சிறுது காண்போம்', 'அவ்வாறு புலந்தால்தான் காதலர் எய்தும் காமநோயினை நாங்கள் சிறுது காண்போம்', 'அவர் காம வேதனையால் படும்பாட்டைச் சிறுது (வேடிக்கை) பார்க்கலாம்', 'காதலர் அடையுந் துன்ப நோயினைச் சிறுது பார்ப்போம்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அவர் படும் துன்பத்தைச் சிறுது பார்ப்போம் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தழுவாது இருந்து காதலருடன் பிணக்கம் கொள்; அவர் உறும் அல்லல்நோய் காண்கம் சிறிது என்பது பாடலின் பொருள்.
'அல்லல்நோய் காண்கம்' குறிப்பது என்ன?

'கணவர் காமத்துன்பத்தை எப்படிக் கையாள்கிறார் என்பதைத்தான் கொஞ்சம் பார்ப்போமே!' - தலைவி

தலைவர் படுக்கை அறையுள் வந்தபின் அவரைத் தொடாது ஊடல் கொள்; தழுவலை எதிர்பார்த்து வரும் அவர் படும் துன்பத்தை அப்பொழுது சிறுது நேரம் வேடிக்கை காணலாம் எனத் தலைவி தனக்குள் குறும்புத்தனமாக எண்ணுகிறாள்.
காட்சிப் பின்புலம்:
கடமை முடிந்து, நீண்ட கால இடைவெளிக்குப் பின் இல்லம் திரும்பியுள்ளார் கணவர். அவரைக் கண்டதால் தலைவி மிக்க மகிழ்ச்சியுடன் காணப்படுகிறாள். தன்னை நன்கு அழகுபடுத்திக் கொண்டு, பெண்மை நிறைந்த பொலிவுடன் தோன்றுகிறாள் அவள். தன் மனைவியைக் கண்டு அவள் அழகையும் அணிகலன்களையும் குறிப்பறுவுறுத்தலாகப் பாராட்டினார். இடையில் தனக்கு முன்னரே தன்நெஞ்சு அவரிடம் சென்றுவிட்டதாகப் புனைந்து அதனால் நெஞ்சிடம் பொய்யாகச் சினந்து உரையாடிக் கொண்டிருக்கிறாள் தலைவி.

இக்காட்சி:
நெடிய பிரிவானதால் தலைவர்-தலைவி இருவருமே காமநோயால் துயரப்பட்டு புணர்ச்சியை விதும்பியவர்களாகவே இருக்கின்றனர். அவர்கள் தனிமையில் சந்திக்கும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அவர் படுக்கை அறையுள் வரும்போதே காதல் மனைவியின் தழுவலை எதிர்பார்த்துத்தான் வருவார் என்று அவளுக்குத் தெரியும்; அந்த நேரம் அவரைத் தழுவாது பிணக்கம் கொண்டவளாகக் காட்டிக் கொள்ளவேண்டும்; அப்பொழுது அவரை ஏங்கவிட்டு அவருறும் துன்பத்தைச் சிறுது நேரம் வேடிக்கை காணலாம் எனத் தலைவியின் உள்ளம் குறுகுறுக்கிறது. காதலின்பத்தைப் பெருக்கும் நோக்கத்தில் கணவருடன் விளையாட்டாக ஊடல் கொண்டு உள்ளுக்குள் மகிழ நினைக்கிறாள் தலைவி. அவரது காமவுணர்வுகளைச் சீண்டி கிளர்ச்சியை மிகுவித்து அதனால் அவர் தவிப்பது கண்டு இன்புற எண்ணுகிறாள்; அதாவது கணவரது காதல் துன்பத்தைக் கண்டு மகிழலாம் எனத் தனக்குள் சொல்கிறாள். அந்த ஊடல் காமத்திற்குச் சுவை ஊட்டும் என்பதையும் அது தொடர்ந்துவரும் புணர்ச்சி இன்பத்தை இருவரிடையேயும் கூட்டுவிக்கும் என்பதையும் உணர்ந்தவள் அவள். தன் உள்ளத்தில் வேட்கை மிகக்கொண்டிருந்தாலும் பிணங்கி புணர மறுப்பது போல் காட்டிக் கொள்ள எண்ணுகிறாள்; புணர்ச்சிக்குமுன் பொய்யாகப் புலக்கக் கருதினாள்.

நீ வந்தை ஒரு கால் கடம்பூண்டு.... (கலித்தொகை குறிஞ்சி 27 பொருள்: நீ வாராய் ஒருமுறை கடமையாக மேற்கொண்டு.......) என்றதில் வருவாய் என்பது 'வந்தை' ஆகியதுபோல இப்பாடலில் புலப்பாய் என்பது 'புலத்தை' ஆகியது. புலத்தை என்னும் சொல்லில் உள்ள 'ஐ' என்னும் முன்னிலை வினை விகுதி குறள் நடையில் காணும் புதுமைப் போக்கு என்பர்.

'அல்லல்நோய் காண்கம்' குறிப்பது என்ன?

'அல்லல்நோய் காண்கம்' என்ற தொடர்க்குக் கலக்கத்தை யாம் காண்போமாக, வருத்தம் காணவேணும், கலக்கம் யாம் காண்போமாக, அல்லல் நோயினை யாம் காணக்கடவோம், துன்பத்தை நாம் காண்போமாக!, துன்பநோயைக் காண்போம், காமநோயினை நாங்கள் காண்போம், காமவேதனையால் படும்பாட்டை (வேடிக்கை) பார்க்கலாம், காதல் நோயின் துயரைக் காண்போம், துன்ப நோயினைப் பார்ப்போம், துன்பநோயைக் கண்டு களிப்போம் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் இல்லம் திரும்பியுள்ள தலைவர் இப்பொழுது, படுக்கை அறைக்குள் வர இருக்கிறார். அவர் நெஞ்சு முழுவதும் காம இன்பம் நுகர்வது பற்றியதாகவே இருக்கும்- விரைந்து காதலியைப் புணரவே விரும்புவார். இதை நன்கு அறிந்திருந்த தலைவி அவர் விழைவிற்கு இணங்குவதற்கு முன்னர் அவருடன் பொய்யான சிறு சண்டை போட்டுத் தன்னிடம் நெருங்கவிடாமல் செய்ய எண்ணுகிறாள். அவருக்குப் பாலியல் சீண்டலை உண்டாக்கி, கலக்கமுறச் செய்து, சிறுது பொழுது மகிழ நினைக்கிறாள். அவள் வெகு அருகில் இருந்தும் கட்டித் தழுவ முடியாத நிலையை உருவாக்கி அதன் விளைவாக அவர் மேலும் அல்லல் படுவதை மறைவாகக் காணலாம் என எண்ணுகிறாள். அதற்காக அவரைத் தழுவாமலிருந்து பிணங்குவாயாக என்று மனதிற்குள் சொல்கிறாள்.
வேடிக்கை பார்ப்பேன் என்று விளையாட்டு மனநிலையில் தலைவி உரைப்பது, புலத்தற்குரிய காரணம் இல்லாமல் பொய்ச்சினம் காட்டுகிறாள் என்பதை உய்த்துணர வைக்கின்றது. அவள் பொய்யாகக் கொள்ளும் சினம் அவர்களிடையேயான அன்பிற்கு வலிமையும் சேர்ப்பதாகும்.

அல்லல்நோய் காண்கம் என்றது காதல் நோயின் துயரைக் காண்போம் என்ற பொருள் தருவது.

தழுவாது இருந்து காதலருடன் பிணக்கம் கொள்; அவர் படும் துன்பத்தைச் சிறுது பார்ப்போம் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

புலவி காரணமில்லாமலும் உண்டாவது தான்.

பொழிப்பு

அவர் வரும்போது தழுவாமல் பிணக்கம் கொள்ள வேண்டும்; அப்பொழுது அவர் தவிப்பதைக் காணலாம்.