இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1310ஊடல் உணங்க விடுவாரோடு என்னெஞ்சம்
கூடுவேம் என்பது அவா

(அதிகாரம்:புலவி குறள் எண்:1310)

பொழிப்பு (மு வரதராசன்): ஊடல் கொண்டபோது உணர்த்தி மகிழ்விக்காமல் வாடவிடுகின்றவரோடு என் நெஞ்சம் கூடியிருப்போம் என்று முயல்வதற்குக் காரணம் அதன் ஆசையே.

மணக்குடவர் உரை: என் புலவியைச் சாகவிட்டிருக்க வல்லாரோடு என்னெஞ்சு, கூடுவேமென்று நினைக்கின்றது தன்னாசைப்பாட்டால்.
இது புலவி நீங்கவேண்டுமென்ற தோழிக்குத் தலைமகள் புலவி தீர்வாளாய்ச் சொல்லியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) ஊடல் உணங்க - தான் ஊடற்கண்ணே மெலியாநிற்கவும்; விடுவாரொடு கூடுவேம் என்பது என் நெஞ்சம் அவா - விட்டிருக்க வல்லாரோடு கூடக்கடவேம் என்று என் நெஞ்சம் முயறற்கு ஏது தன் அவாவே; பிறிது இல்லை.
(அன்பும் அருளும் இல்லாதவரை உடையர் என்றும் அவரோடு யாம் கூடுவம் என்றும் கருதி அதற்கு முயறல் அவாவுற்றார் செயலாகலின், 'கூடுவேம் என்பது அவா' என்றான். காரியம் காரணமாக உபசரிக்கப்பட்டது. 'இக்கூட்டம் முடியாது' என்பதாம்.)

இரா இளங்குமரனார் உரை: ஊடியிருக்கும் பொழுதில் அதனைத் தணியாமல் வருந்த விடுபவரை விட்டு விடாமல் அவரோடு கூடுவோம் என்று என்நெஞ்சம் முயல்வது அதன் ஆசைப்பெருக் கேயாம்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஊடல் உணங்க விடுவாரோடு என்னெஞ்சம் கூடுவேம் என்பது அவா.

பதவுரை: ஊடல்-ஊடலில்; உணங்க-வாட; விடுவாரோடு-விடுபவரோடு; என்-எனது; நெஞ்சம்-உள்ளம்; கூடுவேம்-கூடுவோம்; என்பது-என்றல்; அவா-பெருவிருப்பத்தால்.


ஊடல் உணங்க விடுவாரோடு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: என் புலவியைச் சாகவிட்டிருக்க வல்லாரோடு;
பரிப்பெருமாள்: எமது புலவியைச் சாகவிட்டவரோடே;
பரிதி: ஊடற்கண் உணர்வு செய்யாமல் காமக் கலவியைக் கருத்தழிந்தவரை;
காலிங்கர்: எமது புலவியைச் சாக உலத்திவிட்டவரோடு;
பரிமேலழகர்: (இதுவும் அது.) தான் ஊடற்கண்ணே மெலியாநிற்கவும் விட்டிருக்க வல்லாரோடு;

'புலவியைச் சாகவிட்டிருக்க வல்லாரோடு' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஊடலை வாட விடுவாரோடு', 'ஊடலைத் தவிர்த்துக் கூடாமல் அதனை வாடவிடும் அன்பிலாரோடு', '(இவ்வளவு நேரமாக என் பிணக்கத்தைத் தீர்க்காமல்) பிணக்கத்தில் என்னை நொந்துபோக விட்டு இருக்கிற காதலரோடு', 'நான் ஊடலில் வாட விடுவாரோ?', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

புலவியை வாட விடுவாரோடு என்பது இப்பகுதியின் பொருள்.

என்னெஞ்சம் கூடுவேம் என்பது அவா:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: என்னெஞ்சு, கூடுவேமென்று நினைக்கின்றது தன்னாசைப்பாட்டால்.
மணக்குடவர் குறிப்புரை: இது புலவி நீங்கவேண்டுமென்ற தோழிக்குத் தலைமகள் புலவி தீர்வாளாய்ச் சொல்லியது.
பரிப்பெருமாள்: என்னெஞ்சு, கூடுவேன் என்று நினைக்கின்றது ஆசைப்பாடு என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் புலந்தது கண்டு 'புலவி நீங்கவேண்டும்' என்ற தோழிக்குப் புலவி தீர்வான் சொல்லியது.
பரிதி: நெஞ்சே! நீ கூடுவோம் என்பது ஏன் என்றவாறு.
காலிங்கர்: என் நெஞ்சம் கூடுவேன் என நினைக்கின்றது எனது ஆசைப்பாடு என்றவாறு.
பரிமேலழகர்: கூடக்கடவேம் என்று என் நெஞ்சம் முயறற்கு ஏது தன் அவாவே; பிறிது இல்லை. [முயறற்கு ஏது - முயலுதற்குக் காரணம்]
பரிமேலழகர் குறிப்புரை: அன்பும் அருளும் இல்லாதவரை உடையர் என்றும் அவரோடு யாம் கூடுவம் என்றும் கருதி அதற்கு முயறல் அவாவுற்றார் செயலாகலின், 'கூடுவேம் என்பது அவா' என்றான். காரியம் காரணமாக உபசரிக்கப்பட்டது. 'இக்கூட்டம் முடியாது' என்பதாம். [அதற்கு - கூடுதற்கு]

'என்னெஞ்சு, கூடுவேமென்று நினைக்கின்றது தன்னாசைப்பாட்டால்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'என்மனம் கூட நினைப்பது வெறும் ஆசையே', 'என்நெஞ்சம் முயங்குவோம் என்று கருதுவதற்குக் காரணம் ஆசையாகும்', 'புணர்ந்து இன்புறலாம் என்று என் மனம் ஆசைப்படுகிறது (எனக்கு நம்பிக்கை விட்டுப் போயிற்று)', 'என் நெஞ்சம் அவரைச் சேர்வோம் என்று கருதுவது என்பெரு விருப்பமே' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

என் உள்ளம் கூட நினைப்பது பெரு விருப்பத்தினாலே என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
புலவியை உணங்க விடுவாரோடு என் உள்ளம் கூட நினைப்பது பெரு விருப்பத்தினாலே என்பது பாடலின் பொருள்.
'உணங்க விடுவார் யார்?

என்னவொரு நெஞ்சு என்னது? ஊடல் உணர்ந்து அதனை நீக்காதவரோடு கூட விரும்புகிறதே!

ஊடல் கொண்ட போது அதைத் தெளிவித்து தன்னை மகிழ்விக்கச் செய்யாமல் வாடவிடுகின்றவரோடு, எம் நெஞ்சம் ‘கூடுவோம்’ என்று நினைப்பது, காதல் ஆசையினாலேதான் என்கிறாள் தலைவி.
காட்சிப் பின்புலம்:
தொழில் காரணமாக தொலைவு சென்றிருந்த தலைவர் இல்லம் திரும்பியுள்ளார். நீண்ட காலத்திற்குப் பின் அவரைப் பார்க்கிறாள் தலைவி. தன்னை நன்கு அணி செய்து மகிழ்ச்சியுடன் காணப்படுகிறாள். இரவு நேரமும் வந்துவிட்டது. பள்ளியறையில் காத்திருக்கிறாள். அவர் வந்தால் அவருடன் ஊடி அதன் இன்பம் துய்த்துப் பின் கூட வேண்டும் என எண்ணுகிறாள்.
தலைவர் வரும்போது அவரைத் தழுவாமல், ஊடியிருந்து, அவர் துன்புறுவதைக் காண்போம் என எண்ணுகிறாள்; ஆனாலும் உணவுக்கு உப்பு எவ்வளவு தேவையோ அதுபோலவே ஊடல் கொள்ளும் காலமும் இருக்கவேண்டும், உப்பு மிகுந்தால் உணவு கெட்டுவிடுவது ஊடலை மிகுதியாக்குதல் காதலுணர்வும் கெட்டுவிடும் என்பதைத் தலைவி அறிவாள்போலப் பேசுகிறாள்; கணவரும் இவளது ஊடலை அறியாதவர்போல் இருந்து அவளைத் தழுவாதிருந்து துன்பமடையச் செய்யலாம் என எண்ணுகிறார்; அது துன்பமுறும் தலைவியை மேலும் துயரடையச் செய்யுமே; தலைவி ஊடல் கொண்டுள்ளாள் என்பதைக் கணவர் உணராதிருத்தல் ஏற்கனவே வாடியுள்ள வள்ளிக் கொடியை அடியோடு அரிந்துவிடுவது போலாம்; மனைவியிடம் ஊடல் மிகுந்திருந்தால் குணமுள்ள தலைவருக்கு அது அழகாம்; ஊடல் முதிர்ச்சியான துனியும் புலவியும் இல்லாவிட்டால் காதல் மிகவும் பழுத்த கனியும் இளங்காயும் போன்றது. அளவறிந்து ஊடல் கொண்டு இன்பம் பெறவேண்டும்; கூடலுக்காக ஊடலை விரைவுபடுத்தினால் ஊடல் இன்பத்தையும் துய்க்கமுடியாது; நாம் ஊடலை மேற்கொண்டுள்ளோம் என்பதை அறியாத தலைவராக இருந்தால் நாம் ஊடல் கொள்வது எதற்கு?; நீரும் நிழலிடத்து இருப்பதாயின் நன்றாம்; ஊடலும் விரும்புவார் இடத்தே இனிதாக இருக்கும்;
இவ்வாறு ஊடல் விளையாட்டைத் தொடங்கும் ஆயத்தங்களைச் செய்துகொண்டிருக்கிறாள் தலைவி.

இக்காட்சி:
அவர் வந்துவிட்டார். தலைவி புலவியைத் தொடங்கிவிட்டாள். 'ஆனால் ஏன் என்னைப் பற்றி அக்கறை இல்லாதவர் போல் காணப்படுகிறார்? நான் ஊடுகிறேன் என்பதைக் கூட உணராமல் இருக்கின்றாரே? என் ஊடும் நோக்கத்தை உணர்ந்து அதைத் தீர்க்க முயலாமல் வாட விட்டுக் கொண்டிருக்கிறாரே! ஆனாலும் என் உள்ளம் அவரை கூடத்தான் விருப்பம் கொள்கிறது. நான் ஊட விரும்புகிறேன். ஆனால் என் நெஞ்சம் என்னை முந்தி காதலருடன் கூட நினைக்கிறதே' எனத் தலைவியின் மனத்துள் எண்ண ஓட்டம் செல்கின்றது. தலைவி தன் நெஞ்சில் பொதிந்திருக்கும் தலைவனைக் கூடும் விழைவை இவ்வாறு தெரிவிக்கிறாள். ஊடலை உணராமல் இருக்கிறாரே, உணர்ந்தபின் நாம் எப்பொழுது கூடுவது? என்றபடி எண்ணுவதால் அவள் பொறுமை இழக்கத் தொடங்குகிறாள் என அறிய முடிகிறது.

தலைவி ஊடல் கொண்டிருந்தால், கணவர் ஊடலைத் தணித்து மகிழ்வூட்ட வேண்டும். ஆனால் இங்கு மனைவி ஊடல் கொண்டிருக்கும் பொழுதில் தலைவர், அதனைத் தணிக்காமல் அவளை வருந்தவிடுகிறார். ஒருவேளை பயணக் களைப்பில் இருக்கிறாரோ? தெரியவில்லையே. தனது ஊடும் நோக்கத்தை அறியாமல் இருக்கிறாரே. அவளை ஆறுதல் படுத்தி ஊடலிலிருந்து விடுபடச் செய்ய தலைவர் முனையாமல் இருப்பது காலம் நீட்டிப்பதைக் காட்டுகின்றது. எனவே அவள் எண்ணம் கூடலிலே செல்கிறது. ஊடலால் வாடவிடுவாரைக் கூட நினைப்பதற்கு அவளது அடக்க முடியா ஆசைப்பாடே காரணம்.

'உணங்க விடுவார்' யார்?

'உணங்க விடுவார்' என்ற தொடர்க்குச் சாகவிட்டிருக்க வல்லார், சாகவிட்டவர், உணர்வு செய்யாமல் காமக் கலவியைக் கருத்தழிந்தவர், சாக உலத்திவிட்டவர், மெலியாநிற்கவும் விட்டிருக்க வல்லார், உணர்த்தி மகிழ்விக்காமல் வாடவிடுகின்றவர், அதுதானே வாடி உலர்ந்து ஒழியுமாறு விட்டுவிடும் வன்னெஞ்சர், வாட விடுவார், கூடாமல் அதனை வாடவிடும் அன்பிலார், நொந்துபோக விட்டு இருக்கிற காதலர், அதனைத் தணியாமல் வருந்த விடுபவர், அதனால் வருந்தும்படி நம்மை விட்டுப் போவார், வாடித் தளரவிடும் கொடியவர், மகிழ்விக்காமல் வாடவிடுகின்றவர் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்,

உணங்க விடுவார் என்ற தொடர்க்கு வாட விடுவார் என்பது நேர் பொருள். புலவி தொடங்கியவரிடம் அதன் காரணம் அறிந்து நீக்க முயலாமல் அதை மடியவிடுபவர் வாடவிடுவார் ஆகிறார். காதலன்-காதலி இருவரில் யாரேனும் ஒருவர் உணங்கவிடுவாராய் இருப்பர். இங்கு தலைவரே உணங்கவிடுவாராக இருக்கிறார்.

'உணங்க விடுவார்' என்ற தொடர் வாடி உலர்ந்து ஒழியுமாறு விட்டுவிடுபவர் என்ற பொருள் தரும்.

புலவியை வாட விடுவாரோடு என் உள்ளம் கூட நினைப்பது பெரு விருப்பத்தினாலே என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

புலவியைக் கணவர் உணராவிட்டாலும் நான் கூடுவேன்.

பொழிப்பு

ஊடலை வாட விடுவாரோடு என்மனம் கூட நினைப்பது பெரு விருப்பமே.