இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1304



ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதல்அரிந் தற்று

(அதிகாரம்:புலவி குறள் எண்:1304)

பொழிப்பு (மு வரதராசன்): பிணங்கியவரை ஊடலுணர்த்தி அன்பு செய்யாமலிருத்தல், முன்னமே வாடியுள்ள கொடியை அதன் அடியிலே அறுத்தல் போன்றது.

மணக்குடவர் உரை: நும்மோடு ஊடிக்கண்டும் இவையிற்றால் வரும் பயன் இல்லை: நின்னோடு நெருநல் ஊடிய காமக்கிழத்தியரை ஊடல் தீராது பெயர்தல், வாடிய கொடியை அடியிலே அறுத்தாற்போலும்.
இது காமக்கிழத்தியரை ஊடல் தீராமை தீது; ஆண்டுப் போமேன்ற தலைமகள் கூறியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) ஊடியவரை உணராமை - நும்மோடு ஊடிய பரத்தையரை ஊடலுணர்த்திக் கூடாதொழிதல்; வாடிய வள்ளி முதல் அரிந்தற்று - பண்டே நீர் பெறாது வாடிய கொடியை அடியிலே அறுத்தாற் போலும்.
('நீர் பரத்தையரிடத்தில் ஆயவழி எம் புதல்வரைக் கண்டு ஆற்றியிருக்கற்பாலமாய யாம் நும்மோடு ஊடுதற்குரியமல்லம் அன்மையின், எம்மை உணர்த்தல் வேண்டா; உரியராய் ஊடிய பரத்தையரையே உணர்த்தல் வேண்டுவது; அதனால் ஆண்டுச் சென்மின்', என்பதாம்.)

வ சுப மாணிக்கம் உரை: ஊடிய மகளிரை உணராத் தன்மை வாடிய கொடியை அடியோடு அறுத்தது போலும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஊடியவரை உணராமை வாடிய வள்ளி முதல் அரிந்தற்று.

பதவுரை:
ஊடியவரை-ஊடல் கொண்டுள்ளவரை; உணராமை-உணராமலிருத்தல்; வாடிய-நீரின்றி உலர்ந்துபோன; வள்ளி-கொடி; முதல்-தண்டு (அடிப்பகுதி); அரிந்து-அரிந்தது(அறுத்தது); அற்று-போன்றது.


ஊடி யவரை உணராமை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நும்மோடு ஊடிக்கண்டும் இவையிற்றால் வரும் பயன் இல்லை: நின்னோடு நெருநல் ஊடிய காமக்கிழத்தியரை ஊடல் தீராது பெயர்தல்;
மணக்குடவர் குறிப்புரை: இது காமக்கிழத்தியரை ஊடல் தீராமை தீது; ஆண்டுப் போமேன்ற தலைமகள் கூறியது.
பரிப்பெருமாள்: நும்மோடு ஊடினவரை ஊடல் தீராது வருதல்;
பரிப்பெருமாள் குறிப்புரை: இது தலைமகன் தன்னை ஊடல் தீர்ப்பச் செய்தவற்றைக் கண்டு, இவையிற்றால் ஈண்டுப் பயன் இல்லை; நின்னொடு நெருநல் ஊடிய காமக்கிழத்தியை ஊடல் தீராது பெயர்ந்தாய்; அது தக்கது அன்று; ஆண்டுப் போ' என்று தலைமகள் கூறியது. 'எமக்கு மக்களை வளர்த்து அறம் நோக்குமது அல்லது காமத்தால் பயன் இல்லை' என்றவாறாயிற்று.
பரிதி: ஊடிய நாயகரை உறவு செய்யாமல் இருந்த நெஞ்சே! உன்னாலே நாயகர் பிரிந்தார்;
காலிங்கர்: தம்மோடு ஊடினவரை ஊடல் தீராது வருத்துவது;
பரிமேலழகர்: (இதுவும் அது.) நும்மோடு ஊடிய பரத்தையரை ஊடலுணர்த்திக் கூடாதொழிதல்; [ஊடல் உணர்த்தி- பிணக்கினை நீக்கி]
பரிமேலழகர் குறிப்புரை: 'நீர் பரத்தையரிடத்தில் ஆயவழி எம் புதல்வரைக் கண்டு ஆற்றியிருக்கற்பாலமாய யாம் நும்மோடு ஊடுதற்குரியமல்லம் அன்மையின், எம்மை உணர்த்தல் வேண்டா; உரியராய் ஊடிய பரத்தையரையே உணர்த்தல் வேண்டுவது; அதனால் ஆண்டுச் சென்மின்', என்பதாம். [உணர்த்தல் - ஊடல் தீர்த்தல்]

'ஊடிய காமக்கிழத்தியரை ஊடல் தீராது பெயர்தல்' என்ற பொருளில் மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை செய்தனர். பரிதி 'ஊடிய நாயகர்' என உரைக்கின்றார். பரிமேலழகர் 'ஊடிய பரத்தையரை ஊடலுணர்த்திக் கூடாதொழிதல்' என்றார். காலிங்கர் நேர்பொருளாக 'ஊடினவரை ஊடல் தீராது வருத்துவது' என உரை வரைந்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஊடல் கொண்ட மகளிரை ஊடல் நீக்கித் தெளிய வைத்துக் கூடாமை', 'பிணங்கியிருக்கும் காதலியை (காதலன்) பிணக்கம் தீர்த்துப் புணராமல் விட்டுவிடுவது', 'பிணங்கின மகளிரைப் பிணக்கு நீக்காமை', 'ஊடல் கொண்டுள்ளவரை அறியாமல் இருத்தல்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஊடல் கொண்டவரை உணராமல் இருத்தல் என்பது இப்பகுதியின் பொருள்.

வாடிய வள்ளி முதல்அரிந் தற்று:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வாடிய கொடியை அடியிலே அறுத்தாற்போலும்.
பரிப்பெருமாள்: முன்பே வாடின கொடியைத் தூரிலே அரிந்தாற்போலும் என்றவாறு.
பரிதி: இனி வாடிய கொடிக்கு வேரற்றது ஒக்கும்; அழகு அழியும் என்றவாறு.
காலிங்கர்: முன்பே வாடிய கொடியை வேர் முதலோடும் அரிந்தாற் போலும் என்றவாறு.
பரிமேலழகர்: பண்டே நீர் பெறாது வாடிய கொடியை அடியிலே அறுத்தாற் போலும்.

'வாடிய கொடியை வேர் முதலோடும் அரிந்தாற் போலும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'முன்பே நீர் பெறாமல் வாடிய கொடியை அடியிலே அறுத்தது போலும்', '(நீரில்லாமல்) வாடிப்போயிருக்கிற கொடிக்கு (நீர் வார்ப்பதை விட்டு) வேரறுப்பதற்குச் சமானம்', 'வாடிய கொடியை அடியிலே அறுத்தாற் போலும்!', 'வாடிய வள்ளிக்கொடியை அடியில் அரிந்ததை ஒக்கும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

வாடிய கொடியைத் தூரிலே அரிந்ததை ஒக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஊடியவரை உணராமல் இருத்தல் வாடிய கொடியைத் தூரிலே அரிந்ததை ஒக்கும் என்பது பாடலின் பொருள்.
'ஊடியவரை உணராமை' குறிப்பது என்ன?

காதலியின் ஊடல் தீராமல் வருத்துவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்ற இரக்கமற்ற தன்மையாம்!

ஊடிப் பிணங்கியவரைத் தெளிவித்து அன்பு செய்யாதிருத்தல், முன்பே நீரில்லாது வாடியிருக்கும் கொடியின் வேரை அறுப்பது போலாம்.
காட்சிப் பின்புலம்:
கடமை முடிந்து, நெடிய பிரிவுக்குப் பின், இல்லம் திரும்பியுள்ளார் தலைவர். கணவர்-மனைவி இருவருமே பிரிவால் காதல் நோயால் துயரப்பட்டிருப்பதால் புணர்ச்சியை விதும்பியவர்களாகவே இருக்கின்றனர். இரவு வந்துவிட்டது. அவர் படுக்கை அறையுள் வரும்போதே தழுவலை எதிர்பார்த்துத்தான் வருவார்; அந்த நேரம் அவரைத் தொடாது பிணக்கம் கொண்டவளாகக் காட்டிக்கொண்டு ஊடல் கொள்ளவேண்டும்; அப்பொழுது அவரை ஏங்கவிட்டு அவர் படும் துன்பத்தைச் சிறுது நேரம் வேடிக்கை காணலாம் எனத் தலைவியின் உள்ளம் குறுகுறுக்கிறது. அந்த ஊடல் காமத்திற்குச் சுவை ஊட்டும் என்பதையும் அது தொடர்ந்துவரும் புணர்ச்சி இன்பத்தை இருவரிடையேயும் கூட்டுவிக்கும் என்பதையும் உணர்ந்தவள் அவள். தன் உள்ளத்தில் வேட்கை மிகக்கொண்டிருந்தாலும் பொய்யாகப் பிணங்கி புணர மறுப்பது போல் காட்டிக் கொள்ள எண்ணுகிறாள்; அதாவது புணர்ச்சிக்குமுன் புலக்கக் கருதினாள்.
ஊடிக் கூட எண்ணும் தலைவியின் உள்ளத்தில் இன்னொரு கருத்தும் தோன்றுகிறது: உணவுக்கு உப்பு சேர்ப்பது போலக் காமத்திற்கு சுவை தருவது ஊடல். உப்பு இல்லையேல் உணவு சப்பென்று இருக்கும்; அதன் அளவு சிறுது மிகின் உப்புக் கரித்ததாகித் துய்க்கவேமுடியாது போய்விடும்; அதுபோல ஊடல் கொள்வது கூடாமல் குறையாமல் உப்பளவாக இருந்தால் பின்னுண்டாகும் கலவி இன்பமாக இருக்கும் என்பது அது.
தலைவர் பள்ளியறையில் நுழையும்போது அங்கே தலைமகள் ஊடல் கொண்டவளாகத் தன்னைக் காட்டிக் கொண்டிருக்கிறாள். அதனால் அவர்கள் இருவரும் காதல் இன்பத்திலிருந்து விலகியிருக்கின்றனர். புலந்தவரை நேரடியாகப் புல்லிப் புலவியை நீக்கலாம்; தழுவுதல் ஊடல் நீக்குதற்கான எளிய ஓர் வழியாகும். ஊடல் கொண்டவரைத் தழுவாவிட்டால் அது ஏற்கனவே வருந்திக் கொண்டிருப்பவரை மேலும் துன்பத்துக்குள்ளாக்குவதாகும். இவ்வுண்மை தலைவர்க்கு அப்பொழுது தோன்றவேண்டும்.

இக்காட்சி:
நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு தலைமக்கள் படுக்கையறையில் சந்திக்கின்றனர். தலைவி ஊடல் கொள்ளும் மனநிலையிலிருக்கின்றாள். அவள் புலக்கிறாள் என்பதை உணர்ந்து ஊடலைத் தெளிவிக்க தலைவன் முயலவேண்டும். அவ்விதம் அவன் செய்யாவிட்டால் அது ஒரு கொடிய செயலாகக் கருதப்படும். முன்பே நீர் பெறாமல் வாடிய கொடியை வேரோடு அறுத்தது எவ்வளவு துன்பமான செயலோ அது போன்றது என்கிறது இப்பாடல்.

புலவி என்பது சிறுபிணக்கு என்று சொல்லப்படுவது‌. புலவியின்‌ வளர்ச்சி ஊடல்‌ என்பர். புலவி, ஊடல் என்னும் சொற்கள் தம் சிறப்புப் பொருளிழந்து பொதுநிலையில் இங்கு ஆட்சி பெறுகின்றன. வள்ளி என்ற சொல் கொடி என்ற பொருள் தருகிறது. நெருஞ்சி முள்ளை நெருஞ்சிப்பழம் என்று (1120) சொன்னதுபோல கொடியை வள்ளி என்று வள்ளுவர் கூறுகின்றார். முதல் என்ற சொல் இங்கு முளை தோன்றும் பகுதி அதாவது வேர்ப்பகுதி அல்லது அடிப்பகுதியைக் குறிக்கிறது.
முந்தைய குறள் (1303) தம்மை நெருங்கவிடாது ஊடல் செய்த மகளிரைத் தழுவாது விடுதல், முன்னே அல்லற்பட்டு அழிந்தவரை மேலும் மிகுந்த அல்லற்கு ஆட்படுத்துவது போலும் என்றது. அதன் நீட்சியாக இங்கு ஊடல் கொண்டவரை தான் ஏதும் தவறிழைக்கவில்லை என்பதைக் காட்டி, அவர் உளநிறைவு கொள்ளுமாறு தெளிவுபடுத்தல் வேண்டும். இல்லையேல் நீரில்லாமல் வாடியுள்ள கொடியை அதன் வேர்ப்பகுதியில் அறுத்து வீசி எறிந்தது போல்வதாகும் என்று ஓர் உவமையுடன் சொல்லப்படுகிறது. வேரோடு அரிவது கொன்றன்ன இன்னாமை செய்வதை ஒக்கும் என்கிறது பாடல். ஊடல் செய்பவரின் மனநிலையைப் புரிந்து கொள்ளாமல் இருந்தால் அவர் இறக்கும் நிலைக்கு உள்ளாவார் என்பது கருத்து.

'ஊடியவரை உணராமை' குறிப்பது என்ன?

'ஊடியவரை உணராமை' என்ற தொடர்க்கு ஊடிய காமக்கிழத்தியரை ஊடல் தீராது பெயர்தல், ஊடினவரை ஊடல் தீராது வருதல், ஊடிய நாயகரை உறவு செய்யாமல் இருந்த நெஞ்சே!, தம்மோடு ஊடினவரை ஊடல் தீராது வருத்துவது, நும்மோடு ஊடிய பரத்தையரை ஊடலுணர்த்திக் கூடாதொழிதல், பிணங்கியவரை ஊடலுணர்த்தி அன்பு செய்யாமலிருத்தல், தம்மோடு ஊடிய மகளிரை அவ்வூடல் தீர்த்துக் கூடாது நீங்குதல், ஊடிய மகளிரை உணராத் தன்மை, ஊடல் கொண்ட மகளிரை ஊடல் நீக்கித் தெளிய வைத்துக் கூடாமை, பிணங்கியிருக்கும் காதலியை (காதலன்) பிணக்கம் தீர்த்துப் புணராமல் விட்டுவிடுவது, ஊடியிருப்பவரின் உள்ளக் குறிப்பை உணர்ந்து அரவணைத்துக் கொள்ளாதவர் செயல், பிணங்கின மகளிரைப் பிணக்கு நீக்காமை, ஊடல் கொண்டுள்ளவரை அறியாமல் இருத்தல், ஊடல் செய்பவரை அதன் காரணம் அறிந்து உணர்த்தாது பிரிதல் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

இக்குறளிலுள்ள ஊடியவர் என்றதற்கு மணக்குடவர், பரிப்பெருமாள், பரிமேலழகர் ஆகியோர் ஊடியவர் காமக்கிழத்தி/பரத்தையர் என்று காட்டுகின்றனர். காமக்கிழத்தி அல்லது பரத்தை போன்றோர் தொடர்பான பிரிவு குறளில் எங்கும் சொல்லப்படவில்லை. அதற்கான குறிப்பும் எதுவுமே நூலில் இல்லை. எனவே இவர்களது உரைகள் ஏற்கக்கூடியனவல்ல.
ஊடியவர் என்பது தலைவன் -தலைவி இருவருக்கும் பொருந்துமாறான சொல்லாக இருந்தாலும் இது பெரிதும் தலைவியையே குறிக்கும். ‘உணராமை’ என்பது தலைவியின் ஊடலை அறிந்து அதைத் தெளிவிக்காமையைக் குறிப்பது; ஊடும் நோக்கத்தை உணராதவர் என்பதாகவும் உள்ளன்பு இல்லாதவர் என்பதாகவும் இதற்குப் பொருள் கூறினர். ஊடல் நீக்கி கூடாது விடுதல் என்பதையும் 'உணராமை' என்றனர்.

ஊடியவரை உணராதிருப்பது எதிர்மறையான செயல்; அது காதலரது நல்லுறவுக்குத் தடையானதென்று உவமை வெளிப்படுத்துகிறது. ஊடல் கொண்ட காதலியை ஊடல் நீக்கித் தெளிய வைத்து அதன்பின்தான் கூடவேண்டும். மாறாக ஊடலை உணராமல் தலைவன் ஊடலை நீடிக்கவிட்டால், பிணக்குகள் பெரிதாகி, கூடல் விலகிப்போகலாம்; இருவர் உறவிலும் விரிசல் ஏற்படலாம். எனவே கூடலுக்கு முன் புலவியைத் தலைவன் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். அப்பொழுதுதான் புணர்ச்சி இனிதாகும். ஊடியிருக்கும் காதலியின் மனநிலையை அறிந்து அதைத் தீர்ப்பது, காதலனது கடமை எனச் சொல்லப்படுகிறது.
பொய்யாகச் சினம் காட்டி ஊடுவதற்கும் இக்குறள் பொருந்துமாறே உள்ளது. புல்லா திராஅப் புலத்தை அவர்உறும் அல்லல்நோய் காண்கம் சிறிது (1301 பொருள்: தழுவாது இருந்து காதலருடன் பிணக்கம் கொள்; அவர் படும் துன்பத்தைச் சிறுது பார்ப்போம்) என இவ்வாதிகாரத்து முதல் பாடல் சொல்வதால் தலைவி பொய்யாகச் சினம் காட்டுபவரையும் ஊடியவராகவே கொள்ளலாம். பொய்யான ஊடலோ அல்லது காரணத்துடன் கூடிய பிணக்கமோ, எதுவாக இருந்தாலும், ஊடல் 'உணர்தல்' காமத்தில் எத்துணை இன்றியமையாதது என்பதை வள்ளுவர் இப்பாடல்வழி உணர்த்திவிடுகிறார்.

'ஊடியவரை உணராமை' என்றது பிணங்கியவரை ஊடலுணர்த்தி அன்பு செய்யாமலிருத்தல் எனப் பொருள்படும்,

ஊடல் கொண்டவரை உணராமல் இருத்தல் வாடிய கொடியைத் தூரிலே அரிந்ததை ஒக்கும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

புலவி உணராமை இறக்கச் செய்வதற்கு நேர்.

பொழிப்பு

ஊடியவரை உணராதது வாடிய கொடியை அடியோடு அரிந்தாற் போலும்