இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1302உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்

(அதிகாரம்:புலவி குறள் எண்:1302)

பொழிப்பு (மு வரதராசன்): உப்பு, உணவில் அளவோடு அமைந்திருப்பதைப் போன்றது ஊடல்; ஊடலை அளவு கடந்து நீட்டித்தல், அந்த உப்பு சிறிதளவு மிகுதியாக இருப்பதைப் போன்றது.மணக்குடவர் உரை: நுகர்வனவற்றிற்கு உப்பமைந்தாற்போல இனிமை யுண்டாக்கும் புலவி: அதனை நீளவிடல் அவ்வுப்பு சிறிது மிக்காற்போல இன்னாதாம்.
இது வாயில் வேண்டிய தோழிக்குத் தலைமகள் மறுத்த விடத்துப் புலவியை நீளவிடுதல் தகாதென்று அவள் கூறியது.

பரிமேலழகர் உரை: (புலவியொழிந்து வாயில் நேரும் வகை அவள் சொல்லியது.) புலவி உப்பு அமைந்தற்று - புலவி கலவி இன்பம் செயற்கு வேண்டும் அளவிற்றாதல் உப்புத் துய்ப்பனவற்றை இன்சுவையாக்கற்கு வேண்டுமளவிற்றாதல் போலும்; சிறிது நீளவிடல் அது மிக்கற்று- இனி அதனை அவ்வளவில் சிறிது மிகவிடுதல் அவ்வுப்பு அளவின் மிக்காற்போலும்.
(நீள விடல் - அளவறிந்துணராது கலவிமேல் எழுந்த குறிப்பழுங்குமளவும் செய்தல். 'சிறிது நீள விடலாகாது' என்றாள், நேர்விக்கின்றாளாகலின். 'உப்பு மிக்க வழித் துய்ப்பது சுவையின்றானாற் போலப் புலவி மிக்கவழிக் கலவி இன்ப மின்றாம்' என்றமையின், இது பண்பு உவமை.)

இரா சாரங்கபாணி உரை: காம இன்பத்திற்குப் புலவி அளவாக அமைதல், உணவில் உப்பு அளவாக அமைதல் போலும். அதனை அளவுக்கு மிகுதியாக நீட்டுதல் அவ்வுப்பு உணவில் அளவுக்கு மிகுந்தாற் போலும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
புலவி உப்பு அமைந்தற்று; சிறிது நீளவிடல் அது மிக்கற்று.

பதவுரை: உப்பு-உப்பு; அமைந்து-வேண்டுமளவு உடையதாதல்; அற்று-போன்றது; புலவி-ஊடல்; அது-அது; சிறிது-கொஞ்சம்; மிக்கு-அளவின் மிகுந்தால்; அற்று-அத்தன்மைத்து; நீளவிடல்-நீட்டிக்கச் செய்தல். 'ஆல்' இரண்டும் அசைகள்.


உப்பமைந் தற்றால் புலவி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நுகர்வனவற்றிற்கு உப்பமைந்தாற்போல இனிமை யுண்டாக்கும் புலவி;
பரிப்பெருமாள்: நுகர்வனவற்றிற்கு உப்பமைந்தாற்போல இனிமை யுண்டாக்கும் புலவி;
பரிதி: கறிகாய் அளவறிந்து உப்பிட்டுச் சமைத்தற்கு ஒக்கும் புலவியும் கலவியும்;
காலிங்கர்: நுகர்வனவற்றுக்கு உப்பு அமைந்தாற்போல இனிமை உண்டாம் புலவி;
பரிமேலழகர்: (புலவியொழிந்து வாயில் நேரும் வகை அவள் சொல்லியது.) புலவி கலவி இன்பம் செயற்கு வேண்டும் அளவிற்றாதல் உப்புத் துய்ப்பனவற்றை இன்சுவையாக்கற்கு வேண்டுமளவிற்றாதல் போலும்; [அளவிற்றாதல் - அளவு உடையதாதல்; துய்ப்பனவற்றை - உண்ணும் கறிவகை முதலியவற்றை; இன்சுவை - நல்ல சுவை]

'நுகர்வனவற்றிற்கு உப்பமைந்தாற்போல இனிமை யுண்டாக்கும் புலவி' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி புலவியோடு கலவியும் அளவோடு அமைய வேண்டும் என்று பொருள் தருகின்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஊடல் உணவுக்கு உப்பளவு போன்றது', '(கலவியல்) புலவி செய்வது உணவுக்கு உப்புச் சேர்ப்பதுபோல (சுவைதரும்)', 'பிணக்கம் உணவுகளுக்குச் சுவைதரும் உப்புப் போலாம்', 'ஊடல் உணவுக்கு உப்பு அமைந்தது போலும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

உணவுக்கு உப்புஅளவு அமைந்தது போன்றது ஊடல் என்பது இப்பகுதியின் பொருள்.

அதுசிறிது மிக்கற்றால் நீள விடல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதனை நீளவிடல் அவ்வுப்பு சிறிது மிக்காற்போல இன்னாதாம்.
மணக்குடவர் குறிப்புரை: இது வாயில் வேண்டிய தோழிக்குத் தலைமகள் மறுத்த விடத்துப் புலவியை நீளவிடுதல் தகாதென்று அவள் கூறியது.
பரிப்பெருமாள்: அதனை நீளவிடில் அவ்வுப்பு மிக்காற்போல இன்னாதாம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது வாயில் வேண்டிய தோழிக்குத் தலைமகள் மறுத்த விடத்து இப்புலவியை நீளவிடுதல் தக்கதன்று அவள் கூறியது.
பரிதி: ஏறாமல் குறையாமல் சமனாய் இருக்க வேணும் என்றவாறு.
காலிங்கர்: அதனை நீளவிடில் அவ்வுப்பு மிக்காற் போல இன்னாதாம் என்றவாறு.
பரிமேலழகர்: இனி அதனை அவ்வளவில் சிறிது மிகவிடுதல் அவ்வுப்பு அளவின் மிக்காற்போலும்.
பரிமேலழகர் குறிப்புரை: நீள விடல் - அளவறிந்துணராது கலவிமேல் எழுந்த குறிப்பழுங்குமளவும் செய்தல். 'சிறிது நீள விடலாகாது' என்றாள், நேர்விக்கின்றாளாகலின். 'உப்பு மிக்க வழித் துய்ப்பது சுவையின்றானாற் போலப் புலவி மிக்கவழிக் கலவி இன்ப மின்றாம்' என்றமையின், இது பண்பு உவமை. [அழுங்குமளவும் - கெடுமளவும்]

'அதனை நீளவிடல் அவ்வுப்பு சிறிது மிக்காற்போல இன்னாதாம்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஊடல் மிகுவது உப்புக் கூடுவது போலும்', '(ஆனால் அந்தப் புலவியை) நெடுநேரம் நீளவிடுவது அந்த உப்பு அதிகப்பட்டது போல் (சுவை கெடும்)', 'அப்பிணக்கத்தை நெடிது நேரம் நிலைக்க வைத்தல், உப்பு அதிகப்பட்டுச் சுவை கெட்டாற் போலும்!', 'ஊடலை மிகுதியாக்குதல் உப்பு சிறுது மிக்கது போலும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அதனைக் கொஞ்சம் கூடுதலாக நீளவிடுதல் உப்பு மிகுதியானாற்போல என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
உணவுக்கு உப்பு அளவு போன்றது ஊடல்; அதனைக் கொஞ்சம் மிக்கற்றால் நீள விடல் என்பது பாடலின் பொருள்.
'மிக்கற்றால் நீள விடல்' குறிப்பது என்ன?

உப்பளவே ஊடல் கொள்க.

உணவில் உப்பு அளவாக அமைந்து சுவை கொடுப்பது போல இருக்கவேண்டும் ஊடல்; அதை அளவு கடந்து சிறிது நீள விட்டாலும், உப்பு மிகுந்த உணவுபோல் துய்க்கத்தகாதது ஆகிவிடும்.
காட்சிப் பின்புலம்:
தொழில் காரணமாகப் பிரிந்து சென்றிருந்த கணவன் இல்லம் திரும்பியிருக்கிறான். இதுகாறும் ஆற்றாமையால் வாடியிருந்த மனைவி இன்று மிக்க மகிழ்ச்சியுடன் காணப்படுகிறாள். தலைவி நீண்ட பிரிவிற்குப் பின் காதலியைக் காணப்போவதால் அவனும் காதல் வேகம் மிகக் கொண்டிருப்பான் என்பதை அவள் அறிவாள். தன் உள்ளத்தில் வேட்கை மிகக்கொண்டிருந்தாலும் செயற்கையாகப் பிணங்கி புணர மறுப்பது போல் காட்டிக் கொள்ள எண்ணுகிறாள். அந்த ஊடல் காமத்திற்குச் சுவை ஊட்டும் என்பதையும் அது தொடர்ந்துவரும் புணர்ச்சி இன்பத்தை இருவரிடையேயும் கூட்டுவிக்கும் என்பதையும் உணர்ந்தவள் அவள். தலைவன் பள்ளியறையுள் வந்தபின் அவனைத் தொடக்கூடாது; தான் கட்டியணைப்பதை எதிர்பார்த்து வரும் அவன் படும் துன்பத்தை அப்பொழுது சிறுது நேரம் வேடிக்கை காணலாம் எனத் தலைவி தனக்குள் குறும்புத்தனமாக எண்ணிக் கொண்டிருக்கிறாள். புணர்ச்சிக்குமுன் புலக்கக் கருதினாள்.

இக்காட்சி:
ஊடிக் கூட எண்ணும் தலைவிக்கு முன்காப்பாக ஓர் அறிவுரை.
நுகர்வனவற்றுக்கு உப்பு இன்றியமையாதது. உணவாக்கும் கலையில் உப்பு முதலியவற்றை அளவறிந்து இட்டுச் சுவை பார்ப்பர். சமையலில் உப்பு அளவாக இருப்பின் உணவு சுவையுள்ளதாக இருக்கும். உப்பு இல்லையேல் சப்பென்று இருக்கும். அதன் அளவு சிறுது மிகின் உப்புக் கரித்ததாகித் துய்க்கவேமுடியாது போய்விடும். உணவுக்கு உப்பு சேர்ப்பது போலக் காமத்திற்கு சுவை தருவது ஊடல். காதல் இன்பத்துக்கு ஊடல் இன்றியமையாததும் கூட.
ஆனால் பிணக்கத்தை நீக்கிக் காதலர் கூடாமல் நெடுநேரம் இருந்து விட்டாலும் அது உணவில் உப்பு கூடுதலானது போலச் சுவை கெட்டுப் போகும்; ஊடல் கொள்வது ஏறாமல் குறையாமல் உப்பளவாக இருந்தால் பின்னுண்டாகும் கலவி இன்பமாக இருக்கும்.

காதலரிடையே உண்டாகும் பிணக்கமான மனநிலை புலவி அல்லது ஊடல் எனப்படுவது. ஊடலுக்கு உண்மையான காரணம் இருக்க வேண்டுவதில்லை; அது காதலின் அடிப்படையில் தோன்ற வேண்டும். காதல் அடிப்படையில்லா ஊடல் இன்பம் நல்காது; அது வெறும் பூசலாய் முடியும். ஊடலை உணர்ந்து காதலுடைய மற்றவர் அதை நீக்க வேண்டும். பிணக்கம் என்று சொல்லப்பட்டாலும் காதல்கொண்டவர்களின் உள்ளத்து ஐயம் இல்லை, வெறுப்பில்லை, பிணக்கம் இங்கு பிணைப்பான உளநிலையை உண்டாக்கக் காரணமாகின்றது.
ஊடல் பின் வரும் புணர்ச்சி இன்பத்தை மிகுவிக்கக் கூடியது. கூடலுக்கு முன் முடிந்து, கூடலுக்குப்பின் தொடராத ஊடல்வகை மட்டுமே வள்ளுவர் கூறுவது.

இப்பாடலைத் தோழி தலைவிக்குக் கூறும் அறிவுரையாக உரையாசிரியர்கள் கொள்வர். சிலர் தலைவி-தலைவன் தங்கள் மனதுக்குள் கூறியதாகக் கொள்கின்றனர். இப்பாடலை ஆசிரியர் கூற்றாகக் கொள்வதும் நன்று.

'மிக்கற்றால் நீள விடல்' குறிப்பது என்ன?

'மிக்கற்றால்' என்பதிலுள்ள 'ஆல்' அசைச்சொல். மிக்கு அற்று என்ற தொடர் மிகுந்தது போன்று என்று பொருள்படும். மிகுந்தது என்பது குறளின் முதற் பகுதியில் சொல்லப்பட்டுள்ள உப்பு மிகுதியாவதைச் சொல்கிறது. நீளவிடல் என்பது புலவியை அதாவது ஊடலை நீட்டிக்கச் செய்வது என்ற பொருள் தரும். 'மிக்கற்றால் நீள விடல்' என்பதை 'நீளவிடல் மிக்கு அற்று' எனப் படிக்கும்போது '(ஊடலை) நீளவிடுதல் (உப்பை) மிகுதியாக இடுதல் போன்றது' என்ற தெளிவான பொருள் கிடைக்கும்.

உப்பு அளவோடு இருந்தால், உணவுப் பொருள் சுவையாக இருக்கும். உப்பில்லாத உணவு சுவை தராது என்றாலும் அதை உண்ண முடியும். ஆனால் உப்பு கொஞ்சம் ஏறினாலும் உணவு ஒரே கரிப்பாகி நுகரவே முடியாமல் போகும். அதுபோல ஊடல் காலம் சிறுது மிகையாக நீளுமாயின், இன்பச் செவ்வி கெடும். புலவி, கலவியின்பம் செயற்கு வேண்டுமளவு இருக்கவேண்டும். புலவி மிக்கவழிக் கலவி, இன்பம் இல்லாததாயிருக்கும். ஊடாப் புணர்வால் இன்பம் குறையும். ஆனால் கலவி மிகையாக நீடித்தால் காம இன்பம் கெடுவதல்லாமல், துனி என்னும் முதிர்ந்த நிலைக்கு இட்டுச் சென்று துன்பம் தரக் கூடிய இடர்ப்பாடு உண்டாகலாம்; ஊடலை நீடிக்கவிட்டால், பிணக்குகள் பெரிதாகி, கூடல் விலகிப்போகலாம்; இருவர் உறவிலும்கூட விரிசல் ஏற்பட்டுத் துயர் நேரலாம்.
இவ்விதம் உப்பை ஊடல்-கூடல் இரண்டிற்குமான இடைவெளியில் உள்ள காலத்துடன் ஒப்பிட்டுப் பிணங்கலை நீளவிடாமல் அளவுடன் முடித்துக் கூடல் இன்பம் பெறவேண்டும் என்கிறது பாடல். எது அளவான காலம் என்பது காதலர்களின் உள்ளப்பக்குவம், அவர்கள் ஊடலை எதிர்கொள்ளும் மனத்திறம் ஆகியவற்றைப் பொறுத்தது.
தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும் காமம் நிறைய வரின் (புணர்ச்சிவிதும்பல் 1282 பொருள்: காதல் உணர்ச்சி பனையளவினும் மிகத் தோன்றுமாயின் தினையளவு கூட ஊடாதிருத்தல் விரும்பப்படும்) என முன்னர்ச் சொன்னபடி நீண்ட பிரிவிற்குப் பின் கூடும் காதலரிடை உப்பமைவு ஊடலும் கூடாது. ஆனாலும் இங்கு சொல்லப்பட்ட காதலி விளையாட்டு மனநிலையில் இருப்பவளாதலால் புலவி நேரத்தை உப்பளவோடு நிறுத்திக் கொள்வாள்.
பிணக்கம் அளவாகுக; மிகுதியாக்க வேண்டாம் என்பது புலப்படுத்தப்பட்டது. அளவு என்றது ஊடல்-கூடல் இரண்டிற்குமான இடைவெளியின் அளவு ஆகும். ஊடுவார்க்கு 'அளவறிதல்' என்னும் அறிவோட்டம் வேண்டும் என்பது அறிவுறுத்தப்படுகிறது.
புலவியின் அளவு பற்றிக் கூறும் இக்குறளின் உரையில் புலவியும் கலவியும் அளவாக அமையவேண்டும் என்று பரிதி புணர்ச்சியின் காலஅளவையையும் சேர்த்தே கூறுகிறார்.

உணவுக்கு உப்பு அளவு போன்றது ஊடல்; அதனைக் கொஞ்சம் கூடுதலாக நீளவிடுதல் உப்பு மிகுதியானாற்போல என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

புலவி மிகுந்தால் உறவு பாழ்படும்.

பொழிப்பு

ஊடல் உணவுக்கு உப்பின் அளவு போன்றது; அது மிகுவது உப்புக் கூடுவது போன்றதாகும்.