கடமை காரணமாகத் தலைவர் பிரிந்து சென்று நாட்கள் பல ஆயிற்று. அவர் எப்பொழுது திரும்புகிறார் என்பது பற்றி எந்தச் செய்தியும் இல்லை; மனைவிக்குப் பிரிவு ஆற்றாமை மிகுந்து விட்டது. என்ன செய்வது என்று அவளுக்குத் தெரியவில்லை. தனக்குத் தன் நெஞ்சே துணையாக உதவும் என எண்ணுகிறாள். தனது உள்ளத்து உணர்வுகளை மனதுடன் பகிர்ந்து ஆறுதல் அடைய நினைக்கிறாள். மனத்தின் போக்கு ஒன்றாகவும், அவளுடை போக்கு ஒன்றாகவும் இருக்கும் அவளது மனப் போராட்டம் நெஞ்சோடுகிளத்தல் அதிகாரப் பாடலகள் வழி வெளிப்படுகின்றது. இத்தொகுப்பில் உள்ள பத்து குறட்பாக்களிலும் 'நெஞ்சு' என்ற சொல்லாட்சி காணப்படுகின்றது. 'நினைத்து ஒன்று சொல்லாயோ?' 'இருந்துள்ளி பரிதல் என்?' 'செற்றார் எனக் கைவிடல் உண்டோ?' 'நீ யாரிடம் செல்வாய்?" என வினாக்களாகத் தொடுத்து இங்கு நெஞ்சுடன் பேசுகின்றாள் தலைவி.
நெஞ்சொடுகிளத்தல்
பிரிவைத் தாங்கமுடியாமல், தலைவி தன் நெஞ்சை முன்னிலைப்படுத்தித் தன் துன்பங்களை வெளியிடுகிறாள். பிறர்க்குச் சொல்வதற்கு நாணித் தன் நெஞ்சொடு பேசி ஆறுதலடைய எண்ணுகிறாள் அவள். மனது அளவு கடந்த துன்பத்தில் உழலும்போதுதான், மாந்தர் இவ்வாறு தனக்குத் தானே பேசிக் கொள்வர். முன் அதிகாரமான உறுப்புநலனழிதலில் பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கு என் வாடு தோள் பூசல் உரைத்து (1237) என்பதில் தொடங்கி மனதோடு தொடர்ந்து பேசுகிறாள் தலைவி. 'நெஞ்சோடுகிளத்தல்' அதிகாரம் முழுக்கக் காதலியின் பேச்சாகவே உள்ளது.
தலைவர் விரைந்து மீளவில்லையே என்று அவர்மீது வெறுப்புக் கொண்டு காயவேண்டும் என்று காதல்மனைவி எண்ணுகின்றாள். ஆனால் அது அவளால் முடியாததாக இருக்கிறது. அவள் தன்மென்மையான உணர்வுகளையும் அதனால் நெஞ்சம் நெகிழ்வதையும் உணர்கிறாள். அவருக்கு நம்மீது இரக்கம் இல்லை; பின் ஏன் அவருக்காக வருந்துகிறாய்? என முதலில் கேட்கிறாள். பின்னர் 'எம்மை வெறுத்தார்' என்று கைவிடுதலும் ஆகுமோ? எனத் தெளிவு பெற்றவள்போல் பேசுகிறாள். 'அவர் கூட வரும்போது பிணக்கம் ஏதும் காட்டுவதில்லை; இப்பொழுது ஏன் பொய்யாக அவர்மீது காய்கிறாய்' எனக் கூறியவள், காமம், நாணம் என இரண்டையும் ஒரே சமயத்தில் தாங்கும் சக்தி எனக்கில்லை எனத் தன் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறாள். ஒரு கணம் 'காதலர் என் உள்ளத்தில்தான் குடி இருக்கிறார்; அவரைத் தேடி எங்கு செல்ல' என்று கேட்பவள் மறுகணம் 'நம்முடன் வாழாதவரை இன்னும் நெஞ்சில் சுமந்தால் என் அழகு மேலும் சீர் குலையத்தான் செய்யும்; முன் இழந்த புறஅழகோடு மேலும் அகஅழகாம் நிறையும் இழப்பேம்' என்கிறாள். இவ்வாறு முரண்பட்ட உணர்வுகளுடன் தலைவி தத்தளிப்பதை இவ்வதிகாரப் பாடல்கள் காட்டுகின்றன.
மனைவிக்குத் தலைவரைக் காணவேண்டும் என்ற துடிப்பு உள்ளது. அவரோ அயல் சென்றுள்ளார். எனவே தன் நெஞ்சுதான் அவரை நினைத்த நேரம் பார்க்கமுடியுமே என்பதால் அதனிடம் தன் கண்களையும் கூட்டிச் செல்லுமாறு வேண்டுகிறாள். இல்லாவிட்டால் அவை 'அவரைக் காட்டு! அவரைக் காட்டு!' என அவளைத் தின்று தீர்த்துவிடுமாம். கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத் தின்னும் அவர்காணல் உற்று (1244) என்பது பாடல்.
கலந்துணர்த்தும் காதலர்க் கண்டால் புலந்துணராய் பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு (1246) என்ற பாடலில்
'நெஞ்சே! அவர் இருக்கும்போது, அவரிடமிருந்து இன்பம் பெற எண்ணி, சிறுபிணக்கம் கூட இல்லாமல் அவர் மீது போய் விழுவாய். ஆனால் இப்போது அவர் இல்லாத நேரத்தில் ஏதோ அவர்மீது குறைபடுவது போலப் போலிச் சீற்றம் கொள்கிறாய்?' என்று காதலி தன் நெஞ்சுடன் கொஞ்சிப் பூசலிடுகிறாள்.
தலைவி நாணத்திற்கும், காமத்திற்கும் நடுநின்று நடுங்கி எவ்வகையிலும் உய்யமுடியாது தவிக்கிறாள். 'என் நெஞ்சே! ஒன்று காமத்தை விட்டுவிடு, அல்லது நாணத்தை விட்டுவிடு. இந்த இரண்டையும் தாங்கிக் கொண்டிருக்க என்னால் முடியாது' என அவள் காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே யானோ பொறேன்இவ் விரண்டு (1247) என்ற பாடலில் தன் ஆற்றாமையை வெளியிடுகிறாள்.
உள்ளத்தார் காத லவராக உள்ளிநீ யாருழைச் சேறிஎன் நெஞ்சு (1249) என்பதில் 'உன் உள்ளத்தவர், உன் காதலர், எப்பொழுதும் உன் உள்ளத்தில் குடியிருக்க, நீ அவரைத் தேடி யாரிடம் செல்வாய்?' என்று தலைவி தன் நெஞ்சை மென்மையாகத் கடிந்துரைக்கிறாள்.