இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1243இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல்

(அதிகாரம்:நெஞ்சொடுகிளத்தல் குறள் எண்:1243)

பொழிப்பு (மு வரதராசன்): நெஞ்சே! (என்னுடன்)இருந்து அவரை நினைந்து வருந்துவது ஏன்? இந்தத் துன்பநோயை உண்டாக்கியவரிடம் இவ்வாறு அன்பு கொண்டு நினைக்கும் தன்மை இல்லையே!

மணக்குடவர் உரை: நெஞ்சே! நீ இறந்துபடாது இருந்து அவர்வரவை நினைந்து வருந்துகின்றது யாதிற்கு? வருத்தமுற்று நினைத்தல் நமக்குச் சிறுமைசெய்யும் நோயைத் தந்தார்மாட்டு இல்லை யாயின்.
இது வாராது வருந்துகின்றாமென்று கூறியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) நெஞ்சே இருந்து உள்ளிப் பரிதல் என் - நெஞ்சே! அவர்பால் செல்வதும் செய்யாது ஈண்டு இறந்து படுவதும் செய்யாதிருந்து அவர் வரவு நினைந்து நீ வருந்துகின்றது என்னை? பைதல் நோய் செய்தார் கண் பரிந்து உள்ளல் இல் - இப்பையுள் நோய் செய்தார் மாட்டு நமக்கு இரங்கிவரக் கருதுதல் உண்டாகாது.
('நம்மாட்டு அருளுடையர் அன்மையின், தாமாக வாரார், நாம் சேறலே இனித்தகுவது' என்பதாம்.)

சி இலக்குவனார் உரை: நெஞ்சே! நீ இங்கிருந்து கொண்டு அவரை நினைத்து வருந்துதல் என்ன பயனைத் தரும்? வருந்தும் நோயைச் செய்தாரிடம் நமக்காக இரங்கி நினைந்து வருதல் இல்லை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நெஞ்சே இருந்துள்ளிப் பரிதல் என்? பைதல்நோய் செய்தார்கண் பரிந்துள்ளல் இல்.

பதவுரை: இருந்து-இருந்து கொண்டு; உள்ளி-நினைத்து; என்-எதற்கு? பரிதல்-வருந்துதல்; நெஞ்சே-உள்ளமே; பரிந்து-இரங்கி; உள்ளல்-நினைத்தல்; பைதல்-துன்பம்; நோய்-நோய்; செய்தார்கண்-செய்தார்மாட்டு, செய்தாரிடம்; இல்-இல்லை, உண்டாகவில்லை.


இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நெஞ்சே! நீ இறந்துபடாது இருந்து அவர்வரவை நினைந்து வருந்துகின்றது யாதிற்கு?
பரிப்பெருமாள்: நெஞ்சே! நீ இறந்துபடாது இருந்து அவரை நினைந்து வருந்துகின்றது யாதினுக்கு?
பரிதி: இருந்துள்ளி என்னதான் என்னுடன் எனக்குப் பரிகிறாய்;
காலிங்கர் ('என் பரிதி' பாடம்): நெஞ்சே! நீ அவர் தம்மை எப்பொழுதும் நினைந்து இருந்து ஏதுக்கு மற்று இங்ஙனம் பரிகின்றனை;
காலிங்கர் குறிப்புரை: என் என்பினை ஈர்தி என்றும் ஆம்.
பரிமேலழகர்: (இதுவும் அது.) நெஞ்சே! அவர்பால் செல்வதும் செய்யாது ஈண்டு இறந்து படுவதும் செய்யாதிருந்து அவர் வரவு நினைந்து நீ வருந்துகின்றது என்னை?

நெஞ்சே! நீ இருந்து அவர்வரவை நினைந்து வருந்துகின்றது யாதிற்கு? என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். மணக்குடவரும் பரிமேலழகரும் இறந்துபடாது இருந்து அவர்வரவை நினைந்து வருந்துகின்றது யாதிற்கு என்று பொருளுரைத்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நெஞ்சே! நீ இருந்து நினைத்து வருந்துவதேன்?', 'நெஞ்சே! நீ மட்டும் அவரை எதிர்நோக்கி இருந்து நினைந்து வருந்துதல் ஏன்?', 'மனமே! நீ இங்கிருந்து கொண்டு நினைத்து நினைத்து எனக்காக அனுதாபப்படுவதால் என்ன பயன்?', 'நெஞ்சே! அவரிடத்துப் பேசவுஞ்செய்யாது இறக்கவுஞ் செய்யாது இங்கேயிருந்து வருந்துவதாற் பயன் என்ன?' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நெஞ்சே! இங்கேயிருந்து அவரை எண்ணி வருந்துவது எதற்காக? என்பது இப்பகுதியின் பொருள்.

பரிந்துள்ளல் பைதல்நோய் செய்தார்கண் இல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வருத்தமுற்று நினைத்தல் நமக்குச் சிறுமைசெய்யும் நோயைத் தந்தார்மாட்டு இல்லை யாயின்.
மணக்குடவர் குறிப்புரை: இது வாராது வருந்துகின்றாமென்று கூறியது.
பரிப்பெருமாள்: வருத்தமுற்று நினைத்தல் நமக்குச் சிறுமைசெய்யும் நோயைத் தந்தார்மாட்டு இல்லை யாயின்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது வாளாது வருந்துகின்றாய் என்று கூறியது.
பரிதி: பரிகிற காதல் நமக்குப் பசலை தந்த நாயகரிடத்து இல்லை என்றவாறு.
காலிங்கர்: தாம் பரிந்து ஒருகால் நம்மை உள்ளுதல் இத்துயர் தரும் நோயைச் செய்தவர்மாட்டுச் சிறிதும் இல்லை என்று யான் தேறினேன் என்றவாறு.
பரிமேலழகர்: இப்பையுள் நோய் செய்தார் மாட்டு நமக்கு இரங்கிவரக் கருதுதல் உண்டாகாது. [பையுள் நோய் -துன்பநோய்]
பரிமேலழகர் குறிப்புரை: 'நம்மாட்டு அருளுடையர் அன்மையின், தாமாக வாரார், நாம் சேறலே இனித்தகுவது' என்பதாம்.

இத்துயர் தரும் நோயைச் செய்தவர்மாட்டு நம்மை உள்ளுதல் இல்லை என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அன்பெண்ணம் நோய் செய்தாருக்கு இல்லை', 'இக்காம நோயினைச் செய்தவரிடத்து நம் துன்பத்திற்கு இரங்கி இங்கு வர நினைத்தல் இல்லை. அங்ஙனம் இருக்க', 'எனக்கு இந்தப் பெரிய வேதனையை உண்டாக்கி வைத்தவரிடத்தில் என்னைப் பற்றி அனுதாபப்படுகிற எண்ணம் இல்லையே?', 'நமக்கு இத்துன்பநோயைச் செய்தவரிடம் இரக்கங் கொண்டு நம்மை நினைத்து வருந்துந் தன்மையில்லை' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

துன்ப நோயைச் செய்தாரிடம் நமக்காக இரங்கி நினைத்தல் இல்லையே என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நெஞ்சே! இங்கேயிருந்து அவரை எண்ணி வருந்துவது எதற்காக? பைதல்நோய் செய்தாரிடம் நமக்காக இரங்கி நினைத்தல் இல்லையே என்பது பாடலின் பொருள்.
'பைதல்நோய்' என்பது என்ன?

ஏன் சும்மா சும்மா வருந்திக்கொண்டிருக்கின்றாய் நெஞ்சே! அவர்தாம் நம்மை நினைப்பதுகூட இல்லையே.

நெஞ்சமே! இங்கிருந்துகொண்டு அவரை நினைத்து நீ ஏன் வருந்துகிறாய்? பிரிவுத் துன்பம் தந்தவர் நம்மை நினைத்து வருந்துதல் இல்லையே.
காட்சிப் பின்புலம்:
கடமைக்காகப் பிரிந்து சென்ற காதலன் பல நாட்கள் ஆகியும் இன்னும் திரும்பிவரவில்லை. தலைவிக்குத் தனிமைத் துன்பம் தாங்கமுடியாததாக இருக்கிறது. ஊன் உறக்கம் இன்றி உடல் உறுப்புநலன் குன்றுகிறது. தன் நெஞ்சைப் பார்த்து பேசி தன் மனச்சுமையை நீக்க எண்ணுகிறாள்.
என் துயர் தீர்ப்பதற்கு மருந்தாக ஏதாவது ஒன்றை ஆராய்ந்து எனக்குச் சொல்ல மாட்டாயோ?; தலைவர் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்கும்போது அவர் வரவு நோக்கி வருந்துவது அறியாமை அன்றோ?;
இவ்விதம் தன் நெஞ்சத்தை நோக்கி வினாக்கள் தொடுத்து தன் துன்பத்தை ஆற்ற முயன்றுகொண்டிருக்கிறாள் தலைவி.

இக்காட்சி:
நாம் இங்கிருந்து அவரை நினைத்து வருந்துவது எதற்காக? வருத்தும் நோயைச் செய்தவர்க்கு நம்மைக் குறித்து இரக்கமான எண்ணம் இல்லையே. தன் வருத்தங்களைத் தன் நெஞ்சிடமே சொல்லித் தன் புலம்பலைத் தொடர்கின்றாள் தலைவி. 'அவர் நம்மீது இரக்கம் கொண்டு நம்மை எண்ணுவதே இல்லையே! பிரிவுத் துன்பநோயைத் தந்துவிட்டு சென்றவர்க்கே அந்நோயைத் தீர்க்க வேண்டும் என்ற நினைப்பு இல்லை நீ இங்கிருந்து கொண்டு அவரை நினைத்து வீணாக வருந்துவது எதற்காக?' என்று பெருமூச்சுடன் வினவுகிறாள்.
தலைவியுடன் இருந்தபடியே கணவரை நினைந்து நினைந்து வருந்துகிறதாம் அவளது நெஞ்சு. அதை அவள் கடிந்துரைக்கிறாள். "நெஞ்சே! நமக்கு இத் துயரை உண்டாக்கியவர் அவரே. ஆனால், அவர் இதற்காக வருந்துகிறார் எனத் தெரியவில்லையே. நீ மட்டும் என் பரிதி (அதாவது அவரை நினைந்து வருந்துவது ஏன்?)' என்று கேட்கிறாள்.

இருந்துள்ளி என்ற தொடர்க்கு 'இறந்துபடாது இருந்து அவர்வரவை நினைந்து' என்றும் 'இங்கிருந்து கொண்டு நினைத்து' என இருதிறமாகப் பொருளுரைத்தனர். இவற்றுள் இரண்டாம் வகையினர் கூறும் பொருள் பொருத்தம்.

'பைதல்நோய்' என்பது என்ன?

'பைதல்நோய்' என்பதற்குச் சிறுமைசெய்யும் நோய், பசலை, துயர் தரும் நோய், பையுள் நோய் (துன்பநோய்}, பிரிவுத் துன்பம், நோய், காம நோய், பெரிய வேதனை, வருந்தும் நோய், துன்ப நோய் என்று உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

'நோய்' என்ற சொல் குறளில் 'துயரம்' 'உடல் பிணி' 'காமநோய்' 'வாழ்க்கைத் துன்பம்' ஆகிய பொருள்களில் பயிலப்பட்டுள்ளது. பைதல் என்ற சொல் துன்பம் என்ற பொருளில் இங்கு ஆளப்பட்டது. பைதல்நோய் என்பது எவ்வநோய் (1241) போலத் துன்பம் தரும் நோயினைக் குறிக்கும். பைதல்நோய் இங்கு இடம்நோக்கிக் காமநோயைக் குறிக்கும்.

'பைதல்நோய்' என்பதற்குத் துன்பம் தரும் காமநோய் என்பது பொருள்.

நெஞ்சே! இங்கேயிருந்து அவரை எண்ணி வருந்துவது எதற்காக? துன்ப நோயைச் செய்தார் நமக்காக இரங்கி நினைத்தல் இல்லையே என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

இங்கிருந்து அவரை நினைத்து வருந்தி என்ன ஆகப்போகிறது? எனத் தலைவி தன் நெஞ்சொடுகிளத்தல்.

பொழிப்பு

நெஞ்சே! நீ இங்கிருந்து நினைத்து வருந்துவதேன்? வருத்தும் நோயைச் செய்தாரிடம் நமக்காக இரங்கி நினைத்தல் இல்லையே.