பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு
(அதிகாரம்:நெஞ்சொடு கிளத்தல்
குறள் எண்:1248)
பொழிப்பு (மு வரதராசன்): என் நெஞ்சே! பிரிவுத் துன்பத்தால் வருந்தி அவர் வந்து அன்பு செய்யவில்லையே என்று ஏங்கிப்பிரிந்தவரின் பின் செல்கின்றாய்! நீ பேதை.
|
மணக்குடவர் உரை:
என்னெஞ்சே! நீ வருத்தமுற்று அவர் அருளுகின்றிலரென்று இரங்கி நம்மைவிட்டுப்போனவர் பின்னே போகாநின்றாய், பேதையா யிருந்தாய்.
இது தலைமகள் தலைமகனிருந்த தேயத்தை நினைத்துக்கவன்ற நெஞ்சிற்குச் சொல்லியது.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது) என் நெஞ்சு - என் நெஞ்சே; அவர் பரிந்து நல்கார் என்று - அவர் இவ்வாற்றாமையை அறியாமையின் நொந்து வந்து தலையளி செய்யாராயினார் என்று கருதி; பிரிந்தவர்பின் ஏங்கிச் செல்வாய் பேதை- அறிவித்தற் பொருட்டு நம்மைப் பிரிந்து போயவர்பின் ஏங்கிச் செல்லலுற்ற நீ யாதும் அறியாய்
(ஆற்றாமை கண்டு வைத்தும் நல்காது போயினாரைக் காணா வழிச்சென்று அறிவித்த துணையானே நல்க வருவர் என்று கருதினமையின் 'பேதை' என்றாள்.)
இரா சாரங்கபாணி உரை:
என் நெஞ்சமே! அவர் நம் ஆற்றாமையை அறியாமையினால் வருந்தி வந்து அன்பு காட்டார் ஆயினார் என்று ஏக்கங்கொண்டு பிரிந்து சென்ற காதலர் பின் நீ செல்கின்றாய்; ஆதலால் நீ அறியாமை உடையை.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
என் நெஞ்சு! அவர் பரிந்து நல்கார் என்று பிரிந்தவர்பின் ஏங்கிச் செல்வாய் பேதை.
பதவுரை: பரிந்தவர்-பரிவு காட்டி, இரங்கி; நல்கார்-தண்ணளி செய்யார்(அன்பிலர்); என்று-என்பதாக; ஏங்கி-ஏக்கமுற்று, ஆசையால் தாழ்ந்து; பிரிந்தவர்-நீங்கிப் போனவர்; பின்-பின்னே (தொடர்ந்து); செல்வாய்-போவாய்; பேதை-அறிவில்லாதது; என்-எனது; நெஞ்சு-உள்ளம், நெஞ்சமே! என்று விளிப்பது.
|
பரிந்தவர் நல்காரென்று ஏங்கி:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: என்னெஞ்சே! நீ வருத்தமுற்று அவர் அருளுகின்றிலரென்று இரங்கி;
பரிப்பெருமாள்: என்னெஞ்சே! நீ வருத்தமுற்று அவர் அருளுகின்றிலரென்று ஏங்கி;
பரிதி: பிரிந்த நாயகனார் எனக்கு மேலும் இன்பம் தரவேணும் என்று;
காலிங்கர்: 'நாம் இவரைப் பாதுகாக்கவேண்டும்' என்று உள்ளத்தாற் பரிந்து 'நம்மை அவர் நல்கின்றிலர்; என்னை' என்று ஏங்கியே;
பரிமேலழகர்: (இதுவும் அது) அவர் இவ்வாற்றாமையை அறியாமையின் நொந்து வந்து தலையளி செய்யாராயினார் என்று கருதி;
'வருத்தமுற்று அவர் அருளுகின்றிலரென்று இரங்கி/ஏங்கி/கருதி' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'காதலர் அருளார் என்றேங்கி', 'அவராக ஆசை கொண்டு (நம்மை நாடி) வரமாட்டார் என்று ஏக்கமடைந்து', 'பிரிந்தவர் மீண்டு வந்து அருள்செய்ய மாட்டாரென்று கவலைப்பட்டு', 'நம்மிடம் இரங்கி அவர் அன்பு செய்யமாட்டார் என்று ஏக்கமுற்று', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
காதலர் பரிந்து வந்து அருள் செய்யவில்லையே என்று ஏங்கி என்பது இப்பகுதியின் பொருள்.
பிரிந்தவர் பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: என்னெஞ்சே! நம்மைவிட்டுப்போனவர் பின்னே போகாநின்றாய், பேதையா யிருந்தாய்.
மணக்குடவர் குறிப்புரை: இது தலைமகள் தலைமகனிருந்த தேயத்தை நினைத்துக்கவன்ற நெஞ்சிற்குச் சொல்லியது.
பரிப்பெருமாள்: என்னெஞ்சே! நம்மைவிட்டுப்போனவர் பின்பே போகாநின்றாய், பேதையா யிருந்தாய்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது தலைமகள் தலைமகனிருந்த தேயத்தை நினைத்துக்கவன்ற நெஞ்சிற்குச் சொல்லியது.
பரிதி: பிரிவு வைத்தபின் செல்வை; ஆகையாலே நெஞ்சே! மிகவும் பேதைகாண் நீ என்றவாறு.
காலிங்கர்: பின்னும் பிரிந்தவர் பின்சென்று நிற்பாய்; நீ சாலப்பேதைகாண்; என்னுடைய நெஞ்சே! என்றவாறு.
பரிமேலழகர்: என் நெஞ்சே; அறிவித்தற் பொருட்டு நம்மைப் பிரிந்து போயவர்பின் ஏங்கிச் செல்லலுற்ற நீ யாதும் அறியாய். [செல்லல் உற்ற நீ-சென்ற நீ]
பரிமேலழகர் குறிப்புரை: ஆற்றாமை கண்டு வைத்தும் நல்காது போயினாரைக் காணா வழிச்சென்று அறிவித்த துணையானே நல்க வருவர் என்று கருதினமையின் 'பேதை' என்றாள். [நல்காது-அருள் செய்யாமல்; நல்க-அருள் செய்ய]
'பின்னும் பிரிந்தவர் பின்சென்று நிற்பாய்; யாதும் அறியாய்; என்னுடைய நெஞ்சே!' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'நெஞ்சே! பிரிந்தவர்பின் போவாய்; நீ பேதை', 'அறிவு கெட்ட என் மனமே! நம்மைப் பிரிந்து (வராமல் இருக்கிற) அவரிடம் நீ ஆசை கொண்டு போகப் புறப்பட்டுவிட்டாயே! (என்ன மதியீனம்!)', 'அவர்பின் விரும்பிச் செல்கின்றாயே; எனது நெஞ்சமே, நீ அறிவிலியே', 'என் நெஞ்சே! நம்மை விட்டுப் பிரிந்தவர் பின்னே செல்லுகின்றாய் ஒன்றும் அறியாய்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
என் நெஞ்சே! பிரிந்து சென்ற காதலரின் பின்னே நீ செல்கிறாய். உன்னுடைய அறியாமை என்னே! என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
காதலர் பரிந்து வந்து அருள் செய்யவில்லையே என்று ஏங்கி, என் நெஞ்சே! பிரிந்து சென்ற காதலரின் பின்னே நீ செல்கிறாய். பேதையே! என்பது பாடலின் பொருள்.
காதலரின் பின்தானே செல்கிறது நெஞ்சு, பின் ஏன் அதைப் பேதை என்கிறாள்?
|
ஏய் அறிவு கெட்ட நெஞ்சமே! எதற்கு அவர் பின்னாலேயே அலைகின்றாய்!
என் நெஞ்சே! பிரிந்து சென்ற காதலர் அன்புடன் வந்து தண்ணளி செய்யவில்லையே என்று ஏங்கி அவர் பின்னே செல்கின்றாய்! ஒன்றும் அறியாததாக இருக்கிறாயே?
காட்சிப் பின்புலம்:
தொழில் காரணமாகத் தலைவன் பிரிந்து சென்று நாட்கள் பல ஆயிற்று. தலைவிக்குப் பிரிவு ஆற்றாமை மிகுந்து விட்டது. உடல் மெலிந்து உறுப்பு நலன் அழிகிறது. அவர் எப்பொழுது வருவார் என்பது பற்றிய செய்தியும் ஒன்றும் இல்லை. என்ன செய்வது என்று அவளுக்குத் தெரியவில்லை. தனக்குத் தன் நெஞ்சே துணையாக உதவும் என எண்ணுகிறாள். தன் உணர்ச்சிகளை உள்ளத்துடன் பகிர்ந்து ஆறுதல் அடைய நினைக்கிறாள்.
'பிரிவுத் துன்பத்தைத் தீர்க்கத் தக்க மருந்து ஏதாவது ஒன்றை நீ சிந்தித்துப் பார்த்து எனக்குச் சொல்வாயா?',
அவர் எம்மொடு இல்லை. நீ ஏன்அவரை எண்ணி வருந்திக் கொண்டிருக்கிறாய்?',
'எதற்காக? வருத்தும் நோயைச் செய்தவர்க்கு நம்மைக் குறித்து எண்ணும் இரக்கம் இல்லை. பின் ஏன் அவரை நினைத்து வருந்தவேண்டும்?',
'அவரைக் காணச் செல்லும்போது அவரைக் காட்டு, அவரைக் காட்டு என்று என்னை வாட்டி வதைக்கும் இக்கண்களையும் கூட்டிக்கொண்டு போ',
'நாம் துன்பமுறுவது தெரிந்தும் அவர் வருந்தவில்லையே. அதனால் அவர் 'நம்மை வெறுத்தார்' என்று கைவிட்டுவிட முடியுமா?',
'கூடும்போது மட்டும் அவரைப் பிணங்குவதில்லை; இப்பொழுது ஏன் அவரைப் பொய்யாகச் சினந்துரைக்கின்றாய்?'
'நெஞ்சமே! ஒன்று காமத்தை விடு; அல்லது நாணத்தை விட்டுவிடு. என்னாலோ இவை இரண்டையும் ஒருங்கே தாங்கமுடியாது'
என நெஞ்சத்தை நோக்கிக் கேள்விமேல் கேள்வி கேட்டு ஆற்றமுடியாத துயரத்தால் புலம்பிக்கொண்டிருக்கிறாள்.
இக்காட்சி:
இப்பொழுது அவள் சொல்வது: 'பேதைநெஞ்சமே! என்னிடம் பரிவு காட்டாமல் பிரிந்து சென்ற காதலர் வந்து அன்பு காட்டவில்லையே என்று ஏக்கம் கொண்டு அவர் பின்னே செல்கின்றாயே!'. நெஞ்சின் பெயரில் தன்னைத் தானே கடிந்து கொள்கிறாள்; பொய்யாகக் காதலன் மீதும் காய்கிறாள் தலைவி. பிரிந்து சென்றவர் ஏன் இன்னும் வரவில்லை? என் மீது இரக்கமில்லையா? என்று ஒரு பக்கம் சிறு கோபத்துடன் புலம்பிக் கொண்டே இருந்தாலும் மறுபுறம் மனம் காதலர் பின்னாலேயே சுற்றித் திரிகிறதே! என்ன மடத்தனம் இது! என்று தன்னையே தலைவி நொந்து கொள்கிறாள். நெஞ்சு போதல் என்பது தலைவியே போவதைச் சொல்வதுதானே! பேதை என்றது தன்னையும் அறியாதவள் என்று தன்னிரக்கமாகக் தலைவி கூறுவதுமாம்.
|
காதலரின் பின்தானே செல்கிறது நெஞ்சு, பின் ஏன் அதைப் பேதை என்கிறாள்?
பேதை என்று நெஞ்சு ஏன் சொல்லப்பட்டது என்பதற்கு உரையாசிரியர்கள் கூறிய விளக்கங்கள்:
- நம்மைவிட்டுப்போனவர் பின்னே போகின்றாய் - அதனால் பேதை.
- ஆற்றாமையைக் கண்டும் அருள் செய்யாமல் போயினாரைக் காணா வழிச்சென்று அறிவித்த துணையானே அருள் செய்ய வருவர் என்று கருதினமையின் 'பேதை'.
- நம்மேல் பரிவுவைத்துக் கருணை செய்யார் என்று ஏங்கி, அதனை அறிவித்தற் பொருட்டு நம்மைப் பிரிந்தவர் பின்னே செல்லலுற்றாய்; நீ ஒன்றுமறியாத பேதை. நீ அவர் சென்ற வழியும் அவர் இவ்விடத்திருப்பாரென்பதும் நீ அறியமாட்டாய். பின் எங்கே செல்வாய்? எனவே பேதாய் என்றது.
- அவர் நம் ஆற்றாமையை அறியாமையினால் வருந்தி வந்து அன்பு காட்டார் ஆயினார் என்று ஏக்கங்கொண்டு பிரிந்து சென்ற காதலர் பின் நீ செல்கின்றாய்; ஆதலால் நீ அறியாமை உடையை.
- நீ ‘அவர் சென்ற வழியும் அவர் இவ்விடத்திருப்பார் என்பதும் அறிதியோ’
- பிரிந்தவர் மீண்டு வந்து அருள்செய்ய மாட்டாரென்று கவலைப்பட்டு, அவர்பின் விரும்பிச் செல்கின்றாயே; எனது நெஞ்சமே, நீ அறிவிலியே.
- ஆற்றாமையைக் கண்ணாரக் கண்டும் இரங்காது பிரிந்துபோனவர் இதைச் சென்றறிவித்தவுடன் திரும்பி வந்து இன்பந்தருவாரென்று கருதினமையின், 'பேதை' என்றாள்.
- நீ காமத்தின் வழிப்பட்டுக் காதலர் சென்ற இடத்துக்குப் போக வேண்டித் துடிக்கிறாய். அதனால் என்ன துன்பம் உண்டாகும் என்பதை அறியாத பேதை நீ.
- அறியாமையுடைய நெஞ்சே, உனக்குச் சுயமரியாதை தெரியவில்லை.
- பரிவும் அன்பும் என்மேல் செலுத்தாத கல் நெஞ்சராக அவர் உள்ளார். அவர் அவ்வாறு இருக்கவும் நீ, உன் மேலேயே இரக்கம் கொண்டு, பிரிந்தவர் பின்னாலேயே செல்கிறாயே, அறியாதவளாகிய என்னுடைய நெஞ்சமே.
- அவர் பரிந்து வந்து இன்பம் கொடுக்க மாட்டார் எனத் தெரிந்திருந்தும், அவர் பின்னால் ஓடுகிறாயே ,நீ பேதையல்லவா?
- உடனே தன்னைச் சந்தித்து இன்பம் நல்குவர் என்று எண்ணுதல் பேதைமை.
நம்மை விட்டு இரக்கமின்றிப் பிரிந்தவர் நம் பிரிவுத் துன்பத்தை அறிவார். ஆனால் அவர் அறியார் என்று அவர் பின்னே செல்லுகின்றாய்; அதனால் நீ பேதையே என்பது கருத்து.
|
காதலர் பரிந்து வந்து அருள் செய்யவில்லையே என்று ஏங்கி, என் நெஞ்சே! பிரிந்து சென்ற காதலரின் பின்னே நீ செல்கிறாய். உன்னுடைய அறியாமை என்னே! என்பது இக்குறட்கருத்து.
'அருள் காட்டாமல் சென்றுவிட்டார் என்பது உனக்குத் தெரியவில்லையா' என்று தலைவி தன் நெஞ்சொடு கிளத்தல்.
காதலர் தண்ணளி செய்யார் என்று ஏக்கங்கொண்டு, என் நெஞ்சே! பிரிந்தவர்பின் போகிறாயே! நீ பேதை அன்றோ!
|