இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1241நினைத்துஒன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து

(அதிகாரம்:நெஞ்சொடுகிளத்தல் குறள் எண்:1241)

பொழிப்பு (மு வரதராசன்): நெஞ்சே! (காதலால் வளர்ந்த) இத் துன்பநோயைத் தீர்க்கும் மருந்து ஏதாவது ஒன்றை நீ நினைத்துப் பார்த்து எனக்குச் சொல்லமாட்டாயோ?

மணக்குடவர் உரை: நெஞ்சே! நீ எனக்கு உற்ற எவ்வநோயைத் தீர்க்கும் மருந்தாவது யாதொன்றாயினும் ஒன்றை விசாரித்துச் சொல்லாய்.
இஃது ஆற்றுதலரி தென்று கூறியது. இவையெல்லாம் தனித்தனி சிலகூற்றென்று கொள்ளப்படும்.

பரிமேலழகர் உரை: (தன் ஆற்றாமை தீரும் திறன் நாடியது.) நெஞ்சே - நெஞ்சே; எவ்வநோய் தீர்க்கும் மருந்து ஒன்று - இவ்வெவ்வநோயினைத் தீர்க்கும் மருந்தாவதொன்றனை; எனைத்து ஒன்றும் நினைத்துச் சொல்லாய் - யான் அறியுமாற்றலிலன், எத்தன்மையது யாதொன்றாயினும் நீ அறிந்து எனக்குச் சொல்.
(எவ்வம் - ஒன்றானும் தீராமை. உயிரினும் சிறந்த நாணினை விட்டுச் செய்வது யாதொன்றாயினும் என்பாள், 'எனைத்தொன்றும்' என்றாள்.)

சி இலக்குவனார் உரை: நெஞ்சே இத்துன்ப நோயினைத் தீர்க்கும் மருந்து ஒன்றினை, யாதொன்றாயினும் நீ ஆராய்ந்து எனக்குச் சொல்ல மாட்டாயா?


பொருள்கோள் வரிஅமைப்பு:
நெஞ்சே! எனைத்தொன்றும் எவ்வநோய் தீர்க்கும் மருந்து ஒன்று நினைத்துச் சொல்லாயோ.

பதவுரை: நினைத்து-அறிந்து, எண்ணிப்பார்த்து, விசாரித்து, ஆய்ந்து; ஒன்று-ஒன்று; சொல்லாயோ-சொல்லமாட்டாயா; நெஞ்சே-உள்ளமே; எனைத்தொன்றும்-சிறிதாயினும், எவ்வகையிலாவது பொருந்துமாறு; எவ்வநோய்-ஒன்றானும் தீராத துன்பம்; தீர்க்கும்-போக்கும், விடுவிக்கும்; மருந்து-மருந்து.


நினைத்துஒன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நெஞ்சே! யாதொன்றாயினும் ஒன்றை விசாரித்துச் சொல்லாய்;
பரிப்பெருமாள்: நெஞ்சே! யாதொன்றாயினும் இன்றே விசாரித்துச் சொல்லாய்;
பரிதி: நினைத்துக்கொண்டு ஒன்று சொல்லாயோ, நெஞ்சமே என்றவாறு;
காலிங்கர்: நெஞ்சே! யாதானும் ஒன்று நினைத்தலும் மறத்தலும் நினக்கு இயல்பு அன்றே; மற்று அத்தன்மையை நினைத்து ஒன்று எனக்குச் சொல்லாயோ;
பரிமேலழகர்: (தன் ஆற்றாமை தீரும் திறன் நாடியது.)நெஞ்சே; யான் அறியுமாற்றலிலன், எத்தன்மையது யாதொன்றாயினும் நீ அறிந்து எனக்குச் சொல். [ஆற்றல் இலன் - வல்லமை பெற்றிலேன்]
பரிமேலழகர் குறிப்புரை: உயிரினும் சிறந்த நாணினை விட்டுச் செய்வது யாதொன்றாயினும் என்பாள், 'எனைத்தொன்றும்' என்றாள்.

'நெஞ்சே! எத்தன்மையது யாதொன்றாயினும் நீ அறிந்து எனக்குச் சொல்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'சிறிதாயினும் நெஞ்சே! எண்ணிப் பார்த்துச் சொல்லாயா?', 'மனமே, நீயாவது சிறிதேனும் எண்ணிப் பார்த்துக் கூறமாட்டாயா?', 'மனமே! எப்படிப்பட்டதானலும் சரி, ஆலோசித்துப் பார்த்து சொல்லமாட்டாயா? (சொல்லு)', 'நெஞ்சே! ஏதாவதொன்று நன்றாக யோசித்துப் பார்த்துச் சொல்லமாட்டாயா?' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நெஞ்சே! யாதொன்றாயினும் நீ எண்ணிப் பார்த்து எனக்குச் சொல்ல மாட்டாயா? என்பது இப்பகுதியின் பொருள்.

எவ்வநோய் தீர்க்கும் மருந்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நீ எனக்கு உற்ற எவ்வநோயைத் தீர்க்கும் மருந்தாவது.
மணக்குடவர் குறிப்புரை: இஃது ஆற்றுதலரி தென்று கூறியது. இவையெல்லாம் தனித்தனி சிலகூற்றென்று கொள்ளப்படும்.
பரிப்பெருமாள்: நீ எனக்கு உற்ற எவ்வநோயைத் தீர்க்கும் மருந்து.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது ஆற்றுதலரி தென்று கூறியது. இவையெல்லாம் தனித்தனி சிலகூற்றென்று கொள்ளப்படும்.
பரிதி: ஆசை தீர்க்கும் மருந்து.
காலிங்கர்: யான் துணைவர் பின் நயந்து துன்புறும் நோயைத் தீர்க்கும் மருந்து எத்தன்மைத்தாக இயையும். காலிங்கர் குறிப்புரை: எனவே சொல்லுவையாயின் உய்குவேன் என்பது பொருள் என்றவாறு.
பரிமேலழகர்: இவ்வெவ்வநோயினைத் தீர்க்கும் மருந்தாவதொன்றனை.
பரிமேலழகர் குறிப்புரை: எவ்வம் - ஒன்றானும் தீராமை.

'எவ்வநோயைத் தீர்க்கும் மருந்து' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'காமநோய் தீர்க்கும் மருந்தினை', 'துன்பந்தரும் காமநோயினைப் போக்கும் மருந்து ஒன்றனை', 'தீராத இந்தக் காமவேதனையைத் தீர்க்கத்தக்க ஒரு மருந்தை', 'ஒன்றாலுந் தீராத பெருந்துன்பந்தரும் நோயைத் தீர்க்கத்தக்க மருந்து' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

ஒன்றாலுந் தீராத காதல் நோயைப் போக்கும் மருந்து என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நெஞ்சே! எவ்வநோய் போக்கும் மருந்து யாதொன்றாயினும் நீ எண்ணிப் பார்த்து எனக்குச் சொல்ல மாட்டாயா? என்பது பாடலின் பொருள்.
'எவ்வநோய்' என்றால் என்ன?

பிரிவுத் துன்பத்தைத் தலைவர் வரவு ஒன்றால் மட்டுமே தீர்க்க முடியும்.

நெஞ்சமே! அவரின் பிரிவு உண்டாக்கிய வேதனையை ஏதேனும் ஒரு வகையில் போக்க மருந்து ஒன்றனை எண்ணிப் பார்த்து எனக்குச் சொல்ல மாட்டாயா? என்று தலைமகள் தனது உள்ளத்திடம் வேண்டுகிறாள்.
காட்சிப் பின்புலம்:
பணி காரணமாகத் தலைவன் பிரிந்து சென்று நாட்கள் பல ஆயிற்று. எப்பொழுது திரும்பி வருவான் என்ற செய்தியும் இல்லை. தலைவி அவன் பிரிவை ஆற்றமுடியாமல் அல்லற்படுகிறாள். கண், உடல், முகம் ஆகிய அவளது உறுப்பு நலன்கள் சீர் குலைந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், என்ன செய்வதென்று புரியாமல் தன் நெஞ்சுடன் உரையாடி மனச்சுமையை இறக்கிவைக்க முயல்கிறாள்.

இக்காட்சி:
பிரிவுத் துயர் உற்றிருக்கும் தலைவி மனக்கசப்பு கொண்ட வெறித்த நிலையில் தன் நெஞ்சைப் பார்த்துப் பேசத் தொடங்குகிறாள். "நெஞ்சே! என் துன்பத்தைத் தீர்ப்பதற்கு மருந்தாக ஏதாவது ஒன்றை நினைத்துப் பார்த்துச் சொல்ல மாட்டாயோ?" என அதனிடம் கேட்கிறாள்.
தீராத காதல் நோயைப் போக்குதற்கு காதலுக்குரிய கணவரால் மட்டுமே முடியும். அவர் வரும்வரை ஆற்றுதற்கு ஏதாகிலும் உள்ளதா என்று அவள் ஏக்கத்துடன் தனது நெஞ்சை நோக்கி வினவுகிறாள். மருந்தை நினைத்துப் பார்க்கும் வலிமைகூட தன்னிடம் இல்லை என்பதால் தன் நெஞ்சு எப்படியாவது எண்ணிப்பார்த்து தான் நலம்பெற அது ஒருவழி சொல்லாதோ என ஏங்குகிறாள். தன் காதல் நோயைத் தீர்க்க முடியாத தலைவி, உளச்சோர்வு மேலோங்கத் தன் நெஞ்சிடம் 'ஒரு தீர்வு எனக்குச் சொல்ல மாட்டாயோ?' எனக் கெஞ்சுகிறாள். அவளது ஆற்றொணாத் துயரநிலையை 'எனைத்தொன்றும்' என்ற தொடர் நன்கு உணர்த்திற்று - மருந்து யாதொன்றாயினும்-எப்படிப்பட்டதானலும் சரி, எண்ணித் தன்னிடம் சொல்லச் சொல்கிறாள்.

'எவ்வநோய்' என்றால் என்ன?

'எவ்வநோய்' என்றதற்கு எவ்வநோய், ஆசை, துணைவர் பின் நயந்து துன்புறும் நோய், ஒன்றானும் தீராத நோய், காமநோய், காமவேதனை, பெருந்துன்பந்தரும் நோய், துன்ப நோய், தீராத காமநோய், தீராத காதல் நோய், தீராத துன்பம் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர். .

மனம் பற்றிய துன்பமே எவ்வநோய் எனக் குறிக்கப்பெறுகிறது. இங்கு காதலரது பிரிவால் ஏற்பட்ட வேதனை எவ்வநோய் எனச் சொல்லப்பட்டது. தான் தன் கணவரை நினைந்துகொண்டு துன்புறுவதாகவும் நீக்கமுடியாத அத்துன்பத்தைப் போக்கும் மருந்தை எண்ணிச் சொல்லச் சொல்லி தன் நெஞ்சிடம் இறைஞ்சுகிறாள் தலைவி. ஒன்றிலும்‌ தீராத நோயினைத்‌ தீர்க்கும்‌ மருந்தினை. அறிந்து சொல்வாயாசு என்று தனது நெஞ்‌சினைக்‌ கேட்கின்றாள்‌.
எவ்வநோய் என்றதற்கு எவ்வத்தைத் தரும் நோய் - வருத்தம் தரும் காம நோய் என உரைப்பார் நச்சினார்க்கினியர். பரிமேலழகர் எவ்வம் - ஒன்றானும் தீராமை எனப் பதவுரை தருகிறார். தேவநேயப்பாவாணர் 'எவ்வநோய்' என்பது பொதுவான மருந்தினால் தீரும் உடல்நோயன்று என்று விளக்குவார்.

'எவ்வநோய்' என்பது ஒன்றானுந் தீராத துன்பநோய் என்று பொருள்படும்.

நெஞ்சே! ஒன்றாலுந் தீராத காதல் நோயைப் போக்கும் மருந்து யாதொன்றாயினும் நீ எண்ணிப் பார்த்து எனக்குச் சொல்ல மாட்டாயா? என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

தீராத காதல்நோய் நீங்க மருந்து ஏதாவது தேடித் தா எனத் தலைவி தன் நெஞ்சொடுகிளத்தல்.

பொழிப்பு

வருத்தம் தரும் பிரிவு நோயைத் தீர்க்கும் மருந்து ஒன்றனை சிறிதேனும் எண்ணிப் பார்த்துச் சொல்லமாட்டாயோ?