இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1249



உள்ளத்தார் காத லவராக உள்ளிநீ
யாருழைச் சேறிஎன் நெஞ்சு

(அதிகாரம்:நெஞ்சொடு கிளத்தல் குறள் எண்:1249)

பொழிப்பு (மு வரதராசன்): என் நெஞ்சே! காதலர் உன் உள்ளத்தில் உள்ளவராக இருக்கும்போது நீ அவரை நினைத்து யாரிடம் தேடிச் செல்கின்றாய்?

மணக்குடவர் உரை: என்னெஞ்சே! நின்னாற் காதலிக்கப்பட்டவர் நினது உள்ளத்திலே யிருப்பாராக, நீ நினைத்து யாவர்மாட்டுச் செல்கின்றாய்.
இது தலைமகள் வாராதேபோனால் இங்கே காணலாமென்று கூறியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) என் நெஞ்சு - என் நெஞ்சே; காதலவர் உள்ளத்தாராக - காதலர் நின்னகத்தாராக; நீ உள்ளி யாருழைச் சேறி - முன்பெல்லாம் கண்டு வைத்து இப்பொழுது நீ புறத்துத் தேடிச் செல்கின்றது யாரிடத்து?
('உள்ளம்' என்புழி 'அம்' பகுதிப் பொருள் விகுதி. 'நின்னகத்திருக்கின்றவரை அஃது அறியாது புறத்துத் தேடிச் சேறல் நகை.)

சி இலக்குவனார் உரை: என் நெஞ்சே! காதலர் உன்னிடத்தில் இருப்பாராகவும் நீ நினைத்துச் செல்கின்றது யாரிடம்?


பொருள்கோள் வரிஅமைப்பு:
என் நெஞ்சு காதலவர் உள்ளத்தாராக, நீ உள்ளி யாருழைச் சேறி.

பதவுரை: உள்ளத்தார்-அகத்திருப்பவர், உள்ளத்தின் கண் இருப்பார்; காதலவராக-காதலராக, அன்புடையராக; உள்ளி-நினைத்து; நீ-நீ; யாருழை-எவரிடத்து; சேறி-செல்கின்றாய், செல்லுவாய்; என்-எனது; நெஞ்சு-உள்ளமே.


உள்ளத்தார் காத லவராக:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நின்னாற் காதலிக்கப்பட்டவர் நினது உள்ளத்திலே யிருப்பாராக;
பரிப்பெருமாள்: நின்னாற் காதலிக்கப்பட்டவர் நினது உள்ளத்திலே யிருக்க;
பரிதி: உள்ளத்தில் என் நாயகர் இருக்க;
காலிங்கர்: நீ புறத்து அவரைத் தேடிச் சென்றாலும் அப்பொழுதும் என் அகத்தவராய் இருப்பர். இங்ஙனம் அகத்து உள்ளார் ஆகவும்;
பரிமேலழகர்: (இதுவும் அது.) காதலர் நின்னகத்தாராக;

'காதலர் நின்னகத்தாராக' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'காதலர் உள்ளத்தில் இருக்கவும்', 'காதலர் உன்னிடமே தங்கி இருக்க', 'நம்மிடத்தில் காதலுள்ளவர் நம்மிடத்திலேயே இருக்க', 'காதலர் மனத்திலேயிருக்கும் போது', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

காதல்கணவர் உள்ளத்தில் இருப்பார் ஆக என்பது இப்பகுதியின் பொருள்.

உள்ளிநீ யாருழைச் சேறிஎன் நெஞ்சு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: என்னெஞ்சே! நீ நினைத்து யாவர்மாட்டுச் செல்கின்றாய்.
மணக்குடவர் குறிப்புரை: இது தலைமகள் வாராதேபோனால் இங்கே காணலாமென்று கூறியது.
பரிப்பெருமாள்: என்னெஞ்சே! நீ நினைத்து யாவர்மாட்டுச் செல்கின்றாய்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது வாளாதே போயினாய், இங்கே காணலாம் என்றது.
பரிதி: நீ யாரைத்தேடி வியாகுலப்படுகிறாய் நெஞ்சே என்றவாறு.
காலிங்கர்: நெஞ்சமே! புறத்து யாண்டும் உள்ளாரோ என்று கருதி ஓடிச் செல்வாய்; நீ யார் மாட்டுச் செல்கின்றனை சொல்; எனவே அகத்தும் புறத்தும் அவன் அன்றி அறிவது பிறிது இல்லை என்றவாறு.
பரிமேலழகர்: என் நெஞ்சே; முன்பெல்லாம் கண்டு வைத்து இப்பொழுது நீ புறத்துத் தேடிச் செல்கின்றது யாரிடத்து?
பரிமேலழகர் குறிப்புரை: 'உள்ளம்' என்புழி 'அம்' பகுதிப் பொருள் விகுதி. 'நின்னகத்திருக்கின்றவரை அஃது அறியாது புறத்துத் தேடிச் சேறல் நகை. [அஃதறியாது-காதலர் நின்னகத்து இருக்கின்றது அறியாமல்]

'நீ நினைத்து யாவர்மாட்டுச் செல்கின்றாய் என்னெஞ்சே!' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நெஞ்சே! நீ யாரிடம் சொல்ல நினைக்கின்றாய்?', 'என் நெஞ்சமே! நீ வேறு யாரிடம் தங்கியதாக நினைத்துப் போகின்றாய்', 'மனமே! நீ எங்கேயோ இருப்பதாக எண்ணி யாரிடத்துக்குப் போகப் புறப்படுகிறாய்?', 'என் நெஞ்சே! நீ அவரைத்தேடி யாரிடத்தில் செல்வாய்?' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

நீ நினைத்துச் செல்கின்றது யாரிடம் என் நெஞ்சே? என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
காதல்கணவர் உள்ளத்தில் இருப்பார் ஆக, நீ நினைத்து யாருழைச் சேறி என் நெஞ்சே? என்பது பாடலின் பொருள்.
'யாருழைச் சேறி' என்ற தொடரின் பொருள் என்ன?

என்ன வேடிக்கை இது! தலைவர் உனக்குள்தானே இருக்கிறார். நெஞ்சே! நீ அவரைக் காணுமாறு எங்கே செல்கின்றாய்?

உனக்குள்ளேதானே காதல்கணவர் இருக்கிறார், அப்படியிருக்கவும் அவரை நினைத்து, யாரிடத்துப் போகிறாய் நீ, என் நெஞ்சமே?
காட்சிப் பின்புலம்:
தொழில் காரணமாகத் தலைவர் பிரிந்து சென்று நாட்கள் பல ஆகிவிட்டன. பிரிவை ஆற்றமுடியாமல் தலைவி இருக்கிறாள். எப்பொழுது அவர் திரும்பி வருவார் என்பதற்கான செய்தியும் இல்லை. எந்த நேரமும் அவர் நினைவாகவே உள்ளாள். இதனால் தூக்கம் இழந்து உடல்நலம் குன்றுகிறாள். அவள் மனம் மிகவும் சோர்வடைந்துள்ளது. என்ன செய்வது என்று புரியாத நிலையில் தன் நெஞ்சே துணையாக உதவும் என எண்ணித் தன் உணர்ச்சிகளை உள்ளத்துடன் பகிர்ந்து ஆறுதல் அடைய நினைக்கிறாள்.
'பிரிவுத் துன்பத்தைத் துய்த்துக் கொண்டிருக்கும் எனக்குத் தக்க மருந்து ஏதாவது ஒன்றை நீ ஆராய்ந்து பார்த்து எனக்குச் சொல்வாயா'?; 'தலைவர் நம்மிடம் அன்புகாட்டாதவராக இருக்கும்போது, நீ அவரை எண்ணி வருந்திக் கொண்டிருப்பது பேதமையல்லவா'; 'துன்புறுத்தும் நோயைச் செய்தவர்க்கு நமக்கு அருள் காட்டவேண்டும் என்ற எண்ணம் இல்லாதபோது இங்கிருந்து அவரை நினைத்து ஏன் வருந்தவேண்டும்?'; 'நெஞ்சே! நீ அவரைக் காணச் சென்றாயானால் 'தலைவரைக் காட்டு, காட்டு' என்று என்னைத் தின்னும் இக்கண்களையும் உன்னுடன் கொண்டு போ'; 'நாம் துன்புறுவதை அறிந்தும் அவர் வருந்துவது இல்லையே. அதன் காரணமாக அவர் நம்மை வெறுத்தார் என்று அவரை கைவிட்டுவிடும் வலிமை நமக்கு உண்டோ?'; 'அவரைக் கூடும்போது நீ அவரிடம் பிணக்கம் காட்டுவதில்லை. இப்பொழுது ஏன் அவரைப் பொய்யாகக் காய்கிறாய்?'; 'நெஞ்சமே! ஒன்று காமத்தை எண்ணாதே அல்லது நாணத்தை நீக்கிவிடு; என்னாலோ இவை இரண்டையும் ஒருங்கே பொறுக்கமுடியாது'; 'பேதைநெஞ்சமே! நம்மிடம் இரங்கி பரிவுகாட்டமாட்டாரா என்று ஏக்கம் கொண்டு பிரிந்துசென்றவர் பின்னே செல்கின்றாயே!'; இவ்வாறாக துயரம் தாங்காத தலைவி தன் உள்ளக் குமுறல்களைத் தன் நெஞ்சிடம் கொட்டிக்கொண்டிருக்கிறாள்.

இக்காட்சி:
பிரிந்து சென்றவர் ஏன் இன்னும் வரவில்லை? என் மீது ஏன் அருள் காட்டவில்லை? என்று ஒரு பக்கம் சிறு சினத்துடன் புலம்பிக் கொண்டே இருந்தாலும் மறுபுறம் மனம் காதலர் பின்னாலேயே சுற்றித் திரிகிறதே! என்ன மடத்தனம் இது! என்று தலைமகள் தன்நெஞ்சையே நொந்து கொள்ளவும் செய்கிறாள். இப்பொழுது தன் உணர்வு பெற்றதுபோல அவள் சொல்வது: 'என் நெஞ்சே! அவர்தான் உன்னிடம்தானே குடிகொண்டவராக இருக்கிறார். பின் என்ன நினைத்து யாரிடம் அவரை தேடிச் செல்கின்றாய்?' என்று உன்னுள்ளே இருப்பவரைப் புறத்தே தேடிச் செல்வது நகைப்புக்கிடமாகிறதே என மென்மையாகக் கடிந்துரைக்கிறாள்.

இதுவரை நெஞ்சை நோக்கித் தலைவனைத் தேடிச் செல்லுமாறு கூறிக் கொண்டிருந்த தலைவி தன் இயல்பு நிலைக்குத் திரும்பி, 'நெஞ்சமே! நீ புறத்து அவரைத் தேடிச் சென்றாலும் அப்பொழுதும் அவர் என் அகத்துள்ளேதான் இருப்பார். இவ்விதம் உள்ளத்துள் உள்ளார் ஆகவும் புறத்து யாண்டும் உள்ளாரோ என்று கருதி ஓடிச் செல்கிறாயே; நீ யார் மாட்டுச் செல்கின்றனை சொல்' என்று கேட்கிறாள். அவரை எஞ்ஞான்றும் நினைத்துக் கொண்டிருப்பதனால் அன்புடையவர் தன் உள்ளத்தில் இருப்பதாகக் கூறி அவள் ஆறுதலடைகின்றாள்.

'யாருழைச் சேறி' என்ற தொடரின் பொருள் என்ன?

'யாருழைச் சேறி' என்ற தொடர்க்கு யாவர்மாட்டுச் செல்கின்றாய், யார் மாட்டுச் செல்கின்றனை, தேடிச் செல்கின்றது யாரிடத்து, யாரிடத்துச் செல்கின்றாய், யாரிடம் சொல்ல(நினைக்கின்றாய்), யாரிடம் போகின்றாய், யாரிடத்துக்குப் போகப் புறப்படுகிறாய், எவரிடத்துச் செல்கின்றாய், யாரிடத்தில் செல்வாய், செல்கின்றது யாரிடம், யாரைப் பார்க்கப் போகிறாய், யாரை வெளியே தேடுகிறாய் என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

'நெஞ்சமே! உன்னிடத்திலேயே காதல்தலைவர் குடியிருக்கிறார் என்பது உனக்குத் தெரியும். பின் எவரிடம் சென்று அவரை நினைத்துத் தேடுகின்றாய்?' என்று நெஞ்சு வறிதே செல்கிறதே அவரை இங்கேயே காணலாமே என்ற பொருளில் கூறுகிறாள் தலைவி. காதலர் உள்ளத்தில் இருக்கின்றார் என்று கண்டுவைத்தும், நெஞ்சு அதை அறியாது இப்போது வெளியில் சென்று தேடப்போகிறது அதன் பேதைமையே என்று அவள் எண்ணுகிறாள்.

'யாருழைச் சேறி' என்ற தொடர் யார்மாட்டுச் செல்கின்றனை என்ற பொருள் தருவது.

காதல்கணவர் உள்ளத்தில் இருப்பார் ஆக, நீ நினைத்துச் செல்கின்றது யாரிடம் என் நெஞ்சே? என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

நம்மிடத்தேயே அவர் இருக்க நீ அவரைத் தேடி ஏன் அலைய நினைக்கிறாய் எனத் தலைவி நெஞ்சொடு கிளத்தல்.

பொழிப்பு

காதலர் உள்ளத்தில் இருக்கவும் நீ நினைத்துச் செல்கின்றது யாரிடம் என் நெஞ்சே?