தனிமையால் வருந்தும் துன்ப மிகுதியைச் சொல்வது தனிப்படர்மிகுதி
கடமை காரணமாகத் தலைவன் வெளியிடம் சென்றிருக்கிறான். அவனது பிரிவு தாங்காமல் தலைவி உடல் மெலிவுற்று, நிறம் மாறி உறக்கம் இழந்து, தனிமைத் துயரம் பொங்கி மேலெழுந்த நிலையில் இருக்கிறாள். அதுபொழுது அவள் உலகில் மகளிர்-ஆடவர் மணவாழ்வு எப்படியெப்படியெல்லாம், அமைகிறது என்பது பற்றி எண்ணித் தன் உள்ளத்து உணர்வுகளை உரைப்பதாக அதிகாரம் உருவெடுக்கிறது.
இல்லற வாழ்வில் ஆண்-பெண் இடையேயான உறவு பற்றிய கருத்தாடல் செய்வதாக அதிகாரம் அமைந்துள்ளது. மணவினைக்குப் பின் அமையும் ஆடவர்-மகளிர் காதல் நிலையின் சீர்கேட்டை இலைமறை காய்மறையாகக் காட்டிப் பொதுவறம் கூறும் போக்கு காணப்படுகிறது. அவர்கள் உண்மை இன்பம் அடையவேண்டும் என்ற குறிக்கோள் தெரிகிறது.
'மனம் ஒத்த வாழ்வானது விதை இல்லாத இனிய பழம் போன்று கணவன் - மனைவி இருவருக்கும் முழுமையான சுவை அளிக்கும்; விரும்பப்படும் காதலரும் தம் விருப்பமான அன்பை அளித்தால், அது வாழும் மக்களுக்கு மழை கிடைத்த பயன் போன்றதாகும்; ஒருவர்க்கொருவர் அன்பைப் பொழியும் கணவன்-மனைவி 'நாங்கள் வாழும் வாழ்வே வாழ்வு' என்னும் பெருமிதம் கொள்வர்; மாறாக தாம் காதலிக்க மறுபக்கம் அன்பு காட்டப்படாவிட்டல் அவர் எவ்வுறவும் இல்லாதவராகத்தான் இருக்க முடியும்; அவர் நமக்கு என்ன செய்துவிடப் போகிறார்?; மணவாழ்வு என்பது காவடிபோல் இரு பக்கமும் ஒத்திருந்தால்தான் இன்பமாய் அமையும்; ஒரு பக்கம் மட்டும் இருப்பது துன்பச் சுமையாகும் ஒருதலைக் காதல் உள்ள மகளிர் துய்க்கும் தனிமை மிகக் கொடுமையானது; காதல் தெய்வமான காமன் ஏன் ஒருவர் பக்கம் மட்டும் நின்று உள்ளத்திற்கும் உடலுக்கும் துன்பம் செய்து செயலாற்றுகிறான்?; தாம் காதல் கொண்ட கணவர் பிரிவிலிருக்கும்போது அவரிடமிருந்து இன்சொல் பெறாது வாழும் மனைவி கல்நெஞ்சம் படைத்தவராகத்தான் இருக்கவேண்டும்; அவர் விரைந்து வந்து அன்பு செலுத்தாவிடினும் ஏதாவது செய்தி அனுப்பினால் அது உள்ளத்துக்கு எவ்வளவு இதமாக இருக்கும்; தனிமையில் வாடும் தலைவியின் வெளிப்பாடுகள் இவ்வாறு பாடப்பெற்றன இப்பாடல் தொகுதியுள்.
இவ்வதிகாரம். தலைவர் காதலியாதிருப்பதாகவும் தான்மாத்திரம் காதலிப்பதாகவும் தலைவி நினைப்பதால் உளதாம் வருத்தம் கூறுவது என்று சில உரைகாரகள் விளக்கம் செய்வர். இணக்கமான மணவாழ்க்கை நோக்கமாதலால், இவ்வதிகாரத்தில் கணவனை அன்பு இல்லாதவனாகச் சொன்னதெல்லாம், கணவனும் மனைவியும் விரும்புவராகவும் விரும்பப்படுவராகவும் இருத்தல் வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தவே. அது, ஆண் பெண் என்று வேறுபாடு காட்டாமல், மேல்வரிச் சட்டமாக, இருபாலர்க்கும் ஏற்றத்தாழ்வற்ற அறமாக, இங்கு எடுத்துரைக்கப்படுகின்றது என்பது நோக்கத்தக்கது. பிரிவில் தனிமைத் துன்பமிகுதி கூறவந்த அதிகாரத்தில் ஒருதலைக் காமம் பற்றிய அவலச்சுவையும் ஆராயப்படுகிறது.