இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1192



வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி

(அதிகாரம்:தனிப்படர் மிகுதி குறள் எண்:1192)

பொழிப்பு (மு வரதராசன்: தம்மை விரும்புகின்றவர்க்குக் காதலர் அளிக்கும் அன்பு, உயிர்வாழ்கின்றவர்க்கு மேகம் மழை பெய்து காப்பாற்றுதலைப் போன்றது.



மணக்குடவர் உரை: காதலித்தார்க்குக் காதலிக்கப்பட்டார் அருளும் அருள், உயிர் வாழ்வார்க்கு, மழை பெய்தாற்போலும்; அஃதில்லார்க்கு வாடுதலே யுள்ளது.
இது நின்மேனி பொலிவழிந்த தென்னும் தோழிக்குத் தலைமகள் கூறியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி - அறமும் பொருளும் நோக்கிப் பிரிந்தால், தம்மை இன்றியமையா மகளிர்க்கு அவரை இன்றியமையாக் கணவர் அளவறிந்து வந்து செய்யும் தலையளி; வாழ்வார்க்கு வானம் பயந்தற்று - தன்னையே நோக்கி உயிர் வாழ்வார்க்கு வானம் அளவறிந்து பெய்தாற் போலும்.
('நம் காதலர் நம்மை விழையாமையின், அத்தலையளி இல்லையாகலான், மழை வறந்துழி அதனான் வாழ்வார் போல இறந்து படுதலே நமக்கு உள்ளது' என்பதாம்.)

இரா சாரங்கபாணி உரை: தம்மை விரும்புகின்ற மகளிர்க்குக் காதலர் காட்டும் அன்பு வான்நோக்கி வாழும் உலக மக்களுக்கு மேகம் வேண்டிய மழையைப் பெய்தாற் போலும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி, வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால்.

பதவுரை: வாழ்வார்க்கு-வாழ்பவர்க்கு, உலகில் வாழ்பவர்க்கு, உலக மக்களுக்கு; வானம்-மழை; பயந்தற்று-பெய்தாற்போலும், (ஆல்-அசைநில); வீழ்வார்க்கு-விருப்பமுள்ளவர்க்கு (இங்கு மகளிர்க்கு); வீழ்வார்-விருப்பம் கொண்டவர் (இங்கு கணவர்); அளிக்கும்-கொடுக்கும்; அளி-தலையளி (அன்பு செய்தல்), அருள்.


வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உயிர் வாழ்வார்க்கு, மழை பெய்தாற்போலும்;
பரிப்பெருமாள்: உயிர் வாழ்வார்க்கு, மழை பெய்தாற்போலும்;
பரிதி: பூமியிலுள்ள பிராணிகளுக்கும் மழை இரட்சிப்பது போல;
காலிங்கர்: நெஞ்சே! வையத்து உயிர் வாழ்வார் அனைவர்க்கும் மழை பொழிந்த அத்தன்மைத்து:
பரிமேலழகர்: (இதுவும் அது.) - தன்னையே நோக்கி உயிர் வாழ்வார்க்கு வானம் அளவறிந்து பெய்தாற் போலும்;

'வையத்து உயிர் வாழ்வார் அனைவர்க்கும் மழை பொழிந்தாற் போலும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'எதிர்பார்த்த உழவர்க்கு மழை பெய்ததுபோல்', 'உயிர் வாழ இன்றியமையாத மழைக்காக வானத்தையே பார்த்துக் கொண்டிருக்கிற மனிதருக்கு மழை பெய்வது போன்றது', 'உழவால் வாழ்கின்றவர்க்கு வானம் அளவறிந்து மழையைத் தருவது போலாம்', 'தன்னையே நோக்கி உயிர் வாழ்வார்க்கு வானம் அளவறிந்து செய்தாற் போலும் ', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

உயிர் வாழ்வார்க்கு மழை பெய்ததுபோல் என்பது இப்பகுதியின் பொருள்.

வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: காதலித்தார்க்குக் காதலிக்கப்பட்டார் அருளும் அருள்.
மணக்குடவர் குறிப்புரை: அஃதில்லார்க்கு வாடுதலே யுள்ளது. இது நின்மேனி பொலிவழிந்த தென்னும் தோழிக்குத் தலைமகள் கூறியது.
பரிப்பெருமாள்: காதலித்தார்க்குக் காதலிக்கப்பட்டார் அருளும் அருள்.
பரிப்பெருமாள் குறிப்புரை: அஃதில்லார்க்கு வாடுதலே யுள்ளது. இது நின்மேனி பொலிவழிந்தது என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
பரிதி: விரும்பும் நாயகிக்கும் நாயகன் அன்றி மயல் தீராது என்றவாறு.
காலிங்கர்: யாதோ எனின் விருப்புற்றுவாழும் மகளிர்க்கு அங்ஙனம் விரும்பத்தக்கோர் ஆகிய தலைவர் அளிக்கும் தலையளி என்றவாறு.
பரிமேலழகர்: அறமும் பொருளும் நோக்கிப் பிரிந்தால், தம்மை இன்றியமையா மகளிர்க்கு அவரை இன்றியமையாக் கணவர் அளவறிந்து வந்து செய்யும் தலையளி. [இன்றியமையா-இல்லாமல் முடியாத]
பரிமேலழகர் குறிப்புரை: 'நம் காதலர் நம்மை விழையாமையின், அத்தலையளி இல்லையாகலான், மழை வறந்துழி அதனான் வாழ்வார் போல இறந்து படுதலே நமக்கு உள்ளது' என்பதாம். [தலையளி-அருள் (தண்ணளி); விழையாமையின்-விரும்பாமையால்; மழை வறந்துழி-மழை பெய்யாதவிடத்து; அதனான்-மழை பெய்யாமையினால்]

'காதலித்தார்க்குக் காதலிக்கப்பட்டார் அருளும் அருள்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'காதலியர்க்குக் காதலர் காட்டும் அன்பு', 'காதலிக்கிற மனைவிக்குக் காதலிக்கப்படுகிற கணவன் செய்கிற அன்பு', 'காதலிகட்குக் காதலர் செய்யும் கருணை' 'காதலிக்குக் காதலர் சமயம் அறிந்து வந்து செய்யும் அன்புச் செயல்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

காதலித்தார்க்குக் காதலிக்கப்பட்டார் செய்யும் அன்பு என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
வீழ்வார்க்கு வீழ்வார் செய்யும் அன்பு உயிர் வாழ்வார்க்கு மழை பெய்ததுபோல் என்பது பாடலின் பொருள்.
'வீழ்வார்' யார்?

வான்நோக்கி நிற்கும் நிலம்போல் கணவன் வரவிற்காகத் தலைவி காத்திருக்கிறாள்.

காதலில் வீழ்ந்த இருவரும் ஒருவரிடமிருந்து மற்றவர் பெறும் அன்பு என்பது வானம் பெய்து உலகோர்க்கு உதவினாற் போன்றதாம்.
காட்சிப் பின்புலம்:
தொழில் தொடர்பாகக் கணவர் பிரிந்து சென்ற பின்னர்த் தனியாக இருக்கும் தலைவி அவன் நினைவாகவே இருக்கிறாள். பிரிவாற்றாமையால் உடல் மெலிந்து, நிறம் மாறி, தூக்கத்தைத் தொலைத்து வாடியிருக்கிறாள். அதுபொழுது, உலகத்துக் காதலர்களையெல்லாம் எண்ணத் தொடங்குகிறாள்; கணவன் -மனைவி உறவு பற்றிய சிந்தனையில் மூழ்கிவிடுகிறாள். மணவாழ்வு நடத்தும் ஆண்-பெண் இருவரும் ஒத்த காதலுடையவராய் இருந்தால்தான் விதையில்லாத இனியகனியை முழுமையாகச் சுவைப்பதுபோல் வாழ்க்கையை நுகர முடியும் என எண்ணிக்கொண்டிருக்கிறாள்.

இக்காட்சி:
தலைவியின் உள்ளத்தில் காதல் இன்பச் சிறப்பு பற்றிய எண்ண ஓட்டங்கள் தொடர்கின்றன.
கணவர் திரும்பி வந்து கூடும்போது அவள் உணர்வு என்னவாக இருக்கும் என்பதைக் கற்பனை செய்து பார்க்கிறாள் அவள். 'காதலிக்கப்படுபவர் காதலிக்கிறவர்க்குச் செய்கிற அன்பானது, உயிர் வாழ்வார்க்கு வானத்தினின்று மழை பெய்வது போன்றது' என நினைக்கிறாள் இப்பொழுது. இது 'என் தலைவர் எப்பொழுது திரும்பி வந்து எனக்குத் தண்ணளி செய்வாரோ' என்பதை உணர்த்துவதுபோல் உள்ளது.
அது வானம் பார்த்த நிலம். மழை பெய்தால் தான் ஊரார்க்கு வாழ்வியல் உண்டு; உழவு முதலான தொழில்கள் இயங்க முடியும். வானம் பொய்த்து வறட்சி நீண்டுவிட்டால் குடிப்பதற்குக்கூட தண்ணீர் இன்றி மக்கள் துயருறுவர். நீண்ட காலமாக வறண்டு கிடக்கும் பூமியில் மழை பெய்து விட்டால் எவ்வளவு மகிழ்ச்சி உண்டாகிறது! மழைநீர் பட்டு மண் வாசனை வீசுகிறது; பசும்புல் தலைகாட்டுகிறது; செடி கொடிகள் துளிர்க்கின்றன; பூக்கள் மலர்கின்றன. வெம்மை தணிந்து குளிர் காற்று இனிதாகப் பரவுகிறது. இவ்வாறு மழையின் வரவு மக்களுக்கு எத்துணை இன்பம் அளிக்கிறதோ அதுபோல், கணவர் திரும்பிவந்து கூடும்பொழுது, அத்துணை களிப்படைவர் இருவரும் என்கிறது இப்பாடல்.

அளி என்ற சொல் தண்ணளி, தலையளி எனப்பொருள்படுவது. இங்கு அச்சொல் ஒருவர் மீது ஒருவர் அன்பு செய்து குளிர்விப்பதைச் சொல்கிறது. பிரிந்த கணவர் கடமையிலிருந்து திரும்பி வந்து தண்ணளி செய்தல் உயிர்களைச் சாவாது காக்கும் அமிழ்தம் போன்ற மழைக்கு இணையானது என்பது.
கணவனும் மனைவியும் விரும்புவராகவும் விரும்பப்படுவராகவும் இருத்தல் வேண்டும். காதலிக்கப்பட்டாரின் தண்ணளியை எதிர்நோக்கிக் காத்திருக்கும் காதலர் நீண்ட காலத்திற்குப் பின் சந்திப்பதில் குளிர்ச்சி பெறுவர். பிரிந்து சென்ற காதல் கணவர் திரும்பிவந்து தன்னை விரும்பும் மனைவிமீது காட்டும் அன்பு பலகாலம் மழை இல்லாமல் வாடிக்கொண்டிருக்கும் உலகோர்க்கு மழை கிடைத்ததுபோலாம். வெம்மை நிறைந்த சூழலில் குளிர்ச்சியைத் தரும் பொருள்கள் விரும்பப்படுதல் இயல்பே. தலைவன் வந்து அன்பு காட்டுதலில் மனைவி குளிர்ச்சி அடைவாள்.

வாழ்வார் என்பதற்கு வான் நோக்கி வாழும் உழவர் என்றும் உரை செய்தனர்.

'வீழ்வார்' யார்?

'வீழ்வார்' என்ற சொல்லுக்குக் காதலிக்கப்பட்டார், நாயகன், விரும்பத்தக்கோர் ஆகிய தலைவர், தம்மைஇன்றி அமையாக் கணவர், காதலர், காதலிக்கப்படும் துணைவர், காதலிக்கப்படும் கணவர், விரும்பும் துணைவன், அவளது இன்பக் கூறுபாடுகள் அறிந்த தலைவன் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

வீழ்வார் என்ற சொல் காதலில் விழுந்தவர் என்ற பொருள் தரும்.
முதலில் உள்ள வீழ்வார் காதலியையும் அடுத்து உள்ள வீழ்வார் காதலனையும் குறிக்கும். வீழ்வார் என்பது தம் விருப்பத்துக்கு உரியார் என்று பொருள் தந்து காதலன் - காதலி இருவருக்கும் உரிய ஒப்புரிமையை நிலைநாட்டும். அதாவது விரும்புவார்,விரும்பப்படுவார் என்று இருவரையும் குறிக்கும் சொல்லாகும். காதலில் விழுந்தவர் காதலிப்பவர் ஆகிறார். 'வீழ்வார்' என்ற சொல் தலைவனையோ அல்லது தலைவியையோ குறிக்கலாம். (ஆனால் இச்சொல் மரபுப்படி தலைவியையே சுட்டும் என்பர்)

வள்ளுவர் ஒருவரையொருவர் முழுதாக விரும்பும் காதலர் பற்றியே காமத்துப்பாலில் பேசுகிறார். வீழ்வார்க்கு வீழ்வார் என்பது விரும்பும் துணைவிக்கு விரும்பும் துணைவன் என்ற பொருளைத் தரும். 'வீழ்வார்க்கு வீழ்வார்' என்ற தொடர்க்குத் 'தம்மை இன்றியமையா மகளிர்க்கு அவரை இன்றியமையாக் கணவர்' எனப் பொருள் கூறுவார் பரிமேலழகர். வீழ்வார் என்பது ஒப்புரிமையாராகவுள்ள விரும்புவார், விரும்பப்படுவார் என்னும் பொருள்தரும் உயரிய சொல் (இரா இளங்குமரன்). கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விரும்புவராகவும் விரும்பப்படுவராகவும் இருத்தல் வேண்டும் என்பது கருத்து.

வீழ்வார் என்ற சொல்லுக்குக் காதலிப்பவர் என்பது பொருள்.

விரும்பியவர் விரும்பப்பட்டவர்க்குச் செய்யும் அன்பு உயிர் வாழ்வார்க்கு மழை பெய்ததுபோல் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பிரிவில் சென்ற தலைவன் திரும்பி வரும்வேளை தனிப்படர் மிகுதியான மனைவியின் உள்ளக் களிப்பு.

பொழிப்பு

விரும்பப்பட்டவர்க்கு விரும்பும் காதலர் செய்யும் அன்பு மக்கள் எதிர்பார்த்த மழை பெற்றது போன்றது,