இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1191



தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி

(அதிகாரம்:தனிப்படர்மிகுதி குறள் எண்:1191)

பொழிப்பு (மு வரதராசன்): தாம் விரும்பும் காதலர் தம்மை விரும்புகின்ற பேறு பெற்றவர், காதல் வாழ்க்கையின் பயனாகிய விதை இல்லாத பழத்தைப் பெற்றவரே ஆவர்

மணக்குடவர் உரை: தாம் காதலித்தாரால் தம்மைக் காதலிக்கப்பெற்ற மகளிர் காம நுகர்ச்சியின்கண் பரலில்லாததோர் பழத்தைப் பெற்றவராவர்.
இது தடையின்றி நுகரலாமென்றது.

பரிமேலழகர் உரை: ('காதலரும் நின்னினும் ஆற்றாராய்க் கடிதின் வருவர், நீ அவரோடு பேரின்பம் நுகர்தி', என்ற தோழிக்குச் சொல்லியது.) தாம் வீழ்வார் தம் வீழப் பெற்றவர் - தம்மாற் காதலிக்கப்படும் கணவர் தம்மைக் காதலிக்கப்பெற்ற மகளிர்; பெற்றாரே காமத்துக் காழ்இல் கனி - பெற்றாரன்றே காம நுகர்ச்சி என்னும் பரல் இல்லாத கனியை.
(காமம்: ஆகுபெயர். 'அத்து' அல்வழிக்கண் வந்தது. முன்னை நல்வினை இல்வழிப் பெறப்படாமையின் 'பெற்றார்' என்றும், அவரால் தடையின்றி நுகரப்படுதலின் 'காழில் கனி' என்றும் கூறினாள். 'நம் காதலர் பிரிதலேயன்றிப் பின் வாராமையும் உடைமையின் அக்கனி யாம் பெற்றிலேம்' என்பதாயிற்று.

இரா சாரங்கபாணி உரை: தாம் விரும்பும் காதலரால் தம்மைக் காதலிக்கப் பெற்ற மகளிர் காம இன்பம் என்னும் விதை இல்லாத பழத்தைப் பெற்றவர் ஆவர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே காமத்துக் காழில் கனி.

பதவுரை: தாம் வீழ்வார்-தாம் காதலிப்பவர், தாம் விரும்புவர்; தம்-தம்மை; வீழப்பெற்றவர்- காதலிக்கப்பெற்றவர்; பெற்றாரே-அடைந்தாரே; காமத்து-காமநுகர்ச்சியாகிய, காதலின்பமாகிய; காழில்-விதையில்லாத, கொட்டையில்லாத, பரலில்லாத; கனி-பழம்.


தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தாம் காதலித்தாரால் தம்மைக் காதலிக்கப்பெற்ற மகளிர்;
பரிப்பெருமாள்: தாம் காதலித்தாரால் தம்மைக் காதலிக்கப்பெற்ற மகளிர்;
காலிங்கர்: நெஞ்சே உலகத்துத் தாம் விரும்பிய தலைவர் தம்மையும் விரும்பித் தலையளி செய்யப்பெற்ற மகளிர்;
பரிமேலழகர்: ('காதலரும் நின்னினும் ஆற்றாராய்க் கடிதின் வருவர், நீ அவரோடு பேரின்பம் நுகர்தி', என்ற தோழிக்குச் சொல்லியது.) தம்மாற் காதலிக்கப்படும் கணவர் தம்மைக் காதலிக்கப்பெற்ற மகளிர்; [நுகர்தி - அனுபவிப்பாய்]

'தாம் காதலித்தாரால் தம்மைக் காதலிக்கப்பெற்ற மகளிர்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தாம் காதலித்தவர் தம்மைக் காதலித்தால்', 'நாம் காதலிக்கிற கணவர் அதைப் போலவே தம்மைக் காதலிக்கிற பாக்கியத்தைப் பெற்ற பெண்களே', 'தாம் விரும்பிய கணவர் தம்மை விரும்பப்பெற்ற பெண்டிரே', 'தம்மால் காதலிக்கப்படும் கணவர் தம்மைக் காதலிக்கப் பெற்ற மகளிர்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தாம் விரும்பியவர் தம்மையும் காதலிக்கப்பெற்றவரானால் என்பது இப்பகுதியின் பொருள்.

பெற்றாரே காமத்துக் காழில் கனி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: காம நுகர்ச்சியின்கண் பரலில்லாததோர் பழத்தைப் பெற்றவராவர்.
மணக்குடவர் குறிப்புரை: இது தடையின்றி நுகரலாமென்றது
பரிப்பெருமாள்: காம நுகர்ச்சியின்கண் பரலில்லாததோர் பழத்தைப் பெற்றவராவர்.
பரிப்பெருமாள் குறிப்புரை: புணர்வு கேட்ட நெஞ்சிற்கு, 'யாம் நல்வினை செய்கிலேம். செய்தேமாயின், அவரும் காதலிப்பர். அவர்மாட்டுக் காதல் இன்றாக வருந்த வேண்டா' என்று தலைமகள் கூறியது.
காலிங்கர்: பெற்றாரே காமமாகிய விரை இல்லாத கனியினை என்றவாறு
பரிமேலழகர்: பெற்றாரன்றே காம நுகர்ச்சி என்னும் பரல் இல்லாத கனியை.
பரிமேலழகர் குறிப்புரை: காமம்: ஆகுபெயர். 'அத்து' அல்வழிக்கண் வந்தது. முன்னை நல்வினை இல்வழிப் பெறப்படாமையின் 'பெற்றார்' என்றும், அவரால் தடையின்றி நுகரப்படுதலின் 'காழில் கனி' என்றும் கூறினாள். 'நம் காதலர் பிரிதலேயன்றிப் பின் வாராமையும் உடைமையின் அக்கனி யாம் பெற்றிலேம்' என்பதாயிற்று. [அவரால் - பெற்ற மகளிரால்]

'காம நுகர்ச்சியின்கண் பரலில்லாப் பழத்தைப் பெற்றவர்' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் இப்பகுதிக்கு உரை கூறினர். காலிங்கர் காமமாகிய விரை இல்லாத கனி என்றுரைத்தார். பரிமேலழகர் 'காம நுகர்ச்சி என்னும் பரல் இல்லாத கனியைப் பெற்றார்' என்று கனியை உருவகமாக்கினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'கொட்டையில்லாத காமப்பழம் பெற்றது போலும்', 'காம இன்பத்தின் குற்றமற்ற கனியை அடைந்தவர்கள். (எனக்கு அந்தப் பாக்கியம் இல்லை போலும்)', 'காமவின்பமென்னும் விதையில்லாத நற்கனியை அருந்தப் பெற்றவராவர்', 'இன்ப நுகர்ச்சி என்னும் கொட்டையில்லாத பழத்தை அடைந்தவராவர்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

அடைந்தாரே காமஇன்பம் என்னும் விதை இல்லாத கனியை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தாம் விரும்பியவர் தம்மையும் காதலிக்கப்பெற்றவரானால் அடைந்தாரே காமஇன்பம் என்னும் காழில் கனியை என்பது பாடலின் பொருள்.
'காழில் கனி' என்றால் என்ன?

இருபாலும் ஒத்த காதலுடையவர் முழுமையான காமஇன்பம் துய்ப்பர்.

தாம் விரும்பியவர் தம்மையும் விரும்பும் பேறு பெற்றவர்களே காதல் வாழ்வின் பயனாகிய நிறைவான காமஇன்பமாகிய விதையற்ற கனியை நுகரப் பெற்றவர்கள் ஆவர்.
காட்சிப் பின்புலம்:
கணவனும் மனைவியாகத் தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொண்டு ஒன்றி விடுகின்றனர். தொழில் தொடர்பாகத் அவன் வெளியிடம் சென்றிருக்கிறான், தலைவனை[ப் பிரிந்திருப்பதைத் தாங்க முடியாத தலைவி தனிமையில் அவன் நினைவாகவே வருந்திக்கொண்டு இருக்கிறாள். அப்பொழுது உலகத்துக் காதலர்களையெல்லாம் எல்லோரையும் எண்ணிப் பார்க்கின்றாள்.

இக்காட்சி:
மணவாழ்வு நடத்தும் ஆண்-பெண் இருவரும் ஒத்த காதலுடையவராய் இருந்தால்தான் விதையில்லாத இனியகனியைத் தடையின்றிச் சுவைப்பதுபோல் காமஇன்பத்தை நுகர முடியும் எனத் தன் நெஞ்சோடு பேசுகின்றாள் தலைவி. தம்மால் காதலிக்கப்படுபவர், தம்மைக் காதலிக்கப்பெற்றவர் பெறுவர் முழுமையான காமஇன்பம்; அது கொட்டை இல்லாத பழத்தைச் சுவைத்து மகிழ்வது போன்றது என்கிறாள். 'அப்படிப்பட்ட பழம் பெற்ற பேறு பெற்றிருக்கிறேன் அதாவது உண்மையான காதலைப் பெற்றிருக்கிறேன் நான். கணவனுடன் கூடியபொழுது தான் எய்திய முழுமையான இன்பத்தை நினைந்துக் கொள்கிறாள் அவள்.

நிறைவான காதலின்பம் கொட்டையில்லாத பழத்தைத் துய்ப்பதனால் வரும் இன்பத்திற்கு ஒப்பிடப்படுகின்றது. மனங்கள் ஒன்றுபட்ட ஆண்-பெண் துய்க்கும் காதலின்பமே இடையூறற்றதாகவும் முழுமையானதாகவும் இருக்கும். மனம் ஒன்றுபடாத நிலையில் உண்டாகும் உறவில் புணர்ச்சி என்னும் கனியைச் சுவைக்கும் போது, அந்த வேறுபாடு என்ற விதைகள் இடைப்பட்டு இன்சுவையைக் கெடுக்கும் என்பது சொல்லப்பட்டது.

'காழில் கனி' என்றால் என்ன?

காழில் கனி என்பதற்கு நேர் பொருள் கொட்டையில்லாத பழம் என்பது.
காழ் - பரல், விதை. காழ் என்பது விதை, கொட்டை - கெட்டித்தன்மை கொண்டது எனப்பொருள்படுவது; காழில் என்பது கெட்டித்தன்மை யில்லாத மென்மையானது என்பதைச் சொல்வது. கனி என்ற சொல்லுக்குப் பழம் என்பது பொருள். காழில் கனி என்ற தொடர் கொட்டையில்லாத பழத்தை குறிக்க வந்தது. வித்தில்லாத கனியை முழுவதும் சுவைத்து உண்ணுதல் கூடும். கனி என்ற சொல் .....கனியிருப்பக் காய் கவர்ந்தற்று (இனியவை கூறல் 100), .........கனியும் கருக்காயும் அற்று (புலவி 1306) ஆகிய பாடல்களிலும் மென்மை உணர்வுகளைப் புலப்படுத்துவதாய் ஆளப்பட்டது.
காமத்துய்ப்பு காழில் கனி என ஏன் உவமிக்கப்பட்டது என்பதற்குத் 'தடையின்றி நுகரலாம்', 'விதையற்ற கனி முழுவதும் சுவைக்கப்படும்'. 'பேரின்பமாதல் பற்றி', 'கனியை உண்ணும்போது அதில் தக்கை ஏறிச் சுவைபட இல்லையென்றால் அதை உண்ணுபவர்க்கு இன்பம் இராது', 'மென்மை உணர்வுகளைப் புலப்படுத்துவது' என்றபடி உரையாளர்கள் விளக்கம் கூறினர்.
கண்ணதாசன் 'விதை போடாமல் தானே பழுத்த பழத்தைச் சாப்பிடுவது போலல்லவா' என இப்பாடலுக்குக் கருத்துரைத்தார்.
காழில் கனி என்பதற்குக் குற்றமில்லாத கனி என்று பொருள் கூறினார் நாமக்கல் இராமலிங்கம். மிகுந்த சுவையுள்ள கனிகளில் பெரும்பாலானவை வித்துள்ளனவாகவே இருக்கலாம். வித்தில்லாதிருப்பது நல்ல சுவைக்கு அடையாளமல்ல. அதனால் காழ்இல் என்பதற்குக் குற்றமில்லாத என்ற பொருளே மேலானது. குற்றமில்லாத கனியென்றால் சுவையில் புளிப்போ காரமோ துவர்ப்போ கலவாதது என்றும் அதிகமாக உண்டுவிட்டாலும் தீமை செய்யாதது என்றும் குறிக்கும்' என உரை வரைந்தார்.

கொட்டையற்ற பழங்களும் இப்போது நமக்கு கிடைக்கின்றன. விதையில்லாத பழங்கள் சுவைப்பவருக்கு எந்தத் தடையையும் தருவதில்லை. முழுமையான காதல் பெற்ற கணவனும் மனைவியும் பெறும் இன்பம் கொட்டையில்லாத பழத்தை விரும்பி உண்ணும் தன்மை போன்றது என்று இக்குறள் கூறுகிறது. காமநுகர்ச்சி காமத்துக் காழில்கனி என்று உருவகம் செய்து கூறப்பட்டது. தலைவன் தலைவி உறவின்கண் மெல்லிய தடையும் இருக்கக் கூடாது; அப்பொழுதுதான் காமஇன்பத்தை இருவரும் நன்கு சுவைப்பர் என்பது கருத்து.

'காழில் கனி' என்பது கொட்டை இல்லாத பழம் எனப்பொருள்படும்.

தாம் விரும்பியவர் தம்மையும் காதலிக்கப்பெற்றவரானால் அடைந்தாரே காமஇன்பம் என்னும் விதை இல்லாத கனியை என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

தனிப்படர்மிகுதியின்போது தான், தன் கணவர் தன்னைக் காதலிப்பவர் என்ற பேறு பெற்றவள் என நினைந்து மகிழ்கிறாள் தலைவி.

பொழிப்பு

தாம் விரும்புவரால் தம்மைக் காதலிக்கப் பெற்றவர் காமஇன்பம் என்னும் விதை இல்லாத பழத்தை அடைந்தவர் ஆவார்.